என் மலர்
சிவகங்கை
ஆங்கிலேயர்களை எதிர்த்து இந்திய சுதந்திர போரை தொடங்கி வெற்றி கண்டவர் ராணி வேலுநாச்சியார். இவருக்கு தமிழக அரசின் சார்பில் சிவகங்கையில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளை அரசு விழாவாகவும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு ராணி வேலு நாச்சியாரின் 290-வது பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி ராணி வேலுநாச்சியார் நினைவு மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சா் பாஸ்கரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடா்ந்து மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன், மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன், சிவகங்கை இளைய மன்னர் மகேஸ்துரை மற்றும் முக்கிய பிரமுகா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, வட்டாட்சியர் மைலாவதி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் சசிகுமார், கூட்டுறவு வங்கி தலைவா்கள் ஆனந்த், ராஜா மற்றும் பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் பாண்டி, உதவி மக்கள் தொடா்பு அலுவலா் கருப்பணராஜவேல் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை ஊழியர்கள் செய்திருந்தனர்.
தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராமசாமி காரைக்குடியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக உள்ளாட்சி தேர்தல் முடிவை அறிவிப்பதில் ஆளுங்கட்சியின் நெருக்கடி அதிகமாக இருந்தது. உதாரணமாக சங்கராபுரம் பஞ்சாயத்தில் ஒரு வேட்பாளர் வெற்றி என்று அறிவித்து சான்றிதழ் வழங்கிவிட்டு நெருக்கடி காரணமாக மற்றொரு வேட்பாளருக்கும் சான்றிதழ் கொடுத்துள்ளார்கள்.
ஒரு தேர்தல் அதிகாரிக்கு வெற்றி சான்றிதழ் அளிக்க மட்டுமே அதிகாரம் உள்ளது. பெற்ற வெற்றியை ரத்து செய்ய அதிகாரம் இல்லை.
தேர்தல் பார்வையாளரிடம் இதுகுறித்து நான் கேட்டதற்கு அவரிடம் பதில் இல்லை. இதுதான் ஜனநாயகமா?
ஓட்டுக்கு பணம் கொடுத்ததை தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடியவில்லை. வரும் காலங்களில் பணபலம் உள்ளவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும். சாதாரணமானவர்களால் போட்டியிட முடியாது.
குதிரை பேரம் நடைபெறும் என்பதற்காகவே யூனியன் சேர்மன் பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடத்த வலியுறுத்தினோம். இப்போது ஆளுங்கட்சியினர் பல்வேறு இடங்களில் வெற்றிபெற்ற மாற்று கட்சியினரை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரசாரிடம் அவர்கள் முயற்சி பலிக்காது.
சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தல் முடிவு சம்பந்தமாக தமிழக காங்கிரஸ் தலைவர் மற்றும் எங்கள் கூட்டணியின் தலைவர் ஸ்டாலினிடம் பேசிவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் யூனியனுக்குட்பட்டது சங்கராபுரம் பஞ்சாயத்து. சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்ட இங்கு தலைவர் பதவிக்கு, 2 முறை தலைவராக இருந்த மாங்குடியின் மனைவி தேவி போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து தொழில் அதிபர் அய்யப்பன் மனைவி பிரியதர்சினி களம் இறங்கினார். இவர்கள் 2 பேருக்கும் இடையே ஆரம்பத்தில் இருந்தே கடும் போட்டி நிலவியது.
காங்கிரஸ் கட்சியில் மாங்குடி, சிவகங்கை மாவட்ட துணைத்தலைவர் பொறுப்பில் இருப்பதால் அவரது மனைவி தேவிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், மேலிட பார்வையாளர் சஞ்சய்தத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பலரும் பிரசாரம் செய்தனர்.
நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பே, 2 தரப்பினரும் வரிந்து கட்டி நின்றதால் பரபரப்பாக காணப்பட்டது. முன்னணி நிலவரம் அடிக்கடி மாறிக் கொண்டே இருந்தது.
