என் மலர்
சிவகங்கை
நெற்குப்பை:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கத்தில் அரசு மதுபானக்கடை உள்ளது. இந்த கடைக்கு நேற்று முன்தினம் இரவு வலையப்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது48) மற்றும் அவரது நண்பர் ஆதப்பன் (56) ஆகியோர் மது குடிக்க சென்றனர்.
அப்போது அங்கு பட்டமங்கலத்தைச் சேர்ந்த கிட்டு (வயது23) மற்றும் காரைக்குடி சங்கராபுரத்தைச் சேர்ந்த சிவபிரகாஷ் (24) ஆகியோர் மது குடித்து கொண்டிருந்தனர். திடீரென ஆதப்பனுக்கும், சிவபிரகாசுக்கும் இடையே மோதல் உருவானது.
வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த கிட்டுவும், சிவபிரகாசும் குடிபோதையில் அங்கு கிடந்த கம்பை எடுத்து ஆதப்பனையும், ஆறு முகத்தையும் சரமாரியாக தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆதப்பன் பரிதாபமாக இறந்தார். ஆறுமுகத்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிட்டு மற்றும் சிவபிரகாஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கிட்டு மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் கண்டரமாணிக்கத்தில் உள்ள அரசு மதுபானக்கடையை அகற்றக்கோரியும், குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கொலையுண்ட ஆதப்பனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது உடலை வாங்க மறுத்து மருத்துவமனையில் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களுடன் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் குற்றவாளிகளை கைது செய்யப்பட்டு விட்டதாக போலீசார் தெரிவித்ததும் உறவினர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் உறவினர்கள் ஆதப்பனின் உடலை வாங்கி சென்றனர்.
கொலையுண்ட ஆதப்பன் விறகு வியாபாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 பகுதிகளில் மத்திய-மாநில அரசுகள் சார்பில் 6-வது கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது.
இதில் இதுவரை சுமார் 900 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதில் விலங்கின எலும்பு கூடு, பல வரிசை கொண்ட செங்கல் சுவர், முதுமக்கள் தாழிகள், தங்க நாணயம், சுடுமண் உலை, நந்தை ஓடுகள், குழந்தையின் முழு உருவ எலும்பு கூடுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன.
கீழடியில் ஏற்கனவே 18 குழிகள் வரை தோண்டப்பட்டு ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.
தற்போது மேலும் 2 குழிகள் புதிதாக தோண்டப்பட்டு அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.
கீழடியில் இதுவரை மொத்தம் 20 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்ள வருகிற 30-ந் தேதி வரை அரசு அனுமதி வழங்கி உள்ளதால் இந்த பணிகளை வேகமாகவும், விரைந்து முடிக்கவும் தொல்லியல் துறை அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் அனுமதியின்றி மணல் மற்றும் சவடு மண் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் திருக்கோஷ்டியூர் அருகே கோட்டையிருப்பு கிராமத்தை சேர்ந்த சண்முகவடிவேல் என்பவர் தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபடுவதாக புகார்கள் வந்தன.
அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் அனுமதி இன்றி 50 லோடு மணல் மற்றும் 150 லோடு சவடுமண் எடுத்துச் சென்று அவருக்கு சொந்தமான தோப்பில் சேகரித்து வைத்துள்ளதாகவும் அதிகாரிகளுக்கு தகவல்கள் வந்தன.
இதை தொடர்ந்து, திருப்பத்தூர் தாசில்தார் ஜெயலட்சுமி திருக்கோஷ்டியூர் போலீஸ் நிலையத்தில் கடந்த 6-ந் தேதி புகார் கொடுத்தார். அத்துடன் திருட்டு மண் சேமித்து வைக்கப்பட்டிருந்த சண்முக வடிவேலின் தோட்டத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்தநிலையில் திருக்கோஷ்டியூர் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயமணி, மணல் திருட்டில் தொடர்புடைய சண்முகவடிவேல் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன், டி.ஐ.ஜி. மயில்வாகனனுக்கு தாசில்தார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜெயமணியை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து டி.ஐ.ஜி. மயில்வாகனன் உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் கூறும் போது, “சிவகங்கை மாவட்டத்தில் மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மணல் திருட்டில் ஈடுபடுபவர்களுக்கு துணை போகும் போலீசார் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே செல்லப்பனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் துபாய் நாட்டில் வேலை பார்த்துவிட்டு, கடந்த மார்ச் மாதம் சொந்த கிராமத்துக்கு வந்து, தற்போது அந்த பகுதியில் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி தனம், மகள் சுபிக்ஷா, மகன் சிபிராஜ்.
