என் மலர்tooltip icon

    தஞ்சாவூர்

    • நெல்லை கொட்டி வைத்து விற்க முடியாமல் கடந்த ஒரு வாரமாக காத்து கிடக்கின்றனர்.
    • அறுவடை செய்த நெல்லை மழையில் நனையாமல் இருக்க விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, இரும்பு தலை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறுவை முன்பரு வத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யும்பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    இரும்புதலை அரசு கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை அரசு கொள்முதல் நிலையம் முன்பு விவசாயிகள் நெல்லை கொட்டி வைத்து விற்க முடியாமல் கடந்த ஒருவார காலமாக காத்து கிடக்கின்றனர். கொள்முதல்நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் பலர் அறுவடை செய்த நெல்லை மழையில் நனையாமல் இருக்க விவசாயிகள் தினசரி சிரமப்பட்டு வருகின்றனர்.

    எனவே கொள்முதல்நி லையத்தை உடனடியாக திறந்து நெல்கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 2 சரக்கு வாகனங்களில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தனர்.
    • மணல் கடத்திய வழக்கில் 3 பேரையும் கைது செய்தனர்.

    பேராவூரணி:

    பேராவூரணி பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது பேராவூரணி சிதம்பரம் ரோடு பகுதியைச் சேர்ந்த நீலகண்டன் (29), பட்டத்தூரணி கிராமத்தைச் சேர்ந்த முரளிதரன் (21), சாணாகரை கிராமத்தைச் சேர்ந்த பிரபு (30), ஆகிய மூன்று பேரும் 2 சரக்கு வாகனத்தில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தனர்.

    அப்போது பேராவூரணி காவல்துறையினர் 2 வாகனங்களையும் மறித்து சோதனையில் ஈடுப்பட்டனர்.

    அப்போது அவர்கள் உரிய அனுமதியின்றி மணல் கடத்தி செல்வது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து போலீசார் சரக்கு வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் மணல் கடத்திய வழக்கில் 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

    • கர்ப்பரட்சாம்பிகை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
    • சந்திரசேகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, திருக்கருகாவூரில் அமைந்துள்ள கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் உடனுறை முல்லை வனநாதர் திருக்கோயிலில் நவராத்திரிவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கி வரும் 24ந்தேதி வரை நடைபெற்று வருகிறது.

    இதில்நேற்று 23ந்தேதி சரஸ்வதி பூஜை தினத்தன்று காலை கர்ப்பரட்சாம்பிகை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    விழாவின் இறுதி நாளான இன்று 24ந்தேதி விஜயதசமியை முன்னிட்டு மாலை சுவாமி சந்திரசேகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சிச்சியும, இரவு ஷீரகுண்டம் எனும் திருக்குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைபெற உள்ளது.

    விழா ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் மற்றும் உதவி ஆணையர் ப. ராணி மேற்பார்வையில் கோயில் செயல் அலுவலர் அசோக்குமார் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • மேல் சிகிச்சைக்காக, தஞ்சாவூர் அரசு ராசாமிராசுதார் ஆஸ்பத்திரிக்கு பரிந்துரை செய்தனர்.
    • 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள திருமங்கலக்கோட்டை மேலக்காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். கூலித்தொழிலாளி, இவரது மனைவி அஞ்சலி தேவி (வயது 34), நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை பிரசவத்திற்காக உறவினர்கள் ஒரத்தநாடு தாலுகா, தொண்டராம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கிருந்து அஞ்சலிதேவியை மேல் சிகிச்சைக்காக, தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர்.

    இதையடுத்து, அவர் ஆலத்தூரில் இருந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    இந்நிலையில், தஞ்சை செல்லும் வழியில் அஞ்சலி தேவிக்கு பிரசவ வலி அதிகமானது. இதையடுத்து ஓட்டுநர் முரளி சாலையோரம் ஆம்புலன்சை நிறுத்தினார்.

    இதனைத் தொடர்ந்து அவசர சிகிச்சை நிபுணர் சிதம்பர கண்ணன் அஞ்சலி தேவிக்கு பிரசவம் பார்த்தார்.