இந்த நிலையில் இரவு 10 மணிக்கு தேவி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு வெற்றிச்சான்றிதழும் வழங்கப்பட்டது.
அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது எதிர்தரப்பினர் வாக்குவாதம் செய்தனர். இது மோதல் ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியதால் பதட்டம் ஏற்பட்டது.
காரைக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அருண், இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பிரியதர்சினி தரப்பினர் மறு வாக்கு எண்ணிக்கை வேண்டும் என்றனர்.
இன்று அதிகாலை 2 மணி வரை பேச்சுவார்த்தை நீடித்தது. அதன் பிறகு ஏற்கனவே வெற்றிச் சான்றிதழ் பெற்று விட்ட தேவி தரப்பினர் அங்கிருந்து சென்று விட்டனர்.
ஆனால் எதிர்தரப்பு அங்கேயே அமர்ந்திருந்தது. சில மணி நேரங்களுக்கு பிறகு மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் தேவி தரப்பினர் வாக்கு எண்ணும் மையத்திற்கு வாருங்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால் யாரும் வரவில்லை.
மாவட்ட தேர்தல் பார்வையாளர் கருணாகரன், தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ஜெயகாந்தன் அங்கு வந்தனர். காலை 5 மணிக்கு 63 வாக்குகள் வித்தியாசத்தில் பிரிய தர்சினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதனால் சங்கராபுரம் பஞ்சாயத்தில் பதட்டம் ஏற்பட்டது. 2 பெண்களுக்கு மாறி, மாறி வெற்றிச்சான்றிதழ் வழங்கப்பட்டது மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.
சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 161 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் பல இடங்களில் அ.தி.மு.க., தி.மு.க. நேரடியாக களம் கண்டது.
இந்த நிலையில் நேற்று இதற்கான வாக்கு எண்ணும் பணி அந்தந்த ஒன்றியங்களில் நடைபெற்றது. பிற்பகலுக்கு பின்னர் வாக்கு எண்ணும் பணி விறுவிறுப்பானது. பெரும்பாலான ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. மாறி மாறி முன்னிலை வகித்து வந்தன. இதனால் யார் வெற்றி பெறுவார்கள் என்பதில் ஆர்வம் ஏற்பட்டது.
மொத்தம் - 19
அதிமுக -4
திமுக-4
சுயேச்சை-3
முடிவு அறிவிக்கப்படாதவை 8
திருப்புவனம் ஒன்றியம்
மொத்தம்- 17
அதிமுக- 3
திமுக - 8
அமமுக- 4
தமாகா-2
தேவகோட்டை
மொத்தம் -14
அதிமுக -8
திமுக-5
அமமுக-1
சாக்கோட்டை
மொத்தம் -11
அதிமுக -5
திமுக - 3
காங்கிரஸ்-2
சுயேச்சை-1
திருப்பத்தூர்
மொத்தம்- 13
அதிமுக-2
திமுக -10
சுயேச்சை-1
கண்ணங்குடி
மொத்தம்-6
அதிமுக -4
திமுக -2
இளையாங்குடி
மொத்தம் - 16
அதிமுக-8
திமுக-7
சுயேச்சை-1
கல்லல்
மொத்தம் - 16
அதிமுக-7
திமுக-7
காங்கிரஸ்- 2
சிவகங்கை
மொத்தம்-18
அதிமுக-9
திமுக-7
அமமுக-1
சுயேச்சை-1
மானாமதுரை
மொத்தம் - 14
அதிமுக- 5
திமுக-8
அமமுக-1
சிங்கம்புணரி
மொத்தம் - 10
அதிமுக-4
திமுக-4
தேமுதிக-1
சுயேச்சை-1
எஸ்.புதூர்
மொத்தம் - 7
அதிமுக- 4
திமுக -3
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ளது இடைக்காட்டூர். இங்கு புகழ்மிக்க திரு இருதய அருள் தலம் உள்ளது. ஆங்கில மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை சிறப்பு வெள்ளியாக கருதப்படுகிறது.
