என் மலர்tooltip icon

    சிவகங்கை

    தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 304 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.
    தேவகோட்டை:

    தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். பிஆர்.செந்தில்நாதன் எம்.பி. முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    அதைத்தொடர்ந்து அமைச்சர் பேசியதாவது:- தமிழக அரசை முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் திறமையாக நடத்தி, பல்வேறு திட்டங்களை முனைப்புடன் செயலாற்றி வருகின்றனர். அதன்படி அரசின் பல்வேறு திட்டங்கள் கிராமப் பகுதிகளிலுள்ள கடைக்கோடி மக்களுக்கும் முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி அனைத்துத்துறை அலுவலர்களும் கிராமப் பகுதிகளுக்கு நேரடியாக சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நிறைவேற்றிடும் வகையில் இந்த சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு வழங்கிடும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியில் 304 பேருக்கு ரூ.3 கோடியே 21 லட்சத்து 16 ஆயிரத்து 677 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    பொதுமக்களாகிய நீங்கள் அரசின் திட்டங்களை பெறுவதில் அக்கறை காட்டி திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும். மேலும் பெரியாறு பாசன கால்வாயிலும், வைகைப் பாசன கால்வாயிலும் முதற்கட்டமாக குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதேபோல் மேலும் விவசாயத்திறக்கு தண்ணீர் திறந்து விட வலியுறுத்துவோம்.

    அதேபோல் சிவகங்கை நகர்பகுதியில் நீர்வரத்துக்கால்வாய் சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வீணாகாமல் குளங்களுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் மற்ற இடங்களிலும் நீர்வரத்துக்கால்வாய் சீர் செய்யப்படும். மேலும் வேளாண்மைத்துறையில் பல்வேறு திட்டங்கள் வழங்கப்படுகிறது. விவசாயிகள் இத்திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் ஆஷா அஜீத், தாசில்தார் மணிவாசகம், வட்டார வளர்ச்சி அலுவலர் திருப்பதி, துணை தாசில்தார் நேரு உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து தேவகோட்டையில் நடந்த புத்தகத்திருவிழாவை அமைச்சர் பாஸ்கரன் பார்வையிட்டார். அங்கு ஒவ்வொரு அரங்கமாக சென்று புத்தகங்களை பார்த்து, சில புத்தகங்களை தேர்ந்தெடுத்து பெற்றுக்கொண்டார். அமைச்சருடன் மாவட்ட இளைஞரணி செயலாளர் பிர்லா கணேசன், தேவகோட்டை நகர் மன்ற முன்னாள் துணைத்தலைவர் சுந்தரலிங்கம், தலைமை கழக பேச்சாளர் முகவை நெல்சன், பெருவத்தி, முருகன், தேவகோட்டை நகர்மன்ற முன்னாள் கவுன்சிலர்கள் ரமேஷ், சரவணன், நகர இளைஞரணி செயலாளர் சுபகார்த்திகேயன், முத்துராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    கொலை வழக்கில் விடுதலை என்று தீர்ப்பு வந்த சில மணி நேரத்தில் முன்னாள் கவுன்சிலர் பரிதாபமாக இறந்தார்.
    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே கும்மிடிகாம்பட்டி கொட்டாவூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், சென்னையில் துரித உணவகம் (பாஸ்ட்புட்) நடத்தி வந்தார். மேலும், இவர் இதே ஊரின் தே.மு.தி.க. முன்னாள் கிளை செயலாளராகவும் இருந்தார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    கடந்த 2.3.2012 அன்று அதே பகுதியில் உள்ள பூங்காவனத்தம்மன் கோவில் முன்பு வெங்கடேசன் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் வெங்கடேசனை வெட்டி கொலை செய்துவிட்டு, தப்பி ஓடிவிட்டனர்.

    இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறி கந்திலியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் பாபுசங்கர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாபுஜி, திருப்பதி, முரளி, ஜோதி, குப்புசாமி, கோவிந்தன், விஜய், அருண் ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கு திருப்பத்தூரில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கை நீதிபதி டி.இந்திராணி விசாரித்து, பாபுசங்கர் உள்பட 9 பேரை வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.

    இந்த நிலையில் தீர்ப்பு வந்தால், நமக்கு தண்டனை அளிக்கப்படுமோ? என பாபுசங்கர் சோகத்துடன் காணப்பட்டார். நேற்று முன்தினம் இரவு திடீரென பாபுசங்கருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் பாபுசங்கர் பரிதாபமாக இறந்தார்.

