என் மலர்
சிவகங்கை
- வேலைவாய்ப்பு குறித்து வழிகாட்டி புத்தகத்தை கலெக்டர் வழங்கினார்.
- கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கி தொடங்கி வைத்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அலுவலகளுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.
இதில் கலெக்டர் பேசியதாவது:-
தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவர்களின் வளர்ச்சிக்கு பெற்றோர்களின் பங்கை விட ஆசிரியர்களின் பங்கு முக்கியமானதாக திகழ்கிறது. தமிழகத்தின் சில பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்திற்கு அருகில் போதை தரக்கூடிய சிலவகை பொருட்களை விற்பனை செய்து வருவதாக வரும் தகவல்களின் அடிப்படையில், அதனை முற்றிலும் ஒழிப்பதற்காகவும், இரும்புக்கரம் கொண்டு அடக்கவும் முதலமைச்சர் வருகிற 10-ந் தேதி அனைத்து மாவட்டங்களைச் சார்ந்த கலெக்டர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர்களுடன், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நலனை பாதுகாக்கின்ற வகையிலும், போதையில்லா தமிழகத்தை உருவாக வேண்டும் என்ற நோக்கத்திலும், அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு நடவடிக்கையினை மேற்கொள்ளும் வகையில், கலந்தாய்வுக் கூட்டம் நடக்கிறது.
மாணவர்களிடையே நல்ல எண்ணங்களை வளர்ப்பதற்கும், அவர்களின் கவனத்தை சிதறவிடாமலும், மனதை சோர்வடையாமலும் மற்றும் மன தைரியத்துடன் அனைத்தையும் எளிதில் எதிர்கொள்ளும் வகையில், ஆசிரியர்கள் மாணவர்களை தயார் படுத்த வேண்டும். குறிப்பாக, முதலமைச்சரால் அறிமுகம் செய்யப்பட்ட ''நான் முதல்வன்'' திட்டத்தின் பயன்கள் குறித்தும், அதன்மூலம் எதிர்காலத்தை தாங்களாகவே தேர்ந்தெடுக்கக்கூடிய வழிமுறைகள் தொடர்பாகவும், வாழ்க்கையின் உயர்ந்த நிலையை எட்டுவதற்கும் மாணவர்களிடையே விழிப்புணர்வு கலந்துரையாடல்களையும் ஆசிரியர்கள் மேற்கொண்டு, அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தககங்களை, இந்த கூட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கி தொடங்கி வைத்தார்.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், உதவி ஆணையர் (ஆயம்) கண்ணகி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட கல்வி அலுவலர்கள், அரசு அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த தலைமையாசி–ரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், வட்டார மைய மேற்பார்வையாளர்கள், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- கல்லூரி மாணவர்கள் மத்தியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வந்தது வெட்டவெளிச்சமாகி உள்ளது.
காரைக்குடி
தமிழகத்தில் மது பழக்கத்துக்கு அடுத்து கஞ்சா மற்றும் போதை பொருட்களை இளைஞர்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இந்த பழக்கம் காரணமாக இளைஞர்களின் எதிர்காலம் முற்றிலும் நாசமாகிவிடும் அபாயம் உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ கத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா வியாபாரிகளின் சொத்துக்கள் முடக்கப்படு கிறது. மேலும் குண்டர் சட்டத்தின் கீழும் நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் சமீபகாலமாக கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெறுவதாக புகார்கள் எழுந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்ய தனிப்படை அமைக்க உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி ஆலோசனைபடி தனிப்படை போலீசார் காரைக்குடி பகுதி முழு வதும் கடந்த 3 நாட்களாக தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதில் ஒரு மாணவர் மதுரையில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்தவர் என்பதும், அவர் பாதியில் படிப்பை நிறுத்தி விட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு லட்சம், லட்சமாக சம்பாதித்து வந்ததும் தெரியவந்தது.
பிடிபட்ட 2 கல்லூரி மாணவர்களிடம் இருந்து 1 கிேலா 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். போலீசாரின் விசாரணை யில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வந்தது வெட்டவெளிச்சமாகி உள்ளது.