சிவகங்கை மறை மாவட்ட அருள் தலமாக உயர்த்தப்பட்ட வெள்ளி விழா ஆண்டின் நினைவாக கோவிலை புதுப்பித்தல் திருப்பணி தொடங்கியது. ஆலயத்தின் உள் பகுதியில் உள்ள சொரூபங்கள், தூண்கள், மேல் பகுதியில் மழைநீர் தேங்காமலும் ஆலயத்தை சுற்றி அடிப்பகுதியில் சுவர்களில் நீர்கசிவு ஏற்படதா வகையிலும் புதுப்பிக்கப்பட்டு தற்போது எழில்மிகு தோற்றத்தோடு காணப்படுகிறது.
புதுப்பிக்கப்பட்ட கோவிலின் திரு நிகழ்வு விழா 2020-ம் ஆண்டின் முதல் வெள்ளியான நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
காலை திருப்பலி பூஜை சிவகங்கை மறை மாவட்ட குரு குல முதல்வர் அ.ஜோசப் லூர்து ராஜா தலைமையில் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு நன்றி வழிபாடு, 10.40 மணிக்கு கோவில் புனிதப்படுத்துதல் நிகழ்ச்சியும், கூட்டு திருப்பலியும், சிவகங்கை மறை மாவட்ட ஆயர் சூசை மாணிக்கம் தலைமையில் நடைபெறுகிறது.
மாலை 6 மணிக்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் மாலை திருப்பலி பூஜை நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு ஆலய வளாகத்தில் திண்டுக்கல் லியோனி சிறப்பு பட்டி மன்றம் நடைபெறுகிறது.
இதற்கான முழு ஏற்பாடுகளை இடைக்காட் டூர் திரு இருதய அருள் தல பணியாளர் ரெமிஜியஸ் தலைமையில் மரியின் ஊழியர் அருள் சகோதரிகள், இடைக்காட்டூர், சமூக முன்னேற்ற சங்கம் மற்றும் பங்கு இறை மக்கள் செய்து வருகின்றனர்.
பக்தர்களுக்கு சுகாதார வசதி, மதுரை, சிவகங்கை, மானாமதுரையில் இருந்து சிறப்பு பஸ் வசதியும் உள்ளது.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
1.1.2020-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்களுக்கான சிறப்பு முகாம் வருகிற 4-ந்தேதி (சனிக்கிழமை), 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை), 11-ந் தேதி (சனிக்கிழமை) மற்றும் 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தினங்களில் நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
இதன் அடிப்படையில் அந்தந்த வாக்குச்சாவடிகளில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களிடமிருந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட, பெயர் நீக்கம் மற்றும் திருத்தம் செய்திட பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை உரிய அத்தாட்சி ஆவண நகல்களுடன் பெறுவார்கள்.
எனவே இந்த வாய்ப்பினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேற்கண்டவாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செஞ்சை பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் மகன் சந்துரு (வயது17). செக்காலையைச் சேர்ந்தவர் செல்வம் மகன் சுப்பிரமணியன் (17). இருவரும் அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தனர்.செக்காலையைச் சேர்ந்த ராம கிருஷ்ணன் மகன் லட்சுமணன் (17) மற்றொரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இவர்கள் 3 பேரும் நண்பர்கள்.
நேற்று விடுமுறை தினம் என்பதால் 3 பேரும் சேர்ந்து தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவிலுக்கு சென்றனர்.
பின்னர் அங்குள்ள கோவில் தெப்பக்குளத்தில் 3 பேரும் குளித்தனர். அப்போது சந்துருவும், சுப்பிரமணியனும் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமணன், சத்தம் போட்டுள்ளார்.
இதையறிந்த அக்கம்பக்கத்தினர் குளத்தில் குதித்து 2 பேரையும் தேடினர்.
