என் மலர்tooltip icon

    சிவகங்கை

    சதுர்வேதமங்கலம் ஆத்மநாயகி உடனுறை ருத்ரகோடீஸ்வரர் ஆலய மாசி பெருவிழா தேரோட்டம் நடந்தது.
    நெற்குப்பை 

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சதுர்வேதமங்கலத்தில் அருள்பாலிக்கும் 5 கோவில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஆத்மநாயகி உடனுறை ருத்ரகோடீஸ்வரர் ஆலய மாசிமக பெருவிழா  கடந்த 7ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    9ம் நாளான நேற்று திருத்தேரோட்டம் நடந்தது. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்  வடம்பிடித்து தொடங்கிவைத்தார். முன்னதாக கிராமத்தவர்கள் வந்திருந்து சிறப்பு பூஜைகளில் பங்கேற்றனர். அதைத்தொடர்ந்து கிராமத்தார்கள் முன்னிலையில் திருத்தேரோட்டம் தொடங்கியது.  

    4 ரதவீதிகளில் சுற்றிவந்த திருத்தேர் மாலை 6 மணியளவில் நிலையை வந்தடைந்தது. 5 ரதங்களில் பவனிவந்த இந்த தேரோட்டத்தில்  விநாயகர், முருகப்பெருமான், பிரியாவிடையுடன்  ருத்ரகோடீஸ்வரர்,  ஆத்மநாயகி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் சுவாமிகள் பஞ்சமூர்த்திகளாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    4 ரதவீதிகளிலும் பெண்கள் கும்மியடித்து பக்தி பாடல்கள் பாடி வழிபாடு செய்தனர். அனைத்து தேர்களும் நிலையை அடைந்தும் திருத்தேர் சக்கரத்தில் பக்தர்கள் சிதறு தேங்காய்கள் உடைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

    மேலும் பக்தர்கள் வேண்டுதலுக்காக வாழைப்பழங்களை சூறையிட்டு பொது மக்களுக்கு தானமாக வழங்கினர். இதில் சதுர்வேதமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் கலைசெல்வி சீனிவாசன் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
    ஆதார் அட்டையை காண்பித்த மது பிரியர்களுக்கு மது பாட்டில்கள் மற்றும் சிக்கன் வழங்கினர். திருமணமானவர்களுக்கு ஒரு மதுபாட்டிலும், திருமணமாகாதவர்களுக்கு 2 மதுபாட்டிலும் வழங்கினர்.
    சிவகங்கை:

    திருமணத்தை விமரிசையாக நடத்துவது தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து விட்டது. அதிலும் இளைஞர்கள் திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் மற்றவர்களின் பார்வையில்படும் வகையில் நடத்த வேண்டும் என்ற ஆவலில் பேனர் வைப்பது உள்ளிட்ட வி‌ஷயங்களில் பல வித்தியாசமான நிகழ்வுகளை அரங்கேற்றுகின்றனர்.

    அதுபோன்ற ஒரு நிகழ்வுதான் சிவகங்கை மாவட்டத்தில் நடந்துள்ளது. சிவகங்கை அருகே உள்ளது கீழக்கண்டனி கிராமம். இங்கு வாலிபர் ஒருவருக்கு நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. இந்த திருமண விழாவிற்கு வருபவர்களுக்கு மதுபாட்டில் மற்றும் சிக்கன் வழங்கப்படும் என்று மணமகனின் நண்பர்கள் சிலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் பிளக்ஸ் பேனர் வைத்திருந்தனர்.

    பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த அந்த பிளக்ஸ் பேனர் பார்ப்பவர்களை கவர்ந்தது. மது பாட்டில் வேண்டும் என்றால் ஆதார் கார்டு கொண்டுவர வேண்டும் என்ற அறிவிப்பையும் அதில் குறிப்பிட்டிருந்தனர். அந்த வாலிபர்கள் அறிவிப்பின்படி திருமண விழாவிற்கு வந்த மது பிரியர்களுக்கு மது பாட்டில்கள் வழங்கப்பட்டது.