    அதாவது வழக்கில் இருந்து பாபுசங்கர் உள்ளிட்ட 9 பேரும் விடுதலையாகிவிட்டார்கள் என தீர்ப்பு வந்த சில மணி நேரங்களிலேயே பாபுசங்கர் இறந்துவிட்டார்.

    இந்த சம்பவம் கந்திலி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கல்லலில் கோவில் கும்பாபிஷேகத்துக்கு அனுமதி வழங்கக்கோரி 22 கிராம மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
    கல்லல்:

    காரைக்குடியை அடுத்த கல்லலில் பிரசித்தி பெற்ற சோமசுந்தரேசுவரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவில் உள்ளது. சிவகங்கை சமஸ்தான, தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசிமக திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். அதிலும் இந்த திருவிழாவின்போது நடைபெறும் தேரோட்ட விழாவில் கல்லலில் உள்ள 44 ஊராட்சிக்குஉட்பட்ட 22 கிராம மக்கள் உள்ளிட்ட பல்லாயிரக் கணக்காக மக்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வருவது மற்றொரு தனிச்சிறப்பாக இருந்து வருகிறது.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ந்தேதி பாலாலயம் நடைபெற்றது.

    இதையடுத்து கோவிலில் உள்ள கோபுரங்கள் மற்றும் கோவில் சுவற்றுக்கு வர்ணம் அடிப்பதற்காக சாரம் பூசப்பட்ட நிலையில் இந்து சமய நிலையத்துறை சார்பில் கும்பாபிஷேகத்திற்கான அனுமதி வழங்காததால் இன்றுவரை அந்த கோவிலில் எந்தவித திருப்பணியும் நடைபெறாமல் இருந்து வருகிறது. இதையடுத்து கோவில் கோபுரங்களில் திருப்பணி வேலைக்காக கட்டப்பட்ட சாரம் உறுதியற்ற நிலையில் தற்போது உள்ளது.

    இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:- கல்லலில் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் விமான கோபுரம் உள்பட 13 கோபுரங்கள் உள்ளன. இதுதவிர சிவன், அம்பாள், பைரவர், மகாலெட்சுமி, படிக்காசு விநாயகர், சண்டிகேசுவரர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனுமதி வழங்காமல் உள்ளதால் இந்த பகுதியில் போதிய மழையில்லாமலும், தெப்பக்குளத்தில் போதிய தண்ணீர் இல்லாமல் இருந்து வருகிறது.

    பல்வேறு கிராம மக்கள் இந்த தெப்பக்குளத்தை குளிப்பதற்கு, துணி சலவை உள்ளிட்ட தேவைக்கு பயன்படுத்தி வரும் வேளையில் தற்போது தண்ணீர் இல்லாமல் இருப்பது மிகவும் வேதனையளிக்கும் செயலாக உள்ளது.

    எனவே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இனிமேலும் காலம் தாழ்த்தாமல் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு உரிய அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்கள் வழங்கி விட்டு கல்லல் மற்றும் அதை சுற்றியுள்ள 22 கிராம மக்களும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 
    காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வக பங்களிப்புடன் தீபாவளி பண்டிகையையொட்டி சந்தைக்கு பசுமை பட்டாசு வர உள்ளது.
    காரைக்குடி:

    காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தில் (சிக்ரி) 2 நாட்கள் பார்வையாளர் தின விழா நடைபெற்றது. இதையொட்டி காலை 9.30மணி முதல் மாலை 4.30மணி வரை பார்வையாளர்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். இந்த ஆய்வகத்தில் மின் வேதியியல் துறைக்கு பயன்படும் நவீன கனிம மற்றும் மூலப்பொருட்கள், மின் கரிம வேதியியல், மின் கனிம வேதியியல், நோய் சம்பந்தமான கிருமிகளை ஆராய பயன்படும் நவீன சென்சார்கள் மற்றும் மின் முலாம் பூசுதல் ஆகிய பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி மூலம் 250-க்கும் மேற்பட்ட தொழில் நுட்பங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. மேலும் நைட் ரேட்டை அடிப்படையாக கொண்டு சிவகாசியில் பட்டாசு தயாரிக்கப்படுகிறது.

