என் மலர்
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேவகோட்டை பகுதியை சேர்ந்த 18 வயது மாணவர் எந்திரவியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இங்கு காரைக்குடி பழனிச்சாமி நகரை சேர்ந்த ராஜா ஆனந்த் (வயது 48) ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்றுமுன்தினம் இவர் வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருந்தார்.
ஆனால் சம்பந்தப்பட்ட மாணவர் வகுப்பறையில் பாடத்தை கவனிக்காமல் செல்போனில் விளையாடிக் கொண்டு இருந்ததாக தெரிகிறது. இதை பார்த்த ஆசிரியர், மாணவரை கண்டித்துள்ளார். ஆனாலும் மாணவன் தொடர்ந்து செல்போனில் விளையாடியதாக தெரிகிறது. இதனால் ஆசிரியர், மாணவன் பற்றி தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த மாணவரை அழைத்த முதல்வர், அவனது பெற்றோரை அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து மாணவர், தாயாரை அழைத்து வந்துள்ளான். அப்போது, உங்கள் மகன் பாடங்களை கவனிக்காமல் செல்போனில் விளையாடிக் கொண்டு இருக்கிறான். இதனால் மற்ற மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படுகிறது. எனவே நீங்கள் மாற்றுச்சான்றிதழை வாங்கி சென்று விடுங்கள் என்று முதல்வரும், ஆசிரியரும் கூறியுள்ளனர்.
இதைதொடர்ந்து மகனை கண்டிப்பதாக அவர் கூறினார். அப்போது இது தான் கடைசி முறை, இனி தவறு செய்தால் மன்னிக்க மாட்டோம் என அவர்கள் கூறினர்.
அதன்பின் நேற்று காலை தொழிற்பயிற்சி நிலையத்தில் வகுப்புகள் வழக்கம்போல் தொடங்கி நடந்து கொண்டிருந்தது. அந்த மாணவரும் வழக்கம்போல் வகுப்பிற்கு வந்துள்ளான். ஓவிய ஆசிரியர் ராஜா ஆனந்த், வகுப்பறையில் தனியாக இருந்துள்ளார். அருகில் மற்ற வகுப்புகள் நடந்து கொண்டு இருந்தன.
அப்போது அங்கு சென்ற மாணவர் ஓவிய ஆசிரியரிடம் நான் தவறுதலாக நடந்து கொண்டேன் என்னை மன்னித்து விடுங்கள். இனிமேல் ஒழுங்காக நடந்து கொள்வேன் என்று கூறியுள்ளான். அதற்கு ஆசிரியர் எதுவாக இருந்தாலும் முதல்வரிடம் சென்று பேசுமாறு கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியரை சரமாரியாக குத்தினான். இதனால் அலறியவாறு ரத்தம் சொட்டச்சொட்ட அவர் கீழே விழுந்தார்.
அவரது சத்தம் ேகட்டு பக்கத்து வகுப்புகளில் இருந்த மாணவர்களும் ஆசிரியர்களும் ஓடிவந்து மாணவரை பிடித்துக்கொண்டனர். படுகாயம் அடைந்த ஆசிரியர் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சோமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரை கைது செய்தனர்.
திருமணத்தை விமரிசையாக நடத்துவது தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து விட்டது. அதிலும் இளைஞர்கள் திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் மற்றவர்களின் பார்வையில்படும் வகையில் நடத்த வேண்டும் என்ற ஆவலில் பேனர் வைப்பது உள்ளிட்ட விஷயங்களில் பல வித்தியாசமான நிகழ்வுகளை அரங்கேற்றுகின்றனர்.
அதுபோன்ற ஒரு நிகழ்வுதான் சிவகங்கை மாவட்டத்தில் நடந்துள்ளது. சிவகங்கை அருகே உள்ளது கீழக்கண்டனி கிராமம். இங்கு வாலிபர் ஒருவருக்கு நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. இந்த திருமண விழாவிற்கு வருபவர்களுக்கு மதுபாட்டில் மற்றும் சிக்கன் வழங்கப்படும் என்று மணமகனின் நண்பர்கள் சிலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் பிளக்ஸ் பேனர் வைத்திருந்தனர்.
பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த அந்த பிளக்ஸ் பேனர் பார்ப்பவர்களை கவர்ந்தது. மது பாட்டில் வேண்டும் என்றால் ஆதார் கார்டு கொண்டுவர வேண்டும் என்ற அறிவிப்பையும் அதில் குறிப்பிட்டிருந்தனர். அந்த வாலிபர்கள் அறிவிப்பின்படி திருமண விழாவிற்கு வந்த மது பிரியர்களுக்கு மது பாட்டில்கள் வழங்கப்பட்டது.
அந்த வாலிபர்கள், ஆதார் அட்டையை காண்பித்த மது பிரியர்களுக்கு மது பாட்டில்கள் மற்றும் சிக்கன் வழங்கினர். திருமண மானவர்களுக்கு ஒரு மதுபாட்டிலும், திருமணமாகாதவர்களுக்கு 2 மதுபாட்டிலும் வழங்கினர்.
சிவகங்கை:
சிவகங்கை காந்தி வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன்கள் இளங்கோ (வயது 31), மணிவண்ணன்(26).
இவர்களில் மணிவண்ணன் சிவகங்கை நகரில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். இவர் கடந்த தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வாங்க கடைக்கு சென்றபோது, அங்கு புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிலர் வந்தனர். அவர்களுக்கும் மணிவண்ணனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த முன்விரோதத்தில் இரு தரப்பினரும் அடிக்கடி மோதிக் கொண்டனர். இந்த நிலையில் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் இந்த பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டு சமரசம் செய்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில் மணிவண்ணனின் சகோதரர் இளங்கோ மேலூர் சாலையில் நேற்று புதிதாக ஓட்டல் திறந்தார். காலையில் தொடங்கிய வியாபாரம் இரவு வரை விறுவிறுப்பாக நடந்தது. அதன்பின்னர் மணிவண்ணன் மற்றும் இளங்கோ வியாபாரத்தை முடித்து விட்டு சாப்பிட தொடங்கினர்.
அப்போது அங்கு 7 பேர் கொண்ட கும்பல் வந்தது. அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள் இங்கு மணிவண்ணன் யார் என்று கேட்டனர். இதையடுத்து மணிவண்ணன் எழுந்தார்.
அப்போது அவரை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த இளங்கோ, அந்த கும்பலை தடுக்க முயன்றார். அப்போது அவரையும் அந்த கும்பல் அரிவாளால் வெட்டியது. இதனால் அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இருவரையும் வெட்டியதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து வெளியேறி தப்பிச்சென்று விட்டது. பின்பு பலத்த வெட்டுக்காயமடைந்து ரத்தவெள்ளத்தில் கிடந்த மணிவண்ணன் மற்றும் இளங்கோ ஆகிய இருவரையும் அங்கிருந்து மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே மணிவண்ணன் பரிதாபமாக இறந்தார். அவரது அண்ணன் இளங்கோ சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலை சம்பவம் சிவகங்கையில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
மணிவண்ணன் கொலை குறித்த தகவல் கிடைத்ததும் சிவகங்கை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மணிவண்ணனை வெட்டிக் கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து துப்புதுலக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கொலையாளிகள் மற்றும் கொலைக்கான காரணம் குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இருந்துவந்த முன்விரோதம் காரணமாக மணிவண்ணன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்த கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