    அந்த வாலிபர்கள், ஆதார் அட்டையை காண்பித்த மது பிரியர்களுக்கு மது பாட்டில்கள் மற்றும் சிக்கன் வழங்கினர். திருமண மானவர்களுக்கு ஒரு மதுபாட்டிலும், திருமணமாகாதவர்களுக்கு 2 மதுபாட்டிலும் வழங்கினர்.


    சிங்கம்புணரி அருகே உள்ள அரளிப்பாறையில் பிரசித்திபெற்ற மஞ்சுவிரட்டு நாளை நடக்கிறது.
    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே  உள்ள அரளிப்பாறையில்  பிரசித்தி பெற்ற மஞ்சுவிரட்டு மாசி மகத்தை ஒட்டி நடைபெறும். அதேபோல் இந்த வருடமும் நாளை மாசிமகத்தையொட்டி மஞ்சுவிரட்டு நடக்கிறது. 

    இதன் முன்னேற்பாடாக தடுப்புவேலி அமைத்தல் மற்றும் மஞ்சுவிரட்டு திடலை சுத்தம் செய்யும் பணி நடக்கிறது.  ஊர் பெரியோர்கள், அதிகாரிகள் அமருவதற்கு பரண்கள் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது.

    தமிழர்களின் வீர விளையாட்டுகளில் தனிச்சிறப்பு பெற்றது. ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு. தென் மாவட்டங்களான சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றாலும் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகில் உள்ள அரளிப்பாறையில் நடைபெறும் இந்த மாசிமகம் மஞ்சுவிரட்டு மிகவும் தனிச்சிறப்பு பெற்றது.

    இயற்கை பரணாக அமைந்துள்ள பாறையில் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வரும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் அமர்ந்து பாதுகாப்பாக பார்ப்பதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.  

    பாறையில் மேல் உள்ள பாலமுருகன் கோவில் மேற்கு பார்த்து இருப்பது தனி சிறப்பு. இந்த கோவிலில் பிரசாதமாக மரிக்கொழுந்து  பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. 

    இந்த கோவில் அமைந்துள்ள பாறையின் அடிவாரத்தில்  உள்ள வாடிவாசலில் நாளை நடக்கவிருக்கும் மாசிமகம் மஞ்சு விரட்டுக்கு அனைத்து ஏற்பாடுகளும் வருவாய்த்துறையினர்கள் கோட்டாட்சியர் பிரபாகரன், வட்டாட்சியர் கயல்செல்வி, வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்பார்வையில் செய்து வருகின்றனர்.


    சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து 18,144 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் சாலைக்கிராமம், முனைவென்றி ஆகிய ஊராட்சிகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருவதை கலெக்டர் மதுசூதன்ரெட்டி திடீர் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது கலெக்டர், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பதிவு செய்த விவசாயிகள் நாள்தோறும் நெல் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான பதிவு செய்யப்பட்ட பதிவேடு மற்றும் இணையதளத்தில் பதிவு செய்த விவரம் போன்றவைகள் குறித்து பார்வையிட்டு, அங்கிருந்த விவசாயிகளிடம் கேட்ட றிந்தார். 

    அப்பொழுது விவசாயிகள் பதிவு குறித்து விவரங்களை தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து, விவசாயிகளிடம் கலெக்டர் மேகநாதரெட்டி கூறியதாவது:&

    நாள்தோறும் நெல் எடை போடுவதற்கு தேர்வு செய்யப்பட்ட விவசாயிகள் மட்டும் நெல் மூட்டைகளை கொண்டுவந்து எடை போட்டு செல்லவேண்டும். காரணம், நெல் மூட்டைகளை கொண்டுவந்து அடுக்கி வைக்கும் பொழுது, மழைக்காலம் மற்றும் காலதாமதத்தால் ஏற்படும் அலைச்சல் போன்ற காரணங்களால் ஏற்படும் சிரமத்தை தவிர்க்க பதிவு செய்யப்பட்டு, எடை போடுவதற்கு தயார் நிலையில் உள்ள விவசாயிகளுக்கு தகவல் தெரிவித்தவுடன் வந்தால் அனைத்து சிரமங்களையும் தவிர்த்து உடனடியாக நெல் மூட்டைகளை விற்பனை செய்து விட்டு செல்லலாம். 