    இதில் அஞ்சலி தேவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

    பின்னர், மீண்டும் ஆம்பு லன்ஸ் தொண்ட ராம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு தாயும், சேயும் அழைத்து செல்லப்பட்டனர்.

    உரிய நேரத்தில் பிரசவம் பார்த்து தாயையும், குழந்தை யையும் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு உறவினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • பசு மாட்டை தினமும் காலையில் மேய்ச்சலுக்காக வெளியே அனுப்புவது வழக்கம்.
    • நிறைமாத கர்ப்பமாக இருந்த பசு மாடு தொம்பன்குடிசை பகுதி அருகே திடீர் என பிரசவ வலி ஏற்பட்டு அங்கேயே கன்றுக்குட்டியை ஈன்றது.

    தஞ்சாவூர்:

    உலகில் தாய் பாசத்திற்கு நிகர் எதுவும் இல்லை. தாய்ப்பாசம் அனைத்து உயிர்களுக்கும் ஒன்றுதான். இதனை உணர்த்தும் வகையில், தஞ்சாவூரில் கன்றுக்குட்டியை ஆட்டோவில் எடுத்து சென்ற உரிமையாளரை பின்தொடர்ந்து, 5 கி.மீட்டர் தூரத்திற்கு ஓடிய தாய் பசுவின் பாசம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-

    தஞ்சை செக்கடியை சேர்ந்தவர் சபரிநாதன். ஆட்டோ டிரைவர். இவரது வீட்டில் லெட்சுமி என்ற பசுமாடு ஒன்று உள்ளது. இவர் தனது மாட்டை வீட்டில் ஒரு குழந்தையை போல வளர்த்து வருகிறார். இந்நிலையில், இந்த பசு மாட்டை தினமும் காலையில் மேய்ச்சலுக்காக வெளியே அனுப்புவது வழக்கம்.

    அப்போது, பசு மாடு நிறைமாத கர்ப்பமாக இருந்த நிலையில், பசு மாடு தொம்பன்குடிசை பகுதி அருகே திடீர் என பிரசவ வலி ஏற்பட்டு அங்கேயே கன்றுக்குட்டியை ஈன்றது. இதை தொடர்ந்து, பசுவை வெகுநேரம் காணவில்லை என்று சபரிநாதன் பல பகுதிகளில் தேடி பார்த்தார். அப்போது ஈன்ற கன்றுக்குட்டியுடன் பசு நின்று கொண்டிருந்தை பார்த்தார்.

    இதையடுத்து, கன்றுக்குட்டியை மீட்டு அதை ஆட்டோவில் வைத்து வீட்டிற்கு புறப்பட்டார். இதை கண்ட தாய்ப்பசு பாசத்தினால் ஆட்டோவை பின் தொடர்ந்து ஓடிக்கொண்டே சுமார் 5 கி.மீட்டர் தூரம் வரை பின் தொடர்ந்து சென்று ஆட்டோவையும் வழி மறித்தது.

    பின்பு சபரிநாதன், கன்றுக்குட்டியை பசுவிடம் இறக்கி விட்டார். அதையடுத்து, கன்றுக்குட்டியைப் பசுமாடு பாசத்தோடு அரவணைத்து பாலூட்டியது. பின்னர் பசுமாடும், கன்றுக்குட்டியும் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டது.

    இந்த சம்பவம் அப்பகுதியில் காண்போரை மெய்சிலிர்க்கவும், வியக்கவும் செய்தது. தஞ்சையில் பசு மாட்டின் இந்த பாச போராட்டம், பார்ப்போரை மனம் நெகிழ வைத்துள்ளது. தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • செவ்வந்தி கிலோ ரூ.350, அரளி ரூ.500, ஆப்பிள் ரோஸ் ரூ.300-க்கு விற்பனையானது.
    • முகூர்த்த நாள் மற்றும் நாளை சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை என்பதால் பூக்கள் தேவை அதிகரித்துள்ளது.

