என் மலர்tooltip icon

    சிவகங்கை

    காரைக்குடியில் காரில் கடத்திய ரூ.10 லட்சம் மதிப்புள்ள கஞ்சா சிக்கியது. அதில் இருந்த 4 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
    காரைக்குடி:

    காரைக்குடியில் ஜெயங்கொண்டான்- நாட்டுச்சேரி சாலையில் அதிகாலை 4 மணி அளவில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ், ஏட்டு பழனிகுமார் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் ஒரு கார் நின்று இருந்தது. அதில் இருந்த 4 பேர் மது அருந்திக்கொண்டிருந்தனர்.

    அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். திடீரென 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் போலீசார் காரை சோதனையிட்டபோது காரில் கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. 15 பெரிய பார்சல்களில் 100 சிறு, சிறு பொட்டலங்களாக மொத்தம் 34 கிலோ கஞ்சா இருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் என கூறப்படுகிறது.

    அவற்றை கைப்பற்றிய போலீசார், கஞ்சா எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, இதில் யாருக்கெல்லாம் தொடர்பு, எங்கே கொண்டு செல்ல இருந்தனர்? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா இருந்த கார் குறித்து விசாரித்தபோது அந்த கார் புதுக்கோட்டையை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.

    இதுகுறித்து காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அருண், மேல்விசாரணை நடத்தி வருகிறார். சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 4 பேரை தேடிவருகின்றனர்.
    கீழடி பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியின் போது அகரம் பகுதியில் 21 அடுக்குகள் கொண்ட உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டது.
    திருப்புவனம்:

    திருப்புவனம் யூனியனைச் சேர்ந்த கீழடி ஊராட்சியில் தற்போது 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. இந்த பணிகள் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த ஆராய்ச்சியின் போது கீழடியில் ஏற்கனவே பெரிய, சிறிய பானைகள், பல வரிசைகள் கொண்ட செங்கல் கட்டிட சுவர்கள், விலங்கின எலும்பு கூடுகள், செங்கலால் ஆன தரைத்தளம், நெருப்பு பயன்பாட்டின் கட்டமைப்பு, எடைக்கற்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

    இதேபோல் கொந்தகையில் முதுமக்கள் தாழிகள், சிறிய, பெரிய மனித எலும்புகள், மண்டை ஓடுகள், குழந்தையின் முழு உருவ எலும்பு கூடுகள், குவளை, சிறிய பானைகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதேபோல் மணலூரில் சுடுமண் உலை, எலும்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அகரத்தில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் கடந்த 22-ந்தேதி ஏற்கனவே 17 அடுக்குகள் கொண்ட உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உறை கிணற்றில் உள்ள அடுக்கு முக்கால் அடி உயரமும், 2½ அடி அகலமும் கொண்டதாக இருந்தது.

    இதையடுத்து தொடர்ந்து நேற்று வரை கூடுதலாக குழிகள் தோண்டி ஆராய்ச்சி செய்தபோது மேலும் கூடுதலாக 4 அடுக்குகள் கொண்ட உறை இருப்பது தெரிய வந்ததது. மேலும் அந்த பகுதியில் மண்ணை அகற்றியபோது 21 அடுக்குகள் கொண்ட உறைகிணறாக தற்போது காட்சி அளிக்கிறது. இந்த உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்கள் தண்ணீரை எவ்வாறு சேமித்து வைத்து பயன்படுத்த வேண்டும் என்பதற்கு முன்னோடிகளாக இருந்ததும், விவசாயத்திலும் சிறந்து விளங்கி இருப்பதும் தெரிகிறது.

    மேலும் இப்பகுதியில் குழிகள் ஆழமாக தோண்டும்போது மேலும் கூடுதலான உறைகள் கிடைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வருகிறது. இந்த பகுதியில் தற்போது நடைபெற்று வரும் 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை முடிக்க இம்மாதம் 30-ந்தேதி வரை தான் அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்குள் இந்த பணிகள் முழுவதும் நிறைவுபெறுமா அல்லது அனுமதி காலம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்த விவரங்கள் இன்னும் சில தினங்களில் தெரிய வரும். அதே நேரத்தில் கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய பகுதியில் எடுக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணியும் தற்போது தொடர்ந்து நடந்து வருகிறது.
    கொரோனா பரவலை தடுப்பதற்காக நிறுத்தப்பட்ட சேது எக்ஸ்பிரஸ் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சிவகங்கை:

    சிவகங்கையில் இருந்து சென்னைக்கு தினசரி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சென்று வருகின்றனர். கொரோனா ஊரடங்குக்கு முன்பாக சிவகங்கையில் இருந்து சென்னை செல்ல ராமேசுவரம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் சேது எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகிய தினசரி ரெயில்களும் சென்று வந்தன.

