என் மலர்tooltip icon

    சிவகங்கை

    குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து காரைக்குடியில் இன்று முஸ்லிம் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    காரைக்குடி:

    குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    தமிழகத்தில் கல்லூரி மாணவ-மாணவிகள் போராட் டத்தில் ஈடுபடு வதை தடுக்க வருகிற 1-ந் தேதி வரை விடுமுறை அறி விக்கப்பட்டுள்ளது.

    குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இன்று முஸ்லிம் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காரைக்குடி பெரியார் சிலை பகுதியில் உள்ள முஸ்லிம்களின் கடைகள் உள்பட நகர் முழுவதும் முஸ்லிம் வியாபாரிகள் தங்கள் கடைகளை மூடியுள்ளனர்.

    மேலும் காரைக்குடி ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் காரைக்குடி 5 விலக்கு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு, அனைத்து இஸ்லாமிய இயக்கங்களை சேர்ந்தவர்களும், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்க்கும் அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தை யொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சிவகங்கை மாவட்ட பெண்கள் அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை:

    2019-2020-ம் ஆண்டிற்கான உலக மகளிர் தின விழாவில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த பெண் ஒருவருக்கு அவ்வையார் விருது வழங்கப்படும்.

    விருது பெறுவதற்கு கீழ்காணும் விதிமுறைகளைப் பின்பற்றி தகுதியுடைய நபர்கள் வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவம் சிவகங்கை, மாவட்ட ஆட் சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

    1. தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவர், 18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.

    2. சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை. மொழி, இனம், பண்பாடு, கலை அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுதல்.

    இந்த விருதுக்கு ரொக்கப் பரிசு, தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் சால்வை வழங்கப்படும். அவ்வையார் விருது முதலமைச்சரால் வழங்கப்படும் என சிவ கங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
    காரைக்குடி அருகே காட்டுப்பகுதியில் டெய்லரை கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பழைய செஞ்சை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது55). இவரது மனைவி சின்னபொன்னு. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. மகன் ஓசூரில் வேலை பார்த்து வருகிறார்.

    செல்வராஜ் புளியமரத்தடி பகுதியில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இன்று அதிகாலை 5 மணி அளவில் வெளியே செல்வதாக கூறி விட்டு சென்ற செல்வராஜ் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர்.

    அப்போது காட்டம்மன் கோவில் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் செல்வராஜ் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த காரைக்குடி தெற்கு போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    முன்விரோதம் காரணமாக செல்வராஜ் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மின்மோட்டாரில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.
    சிவகங்கை:

    சிவகங்கையை அடுத்த ஒக்கூர் ஆசிரியர் குடியிருப்பு பகுதியில் குடிநீர் தொட்டி அரசு சார்பில் அமைக்கப்பட் டது. இதன் அருகே உயர் நிலைப்பள்ளி உள்ளதால் மாணவர்களுக்கு இந்த தொட்டி பெரிதும் பயனுள்ளதாக இருந்து வந்தது. மேலும் இப்பகுதி மக்களின் அன்றாட தேவைக்கும் இங்கிருந்து தண்ணீர் எடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக இந்த தொட்டியின் மின்மோட்டார் செயல்படாமல் பழுதடைந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இனியும் இந்த தொட்டியையும் மின்மோட்டாரையும் சீரமைக்காவிட்டால் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக ஒக்கூர் ஆசிரியர் குடியிருப்போர் சங்க தலைவர் கணபதி சுப்பிரமணியன் கூறியதாவது:-

    இந்த பகுதியில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2012-ம் ஆண்டு இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக அரசு சார்பில் ஆழ்குழாய், அடிபம்பு அமைக்கப்பட்டது. இதனால் மக்களின் அன்றாட தேவைக்கு தண்ணீர் கிைடத்து வந்தது. பின்னர் மின் மோட்டார் அமைத்து தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2 வருடங்களாக மின் மோட்டார் பழுது காரணமாக தொட்டியில் தண்ணீர் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்த பழுதை நாங்களே சரிசெய்தாலும் சிறிது நாட்களிலேய மீண்டும் பழுது ஏற்படுகிறது. இது குறித்து பலமுறை புகார் செய்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இனியும் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை என்றால் உள்ளட்சி தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
    மானாமதுரை ரெயில் நிலையத்தில் இயங்கி வந்த ரெயில் டிக்கெட் முன்பதிவு மையம் மூடப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
    மானாமதுரை:

    இந்திய சுதந்திரத்திற்குபின் தமிழகத்தில் திறக்கப்பட்ட 7 ரெயில்வே சந்திப்புகளில் மானாமதுரையும் ஒன்றாக இருந்து வருகிறது. சென்னையில் இருந்து ராமேசுவரம் செல்லும் அனைத்து ரெயில்களும் மானாமதுரை ரெயில் நிலையத்தில் டீசல் மற்றும் தண்ணீர் நிரப்பிய பின்னர் அங்கிருந்து புறப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் மானாமதுரை ரெயில் நிலையத்திற்கு நான்கு திசைகளில் இருந்தும் பல்வேறு ரெயில்கள் வந்து செல்வதால் தற்போது சந்திப்பு ரெயில் நிலையமாக இயங்கி வருகிறது.

    மேலும் மானாமதுரை, கமுதி, அபிராமம், திருப்புவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் பலரும் மானாமதுரை வந்து செல்வது வழக்கம். இதையடுத்து இந்த ரெயில் நிலையத்தில் கடந்த 10 ஆண்டுகளாக கணினி முன்பதிவு மையம் செயல்பட்டு வந்தது. தற்போது எவ்வித முன்அறிவிப்பும் இல்லாமல் இந்த முன்பதிவு மையம் திடீரென மூடப்பட்டதால் ரெயில் பயணிகள் கடும் அவதிஅடைந்துள்ளனர். மேலும் மூடப்பட்ட இந்த முன்பதிவு மையத்தில் தினசரி ரெயில்கள், வாராந்திர ரெயில்கள் உள்பட அனைத்து ரெயில்களுக்கும் செல்லும் பயணிகள் இந்த முன்பதிவு மையத்தில் தான் முன்பதிவு செய்வார்கள்.

    இதையடுத்து இந்த முன்பதிவு மையம் மூடப்பட்டதால் தற்போது வழக்கமாக ரெயில் டிக்ெகட் வழங்கும் கவுண்ட்டரிலேயே முன்பதிவு செய்ய பயணிகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது ரெயில் பயணிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ரெயில் பயணிகள் கூறியதாவது:- மானாமதுரை ரெயில் நிலையம் முக்கியமான ரெயில் நிலையமாக இருந்து வருகிறது. இந்த ரெயில் நிலையத்தில் இருந்து மதுரை, ராமேசுவரம், திருச்சி, விருதுநகர், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இதுதவிர விரைவு ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த ரெயில் நிலையத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து முன்பதிவு செய்கின்றனர். இங்குள்ள முன்பதிவு மையம் திடீரென எவ்வித அறிவிப்பும் இல்லாமல் மூடப்பட்டதால் முன்பதிவு செய்ய வரும் பயணிகள் சாதாரண டிக்கெட் கவுண்ட்டரில் தான் முன்பதிவு செய்யும் நிலை உள்ளது.

    இதனால் அவர்களுக்கு காலதாமதமும், மன உளைச்சலும் ஏற்படும் வகையில் உள்ளது. இது தவிர விேஷச காலங்களில் அதிகஅளவில் மக்கள் இந்த ரெயில்களில் தான் பயணம் செய்ய விரும்புகின்றனர். எனவே தென்னக ரெயில்வே நிர்வாகத்தினர் முன்அறிவிப்பு இல்லாமல் மூடிய இந்த ரெயில் முன்பதிவு மையத்தை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 
    காரைக்குடி மற்றும் இளையான்குடியில் மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
    காரைக்குடி:

    காரைக்குடி என்.சி.சி. 9-வது பட்டாலியன் சார்பில் என்.சி.சி. மாணவர்கள் சார்பில் கொடிநாள் விழா மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் கல்லூரி சாலையில் நடைபெற்றது. விழாவிற்கு கர்னல் அஜய்ஜோசி தலைமை தாங்கினார். ஹவில்தார் சரவணன், சுபேதார் மேஜர் ரமேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தில் என்.சி.சி. மாணவர்கள், பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு சுகாதாரம் குறித்த கோஷங்களை எழுப்பினர்.

