என் மலர்tooltip icon

    சிவகங்கை

    சிவகங்கையில் வருகிற 15-ந் தேதி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ‘வேலை வாய்ப்பு வெள்ளி” என்ற தலைப்பின் கீழ் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.

    இந்த வேலைவாய்ப்பு முகாமில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம். வேலைநாடுநர்களும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பினைப் பெறலாம்.

    அதன் அடிப்படையில் வருகிற 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் சென்னையில் உள்ள வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இதில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வேலைநாடும் ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.

    இந்த முகாமில் கலந்து கொள்ளும் வேலைநாடுநர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பிற்கு பதிவு, வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை, இலவச திறன் பதிவு போன்ற சலுகைகளும் வழங்கப்படும்.

    முகாமில் பணிவாய்ப்பு பெறுவோருக்கு பதிவுமூப்பு ரத்து செய்யப்படமாட்டது .

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் குறித்து மு.க.அழகிரியிடம் கேள்வி எழுப்பிய நிருபர்களிடம் இதையெல்லாம் ஏன் என்னிடம் கேட்கிறீர்கள் என்று அவர் கூறினார்.
    காரைக்குடி:

    பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா மகள் சிந்துஜா திருமணம் வருகிற 15-ந் தேதி காரைக்குடியில் நடைபெறுகிறது. திருமணத்தில் பங்கேற்குமாறு முக்கிய பிரமுகர்களுக்கு எச்.ராஜா பத்திரிகை வழங்கி அழைப்பு விடுத்தார். மு.க.அழகிரிக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்தார்.

    இதையொட்டி மு.க.அழகிரி இன்று காரைக்குடியில் உள்ள எச்.ராஜா இல்லத்துக்கு வந்தார். சிறிது நேரம் எச்.ராஜாவுடன் பேசிக் கொண்டிருந்த அவர், அங்கிருந்து புறப்பட்டார்.

    அப்போது நிருபர்கள், தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கும்போது, நான் தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. அப்படியிருக்கும்போது அதுபற்றி என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? என்றார்.

    தொடர்ந்து நிருபர்கள் கேள்வி கேட்க முயன்றபோது அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டார்.

    மாணவர்கள் எங்கு பார்த்தாலும் கையில் செல்போன் வைத்துக்கொண்டு அதனுடன் நேரத்தை செலவு செய்கின்றனர். இதையெல்லாம் பார்க்கும்போது செல்போனை கண்டுபிடித்தவர் மீது ஆத்திரம் வருகிறது என்று அமைச்சர் பாஸ்கரன் கூறினார்.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள செட்டிநாடு அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அழகப்பா அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது.

    அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி பேசியதாவது:-

    தற்போதைய மாணவர்கள் எங்கு பார்த்தாலும் கையில் செல்போன் வைத்துக்கொண்டு அதனுடன் நேரத்தை செலவு செய்கின்றனர். இன்னும் சிலர் அந்த செல்போனுடன் ‘புளு டூத்’ உபகரணத்தை காதில் மாட்டிக் கொண்டு தனியாக பேசியபடி சிரித்துக்கொண்டே செல்கின்றனர்.

    செல்போனுடன் மாணவர்கள்

    இதையெல்லாம் பார்க்கும்போது செல்போனை கண்டுபிடித்தவர் மீது ஆத்திரம் வருகிறது. செல்போன் என்பது நமக்கு மற்றவர்களிடம் தகவல்களை பரிமாற்றுவதற்கான சாதனம். ஆனால் அந்த சாதனத்தால் கலாசார சீரழிவுகளில் சிக்கி மாணவ-மாணவிகள் உள்பட பலரும் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே செல்போனை தங்களது தேவைக்காக மட்டும் பயன்படுத்தி பிற தவறான விஷயங்களில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    காரைக்குடியில் 2-வது திருமணம் செய்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்த டாக்டர் மீது அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தந்தை பெரியார் நகரைச் சேர்ந்தவர் கண்ணகி (வயது34). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் நல டாக்டர் ராமசுப்பிரமணியன் (44) என்பவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    அப்போது பெண் வீட்டார் சார்பில் 75 பவுன் நகை, ரூ.8 லட்சம் மதிப்பிலான வெள்ளி, சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டன. இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் காரைக்குடி அனைத்து மகளிர் போலீசில் கண்ணகி புகார் கொடுத்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவருக்கும், எனக்கும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. எனக்கு தெரியாமல் சீதாலட்சுமி என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். மேலும் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் என்னை கொடுமைப்படுத்தி கொலை மிரட்டலும் விடுத்தனர்.