    தஞ்சாவூர்:

    ஆயுதபூஜை பண்டிகை தமிழ்நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது.

    பொதுவாக, ஆயுதபூஜை நாளில், தொழிற்சாலைகள், அலுவலகங்கள், கல்வி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

    பூக்கள் நிறைந்த அலங்காரத்துடன் அலுவலகங்கள் மிளிர, பழங்கள், பொரி மற்றும் கடலைகள் கடவுள்களுக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கும்.

    அந்த வகையில், தஞ்சையில் இன்று பூக்கள், பழங்கள், பூஜை பொருட்கள், தேங்காய், பூசணி, பொரி, கடலை விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது.

    இதேபோல் தஞ்சை பூக்கார தெரு மற்றும் விளார் சாலை தனியார் மண்டபம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள பூ மார்க்கெட்டில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது.

    திண்டுக்கல், மதுரை, சேலம், ஓசூர் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் அதிகளவு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

    பூக்கள் வரத்து அதிகமாக இருந்தாலும் ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு பூக்களின் தேவை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.

    இதன் காரணமாக பூ மார்க்கெட்டில் இன்று பல்வேறு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    2 நாட்களுக்கு முன்பு மல்லிகை கிலோ ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று கணிசமாக உயர்ந்து கிலோ ரூ.1000-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் கனகாம்பரம் , முல்லை தலா ரூ.1000, செவ்வந்தி கிலோ ரூ.350, அரளி ரூ.500, ஆப்பிள் ரோஸ் ரூ.300-க்கு விற்பனையானது.

    இந்த பூக்களின் விலையும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விற்கப்பட்டதை விட தற்போது விலை உயர்ந்துள்ளது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, மார்க்கெட்டுக்கு இன்று பூக்களின் வரத்து அதிகமாக உள்ளது.

    இன்று முகூர்த்த நாள் மற்றும் நாளை சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை என்பதால் பூக்கள் தேவை அதிகரித்துள்ளது.

    இதனால் அவற்றின் விலையும் உயர்ந்துள்ளது என்றனர்.

    • தினந்தோறும் காத்தாயி அம்மனுக்கு ஒவ்வொரு அலங்காரம் செய்யப்படுகிறது.
    • ஏராளமான கலைஞர்கள் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அடுத்த கோவிலூர் நெல்லி தோப்பில் பிரசித்தி பெற்ற காத்தாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து செல்கின்றனர்.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும்.

    தற்போது நவராத்திரி திருவிழா நடந்து வருகிறது.

    தினந்தோறும் காத்தாயி அம்மனுக்கு ஒவ்வொரு அலங்காரம் செய்யப்படுகிறது.

    அதன்படி விழாவின் 7-ம் நாளான நேற்று காத்தாயி அம்மனுக்கு ஸ்ரீ மூகாம்பிகா அலங்காரம் செய்யப்பட்டது.

    இன்று 8-ம் நாள் விழா நடந்து வருகிறது.

    விழாவில் மாலையில் நவராத்திரி கலாபக் கலை விழா நடைபெற்றது.

    இதில் ஏராளமான கலைஞர்கள் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடினர்.

    இதையடுத்து பரதநாட்டிய கலைஞர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நிர்வாக அறங்காவலர் காத்தாயி அடிமை சுவாமிநாதன் முனையதிரியர் கேடயம், பரிசு வழங்கி பாராட்டினார் .

    • மாணவ- மாணவிகளுக்கு தனித்தனியாக சிலம்ப போட்டி நடத்தப்பட்டது.
    • சிறந்த முறையில் சிலம்பம் சுற்றிய மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் இன்று கலைப்புயல் சிலம்பாட்ட பயிற்சி பள்ளி நடத்தும் 3-ம் ஆண்டு சிலம்பப் போட்டி இன்று நடைபெற்றது.

    இந்திய குழந்தைகள் நல சங்கம் ஆற்றுப்படுத்துனர் டென்னிஸ் மேரி வரவேற்புரை ஆற்றினார்.

    மானோஜிப்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரமௌலி தலைமை தாங்கினார்.