    அதற்கு விவசாயிகள் முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். மேலும் மாவட்டத்தில் 60 மையங்கள் மூலம் இதுவரை 18,144 டன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் 3,397 விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு மையத்திலும் 40 டன் வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. 

    குறிப்பாக விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க, நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலர்கள் ஒவ்வொரு மையத்திற்கும் கண்காணிப்பு அலுவலர்கள் விவசாயிகளுக்கு நியமித்து, தடையின்றி நெல் விற்பனை செய்வதற்கு உறுதுணையாக இருக்க பணி மேற்கொண்டு வருகிறார்கள். 
    சிவகங்கையில் ஜவுளிக்கடை உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை காந்தி வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன்கள் இளங்கோ (வயது 31), மணிவண்ணன்(26).

    இவர்களில் மணிவண்ணன் சிவகங்கை நகரில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். இவர் கடந்த தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வாங்க கடைக்கு சென்றபோது, அங்கு புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிலர் வந்தனர். அவர்களுக்கும் மணிவண்ணனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த முன்விரோதத்தில் இரு தரப்பினரும் அடிக்கடி மோதிக் கொண்டனர். இந்த நிலையில் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் இந்த பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டு சமரசம் செய்து வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் மணிவண்ணனின் சகோதரர் இளங்கோ மேலூர் சாலையில் நேற்று புதிதாக ஓட்டல் திறந்தார். காலையில் தொடங்கிய வியாபாரம் இரவு வரை விறுவிறுப்பாக நடந்தது. அதன்பின்னர் மணிவண்ணன் மற்றும் இளங்கோ வியாபாரத்தை முடித்து விட்டு சாப்பிட தொடங்கினர்.

    அப்போது அங்கு 7 பேர் கொண்ட கும்பல் வந்தது. அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள் இங்கு மணிவண்ணன் யார் என்று கேட்டனர். இதையடுத்து மணிவண்ணன் எழுந்தார்.

    அப்போது அவரை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த இளங்கோ, அந்த கும்பலை தடுக்க முயன்றார். அப்போது அவரையும் அந்த கும்பல் அரிவாளால் வெட்டியது. இதனால் அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இருவரையும் வெட்டியதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து வெளியேறி தப்பிச்சென்று விட்டது. பின்பு பலத்த வெட்டுக்காயமடைந்து ரத்தவெள்ளத்தில் கிடந்த மணிவண்ணன் மற்றும் இளங்கோ ஆகிய இருவரையும் அங்கிருந்து மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் வழியிலேயே மணிவண்ணன் பரிதாபமாக இறந்தார். அவரது அண்ணன் இளங்கோ சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலை சம்பவம் சிவகங்கையில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மணிவண்ணன் கொலை குறித்த தகவல் கிடைத்ததும் சிவகங்கை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மணிவண்ணனை வெட்டிக் கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து துப்புதுலக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    கொலையாளிகள் மற்றும் கொலைக்கான காரணம் குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இருந்துவந்த முன்விரோதம் காரணமாக மணிவண்ணன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்த கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    காளையார்கோவிலில் புனித அருளானந்தர் ஆலய தேர் பவனி நடந்தது.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் பிரசித்தி பெற்ற புனித அருளானந்தர் தேவாலயம்  உள்ளது. இங்கு கடந்த 4-ந் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நாள்தோறும் நவ நாள் திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். 

    விழாவின் இறுதி நாள் திருவிழாவான சிறப்பு திருப்பலி பூஜை நடந்தது. இதில் அருட்தந்தை தாமஸ் தலைமை தாங்கி திருப்பலியை நடத்தினார். அதனைத் தொடர்ந்து புனித அருளானந்தரின் உருவம் தாக்கிய தேர்ப்பவனி நடை பெற்றது. 

    வண்ண விளக்குகளால்   அலங்கரிக்கப்பட்ட தேர் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. தேர்ப்பவனியை யொட்டி 150-க்கும் மேற் பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

    மறுநாள் காலை காளையார் கோவில் பங்குத் தந்தை சூசை ஆரோக்கியம் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியுடன் விழா நிறைவடைந்தது.