    இதுதவிர வாரத்திற்கு 3 நாட்கள் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு சிலம்பு எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது. மேலும் தினசரி விருதுநகரில் இருந்து திருச்சி வரை டெமு ரெயில் ஒன்றும், ராமேசுவரம் திருச்சி பயணிகள் ரெயில் ஒன்றும் சென்று வந்தன.

    மேலும் வாராந்திர ரெயில்களாக வாரணாசி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில், மாண்டுவாடி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ், பாண்டிச்சேரியில் இருந்து கன்னியாகுமரிக்கு ரெயில் ஆகியவை இயக்கப்பட்டது. இத்தனை ரெயிலில் சென்ற போதும் போதுமான இட வசதியின்றி சிவகங்கை மக்கள் அவதிப்பட்டு வந்தார்கள். இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் மாத கடைசியில் இருந்து ரெயில்கள் நிறுத்தப்பட்டன. கடந்த 6 மாதமாக ரெயில் இயக்கப்படாததால் இந்த பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.

    தற்போது சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் மட்டும் இயக்கப்படுகிறது. மற்ற ரெயில்கள் இயக்கப்படவில்லை. பாண்டிச்சேரி-கன்னியாகுமரி ரெயில், வாரணாசி-ராமேசுவரம் ரெயில், மாண்டுவாடி-ராமேசுவரம் ரெயில் ஆகியவை வெளிமாநிலங்களில் இணைக்கும் வகையில் இயக்கப்படும் ரெயில்கள். ஆனால் சென்னை-ராமேசுவரம் ரெயில் மற்றும் விருதுநகர்-திருச்சி ரெயில் ஆகியவை தமிழகத்தில் மட்டும் இயக்கப்படுகிறது.

    எனவே பொதுமக்கள், அரசு ஊழியர்கள் வசதிக்காகவும் சென்னை-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் மற்றும் சேது எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களையும், அதுபோல விருதுநகரில் இருந்து திருச்சி வரை செல்லும் பயணிகள் ரெயிலையும், திருச்சி-ராமேஸ்வரம் பயணிகள் ரெயிலையும் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    காரைக்குடியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 650 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை குடிமைப்பொருள் பறக்கும் படை வட்டாட்சியர் தமிழரசன் மற்றும் துணை வட்டாட்சியர் சேகர் தலைமையிலான பறக்கும் படை குழுவினர் காரைக்குடி பகுதியில் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரைக்குடி, செக்காலை டவுன் கருப்பர் கோவில் அருகில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது அவர்களுக்கு தெரியவந்தது.

    இதையடுத்து அந்த வீட்டை சுற்றி வளைத்த அதிகாரிகள் உள்ளே புகுந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு 650 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறக்கும் படை குழுவினர் கைப்பற்றினர்.

    இது தொடர்பாக குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அரிசி கடத்தலில் ஈடுபட்ட ராஜ்குமார் என்பவரை கைது செய்தனர்.

    மேலும் பறக்கும் படை வட்டாட்சியர் தமிழரசன் கூறியதாவது, பொதுமக்களுக்கு வழங்கப்படும் இலவச ரேஷன் அரிசி, கோதுமை, மண்எண்ணெய், துவரம் பருப்பு, பாமாயில் போன்ற பொருட்களை கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதுபோன்ற கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது பறக்கும் படை குழுவினருக்கு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.
    வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ. கூறினார்.
    காரைக்குடி:

    காரைக்குடியில் தி.மு.க. மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் வைத்தியநாதன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் தென்னவன் வரவேற்றார். மாவட்ட துணைச்செயலாளர் சேங்கைமாறன் வரவேற்றார். மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், காரைக்குடி நகர செயலாளர் குணசேகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், முன்னாள் நகர்மன்ற தலைவர் முத்துத்துரை மற்றும் மகளிரணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழர்களின் உரிமையை மீட்கும் இயக்கமாகவும், தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் இயக்கமாகவும் தி.மு.க. இருந்து வருகிறது. பல்வேறு போராட்டங்களையும், சோதனைகளையும் கடந்து வந்தது தான் தி.மு.க. தற்போது தி.மு.கவிற்கு பலம் சேர்க்கும் வகையில் எல்லோரும் நம்முடன் என்ற திட்டத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தில் ஆன்லைன் மூலம் 18 வயதிற்கும் மேல் உள்ளவர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்படுகின்றனர். தமிழகம் முழுவதும் சுமார் 25 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். ஆனாலும் அதற்கு மேலும் உறுப்பினர்கள் இணைவார்கள்.