    எங்கள் வீட்டில் இருந்து கொடுக்கப்பட்ட நகை மற்றும் சீர்வரிசை பொருட்களையும் தரமறுத்து விட்டனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி விசாரணை நடத்தி டாக்டர் ராமசுப்பிரமணியன், சீதாலட்சுமி, பெற்றோர் ராமசாமி- ரமணி, சகோதரி மல்லிகா ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.
    சிவகங்கையில் மூதாட்டி கொலையில் தலைமறைவாக இருந்த 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த நகை, பணத்தை பறிமுதல் செய்தனர்.
    காரைக்குடி:

    சிவகங்கையை அடுத்த ஒக்கூர் சின்னவீதியைச் சேர்ந்தவர் ஆதப்பன் (வயது82). இவரது மனைவி மீனாட்சி (78). இவர்களின் மகன்களுக்கு திருமணமாகி வெளியூர்களில் இருப்பதால் தனியாக வசித்து வருகிறார்கள்.

    வீட்டில் மீனாட்சி ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். மற்றொரு அறையில் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆதப்பனை அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோகித்நாதன் மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து ஆய்வு நடத்தினர்.

    மேலும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஆதப்பனிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் தனது வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவகங்கை டி.புதூரைச் சேர்ந்த கணேஷ் (25), பச்சேரியைச் சேர்ந்த செல்லப்பாண்டி (24) ஆகியோர் அறிமுகமானார்கள். அவர்கள் எங்களுக்கு வீட்டு வேலை மற்றும் கடைகளுக்கு சென்று வர உதவியாக இருந்தனர். இதை நம்பி நாங்கள் அவர்களை வீட்டுக்குள் அனுமதித்தோம்.

    சம்பவத்தன்று இரவு வீட்டுக்கு வந்த அவர்கள் திடீரென பணம் தருமாறு மிரட்டி கேட்டனர். ஆனால் பணம் தர முடியாது என கண்டிப்புடன் கூறினோம். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் மீனாட்சியை கழுத்தை நெரித்து கீழே தள்ளினர். தடுக்க வந்த என்னையும் தாக்கினர். தலையில் பலத்த காயம் அடைந்த மீனாட்சி சம்பவ இடத்திலேயே பலியானார். மயங்கி கிடந்த நான் இறந்து விட்டதாக கருதி 2 பேரும் அங்கிருந்த 5 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தப்பி விட்டனர் என தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் 2 பேரையும் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது டி.புதூர் பகுதியில் பதுங்கி இருந்த கணேஷ், செல்லப்பாண்டி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை-பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்களை நோட்டமிட்டு அவர்களை உதவுவதுபோல் நடித்து நகை-பணத்தை இவர்கள் கொள்ளையடித்து உள்ளனர். இதேபோன்று வேறு எங்கும் கைவரிசை காட்டி உள்ளனரா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காரைக்குடியில் ஒரு ரூபாய்க்கு 1 கிலோ மீன் விற்கப்பட்டது. இதனை வாங்க ஏராளமான பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    காரைக்குடி:

    அண்மைக்காலமாக கடையை விளம்பரப்படுத்து வதற்காக வித்தியாசமான முறையில் வியாபாரிகள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.

    கடந்த மாதம் திண்டுக்கல்லில் 5 பைசாவுக்கு பிரியாணி விற்பனை செய்யப்பட்டது. இதை வாங்க காலை முதலே ஏராளமானோர் திரண்டனர்.

