search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மானாமதுரையில் தயார் செய்யப்பட்ட அகல் விளக்குகள் வெயிலில் காய வைக்க முடியாமல் தேங்கி கிடப்பதை படத்தில் காணலாம்.
    X
    மானாமதுரையில் தயார் செய்யப்பட்ட அகல் விளக்குகள் வெயிலில் காய வைக்க முடியாமல் தேங்கி கிடப்பதை படத்தில் காணலாம்.

    மானாமதுரையில் தொடர் மழை - அகல் விளக்கு தயாரிப்பு பணி பாதிப்பு

    கார்த்திகை தீப திருநாள் நெருங்கி வரும் வேளையில் மானாமதுரையில் தொடர் மழை காரணமாக அகல் விளக்கு தயாரிப்பு பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
    மானாமதுரை:

    மானாமதுரை நகரம் மண்பாண்ட தொழிலுக்கு மிகவும் புகழ் பெற்றது. கலைநயம் மிக்க மண்பாண்ட பொருட்களை தயாரித்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்கின்றனர். மானாமதுரையில் 200-க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் உள்ளனர். வருகிற 10-ம் தேதி கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்பட உள்ளது. திருக்கார்த்திகை அன்று வீடுகள் தோறும் இந்துக்கள் அகல் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். இதற்காக மானாமதுரையில் மண்பாண்ட தொழிலாளர்கள் கடந்த ஒரு மாத காலமாக விளக்கு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.5 முதல் ரூ.500 வரையிலான விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன. சிறிய அகல் விளக்கு, சர விளக்கு, சங்கு விளக்கு, தேங்காய் விளக்கு உள்ளிட்ட பல்வேறு டிசைன்களில் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன. மண்ணால் தயாரிக்கப்படும் இந்த விளக்குகளை வெயிலில் காயவைத்து அதன் பின் சூளையில் வைத்து சுடப்பட்டு பின்னர் விற்பனைக்கு அனுப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் கடந்த 15 நாட்களாக மழை பெய்ததுடன் வானம் மேக மூட்டமாகவே காணப்படுவதால் விளக்குகளை காய வைக்க முடியவில்லை. விறகுகள் அனைத்தும் மழையில் நனைந்துபோனதால் தயாரிக்கப்பட்ட விளக்குகளை சுடமுடியாமல் தொழிலாளர்கள் திணறி வருகின்றனர். கார்த்திகை திருநாளுக்காக ஒரு லட்சத்திற்கும் அதிகமான விளக்குகள் விற்பனைக்கு அனுப்பப்படும். இதுமட்டுமின்றி திருச்சி, காரைக்குடி, தேவகோட்டை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிைய சேர்ந்த வியாபாரிகள் கார்த்திகை திருநாளை முன்னிட்டு விளக்குகள் தயாரிக்க ஆர்டர்கள் கொடுத்துள்ளனர். மழை காரணமாக விளக்குகள் தயாரிப்பில் சிக்கல் ஏற்பட்டதால் தொழிலாளர்கள் பலரும் வேதனையடைந்துள்ளனர். விளக்குகளை சுடமுடியாமல் அவதிப்படுவது ஒரு புறம் இருக்க, ஈர விளக்குகளை வெயிலில் காயவைக்க முடியாமலும் தொழிலாளர்கள் திணறுகின்றனர். மழை காரணமாக மண்பாண்ட பொருட்கள் உற்பத்தி கூடம் மூடப்பட்டுள்ளது. பெரும்பாலான தொழிலாளர்கள் வேலையின்றி பரிதவித்து வருகின்றனர்.
    Next Story
    ×