    ஒவ்வொரு தொகுதிக்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கு இருந்தாலும் சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை 4 தொகுதிகளையும் சேர்த்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை சேர்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த உறுப்பினர்கள் சேர்க்கும் பணி மாவட்டம் முழுவதும் அந்தந்த தொகுதி பொறுப்பாளர்கள் திறமையாக செய்து வருகின்றனர். வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதியிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சியில் அமரும் என்பதில் தமிழக மக்கள் உறுதியாக இருந்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
    சிவகங்கை அருகே காரில் சென்று ஆடு திருடிய 2 பேரை கைது செய்த போலீசார் மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை அடுத்த ஒக்கூர் அண்ணாநகர் காலனியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 25). இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை சிவகங்கை-திருப்பத்தூர் சாலையோரமாக மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த சிலர், வினோத் குமாரின் ஆடுகளை பிடித்து காரில் ஏற்ற முயன்றனர். இதை பார்த்த வினோத்குமார் அவர்களை பிடிக்க ஓடி வந்தார். அதற்குள் அவர்கள் ஒரு ஆட்டை மட்டும் காரில் தூக்கி கொண்டு சென்று விட்டனர். இதுகுறித்து வினோத்குமார் சிவகங்கை நகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மீனு பிரியா சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளைச்சாமி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் சிவகங்கை காளவாசல் பகுதியில் வசிக்கும் சரவணன்(24), ஆனந்த்(29) உள்பட 7 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.

    இதைதொடர்ந்து சரவணன், ஆனந்த் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் சிவகங்கை, காளையார்கோவில், ஒக்கூர் உள்பட பல்வேறு இடங்களில் 94 ஆடுகள் திருடியது தெரிந்தது. மேலும் அவர்கள் பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் ஆட்டோ டிரைவர்கள் ஆவர்.
    கீழடி அகழ்வாராய்ச்சியின்போது அகரம் பகுதியில் உறை கிணற்றில் கூடுதலாக 4 அடுக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    திருப்புவனம்:

    திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடியில் 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கீழடியில் பெரிய, சிறிய பானைகள், செங்கல் கட்டிட சுவர்கள், விலங்கின எலும்பு கூடுகள், நெருப்பு பயன்பாட்டின் கட்டமைப்பு உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. அகரத்தில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் கடந்த மாதம் 7-ந்தேதி 6 அடுக்கு கொண்ட உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த உறைகிணற்றின் ஒரு அடுக்கு முக்கால் அடி உயரமும், 2 அரை அடி அகலமும் கொண்டதாக இருந்தது. மேலும் தண்ணீரை எவ்வாறு சேமித்து வைத்து பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பண்டைய காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் சிந்தித்து இந்த உறைகிணறுகளை அமைத்து தண்ணீரை சேமித்து வைத்துள்ளனர் என்பது தெரியவந்தது. இந்தநிலையில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்றபோது மேலும் 5 அடுக்குகள் கூடுதலாக இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து 11 அடுக்குகள் கொண்ட உறைகிணறாக ஏற்கனவே காட்சியளித்தது. தொடர்ந்து தற்போது மேலும் ஆழமாக தோண்டப்பட்டு அகழ்வாராய்ச்சி நடைபெற்றபோது அங்கு கூடுதலாக 2 அடுக்கு வெளியே தெரிந்தது. இந்த அடுக்குகளுடன் சேர்த்து மொத்தம் 13 அடுக்கு கொண்ட உறைகிணறாக காட்சியளித்தது. இதுதவிர நேற்று வரை கூடுதலாக குழிகள் தோண்டி ஆராய்ச்சி செய்தபோது மேலும் கூடுதலாக 4 அடுக்குகள் கொண்ட உறை இருப்பது தெரிய வந்த பின்னர் இதுவரை மொத்தம் 17 அடுக்குகள் கொண்ட உறைகிணறாக காட்சியளிக்கிறது.

    இந்த பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணிகளை முடிக்க வருகிற 30-ந்தேதி வரை தான் அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்குள் இந்த பணிகள் முழுவதும் நிறைவு பெறுமா அல்லது அனுமதி காலம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்த விவரங்கள் இன்னும் சில தினங்களில் தெரிய வரும். அதே நேரத்தில் கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய பகுதியில் எடுக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணியும் தற்போது தொடர்ந்து நடந்து வருகிறது.
    செவரக்கோட்டையில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
    காரைக்குடி:

    கல்லல் துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் செவரக்கோட்டை, சாத்தர சம்பட்டி, வெற்றியூர், அரண்மனை சிறுவயல், செம்பனூர், பாகனேரி, கண்டிபட்டி, கண்டரமாணிக்கம் பிரிவில் பட்டமங்கலம், கூந்தலூர், சொக்கநாதபுரம், ஆலங்குடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
    காளையார்கோவில் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    காளையார்கோவில்:

    சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே சிலுக்கப்பட்டி கிராமத்தில் உள்ள வங்கி ஏ.டி.எம். மையத்துக்குள் நேற்று அதிகாலை புகுந்த ஒருவர் எந்திரத்தை உடைத்து சேதப்படுத்தி பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தார். அப்போது எச்சரிக்கை மணி ஒலித்ததால் அக்கம் பக்கத்தில் இருந்து பொதுமக்கள் ஓடிச் சென்று அந்த நபரை சுற்றிவளைத்து பிடித்தனர்.

    பின்னர் இதுகுறித்து காளையார் கோவில் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் அவர் குண்டாக்குடை கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 52) என்பது தெரியவந்தது.

    சம்பவம் குறித்து வங்கி மேலாளர் சுரேஷ் கண்ணன் அளித்த புகாரின் பேரில் காளையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற ஆறுமுகத்தை கைது செய்தனர்.
    கீழடி அகழாய்வில் ஏற்கனவே கண்டறிந்த உறை கிணற்றின் மேலும் 4 அடுக்குகள் வெளிப்பட்டன.
    திருப்புவனம்:

    சிவகங்கை மாவட்டம் கீழடிபகுதியில் தற்போது நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணியில் அவ்வப்போது உறைகிணறுகள் வெளிப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 2 அடுக்கு கொண்ட உறைகிணறு கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்நிலையில் அந்த உறைகிணற்றின் கீழே நேற்று கூடுதலாக தோண்டப்பட்டது. அப்போது மேலும் 4 அடுக்குகள் வெளிப்பட்டன. இதன் உறை ஒவ்வொன்றும் முக்கால் அடி உயரமும், 2½ அடி அகலமும் கொண்டுள்ளது.

    இதன் மூலம் தண்ணீர் சேமிப்புக்கு பண்டைய தமிழர்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளதை அறிய முடிகிறது.

    கீழடி பகுதியில் நடைபெற்று வரும் 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. மேலும் இங்கு கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணியும் வேகமாக நடைபெற்று வரும் வேளையில் இதுவரை பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணி நிறைவு பெறுவதற்குள் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.
    காரைக்குடி அருகே வழிப்பறி வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி புதுசந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது 54). ரியல் எஸ்டேட் புரோக்கர். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இவரை நிலம் வாங்குவது குறித்து பேச வேண்டும் என்று கூறி கருவியபட்டிக்கு வருமாறு சிலர் அழைத்தனர். அதனையொட்டி சுப்பிரமணியம் தனது மோட்டார் சைக்கிளில் கருவியபட்டிக்கு சென்றார். அங்கு அவரை சூழ்ந்துகொண்ட 7 பேர் கொண்ட கும்பல் 7 பவுன் நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை மிரட்டி பறித்துக்கொண்டு தப்பிவிட்டது. இதுகுறித்து சுப்பிரமணியன் பள்ளத்தூர் போலீசில் புகார் செய்தார்.

    இதில் 6 பேரை போலீசார் கைது செய்தனர் 6 பவுன் நகைகளையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சத்யாநகரை சேர்ந்த ரவி(20) என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் அவரை நேற்று போலீசார் கைது செய்து அவரிடமிருந்து மோட்டார் சைக்கிளையும், நகைகளையும் கைப்பற்றினர்.
    காரைக்குடி அருகே மாமியார் இறந்த துக்கத்தில் மருமகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    காரைக்குடி:

    காரைக்குடி அருகே உள்ள செட்டிநாடு போலீஸ் சரகம் நெற்புகப்பட்டியை சேர்ந்தவர் அய்யப்பன்(வயது 35). இவரது மனைவி கவிதா. இவர் முதுநிலை பட்டதாரி. அய்யப்பன் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். அதனால் சரிவர வேலைக்கு செல்வதில்லை.

    இவர்களுக்கு 3½ மற்றும் 5½ வயதில் 2 மகள்கள் உண்டு. சில தினங்களுக்கு முன்பு கவிதாவின் தாயார் ரெங்கம்மாள் திடீரென மரணம் அடைந்தார்.

    இதனால் அய்யப்பன் தனது மனைவிக்கு ஆதரவாக இருந்த அவரது தாயார் இறந்துவிட்டாரே என்று புலம்பிக் கொண்டே இருந்தாராம்.

    மாமியார் இறந்து விட்டார் என்ற துக்கத்தில் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செட்டிநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×