சுபிக்ஷா மதுரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 6 மாதமாக வீட்டில் இருந்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த மாணவி வீட்டின் பின்புறம் உள்ள கழிப்பறையில் தூக்குப்போட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து அவரை மீட்டு திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அதன் பின்னர் மாணவியின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து திருப்புவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கூறியதாவது:-
எங்களது மகள் நன்றாக படிக்கக்கூடியவள். சிறு வயதியில் இருந்தே பேச்சு போட்டியில் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளாள். கடந்த 2017-ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் எம்.ஜி.ஆர். குறித்த பேச்சுபோட்டியில் பேசி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பரிசு பெற்றாள். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக ஆன்லைன் வகுப்பு நடந்து வருகிறது.
படிப்பில் அதிக கவனம் செலுத்தியதால் தற்போது எங்களிடம் கூட அவளால் பேச நேரம் கிடைக்கவில்லை. எங்களுடைய மகள் ஆன்லைன் வகுப்பால் ஏற்பட்ட மன உளைச்சலில்தான் இந்த விபரீத முடிவை எடுத்தாள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மத்திய-மாநில அரசுகள் சார்பில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 பகுதிகளில் 6-ம் கட்ட அகழாய்வு நடைபெறுகிறது. இதில் பானைகள், செங்கல் கட்டிட சுவர், விலங்கு எலும்புக்கூடு, எடைக் கற்கள், முதுமக்கள் தாழிகள், மனித மண்டை ஓடு, மனித முழு உருவ எலும்புக்கூடு, குழந்தைகள் முழு உருவ எலும்புக்கூடுகள், தங்க நாணயம், சங்கு வளையல்கள், சுடுமண் உலை, சிறிய, பெரிய எலும்புகள் உள்ளிட்ட பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அகரத்தில் 13 அடுக்கு கொண்ட உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டது. அகரம், மணலூர் ஆகிய இரு பகுதிகளும் மக்கள் வசிப்பிட பகுதிகளாக இருந்துள்ளது என தொல்லியல் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கீழடியில் தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த பகுதி எனவும் கூறியுள்ளனர். இந்த நிலையில் கீழடியில் நேற்று புதிய குழி தோண்டி பணி நடந்தபோது முதலில் வட்டமாக ஒரு இடத்தில் தெரிந்தது. தொடர்ந்து அந்த இடத்தில் மண்ணை அகற்றியபோது 2 உறைகள் கொண்ட கிணறு இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து ஆழமாக தோண்டும்போது கூடுதலாக உறைகள் தென்பட வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை போலீஸ் சரகம் பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் திரவியம்(வயது 24). இவர் தேவகோட்டையில் உள்ள உறவினருக்கு சொந்தமான ஆழ்துளை கிணறு போடும் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று புதுவயலில் உள்ள ஒரு வீட்டிற்கு ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இரவு பஸ் நிலையம் அருகே நிறுவனத்தினர் ஏற்பாடு செய்திருந்த அறையில் தங்கினார்.
அப்போது விளையாட்டிற்காக தூக்கில் தொங்குவது போல் செல்பி எடுக்க முடிவு செய்தார். இதற்காக மின்விசிறியில் வேட்டியை மாட்டி நாற்காலியில் ஏறி நின்று தூக்கு மாட்டுவது போல் செல்வி எடுத்துள்ளார். அதை உறவினர்களின் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நாற்காலி சரிந்ததால் அவர் தூக்கில் தொங்கினார். இதில் கழுத்து இறுகி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தற்போது கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய 4 இடங்களில் அகழாய்வு நடைபெற்று வருகிறது.