    இதேபோல் இளையான்குடி மேல்நிலைப்பள்ளியில் என்.சி.சி. சார்பில் கொடிநாள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தல் சுகாதார விழிப்புணர்வு குறித்த என்.சி.சி. மாணவர்களின் ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமைஆசிரியர் முகம்மதுஇல்யாஸ் தலைமை தாங்கி மாணவர்கள் சுகாதாரமாக இருப்பதன் அவசியம் குறித்து பேசினார். முன்னதாக பள்ளியின் என்.சி.சி. அலுவலர் சிக்கந்தர்சுலைமான் வரவேற்று பேசினார். ஆசிரியர்கள் பார்த்திபன், அப்துல் அஜீஸ் ஆகியோர் மாணவர்களுக்கு சுகாதாரம் குறித்த கருத்துகளை எடுத்துரைத்தனர். ஊர்வலம் இளையான்குடி கீழாயூர் காலனியில் இருந்து தொடங்கி இளையான்குடி நகரில் முக்கியமான வீதிகளில் வழியாக சென்று மீண்டும் பள்ளியில் நிறைவு பெற்றது. ஊர்வலத்தில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு வாசகங்களை மாணவர்கள் ஏந்தி வந்தனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி என்.சி.சி. மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர். 
    உள்ளாட்சி தேர்தல் முடியும்வரை குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக சிவகங்கை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
    சிவகங்கை:

    உள்ளாட்சி தேர்தல் முடியும்வரை குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக சிவகங்கை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருயுள்ளதாவது:-

    தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்தினால் ஊரக உள்ளாட்சித்தோ்தல் நடைபெறுவதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டிதோ்தல் நன்னடைத்தை விதிகள் நடைமுறை உள்ளது.

    நன்னடத்தை விதிகள் அமல் வாபஸ் பெறும்வரை, உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை ஒவ்வோரு வாரமும் திங்கட்கிழமை தோறும் நடைபெறும். கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் ரத்து செய்யப்படுகிறது.

    மேலும் பொதுமக்கள் கோரிக்கை தொடா்பான மனுக்கள் அளிக்க விரும்பினால் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுக்களை அளிக்கலாம். அதேபோல் உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை மாவட்ட அளவிலான துறை அலுவலர்கள் கலந்துகொள்ளும் குறைதீர்க்கும் முகாம் நடைபெறாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    காரைக்குடி அருகே தூக்கில் பிணமாக தொங்கிய மாணவன் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    காரைக்குடி:

    காரைக்குடி அருகே உள்ள ஒ.திருவயல் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னழகு. இவரது மகன் அசோக் (வயது 15). அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.

    நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அசோக் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பெற்றோர் தேடியும் பலன் கிடைக்கவில்லை.

    இரவில் மழை பெய்ததால் காலையில் அசோக் வீடு திரும்புவான் என உறவினர்கள் கருதினர்.

    இந்த நிலையில் அங்குள்ள பழைய கட்டிடத்தில் தூக்கில் அசோக் பிணமாக தொங்குவதாக தகவல் பரவியது.