    மேலும் நாட்டின் மொத்த தேவையில் 85 சதவீதம் பட்டாசுகள் சிவகாசியில் தயாரிக்கப்படுகிறது. அதிக ஒலி மற்றும் காற்று மாசு ஏற்படுவதால் புதுடெல்லியில் இந்த பட்டாசை விற்பதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுஉள்ளதால் பசுமை பட்டாசு தயாரிக்க வேண்டிய கட்டாயத்தில் பட்டாசு உற்பத்தியாளர்கள் உள்ளனர்.

    பொதுவாக சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் அலுமினியத்தை மூலப்பொருட்களாக வைத்து சல்பர், கார்பன், பொட்டாசியம் நைட் ரேட் ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. தற்போது இங்கு கண்டு பிடிக்கப்பட்டுள்ள இந்த பட்டாசில் அலுமினியத்திற்கு பதிலாக மெக்னீசியம் சேர்க்கப்பட்டுஉள்ளது. சல்பர் மற்றும் கார்பன் தேவையில்லை. இந்த பட்டாசின் ஒலி அளவு 120-ல் இருந்து 111 டெசிபலாக குறையும். மேலும் காற்று மாசு 70சதவீதமாக குறையும். வரும் தீபாவளி பண்டிகையின் போது இங்கு தயாரிக்கப்படும் இந்த பசுமை பட்டாசுகள் சந்தைக்கு வர வாய்ப்பு உள்ளது.

    இதில் சிக்ரியுடன் நாக்பூரில் உள்ள நீரி ஆராய்ச்சி நிலையம், சிவகாசி டான் பாமா ஆகியவை இணைந்து செயல்படுகிறது. சிக்ரியில் 2 நாட்கள் நடைபெற்ற பார்வையாளர் தின விழாவில் நடைபெற்ற ஆராய்ச்சிகளை தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பார்வையிட்டு அதற்கான விளக்கங்களை கேட்டு தெரிந்துகொண்டனர்.

    மேலும் ஆய்வகத்தில் தொழில் நுட்ப ஆராய்ச்சிகளின் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் அவற்றின் மாதிரிகளின் செயல் விளக்க வண்ணப்படங்கள் ஆகியவைகள் பார்வையாளர்களின் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை மத்திய மின்வேதியியல் ஆய்வக இயக்குனர் டாக்டர் விஜயமோகனன் பிள்ளை தலைமையில் விஞ்ஞானிகள் செய்திருந்தனர். 
    வருகிற 28-ந் தேதி காலை 10 மணி அளவில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது
    சிவகங்கை:

    வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ‘வேலை வாய்ப்பு வெள்ளி” என்ற தலைப்பின் கீழ் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.

    அதன் அடிப்படையில் வருகிற 28-ந் தேதி அன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அதில் தனியார் நிறுவனம் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட பணிநாடுனர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

    எட்டாம் வகுப்பு தேர்ச்சி, பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, பட்டயப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ. படித்த விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    பணிவாய்ப்பு பெறுவோருக்கு பதிவுமூப்பு ரத்து செய்யப்படமாட்டாது என்று சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.
    காரைக்குடியில் மது குடித்து வந்து அடிக்கடி தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த மகள், தந்தையின் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொலை செய்தார். #Murder

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கணேசபுரத்தில் உள்ள கருணாநிதி நகரைச் சேர்ந்தவர் பிச்சை (வயது 65). சுமை தூக்கும் தொழிலாளியான இவருக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர்.

    மகள்கள்-மகன்களுக்கு திருமணமான நிலையில் மூத்த மகள் கற்பகவள்ளி (40) கணவரை பிரிந்து தந்தையுடன் வசித்து வந்தார்.

    கடந்த சில மாதங்களாக பிச்சை அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மகளிடம் தகராறு செய்து வந்தார்.

    நேற்றும் வழக்கம் போல் மது குடித்துவிட்டு வந்த பிச்சை, கற்பகவள்ளியிடம் வாக்குவாதம் செய்தார். பின்னர் பிச்சை போதையில் தூங்கினார். ஆனால் ஆத்திரம் அடங்காத கற்பகவள்ளி அவரை கொலை செய்ய திட்டமிட்டார்.