    இதன் பரபரப்பு அடங்குவதற்குள் 10 பைசாவுக்கு பிரியாணியும், மற்றொரு கடையில் டிசர்ட்டும் வழங்கப்பட்டது. இவ்வாறு தங்கள் கடையை பிரபலப்படுத்த வியாபாரிகள் இதுபோன்ற வித்தியாசமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறனர்.

    இதேபோன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள பர்மா காலனியில் செயல்படும் மீன்கடை ஒன்றில் இன்று ஒரு ரூபாய்க்கு 1 கிலோ மீன் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து காலை முதலே அப்பகுதியைச் சேர்ந்த அசைவ பிரியர்கள் கடையை முற்றுகையிட்ட னர்.

    முதலில் வந்த 100 பேருக்கு ஒரு கிலோ மீன் 1 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். ஒரு ரூபாய்க்கு 1 கிலோ மீன் கிடைத்ததால் வாடிக்கையாளர்கள் முகத்தில் மகிழ்ச்சி ததும்பியதை பார்க்க முடிந்தது.

    முதலில் வந்த 100 பேருக்கு ஒரு கிலோ மீன் 1 ரூபாய்க்கு வழங்கியது ஏன் என்று கடை உரிமையாளர் பாலுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    எனது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல். நான் காரைக்குடியில் இன்று முதல் மீன்கடை தொடங்கியுள்ளேன். மீமிசல் மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை அன்றே கடைக்கு கொண்டு வந்து விற்பனை செய்ய உள்ளோம். மற்ற கடைகளில் விற்பது போல் பனிக்கட்டியில் வைத்து விற்பனை செய்யமாட்டோம்.

    புதிதாக மீன்கடை தொடங்கப்பட்டுள்ளதை காரைக்குடி மக்கள் அறியவும், அவர்களது மனதில் இடம்பிடிக்கவும் அன்று பிடிக்கும் மீன்களை அன்றே விற்பனை செய்கிறோம் என்பதை எடுத்துக்கூறவுமே இன்று எங்கள் கடைக்கு வந்த முதல் 100 பேருக்கு கிலோ 1 ரூபாய்க்கு வழங்கினோம். அதன் பின்னர் வந்தவர்களுக்கு லாபம் இல்லாமல் கொள்முதல் விலையில் வழங்குகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காரைக்குடி அருகே போன் பேச வீட்டின் வெளியே வந்த வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள தாணிச்சா ஊரணியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகன்கள் ஆறுமுகம், பஞ்சு என்ற பஞ்சவர்ணம் (வயது 40).

    சகோதரர்கள் 2 பேரும், காரைக்குடி ரெயில் நிலையம் அருகே உள்ள குட்செட் ரோட்டில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வேலை பார்த்து வந்தனர். பஞ்சவர்ணம் தனது உறவினர் நடத்திய மதுபாரில் சில மாதங்களுக்கு முன்பு வேலை பார்த்தார்.

    கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அந்த வேலையை விட்டு விட்டார். நேற்று இரவு சகோதரர்கள் 2 பேரும் வீட்டில் இருந்தனர்.

    அப்போது பஞ்சவர்ணத்துக்கு செல்போன் அழைப்பு வந்தது. அதனை பேசிக்கொண்டே அவர், வீட்டிற்கு வெளியே வந்தார். அங்கு ஒருவர் நின்றார். அவர் பஞ்சவர்ணத்திடம் ஏதோ பேச்சு கொடுத்தார்.

    அப்போது அங்கு கார் வந்தது. அதில் இருந்து ஒருவன் இறங்கினான். அவனும் ஏற்கனவே பஞ்சவர்ணத்துடன் பேசிக் கொண்டிருந்தவரும் சேர்ந்து அரிவாளால் சரமாரியா வெட்டினர்.

    பஞ்சவர்ணத்தின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்த சகோதரர் ஆறுமுகம் ஓடிவந்தார். அவரை பார்த்ததும் அரிவாளால் வெட்டிய 2 பேரும் தப்பி ஓடி விட்டனர்.

