என் மலர்
சிவகங்கை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வானம் பார்த்த பூமியான சிவகங்கை மாவட்டத்தில் சில ஆண்டுகளாக பருவமழை ஏமாற்றி வந்தது. இந்த ஆண்டு பருவமழை கை கொடுத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சிவகங்கையில் நேற்று காலையில் அவ்வப்போது தூரல்மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் மாலை முதல் விடிய, விடிய தொடர் மழை பெய்தது. சிவகங்கை நகர், காளையார்கோவில், தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு 3 மணிநேரம் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது.
இன்று காலை மழை நீடித்ததையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம், ராமேசுவரம், மண்டபம், கமுதி, முதுகுளத்தூர் உள்ளிட் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ராமேசுவரத்தில் பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. ராமேசுவரம் கோவிலில் மழைநீர் புகுந்தது. அதனை உடனே ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். நேற்று முதல் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தனுஷ்கோடி, அரிச்சல் முனை பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.
விருதுநகர் மாவட்டத்தில் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்தையொட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த மழை காரணமாக பேயனாறு, அய்யனார் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. தொடர் மழையால் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் பல ஆலைகள் மூடப்பட்டன.
மதுரையில் நேற்று மாலை முதல் மழை பெய்து வருகிறது. இரவு முழுவதும் பெய்த மழையால் நகரின் பல்வேறு இடங்களில் தண்ணீர் சூழ்ந்தது. இன்று காலையும் மழை நீடித்தது.
சிவகங்கையை அடுத்த அரசனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகள் அபிஸ்ரீ (வயது 12). அதே பகுதியைச் சேர்ந்தவர் மழைமேகம். இவரது மகள் பிரியதர்ஷினி (13).
அபிஸ்ரீயும், பிரியதர்ஷினியும் அப்பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தனர்.
சிறுமிகள் இருவரும் நேற்று மாலை பள்ளி முடிந்து அரசனூர் ஊருணியில் குளிக்க சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினர்.
இதனைப் பார்த்ததும் அந்த வழியாக வந்தவர்கள் ஓடிச் சென்று 2 சிறுமிகளையும் மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் இல்லாததால் உடனடியாக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பிரியதர்ஷினியும், அபிஸ்ரீயும் பரிதாபமாக இறந்து விட்டனர்.
சிறுமிகளின் உடல்களை பார்த்து அவர்களது பெற்றோர் கதறி அழுதது மிகவும் பரிதாபமாக இருந்தது.
2 சிறுமிகள் ஊருணியில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே தாயமங்கலம் ரோட்டில் அமைந்துள்ள புலிகுளம் மாட்டின ஆராய்ச்சி மையத்தை தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பதிவாளர் பாலச்சந்திரன் முன்னிலை வகித்தார். ஆராய்ச்சி மையத்தை திறந்து வைத்த அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
புலிகுளம் மாடு என்பது தமிழகத்தில் இருக்கின்ற உள்ளூர் நாட்டினங்களில் பிரசித்தி பெற்றவை. அதே போல் காங்கேயம் காளை நாட்டினமும் சிறப்பு வாய்ந்தது. இவைகளை பாதுகாக்க வேண்டும்.
இந்த ஆராய்ச்சி மையம் மூலமாக புலிகுளம் காளைகள், பசுக்களை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு குறைந்த விலையில் கொடுப்பதே இதன் நோக்கமாகும்.
புலிகுளம் காளைகள் தான் மற்ற காளைகளை விட சிறந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர்.
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருக்கும் கால்நடை வளர்ப்பை ஊக்குவிப்பதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. அழிந்து வரும் மாட்டினங்களை காப்பதற்கு முதல்- அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்த மையத்துக்கு ரூ.2 கோடியில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு 40 பசுக்களும், 5 காளை மாடுகளும் இங்கு உள்ளன. புலிகுளம் மாடுகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளன.
இவைகளை அதிகளவில் உற்பத்தி செய்து அவற்றை விவசாயிகளிடம் கொடுத்து அதனுடைய எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
புலிகுளம் காளைகள் ஜல்லிக்கட்டுக்கும், மஞ்சு விரட்டுக்கு பெயர் போன காளைகளாக இருப்பதால் தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் வகையில் தரமானதாக உற்பத்தி செய்ய வேண்டும். நமது அடையாளத்தை மீட்டு எடுக்கும் முயற்சியை எடுத்து வருகிறோம்.
அந்த வகையில் குறைந்து வரும் புலிகுளம் மாட்டினை அதிகரிக்க இந்த ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பாஸ்கரன், நாகராஜன் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி பாண்டி செய்திருந்தார்.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ‘வேலைவாய்ப்பு வெள்ளி” என்ற தலைப்பின் கீழ் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம். வேலைநாடுநர்களும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினைப் பெறலாம்.
அதன் அடிப்படையில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில் சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை . (ஐ.டி.ஐ, டிப்ளமோ உட்பட).
விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
இந்த முகாமில் பணி வாய்ப்பு பெறுவோருக்கு பதிவுமூப்பு ஏதும் ரத்து செய்யப்படமாட்டது.
இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.
இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் எஸ்.கோட்டையூர் மற்றும் குணப்பனேந்தல் ஆகிய ஊராட்சிகளில் புதிதாக கட்டப்பட்ட கால்நடை மருந்தகங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். மானாமதுரை எம்.எல்.ஏ. நாகராஜன் முன்னிலை வகித்தார். அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு புதிய கட்டிடங்களை பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-
மறைந்த முதல்-அமைச்சர் ெஜயலலிதா, விவசாயிகள் மற்றும் பெண்கள் கால்நடை வளா்ப்பில் ஆர்வம் காட்ட வேண்டும் என்ற நோக்குடன் பல்வேறு திட்டங்களை வழங்கி வந்தார். அந்த வகையில் விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள் வழங்குதல் போன்ற திட்டங்களை தமிழகத்தில் கொண்டு வந்தார். மேலும், கால்நடைகளை சிறந்த முறையில் பராமாிக்க தேவையான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த உத்தரவிட்டு நடத்தப்பட்டு வருகின்றன. விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் அதிக அளவில் கால்நடைகள் வளா்க்க தேவையான உதவிகள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
தேவைக்கேற்ப புதிய கால்நடை மருந்தகங்களும் உருவாக்க திட்டமிட்டதுடன் தற்போது முதல்-அமைச்சா் உத்தரவின்படி கால்நடை களுக்கான அம்மா அவசர சிகிச்சை வாகனம் துவக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று எஸ்.கோட்டையூர் மற்றும் குணப்பனேந்தல் ஊராட்சிகளில் புதிதாக கால்நடை மருந்தகங்கள் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் கால்நடை பராமாிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் முருகேசன், துணை இயக்குனர் ராஜதிலகம், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர்கள் முகமதுகான், ராம்குமார், கால்நடை மருத்துவர் ராஜேஷ், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு அச்சுத்துறை சங்கத்தலைவர் சசிக்குமார், இளையான்குடி வட்டாட்சியர் ரமேஷ், கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் ராஜா, பலராமன், மோகன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி-செக்காலை சாலையில் ஜவுளிக்கடை நடத்தி வருபவர் இளங்கோ மணி. இவரது வீடு மகர் நோன்பு திடல் பகுதியில் உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இளங்கோமணி, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றார். தைவான் நாட்டுக்குச் சென்று விட்டு அவர்கள் நேற்று நள்ளிரவு வீடு திரும்பினர்.
வீட்டின் கதவை திறக்க முயன்ற போது, பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த இளங்கோமணி மற்றும் குடும்பத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.
வீட்டின் 6 அறைகளிலும் பொருட்கள் தாறுமாறாக சிதறிக்கிடந்தன. பீரோவும் திறந்து கிடந்தது. இதனால் கொள்ளை நடைபெற்று இருப்பது தெரியவந்தது.
இது குறித்து இளங்கோமணி காரைக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அருணுக்கு தகவல் கொடுத்தார். அவர் வடக்கு காவல் நிலைய போலீசாருடன் விரைந்து வந்து வீட்டை பார்வையிட்டார். கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.
வீட்டில் இருந்த 200 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போயிருப்பதாக போலீசாரிடம் இளங்கோமணி தெரிவித்தார்.
போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகள் மூலம் கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு, யாரோ திட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளங்கோமணி வீடு மற்றும் ஜவுளிக்கடையில் கடந்த ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா மகள் திருமணம் காரைக்குடியில் இன்று நடைபெற்றது. திருமணத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் மணமக்களை வாழ்த்தினார்.

பக்தியுள்ள பெண்கள் சபரிமலை செல்ல மாட்டார்கள். சபரிமலை கோவில் விவகாரத்தில் இன்னும் 2 வருடத்துக்குள் நல்ல தீர்ப்பு வரும். தமிழகத்தில் தலைமை தாங்கும் பண்பு நிறைய பேரிடம் உள்ளது. வெற்றிடம் என்பது மாயை ஆகும் என்றார்.
திருமணத்தில் கலந்துகொண்ட முன்னாள் மத்திய மந்திரி சி.பி.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை பா.ஜனதா வரவேற்கிறது. ரஜினிக்கு காவி சாயம் பூச விரும்பவில்லை. ரஜினி அரசியலுக்கு வந்தால் கூட்டணி குறித்து பா.ஜனதா தனது நிலைப்பாட்டை அறிவிக்கும்.
ஆன்மீக அரசியலும், அறம் சார்ந்த அரசியலும் தமிழகத்துக்கு தேவை. சபரிமலை தீர்ப்பு முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.
சிவகங்கையில் கால்நடைத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு கால்நடை தீவனங்கள் மற்றும் தீவனங்கள் தயாரிக்கும் எந்திரங்களை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடிகர்கள் எல்லாம் கட்சி ஆரம்பித்தார்கள். விஜயகாந்த்தும் கட்சி ஆரம்பித்தார். அரசியலுக்கு வந்து அவர் சாதித்தது என்ன? இனி அரசியலுக்கு நடிகர்கள் வந்தாலும் ஒன்றும் சாதிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.