    அதன்படி நள்ளிரவில் வீட்டில் இருந்த கிரைண்டர் கல்லை எடுத்து தூங்கிக் கொண்டிருந்த பிச்சை தலையில் போட்டார். இதில் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த காரைக்குடி தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து பிச்சை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து கற்பகவள்ளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையை கொலை செய்த கற்பகவள்ளி மனநல பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

    தந்தையின் குடிப்பழக்கத்தால் மகள் கொலையாளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. #Murder

    காரைக்குடி அருகே இளம்பெண்ணை மானபங்கப்படுத்த முயன்ற வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

    காரைக்குடி:

    காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் டெலி போன் காலனியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி உமா மகேஸ்வரி (வயது 31). இவர் கடந்த 22-ந் தேதி இரவு வீட்டை பூட்டி விட்டு வெளியே செல்ல தயாரானார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வேன் டிரைவர் முத்துக்குமார் (21) என்பவர் மதில் சுவர் ஏறிக்குதித்து உமா மகேஸ்வரியை மானபங்கப்படுத்த முயன்றார்.

    உமா மகேஸ்வரி சத்தம் போடவே அவரை தள்ளி விட்டு விட்டு ஓடிவிட்டார்.

    அவர் தப்பிச் செல்லும் போது இங்கு நடந்ததை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.

    இது குறித்து உமா மகேஸ்வரி குன்னத்தூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் போது மணி வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    மானாமதுரை அருகே மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயி கைதுசெய்யப்பட்டார்.
    மானாமதுரை:

    மானாமதுரை அருகே ராஜகம்பீரம், முத்தனேந்தல் உள்ளிட்ட கிராமங்கள் விவசாயம் அதிகம் நடைபெறும் பகுதியாகும். மேலும் இங்கு அதிக எண்ணிக்கையில் மயில்கள் உள்ளன. இந்தநிலையில் ராஜகம்பீரம் பகுதியில் மயில்கள் மர்மமான முறையில் இறந்துகிடந்தன. இதனை பார்த்த விவசாயிகள் சிலர் சந்தேகத்தின்பேரில் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது 7 மயில்கள் விஷத்தை தின்று இறந்துகிடப்பதை பார்த்தனர்.

    இதனையடுத்து வனத்துறையினர் கொடுத்த தகவலின்பேரில் மானாமதுரை போலீசார் நடத்திய விசாரணையில் ராஜகம்பீரத்தை சேர்ந்த விவசாயி சந்திரன்(வயது 50) என்பவர் விஷம் வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைதுசெய்தனர்.

    கைதுசெய்யப்பட்ட சந்திரன் போலீஸ் விசாரணையில் கூறும்போது, ராஜகம்பீரத்தில் குத்தகைக்கு நிலம் எடுத்து விவசாயம் செய்து வருகிறேன். ஆனால் பயிர்களை மயில்கள் சேதப்படுத்தி வந்தன. இது தொடர்கதையாகி வந்ததால் நெல்லில் குருணை மருந்தை வைத்தேன். பின்னர் அதனை தின்ற மயில்கள் இறந்துபோனதாக தெரிவித்தார்.

    மானாமதுரை பகுதியில் சமீப காலமாக மயில்கள் மர்மமான முறையில் இறந்துபோகும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட வனத்துறையினரும், போலீசாரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். 
    மானாமதுரை அருகே ராஜகம்பீரம் பகுதியில் உள்ள வயல்வெளி பகுதியில் 25-க்கும் மேற்பட்ட மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயி கைது செய்யப்பட்டார்.

    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மயில்கள் உள்ளன. அப்பகுதியில் மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடப்பது அடிக்கடி நடந்து வருகிறது. மயில்களை பாதுகாக்கும் வகையில் வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் ராஜகம்பீரம் பகுதியில் உள்ள வயல்வெளி பகுதியில் 25-க்கும் மேற்பட்ட மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.

    இதுகுறித்து தகவல் அறிந்த மானாமதுரை போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.


    போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி சந்திரன் (வயது 50) என்பவர் மயில்களுக்கு வி‌ஷம் வைத்து கொன்றது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    குத்தகை எடுத்து விவசாயம் செய்த நிலத்தில் புகுந்து மயில்கள் பயிர்களை சேதப்படுத்தின. இதனால் நெல்லில் குருணை மருந்தை கலந்து மயில்களை கொன்றேன் என்று கைதான சந்திரன் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    முதல்-அமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள அனைவரும் துரோகிகள் என்று தங்கதமிழ்ச்செல்வன் பேசினார். #TTVDhinakaran #ThangaTamilselvan #Edappadipalaniswami #ADMK
    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 110- வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.