    ரத்த வெள்ளத்தில் கிடந்த பஞ்சவர்ணத்தை, சகோதரர் ஆறுமுகம் மீட்டு, காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பஞ்சவர்ணம் பரிதாபமாக இறந்தார்.

    கொலை குறித்த தகவல் கிடைத்ததும் அழகப்பாபுரம் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். அந்தப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகள் மூலம் குற்றவாளிகள் யார்? என அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    காரைக்குடியில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் பஸ்கள் நிறுத்தும் பகுதி மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக இருப்பதால் சிமெண்டு தளம் அமைக்க டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி அருகே மானகிரி பகுதியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை இயங்கி வருகிறது. இந்த பணிமனையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இது தவிர சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏராளமான விரைவு பஸ்கள் இயங்கி வருகிறது. இந்த விரைவு பஸ்கள் தினந்தோறும் மாலை மற்றும் இரவு நேரங்களில் காரைக்குடி பகுதியில் இருந்து பல்வேறு பகுதிக்கு இயக்கப்பட்டு வருகிறது. பகல் நேரங்களில் இங்குள்ள பணிமனையின் அருகே உள்ள இடத்தில் அந்த பஸ்கள் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் அந்த இடம் செம்மண் பூமியாக உள்ளதால் சிறு மழை பெய்தால் கூட அந்த பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் மாலை நேரத்தில் பஸ்களை இயக்க முடியாமல் டிரைவர்கள் அவதியடைந்து வருகின்றனர். இது தவிர சில நேரங்களில் அந்த பஸ்கள் சகதியில் சிக்கி தவிக்கும் நிலையும் இருந்து வருகிறது.

    தற்போது அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை மற்றும் திருப்பதி ஆகிய பகுதிக்கு புதிய பஸ்கள் விடப்பட்டுள்ளது. இந்த புதிய பஸ்களும் இந்த இடத்தில் தான் பகல் நேரங்களில் நிறுத்தப்படுகிறது. இதனால் புதிய பஸ்கள் கூட விரைவில் பழுதாகி விடுகிறது. 

    இது குறித்து அரசு விரைவு பஸ் டிரைவர்கள் கூறியதாவது:-

    வெளியூர்களுக்கு செல்லும் விரைவு பஸ்களை இயக்கி வரும் நாங்கள் இரவு முழுவதும் அந்த பகுதிக்கு சென்று விட்டு மறுநாள் காலையில் இந்த பகுதியில் பஸ்களை நிறுத்தி விட்டு பகல் நேரங்களில் ஓய்வு எடுப்பது வழக்கம். அதன் பின்னர் பகல் நேரத்தில் மழை பெய்தால் இந்த பகுதி முழுவதும் சேறும், சகதியுமாகி விடுகிறது. இதனால் அந்த பகுதியில் இருந்து பஸ்களை வெளியே கொண்டு வருவதில் கடுமையான சிரமங்களை நாங்கள் சந்திக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதி முழுவதும் சிமெண்டு தளம் அல்லது பேவர்பிளாக் கற்கள் கொண்டு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு அமைத்தால் தான் இந்த பகுதியில் நிறுத்தும் பஸ்கள் பழுதாகாமல் இருக்கும். 

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    மானியத்தில் கறவை மாடு வழங்க நடப்பாண்டிற்கு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது என்று அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.
    சிவகங்கை:

    மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் சிவகங்கையை அடுத்த, அழகிச்சிப்பட்டி ஊராட்சியில் மானிய திட்டத்தில் கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சந்திரன் முன்னிலை வகித்தார். வங்கியின் பொது மேலாளர் செல்லபாண்டி வரவேற்று பேசினார்.

    விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பாஸ்கரன் மகளிர்குழுக்களுக்கு மானிய திட்டத்தில் கறவை மாடுகள் வழங்கி பேசியதாவது:- ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார். மேலும் பெண்கள் சுயமாக பொருளாதாரத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக விலையில்லாத ஆடு, மாடுகளை வழங்கினார்.