    திருப்புவனம் பேரூராட்சியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணியை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தேர்வு நிலை பேரூராட்சிக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. வருகிற 19ந்தேதி நடைபெறும் தேர்தலில் 62 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு ஏற்கனவே சின்னங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. 

    வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் மின்னணு வாக்கு எந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி திருப்புவனம் பேரூரா£ட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. வேட்பாளர்கள் பெயர், சின் னங்கள் ஆகியவை தேர்தல் அதிகாரிகள் ஜினு, ஜெயராஜ் ஆகியோர் முன்னிலையில் எந்திரத்தில் பொருத்தப்பட்டன. 

    இந்த பணியின் போது வார்டு வாரி யாக போட்டியிடும் வேட்பாளர்கள் அருகில் இருந்து தங்களது பெயர், சின்னங்களை சரிபார்த்தனர். பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ராஜாவும் இந்த பணியை ஆய்வு செய்தார். 
    திருப்பத்தூரில் மின்னணு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் 18 வார்டுகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்களுக்கான சின்னத்தை மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தும் பணி நடைபெற்றது. 

    முன்னதாக மின்னணு எந்திரம் சரி பார்க்கப்பட்டு வட்டார தேர்தல் அலுவலர் சாந்தி மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமையில் சின்னத்தை பொருத்தும் பணி வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

     மின்னணு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் பேரூராட்சி அலுவலகத்தில் தனி அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.  இதில் தேர்தல் நடத்தும் துணை அலுவலர் மன்சூர் அலி, காளையார்கோவில் வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார், பேரூராட்சி தலைமை எழுத்தர் ரேணுகாதேவி, மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் வேட்பாளர்கள் என பலரும் உடனிருந்தனர்.
    சிவகங்கை அருகே காளையார்மங்கலத்தில் செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    சிவகங்கை

    சிவகங்கை அருகே காளையார்மங்கலத்தில் உள்ள செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு 9ந் தேதி யாகசாலை பூஜைகள், கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன.

     10ந் தேதி 2 மற்றும் 3ம் காலயாக பூஜைகள் நடைபெற்றன. 11ந் தேதி காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. 

    தொடர்ந்து காலை 8.30 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, புனித நீர் கோபுரகலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
    திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மின்னணு எந்திரங்கள் பயன்படுத்துவது குறித்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில்உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மின்னணு எந்திரங்கள் பயன்படுத்துவது குறித்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.

    மின்னணு எந்திரங்களை வேட்பாளர்கள் முன்னி லையில் அனைத்து வாக்குச் சாவடி மையங்களுக்கும் ஒதுக்குவது சம்பந்தமாகவும்  ஆலோசிக்கப்பட்டது.  செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இது குறித்த விளக்கத்தை வேட்பாளர்கள் முன்னிலையில் செயல் அலுவலர் செய்முறையோடு தெளிவுபடுத்தினார். 

    இந்த நிகழ்ச்சியில் வட்டார தேர்தல் அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வேட்பாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
    சிவகங்கையில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டதை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    சிவகங்கை

    சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிக்கான அலுவலர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட  கலெக்டர் மதுசூதன்ரெட்டி  பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

    பின்னர் அவர் கூறுகையில்,மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிற்கிணங்க, வருகின்ற 19.2.2022 அன்று நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கான வாக்குப் பதிவு நடைபெறு கிறது. அன்றையதினம் வாக்குப்பதிவு மையத்தில் பணி மேற்கொள்ளவுள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தேவையானப் பயிற்சி வழங்கப்படுகிறது.அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளுக்கு 420 வாக்குப்பதிவு மையங்கள் செயல்பட உள்ளன.