    குன்றக்குடி போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அசோக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அசோக் எதற்காக தற்கொலை செய்தான்? என்பது மர்மமாக உள்ளது. இதற்கிடையே தூக்கில் தொங்கிய அசோக்கின் கால் தரையை தொட்டபடி இருந்ததால், அவன் தற்கொலை செய்தானா? அல்லது யாராவது கடத்திக் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டிருக்கலாமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கார்த்திகை தீப திருநாள் நெருங்கி வரும் வேளையில் மானாமதுரையில் தொடர் மழை காரணமாக அகல் விளக்கு தயாரிப்பு பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
    மானாமதுரை:

    மானாமதுரை நகரம் மண்பாண்ட தொழிலுக்கு மிகவும் புகழ் பெற்றது. கலைநயம் மிக்க மண்பாண்ட பொருட்களை தயாரித்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்கின்றனர். மானாமதுரையில் 200-க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் உள்ளனர். வருகிற 10-ம் தேதி கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்பட உள்ளது. திருக்கார்த்திகை அன்று வீடுகள் தோறும் இந்துக்கள் அகல் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். இதற்காக மானாமதுரையில் மண்பாண்ட தொழிலாளர்கள் கடந்த ஒரு மாத காலமாக விளக்கு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.5 முதல் ரூ.500 வரையிலான விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன. சிறிய அகல் விளக்கு, சர விளக்கு, சங்கு விளக்கு, தேங்காய் விளக்கு உள்ளிட்ட பல்வேறு டிசைன்களில் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன. மண்ணால் தயாரிக்கப்படும் இந்த விளக்குகளை வெயிலில் காயவைத்து அதன் பின் சூளையில் வைத்து சுடப்பட்டு பின்னர் விற்பனைக்கு அனுப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் கடந்த 15 நாட்களாக மழை பெய்ததுடன் வானம் மேக மூட்டமாகவே காணப்படுவதால் விளக்குகளை காய வைக்க முடியவில்லை. விறகுகள் அனைத்தும் மழையில் நனைந்துபோனதால் தயாரிக்கப்பட்ட விளக்குகளை சுடமுடியாமல் தொழிலாளர்கள் திணறி வருகின்றனர். கார்த்திகை திருநாளுக்காக ஒரு லட்சத்திற்கும் அதிகமான விளக்குகள் விற்பனைக்கு அனுப்பப்படும். இதுமட்டுமின்றி திருச்சி, காரைக்குடி, தேவகோட்டை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிைய சேர்ந்த வியாபாரிகள் கார்த்திகை திருநாளை முன்னிட்டு விளக்குகள் தயாரிக்க ஆர்டர்கள் கொடுத்துள்ளனர். மழை காரணமாக விளக்குகள் தயாரிப்பில் சிக்கல் ஏற்பட்டதால் தொழிலாளர்கள் பலரும் வேதனையடைந்துள்ளனர். விளக்குகளை சுடமுடியாமல் அவதிப்படுவது ஒரு புறம் இருக்க, ஈர விளக்குகளை வெயிலில் காயவைக்க முடியாமலும் தொழிலாளர்கள் திணறுகின்றனர். மழை காரணமாக மண்பாண்ட பொருட்கள் உற்பத்தி கூடம் மூடப்பட்டுள்ளது. பெரும்பாலான தொழிலாளர்கள் வேலையின்றி பரிதவித்து வருகின்றனர்.
    மானாமதுரையில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் செங்கல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்னர்.
    மானாமதுரை:

    மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. சுற்று வட்டார கண்மாய்களில் இருந்து சவடு மண் எடுக்கப்பட்டு, செங்கற்கள் தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு செங்கல் சூளைகளிலும் நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் செங்கற்கள் வரை தயாரிக்கப்படுகிறது. செங்கல் தயாரிக்கப்பட்டு வெயிலில் காயவைக்கப்பட்ட பின் சூளையில் வைத்து சுடப்படுகின்றன. செங்கற்களை வெயிலில் காயவைத்த பின்தான் சூளையில் வைக்க முடியும், மேலும் சூளையில் வைத்து செங்கற்களை சுடுவதற்கு விறகுகளும் தேவைப்படும், மழை காரணமாக காய்ந்த விறகுகளும் கிடைக்கவில்லை. காயவைக்கப்பட்ட செங்கற்களும் வெயில் இல்லாததால் மழையில் கரைந்து வீணாகிவிட்டன. தொடர் மழை காரணமாக 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வேலையிழந்து வறுமையில் வாடி வருகின்றனர்.