    அவரின் இந்த திட்டங்களையும், பெண்களுக்கான தொழிற் பயிற்சி மற்றும் வங்கிகள் மூலம் சுழல்நிதி கடன் என பல்வேறு திட்டங்களையும் தற்போதைய அரசு சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் மானிய திட்டத்தில் கறவை மாடு வழங்க நடப்பாண்டிற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. அதில் இதுவரை ரூ.4 கோடி மதிப்பிலான கறவை மாடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    தற்போது அழகிச்சிப்பட்டி ஊராட்சியில் 35 பயனாளிகளுக்கு ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கறவை மாடுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மாவட்டத்திலுள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகள் மூலம் சுயஉதவி குழுக்களுக்கு இந்த திட்டத்தில் கறவை மாடுகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் சசிக்குமார், கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் பாண்டி, பலராமன், முன்னாள் யூனியன் தலைவர் மானாகுடி சந்திரன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 
    சிங்கம்புணரியில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது.
    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரி கிராம மக்கள் சார்பில் 4-வது ஆண்டு கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில் சிங்கம்புணரி அருகே உள்ள எஸ்.எஸ். பள்ளிவாசலில் தொடங்கி மருதிபட்டி வரை உள்ள 8 மைல் தூரத்திற்கு பெரிய மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

    இதேபோல கிழக்கிப்பட்டி வரை 6 மைல் பந்தய தூரமாக நிர்ணயிக்கப்பட்டு சின்ன மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. போட்டியில் பெரிய மாட்டு வண்டி பிரிவில் 13 வண்டிகளும் சின்ன மாட்டு வண்டி பிரிவில் 16 வண்டிகளும் கலந்து கொண்டன.

    இதில் பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை சொக்கநாதபுரம் பாலு வண்டியும், 2-வது பரிசாக நொண்டி கோவில்பட்டி விய்வ மித்ரா வண்டியும், 3-வது பரிசை கொட்டகுடி பால்ச்சாமி வண்டியும், 4-வது பரிசு சிங்கம்புணரி மதிசூடியன் வண்டியும் பெற்றன.

    சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை சிங்கம்புணரி மதிசூடியன் வண்டியும், 2-வது பரிசு புலிமங்களப்பட்டி முனிச்சாமி வண்டியும், 3-வது பரிசு செம்மினிப்பட்டி பவுன்ராஜ் வண்டியும், 4-வது பரிசு குப்பச்சிப்பட்டி சந்திரன் அன்புகரசு வண்டியும் பெற்றன. பந்தயத்தில் கலந்து கொண்ட அனைத்து வண்டிகளுக்கும் கிராமத்தினர் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. ஏற்பாடுகளை சிங்கம்புணரி கார்த்திகை தீப திருநாள் விழாக்குழுவினர், கிராமத்தினர் செய்திருந்தனர்.
    காரைக்குடி அருகே கண்மாயில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த பெரிய கோட்டை அருகே உள்ள ஆவத்தான் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் நாகமுத்து. இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் கவிப்பிரியா (வயது 11). இவர் அந்த பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் கவிப்பிரியா அந்த பகுதியில் உள்ள கண்மாய்க்கு குளிக்க சென்றார். அங்கு தனது ஆடைகளை துவைத்து காயபோட்டு விட்டு கண்மாயில் குளிக்க இறங்கியுள்ளார். அப்போது அவர் ஆழம் அதிகமான பகுதிக்கு சென்று விட்டார்.

    ஆனால் கவிப்பிரியாவுக்கு நீச்சல் தெரியாத காரணத்தால், அவர் நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடினார். இதை பார்த்த அந்த பகுதியில் இருந்தவர்கள் விரைந்து வந்து மாணவியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மாணவி கவிப்பிரியா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சாக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாக்குலின் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    காளையார்கோவில் அருகே சுமார் 353 ஆண்டுகள் பழமையான வாமன உருவம் பொறித்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    சிவகங்கை:

    காளையார்கோவில் வட்டம் கொல்லங்குடியை அடுத்த வீரமுத்துப்பட்டி செங்குளி வயலில், அந்த பகுதியை சேர்ந்த காளிமுத்து மற்றும் சேவுகப்பெருமாள்ஆகியோர் பழமையான எழுத்துகள் உள்ள ஒரு கல் கிடப்பதாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்ற ஆசிரியர் பயிற்றுனரும், தொல்லியல் ஆய்வாளருமான புலவர் கா.காளிராசா களஆய்வு செய்தார். அப்போது அங்கு இருந்த கற்கள் சுமார் 353 ஆண்டுகள் பழமையான வாமன உருவம் பொறித்த கல்வெட்டு என தெரிந்தது.

    இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் புலவர் கூறியதாவது:- அந்த கல்லின் ஒருபக்கத்தில் ஒருகையில் விரித்த குடை மற்றொரு கையில் கெண்டி எனும் கமண்டலம் உள்ளது. மேலும் மண்டையின் பின்பகுதியில் கொண்டையும், மார்பில் முப்புரி நூலுடன் வாமன உருவம் காணப்படுகிறது. அரசர்கள் ஆண்ட காலத்தில் நிலம் தொடர்பான ஆவணங்கள் வழங்கும் போது, இறைவனுக்கானது என்பதை அடையாளப்படுத்துவதற்காக வடிக்கப்பெற்றுள்ளது.

    கல்வெட்டு கல்லின் இரண்டு பக்கங்களிலும் கல்வெட்டு எழுத்து காணப்படுகிறது. அதில் முதல் பக்கத்தில் 16 வரிகள் உள்ளன. அதில் இஸ்வஸ்தி ஸ்ரீசகாத்தம் 1588 பிங்களஆண்டு கார்த்திகை 2-ல் வரணையில் கீழசெங்குளி, மேலசெங்குளி, முனிபட்டையருக்குலடி ஊருணிக்குமேற்கு செவுரிக்கு வடக்கு கண்டி அய்யனுக்கு கிழக்கு பசுகெடைப் பொட்டலுக்குத் தெற்கு ஸ்ரீதி (இதில் 6, 7, 8-ம்வரிகளில் இறுதி எழுத்துகள் சிதைந்துள்ளன).

    இரண்டாம் பக்கத்தில் 6 வரிகள் உள்ளன. அதில், திருமலை சேதுபதி காத்த தேவர்க்குகானம் காளிசுரர உடையாருக்கு இட்ட பிரமதாயம்.உ என்று உள்ளது. ராமநாதபுரம் ரகுநாதசேதுபதி என்ற திருமலைசேதுபதி, காளையார்கோவில் காளஸ்வரருக்கு வழங்கிய நிலம் குறித்த பிரமதாயமாக இருக்கலாம்.

    இதன் எல்லை கீழசெங்குளி, மேலசெங்குளி முனிபட்டையருக்கு அடிஊருணிக்கு மேற்கு, செவுரிக்கண்மாய்க்கு வடக்குகண்டிப்பட்டி அய்யனாருக்கு கிழக்கு, பசுகெடைப்பொட்டலுக்கு தெற்கு. இதில் காட்டப்பட்டுள்ள ஊருணி தற்போது காணப்படவில்லை. மற்றவை மாறுபாடில்லாமல் உள்ளன.

    ரகுநாதசேதுபதி 1645 முதல் 1676 வரை ஆட்சி செய்துள்ளார். இவர் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுள் புகழ்பெற்ற கிழவன் சேதுபதிக்கு முந்தைய மன்னராவார். இவர் மதுரையை ஆண்ட திருமலைநாயக்கரிடம் இணக்கமாக இருந்ததோடு போர் உதவிகள் புரிந்துள்ளார். ஆகவே இவர் திருமலை சேதுபதி என அழைக்கப்பெற்றுள்ளார்.

    அரசர்கள் பொதுவாக ஆவணங்கள் வழங்கும் போது கல்லிலும், செம்பிலும் வெட்டி கொடுப்பது மரபு. இதுதொடர்பான செப்பேடு கிடைத்ததாக தெரியவில்லை. இனிவரும் காலங்களில் கிடைப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
    ×