    மேம்பாலம் பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசாமி முன்னிலை வகித்தார்.

    நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் திருநீலகண்டன், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி பொருளாளர் முத்துக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    பேராசிரியர் சுகுமாறன், இந்திய குழந்தைகள் நல சங்கம் நிர்வாக குழு உறுப்பினர் ஜெயக்குமார், கண்காணிப்பாளர் நாராயணசாமி ராஜா, நேரு யுவ கேந்திரா கணக்காளர் பவுன்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    இதையடுத்து சிலம்பப் போட்டியை தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் தொடங்கி வைத்தார்.

    இதில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் உள்பட பல்வேறு மாவட்ட ங்களை சேர்ந்த 5 வயதுக்கு மேற்பட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதில் மாணவர், மாணவிகளுக்கு தனி தனியாக சிலம்ப போட்டி நடத்தப்பட்டது.

    அவர்கள் ஆர்வத்துடன் சிலம்பம் சுற்றினர். தொடர்ந்து சிலம்ப போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.

    போட்டி நடுவராக ஆசான் ஐயப்பன் செயல்பட்டார்.

    இதனைத் தொடர்ந்து மாலையில் பாராட்டு விழா மற்றும் சிறந்த சிலம்பாட்ட ஆசான்களுக்கான கலைப்புலி கோவிந்தராஜ் விருது வழங்கும் விழா, ஆண்டு விழா நடைபெற உள்ளது.

    இதில் ஆசான்களுக்கான விருதை தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் தொழில்நுட்ப குழு சேர்மன் சந்திரசேகரன் வழங்குகிறார். சிறந்த முறையில் சிலம்பம் சுற்றிய மாணவர்களுக்கு பரிசுகளை இந்திய குழந்தைகள் நல சங்கம் கௌரவ செயலாளர் ரகுராமன் வழங்கி பாராட்டுகிறார்.

    முடிவில் தஞ்சாவூர் கலைப்புயல் சிலம்பாட்ட பயிற்சி பள்ளி பயிற்சியாளர் துளசிராமன் நன்றி கூறுகிறார்.

    • திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் கலியுக வெங்கடேச பெருமாளாக காட்சி தருவதாக ஐதீகம்.
    • நித்ய சொர்க்க வாசல் கோவிலாகவும் விளங்குகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தெற்கு வீதியில் புகழ்பெற்ற கலியுக வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் கலியுக வெங்கடேச பெருமாளாகவும் சதுர்புஜ வரதராஜ பெருமாளாகவும் காட்சி தருவதாக ஐதீகம்.

    நித்ய சொர்க்க வாசல் கோவிலாகவும் நவக்கிர கங்களில் சந்திரன் நடுவில் உள்ள நவக்கிரக சன்னதி உடைய கோவிலாகவும் விளங்குகிறது.

    இத்தலத்தில் பிரதி திருவோணம் நட்சத்திரம் அன்று சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி வருகின்ற நாளை (திங்கட்கிழமை ) ஐப்பசி மாத திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு காலை 9 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், பாலாபிஷேகம் மற்றும் அலங்காரம் தீபாராதனை நடக்கிறது.

    மாலை 7 மணிக்கு கோவில் உட்பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.

    இதேபோல் வருகின்ற 27-ம்தேதி ( வெள்ளிகிழமை) இக்கோவிலின் 12-ம் ஆண்டு கும்பாபிஷேகம் தினவிழா விழாவை முன்னிட்டு காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம் ,அலங்காரம் தீபாராதனை நடக்கிறது. மாலையில் திருக்கல்யாணம் நடக்கிறது.

    • 24-ந் தேதி காலை 9 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு சென்றடையும்.
    • முன்பதிவு இல்லாத 2-ம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட 2 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல்- காரைக்குடி இடையே தஞ்சாவூர், திருச்சி வழியாக சிறப்பு ரெயில் இன்று, நாளை என 2 நாட்கள் இயக்கப்படுகிறது.

    சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று (ஞாயிற்றுகிழமை) இரவு 11.30 மணிக்கு புறப்படும் ரெயில் (வண்டி எண்.06039) எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர், திருச்சி, புதுக்கோட்டை வழியாக நாளை (திங்கள்கிழமை) காலை 9.30 மணிக்கு காரைக்குடி சென்று அடையும்.

    இந்த ரெயில் மறுமார்க்கமாக (வண்டி எண்.06040) நாளை (திங்கள்கிழமை) இரவு 9.30 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்பட்டு இதே வழித்தடத்தில் சென்று 24-ந் தேதி காலை 9 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு சென்றடையும்.

    இந்த ரெயிலில் முன்பதிவு செய்யும் வசதியுடன் 2 அடுக்கு ஏசி 2 பெட்டிகள், 3 அடுக்கு ஏசி 10 பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 6 பெட்டி, முன்பதிவு இல்லாத 2-ம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட 2 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உணவு, உடை மற்றும் தங்கும் வசதி உள்ளிட்டவைகளை குறித்து காப்பகத்தினரிடம் கேட்டறிந்தார்.
    • அங்குள்ள அனைத்து மனநலநோயாளிகளுக்கு திண்பண்டங்களை வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்கு ழுவின் உத்தரவின் படியும் தஞ்சாவூர் மாவட்ட சட்ட ப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஜெசின்தா மார்டின் தலைமையில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மனநலம் பாதிக்கப்பட்ட வர்களுக்கான சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாமானது தஞ்சாவூரில் உள்ள அன்பாலயம் மனநல காப்பகத்தில் நடைபெற்றது.

    அப்போது அன்பாலயம் மனநல காப்பகத்தில் இருக்கும் மனநோயாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகளான உணவு, உடை மற்றும் தங்கும் வசதி உள்ளிட்டவைகளை காப்பகத்தின் அலுவல ர்களிடம் மாவட்ட முதன்மை நீதிபதி விசாரித்தார். மேலும் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் குறித்தும் விசாரித்தார்.

    அங்கிருக்கும் மனநோயாளிகளுக்கு ஏதேனும் சட்ட உதவிகள் தேவைப்பட்டால் தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவினை நாடி உதவிபெறலாம் என்று கூறினார். அங்குள்ள அனைத்து மனநலநோயாளிகளுக்கு திண்பண்டங்களை வழங்கினார்.

    இம்முகாமில் தஞ்சாவூர் மாவட்ட சட்டப்ப ணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும் சார்பு நீதிபதியுமான இந்திராகாந்தி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நிர்வாக அலுவலர்சந்தோஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிராம்பட்டினம் மிலாரிக்காடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்.
    • பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் மிலாரிக்காடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்.

    இவரது மனைவி கவிநிலா ( வயது 24) .

    இவர் கர்ப்பமான நிலையில் நாட்டுச்சாலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து அவர் அங்கேயே சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் பிரச வத்திற்காக சேர்க்க ப்பட்ட கவிநிலாவை நாட்டை ச்சாலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தங்க வைத்து விட்டு டாக்டர் வெளியே சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கவிநிலா விற்கு பணிக்குடம் உடைந்து விட்டதாகவும் உடனடியாக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வலியுறுத்தியுள்ளனர்.

    அதன் பிறகு ஆம்புலன்ஸ் பிடித்து கவிநிலாவை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து சிகிச்சை அளித்த போது தாயை காப்பாற்ற முடிந்தது, தாமதமாக வந்ததால் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவர்கள் கூறியதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திமடைந்த அவரது உறவினர்கள் எங்களது குழந்தையின் உயிர் போக காரணமாக இருந்த வர்களை கைது செய்ய வேண்டும், குழந்தை இறந்த குடும்பத்தினருக்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அரை மணி நேரத்திற்கு மேல் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    சாலை மறியல் தொடர்ந்த நிலையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உடன்படாத பட்சத்தில் பட்டுக்கோட்டை வட்டாட்சி யர் ராமச்சந்திரன் சாலை மறியல் செய்தவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    இதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

    இது குறித்து பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

    ×