இதில் அவர்கள் 2 பேரையும் பிணமாகவே மீட்க முடிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆறாவயல் போலீசார் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
2 மாணவர்களின் உடல்களையும் பார்த்து அவர்களது பெற்றோர் கதறி அழுதது மிகவும் பரிதாபமாக இருந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மானாமதுரை அருகே உள்ளது கே.பெருங்கரை. இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் இதுவரை அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்து வந்தனர். ஆனால் தற்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் இந்த கிராமத்தை ேசர்ந்த 398 வாக்காளர்களுக்கு மட்டும் வேறு வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் வாக்களிக்க மறுத்துவிட்டனர். இதை அறிந்த அதிகாரிகள் அங்கு வந்து கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதனை ெதாடர்ந்து அவர்களை அதே பகுதியிலேயே வாக்களிக்க அனுமதி அளித்தனர். பின்னர் பொதுமக்கள் வாக்களிக்க சென்றனர். இதனால் வாக்குப்பதிவு 1½ மணி நேரம் தாமதமாக தொடங்கியது.
இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, கே.பெருங்கரையை சேர்ந்த நாங்கள் இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் உள்ளூரில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தோம். ஆனால் தற்போது 2½ கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கீழப்பிடாவூர் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டியுள்ளது. தேர்தல் அலுவலர்கள் அலட்சியம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாக்களிக்க மறுத்துவிட்டோம். பின்னர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையால் எங்களது ஊரிலேயே வாக்களிக்க முடிந்தது என்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதற்கட்டமாக சிவகங்கை, காளையார் கோவில், இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய 5 ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது.
225 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், 1581 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும், 84 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும், 8 மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போட்டியிடுகின்றனர்.
5 ஒன்றியங்களில் 904 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. கிராம பகுதிகளில் பெண்கள், முதியவர்கள் ஆகியோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். சில பகுதிகளில் வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்றது. 5 ஒன்றியங்களில் 4 லட்சத்து 12 ஆயிரத்து 654 பேர் வாக்களிக்க உள்ளனர்.
உள்ளாட்சி தேர்தலையொட்டி 904 வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பதட்டமான பகுதிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். வாக்குப்பதிவை மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ஜெயகாந்தன் நேரில் பார்வையிட்டார்.
திருப்பத்தூரில் கருணாஸ் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
பெரியார் இல்லை என்றால் அண்ணா இல்லை. அண்ணா இல்லை என்றால் கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் இல்லை. இப்படித்தான் நமது வரலாறு.

எச்.ராஜா என்றைக்கும் நல்லது பேசியது கிடையாது. அவருடைய பேச்சை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் பஞ்சாயத்தில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு திரட்டும் வகையில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்ளாட்சித் தேர்தல் நடக்க வேண்டும். ஆனால் அ.தி.மு.க. கடந்த 3 ஆண்டுகளாக இந்த தேர்தலை நடத்தவில்லை. அவர்களுக்கு தேவை உள்ளாட்சி பிரதிநிதிகள் அல்ல. தனி அலுவலர்கள்தான். அதனால்தான் காலம் கடத்தி உள்ளனர்.
தற்போது கூட அவர்களுக்கு தேர்தலை நடத்தும் எண்ணம் இல்லை. நீதிமன்றத்தின் கட்டாயத் திற்காக தேர்தலை நடத்துகின்றனர். இந்த தேர்தலில் மிகுந்த கவனத்தோடு வாக்களிக்க வேண்டும்.
பிரசாரத்திற்கு வரும் அ.தி.மு.க.வினரிடம் ஏன் 3 ஆண்டுகளாக தேர்தலை நடத்தவில்லை என கேள்வி கேளுங்கள். நம்மோடு இதே பகுதியில் வசிப்பவர், நாம் அருந்தும் தண்ணீரை அருந்துபவர், நாம் அழைத்தால் ஓடிவரும் நம்மவர்களுக்கு நாம் வாக்களிக்க வேண்டும்.
மெத்த படித்தவர்கள் சட்ட மன்றம் நாடாளுமன்றத்தில் முழங்கட்டும். ஆனால் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் முழங்க தேவையில்லை. நம்மில் ஒருவராக இருந்து நமக்கு தேவையானவைகளை செய்வதுதான் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெறுபவர் வேலையாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில் கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. துரைராஜ், சங்கராபுரம் முன்னாள் தலைவர் மாங்குடி, தி.மு.க. நகர செயலாளர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






