என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள்.
சதுர்வேதமங்கலத்தில் மாசி திருவிழா தேரோட்டம்
சதுர்வேதமங்கலம் ஆத்மநாயகி உடனுறை ருத்ரகோடீஸ்வரர் ஆலய மாசி பெருவிழா தேரோட்டம் நடந்தது.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சதுர்வேதமங்கலத்தில் அருள்பாலிக்கும் 5 கோவில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஆத்மநாயகி உடனுறை ருத்ரகோடீஸ்வரர் ஆலய மாசிமக பெருவிழா கடந்த 7ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
9ம் நாளான நேற்று திருத்தேரோட்டம் நடந்தது. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வடம்பிடித்து தொடங்கிவைத்தார். முன்னதாக கிராமத்தவர்கள் வந்திருந்து சிறப்பு பூஜைகளில் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து கிராமத்தார்கள் முன்னிலையில் திருத்தேரோட்டம் தொடங்கியது.
4 ரதவீதிகளில் சுற்றிவந்த திருத்தேர் மாலை 6 மணியளவில் நிலையை வந்தடைந்தது. 5 ரதங்களில் பவனிவந்த இந்த தேரோட்டத்தில் விநாயகர், முருகப்பெருமான், பிரியாவிடையுடன் ருத்ரகோடீஸ்வரர், ஆத்மநாயகி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் சுவாமிகள் பஞ்சமூர்த்திகளாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
4 ரதவீதிகளிலும் பெண்கள் கும்மியடித்து பக்தி பாடல்கள் பாடி வழிபாடு செய்தனர். அனைத்து தேர்களும் நிலையை அடைந்தும் திருத்தேர் சக்கரத்தில் பக்தர்கள் சிதறு தேங்காய்கள் உடைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
மேலும் பக்தர்கள் வேண்டுதலுக்காக வாழைப்பழங்களை சூறையிட்டு பொது மக்களுக்கு தானமாக வழங்கினர். இதில் சதுர்வேதமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் கலைசெல்வி சீனிவாசன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
Next Story