சூதுபவளம், பல வரிசை கொண்ட செங்கல் சுவர், முத்திரை அச்சு, விலங்கின முழு உருவ எலும்புக்கூடு, 300, 150 கிராம் உள்ளிட்ட 6 அளவு கொண்ட எடை கற்கள், முதுமக்கள் தாழிகள், குழந்தையின் முழு உருவ எலும்புக்கூடுகள், மனித மண்டை ஓடு, மனித முழு உருவ எலும்புக்கூடு, பளபளப்பான செவ்வண்ண பானை, தங்க நாணயம், சீன மண்பாண்ட ஓடுகள், உறைகிணறு, சங்கு வளையல்கள், சுடுமண் உலை உள்பட இதுவரை சுமார் 900 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
இங்கு கண்டுபிடிக்கப்பட்ட மொத்த பொருட்களையும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கவும், காட்சிப்படுத்தும் வகையில் கொந்தகை ஊராட்சி பகுதியில் ரூ.12¼ கோடியில் அகழ் வைப்பக கட்டிடம் அமைப்பதற்காக கடந்த ஜூலை மாதம் 20-ந் தேதி பூமிபூஜை நடைபெற்றது.
இந்தநிலையில் நேற்று கீழடி பகுதியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி பணிகளை மாநில தொல்லியல்துறை இயக்குனர் உதயச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அகழ்பொருள் வைப்பக கட்டிடத்துக்கான வரைபடத்தையும் பார்வையிட்டு, கட்டிடம் அமைய உள்ள இடத்தையும் ஆய்வு செய்தார். கட்டிட பணியை உடனடியாக ஆரம்பித்து விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன் பின்னர் அவர் கீழடி, மணலூர், அகரம் ஆகிய இடங்களில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி பணிகளை பார்வையிட்டு, அங்கு கிடைத்த பொருட்கள் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தார். அவருடன் மாவட்ட வருவாய் அதிகாரி லதா, திட்ட இயக்குனர் வடிவேல், மாநில தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம், சிவகங்கை கோட்டாட்சியர் முத்துக்கழுவன், தாசில்தார் மூர்த்தி, மண்டல துணை தாசில்தார் தர்மராஜ், யூனியன் ஆணையாளர் ரெத்தினவேலு, பாண்டிச்சேரி பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் ராஜன், வட்டார வளர்ச்சி அதிகாரி ஜெகநாதசுந்தரம், கீழடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடசுப்பிரமணியன், துணை தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகளும் வந்திருந்தனர்.
தேவகோட்டை அண்ணா சாலையை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 48). இவரது மனைவி அமுதா. இவர்களுக்கு பிரதீப் என்ற மகனும், அஸ்விதா என்ற மகளும் உள்ளனர்.
கார்த்திகேயன்- அமுதா இருவரும் கலப்பு திருமணம் செய்ததால் அதனடிப்படையில் ஆசிரியர் பணி அரசு வழங்கியது. அதன்படி கார்த்திகேயன் தேவகோட்டை அருகே சமூகநாதபட்டிணம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
சில மாதங்களாக கணவன்- மனைவியிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது. நேற்று இரவும் வழக்கம் போல் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.
இதனால் விரக்தியடைந்த கார்த்திகேயன் இன்று அதிகாலை வீட்டில் இருந்து வெளியேறி ராம் நகரில் உள்ள தனியார் டென்னிஸ் கிளப்பில் உள்ள வேப்பமரத்தில் நைலான் கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கார்த்திகேயன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்த பொதுமக்கள் நகர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி உமா, சப்- இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முன்னதாக தந்தையின் உடலை பார்த்து மகள் அஸ்விதா தேசிய நெடுஞ்சாலையில் கதறி அழுத காட்சி அனைவரது கண்ணிலும் கண்ணீர் வரவழைத்தது.
ஆசிரியர் தற்கொலை குறித்து போலீஸ் துணை சூப்பிரண்டு சபாபதி உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
தற்கொலை செய்வதற்கு முன்பு ஆசிரியர் கார்த்திகேயன் இன்று அதிகாலை 4 மணி அளவில் தேநீர் அருந்தி விட்டு சென்றதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.