    இதற்காக 1,563 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணி மேற்கொள்ள உள்ளார்கள். இவர்களுக்கு கடந்த வாரம் முதற்கட்ட பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 2ம் கட்ட பயிற்சியாக சிவகங்கை நகராட்சி, மானாமதுரை நகராட்சி, இளையான்குடி பேரூராட்சி, திருப்புவனம் பேரூராட்சி, நாட்டரசன்கோட்டை பேரூராட்சி ஆகியப் பகுதிகளுக்கு வாக்குப்பதிவு மையத்தில் பணி மேற்கொள்ளவுள்ள அலுவலர்களுக்கு சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியிலும், காரைக்குடி  நகராட்சி, தேவகோட்டை நகராட்சி மற்றும் கானாடுகாத்தான், கண்டனூர், கோட்டையூர், பள்ளத்தூர், புதுவயல், நெற்குப்பை, திருப்பத்தூர், சிங்கம்புணரி ஆகிய 8 பேரூராட்சிகளுக்கும், வாக்குப்பதிவு மையத்தில் பணி மேற்கொள்ள உள்ள அலுவலர்களுக்கு காரைக்குடி ஆர்.எம்.எஸ்.இராமனாதன் செட்டியார் நகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும் பயற்சி வகுப்பு நடைபெறுகின்றன. 

    இதனைத்தொடர்ந்து, 18.2.2022 அன்று அலுவலர்கள் பணி மேற்கொள்ள உள்ள இடம் குறித்து அறிவித்து, 3ஆம் கட்ட பயிற்சி வழங்கப்படும்.

    இந்த பயிற்சியின் போது, பணி மேற்கொள்ளும் அலுவலர்கள், பணியாளர் கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியின் செயல்பாடு குறித்து பயிற்சி வகுப்பில் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். சந்தேகங்கள் இருந்தால் பயிற்சி வழங்குபவரிடம் முழுமையாக கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். 

    வாக்குப்பதிவு மையத்தில் பணி மேற்கொள்வது என்பது மிக முக்கியமான பணியாகும். அத்தகைப் பணியை சிறப்புடன் முடித்திடும் வகையில் கவனமுடன் செயலாற்றிட வேண்டும். எனவே, ஒவ்வொரு அலுவலரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணித்தன்மைக்கு ஏற்ப, நன்கு தெரிந்து கொண்டு சிறப்புடன் செயல்பட வேண்டும் என்றார். 

    இந்த ஆய்வின்போது, மானாமதுரை நகராட்சி (பொறுப்பு) மற்றும் சமூகப்பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் காமாட்சி, தேர்தல் பணியாளர்களுக்கான பொறுப்பு அலுவலர் வீரராகவன், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தமிழரசன், சுந்தரமகாலிங்கம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    காரைக்குடியில் ரூ.40 கோடி மோசடி புகாரில் பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரைக்குடி:

    காரைக்குடி டி.டி.நகரை சேர்ந்தவர் சோமகணேசன் (35). எம்.பி.ஏ பட்டதாரி. இவர் காரைக்குடி 100 அடி ரோட்டில் ‘கேப் ஸ்டாக்ஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கி பங்குச் சந்தை தரகராக இருந்தார். உறவினர்கள் மற்றும் படித்த நண்பர்களிடம் பங்கு வர்த்தகம், ரியல் எஸ்டேட் என்ற பெயரில் 60-க்கும் மேற்பட்டோரிடம், ரூ 40 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதற்கிடையில் தன்னிடம் வாங்கிய பணத்தை சோம கணேசன் கொடுக்காமல் ஏமாற்றி விட்டார் என காரைக்குடியை சேர்ந்த சரவணன் அளித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    தலைமறைவான சோம கணேசனின் மனைவி வள்ளியம்மை தனது கணவரை காணவில்லை என கூறி மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். நேற்று முன்தினம் சோமகணேசன் நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த சோமகணேசனை மோசடி வழக்கில் காரைக்குடி வடக்கு போலீசார் கைது செய்து காரைக்குடிக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சோம கணேசன் கைது செய்யப்பட்டதை அறிந்ததும் அவரிடம் பணத்தை பறிகொடுத்தவர்கள் காவல் நிலையத்தில் குவிந்தனர். மேலும் பலர் சோம கணேசன் மீது புகார் அளித்து வருகின்றனர். காரைக்குடியில் தொடர்ச்சியாக இதுபோல் நிதி மோசடி புகார்கள் எழுந்து மக்கள் ஏமாந்து வருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×