என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஆடுதுறையில், அடுத்த ஆண்டு மாநில அளவிலான இறகு பந்து போட்டி
- ஜனவரி 11, 12-ந் தேதிகளில் மாநில அளவில் அணிகள் பங்கேற்க ஏற்பாடுகள்.
- பங்கேற்கும் அணிகளுக்கு ஊக்கப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.
கும்பகோணம்:
ஆடுதுறை தேர்வுநிலை பேரூராட்சி மற்றும் தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடம் ஆகியவை இணைந்து தேசிய இளைஞர் தினவிழாவை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ந் தேதி விவேகானந்தர் விளையாட்டு திருவிழா மற்றும் ஆண்களுக்கான மாநில அளவிலான இறகு பந்து போட்டியும், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் மாதம் 8-ந் தேதி பெண்களுக்கான மாநில அளவிலான இறகு பந்து போட்டியும் ஆடுதுறை அடுத்த நாவல்குளம் அருகே டாக்டர். அன்புமணி ராமதாஸ் எம்.பி. மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இறகு பந்து உள்விளையாட்டு அரங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
முதற்கட்டமாக ஆண்க ளுக்கான போட்டியில் ஜனவரி 10-ந்தேதி உள்ளூர் அணிகளும், 11, 12-ந் தேதிகளில் மாநில அளவில் 64 சிறந்த அணி களும் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, ஜனவரி 10-ந் தேதி நடக்கும் போட்டிகளில் வெற்றிபெறும் முதல் 4 அணிகளுக்கு ரூ.9 ஆயிரத்து 999, ரூ.8 ஆயிரத்து 888, ரூ.7 ஆயிரத்து 777, ரூ.6 ஆயிரத்து 666 என்ற அளவிலும், மாநில அளவில் வெற்றிபெறும் அணிகளுக்கு ரூ.55 ஆயிரத்து 555, ரூ.44 ஆயிரத்து 444, ரூ.33 ஆயிரத்து 333, ரூ. 22 ஆயிரத்து 222 என்ற அளவிலும் முறையே பரிசு தொகை, கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கவும், பங்கேற்கும் அணிகளுக்கு ஊக்கப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான ஆலோ சனை கூட்டத்தில் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க. ஸ்டாலின், துணை தலைவர் கமலா சேகர், தஞ்சாவூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ், சென்னை வணிகம் கோர்ட்டு மாவட்ட நீதிபதி சத்தியமூர்த்தி, ஆடுதுறை பேரூராட்சி செயல் அலுவலர் ராமபிரசாத், திருப்பனந்தாள் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜதுரை, பேரூராட்சி கவுன்சிலர் பாலதண்டாயுதம், பொறியாளர் ரமேஷ், இறகுப்பந்து விளையாட்டு பயிற்சியாளர்கள் பால சுப்ரமணியன், அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.