    ஒவ்வொரு செங்கல் சூளைகளிலும் 5 லட்சம் முதல் 7 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விவசாயத்தில் நெல், வாழை போன்றவை மழை காரணமாக சேதமடைந்தால் வருவாய்த்துறையினர் மூலம் கணக்கெடுக்கப்பட்டு இழப்பீடு வழங்கப்படுகிறது. ஆனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரியும் செங்கல் சூளையில் பாதிப்பு ஏற்பட்டால் இழப்பீடும் கிடையாது, தொழிலாளர்களுக்கு உதவி தொகையும் வழங்கப்படுவதும் கிடையாது.

    இதுகுறித்து கிளங்காட்டூரில் தனியார் செங்கல் சூளையில் பணிபுரியும் சேகர் என்பவர் கூறுகையில், எங்கள் சூளையில் செங்கற்களை தயாரித்து திருச்சி, மதுரை, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்து வருகிறோம். மழை காரணமாக தற்போது லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதுடன், தொழிலாளர்களுக்கும் வேலை இல்லை. அரசு சார்பில் இழப்பீடு வழங்கப்பட்டால் ஓரளவிற்கு எங்களால் சமாளிக்க முடியும் என்றார்.
    மதுரையில் இருந்து சென்ற அரசு பஸ் திடீரென கவிழ்ந்தது. இதில் 5 பயணிகள் காயம் அடைந்தனர்.

    நெற்குப்பை:

    மதுரையில் இருந்து சிதம்பரத்திற்கு அரசு பஸ் இன்று காலை புறப்பட்டது. சிவகங்கை பிரபாகரன் (வயது 40) மதுரை மாடசாமி (28), செந்தில்குமார் (50) உள்பட பலர் பஸ்சில் பயணம் செய்தனர்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கீழச்சிவல்பட்டி அருகே உள்ள சிறுகூடல்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சாலையில் கவிழந்து விபத்துக்குள்ளானது.

    இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். கீழச்செவல்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

    விபத்தில் காயம் அடைந்த பிரபாகரன், மாடசாமி, பாண்டிகுமார் (45), செந்தில்குமார், ஆவாரங்காடு முத்துராம் (39) ஆகியோர் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை அருகே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை அகற்றக்கோரி கிராம மக்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை-மானாமதுரை சாலையில் கீழகண்டனியில் இருந்து மேலவெள்ளஞ்சி கிராமம் செல்லும் வழியில் ரெயில் தண்டவாள பாதை உள்ளது. கீழகண்டனியில் இருந்து மேலவெள்ளஞ்சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்ல ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. ஆனால் இந்த சுரங்கப்பாதையில் எப்போதும் நீர் தேங்கி நிற்கிறது.

    தற்போது மழைக்காலம் என்பதால் இந்த சுரங்கப்பாதையில் அதிக அளவில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் சுரங்கப்பாதை வழியே கிராமத்தினர் சென்று வருவதில் கடும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

    இந்த கிராமங்களுக்கு செல்ல இந்த ஒரு வழி மட்டுமே உள்ளது. இந்நிலையில் சுரங்கப்பாதையில் தேங்கிய நீர் அகற்றப்படாமல் உள்ளதை கண்டித்தும், இதற்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் இந்த பகுதிமக்கள் நேற்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் ரெயில் பாதையில் சிவப்பு துணியை கட்டி வைத்தனர். அப்போது அந்த வழியாக ராமேசுவரம்-திருச்சி பயணிகள் ரெயில் வந்தது. ரெயில் பாதையில் ஆட்கள் நிற்பதையும், சிவப்பு துணி கட்டியிருப்பதையும் பார்த்த என்ஜின் டிரைவர், ரெயிலை சற்று தொலைவில் நிறுத்திவிட்டார். 

    இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு வந்து கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. சுமார் 45 நிமிடம் தாமதமாக அந்த ரெயில் புறப்பட்டு சென்றது.
    ×