    இதில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    18 எம்.எல்.ஏ.க்களான நாங்கள் நட்புக்கு மதிப்பு கொடுத்து டி.டிவி.தினகரன் அணியில் இருக்கிறோம். முதல்-அமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள அனைவரும் துரோகிகள். ஊழல் வாதிகள். அனைத்து அமைச்சர்களும் ஊழல்களில் ஜொலிக்கின்றனர். ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் வீட்டில் 10 ஆயிரம் கோடி ரூபாய் பதுக்கி வைத்துள்ளார்கள்.


    ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை 3 மாதத்தில் முடியும் என்றனர். தற்போது கமி‌ஷன் அமைக்கப்பட்டு 1 வருடமாகி விட்டது. இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    மேற்கண்டவாறு தங்க தமிழ்ச்செல்வன் பேசினார். #TTVDhinakaran #ThangaTamilselvan #Edappadipalaniswami #ADMK
    காரைக்குடி அழகப்பா மேலாண்மை நிறுவனம் மற்றும் போக்குவரத்து போலீசார் சார்பில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
    காரைக்குடி:

    காரைக்குடி அழகப்பா மேலாண்மை நிறுவனம் மற்றும் போக்குவரத்து போலீசார் சார்பில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம், ஸ்ரீராம்நகர் ரெயில் கேட் பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அழகப்பா மேலாண்மை நிறுவன இயக்குனர் ராஜ்மோகன் தலைமை தாங்கினார். போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினம் கருத்தரங்கை தொடங்கிவைத்து, போக்குவரத்து விதிமுறைகள் குறித்து மாணவ-மாணவிகளுக்கு எடுத்து கூறினார்.

    பின்னர் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதுடன், வாகனங்களில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஆயிஷாமில்லத், மாணவர்கள் ஒருங்கிணைப்பாளர் உமாதேவி ஆகியோர் தலைமையில் மாணவ-மாணவிகள் செய்திருந்தனர். 
    மதுரையில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய வக்கீல் நந்தினியை பாரதிய ஜனதாவினர் தாக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #BJP #Modi
    காரைக்குடி:

    மதுரையைச் சேர்ந்த வக்கீல் நந்தினி அவரது தந்தை ஆனந்த்துடன் மதுவுக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்.

    அதன்படி இன்று காரைக்குடிக்கு வந்த நந்தினி, அவரது தந்தை ஆனந்த் ஆகியோர் மது ஒழிப்பு குறித்து பிரசாரம் செய்வதற்காக அங்குள்ள கல்லூரிகளுக்கு செல்ல முயன்றனர். அப்போது கல்லூரி நிர்வாகம், மாணவர்களை சந்திக்க மறுத்து விட்டது.

    இதையடுத்து நந்தினி, ஆனந்த் ஆகியோர் மது ஒழிப்புக்கு எதிரான வாசகங்களை ஏந்திக்கொண்டு செக்காலை ரோடு, அண்ணாசிலை சந்திப்பு மற்றும் முக்கிய பகுதிகளில் நடைபயணமாக சென்று பிரசாரம் செய்தனர்.

    அவர்கள் வைத்திருந்த பதாகைகளில் “மது வீட்டுக்கு கேடு, மோடி நாட்டுக்கு கேடு” என எழுதப்பட்டிருந்தது.

    இதனால் ஆத்திரமடைந்த பாரதிய ஜனதா நிர்வாகிகள் விஸ்வநாத கோபாலன், சந்திரன் ஆகியோர் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர் நந்தினி, ஆனந்த்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் அவர்கள் வைத்திருந்த பதாகைகளை கிழித்து எறிந்து தாக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த காரைக்குடி டி.எஸ்.பி. கார்த்திகேயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரையும் மீட்டனர்.

    பாரதிய ஜனதா கட்சியினர் தாக்க முயன்றதை கண்டித்து நந்தினி, ஆனந்த் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து நந்தினி கூறுகையில், மோடிக்கு எதிரான வாசகங்கள் இடம் பெற்றதால் பாரதிய ஜனதா கட்சியினர் எங்களை தாக்க வந்தனர்.

    அவர்களுக்கு ஆட்சேபனை இருந்தால் போலீசில் புகார் தெரிவித்திருக்கலாம். பலமுறை பா.ஜ..க.வினர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

    தற்போது நடந்த சம்பவத்திற்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்றார். #BJP #Modi
    ×