காரைக்குடி பகுதியில் மட்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 15 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்டட பலர் 22 வயதுக்குட்பட்ட வர்கள். அதில் பெரும்பா லானவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொடர்ந்து தனிப்படை போலீசார் கஞ்சா வியாபாரிகளை கண்காணித்து நடவடிக்ைக எடுத்து வருகின்றனர். இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
- தேசிய தரவு தளத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
- வங்கி கணக்கு புத்தகம் போன்ற விவரங்கள் இருக்க வேண்டும்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது-
இந்திய அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களின் விவரங்களை ஒருங்கி ணைக்க உச்சநீதிமன்ற உத்தரவின்படி 'அமைப்பு சாரா தொழிலாளர்களின் தேசிய தரவு தளம்"
(National Data Base for UnorganizedWorkers - eSuRAM - NDUW) என்ற ஒரு தரவுதளத்தை உருவாக்கி உள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் பணியாளர்கள், சிறு, குறு விவசாயிகள், விவசாயக்கூலிகள். குத்தகைதாரர்கள், மகளிர்குழு உறுப்பினர்கள், தேசிய ஊரக வளர்ச்சி திட்டப் பணியாளர்கள், கேபிள் டிவி ஆபரேட்டர்கள், லேபிள் மற்றும் பேக்கிங் செய்வோர், கட்டுமான தொழிலாளர்கள், தச்சு வேலை செய்வோர், டீக்கடை ஊழியர்கள். கல்குவாரி தொழிலாளர்கள், உள்ளுர்கூலி தொழிலா ளர்கள், மர ஆலை தொழிலாளர்கள், முடி திருத்துவோர், காய்கறி மற்றும் பழ வியாபாரிகள். செய்தித்தாள் போடுப வர்கள்.
ஆட்டோ டிரைவர்கள். பட்டுவளர்ப்பு தொழிலா ளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், துப்புரவுப் பணியாளர்கள், நடைபாதை வியாபாரிகள், பால் ஊற்றும் பணியாளர்கள், நெசவாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் போன்ற 379 வகையான அமைப்புசாரா தொழிலாளர்கள் விவ ரங்களை அனைத்து பொது சேவை மையங்களிலும் மற்றும் அனைத்து இ-சேவை மையங்களிலும் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இத்தரவு தளத்தில் தொழிலாளர்கள் தங்களை பதிவு செய்து கொள்ள வயது 16 முதல் 59-க்குள் இருக்க வேண்டும். எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. பதிவேற்றம் செய்வதற்கு ஆதார்அட்டை, ஆதாரில் இணைக்கப்பட்ட மொபைல் எண் மூலம் அல்லது கைரேகை மூலம் பதிவு செய்து கொள்ளலாம். வங்கி கணக்கு புத்தகம் போன்ற விவரங்கள் இருக்க வேண்டும்.உச்சநீதிமன்ற உத்தரவின்படி இந்திய அரசால் உருவாக்கப்படும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான இத்தேசிய தரவுதளத்தில் (eSuRAM Portal) அனைவரும் பதிவு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காரைக்குடியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- தற்போதைய மத்திய அரசு மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளது.
காரைக்குடி
காரைக்குடி 5 விளக்கு அருகில் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அத்தியாவசிய பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி முன்னிலை வகித்தார். அவர் பேசுகையில், இந்திய மக்கள் கொரோனா பேரிடர் கால துயரத்தை தாங்கி வலியோடு வாழ்ந்து வரும் காலத்தில் மத்திய அரசு பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை உயர்த்தியது.தற்போது அதற்கும்மேலாக அரிசி, பருப்பு, எண்ணெய், பால், தயிர், பென்சில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் மீது ஜி.எஸ்.டி. வரியை விதித்துள்ளது.
ஏழை, எளிய மக்களின் மீது வரிச்சுமைகளை விதித்து விட்டு பெரு முத லாளிகளுக்கு மானியம், வரிவிலக்கு அளிக்கிறது. காங்கிரஸ் ஆட்சியின்போது மன்மோகன்சிங், ப.சிதம்பரம் ஆகியோர் உலகமே பொருளாதார நெருக்கடி யில் சிக்கியபோதும் விலை வாசியை கட்டுக்குள் வைத்து பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்தி மக்கள் நலனை பாதுகாத்தனர்.
தற்போதைய மத்திய அரசு மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளது. மக்களை வதைக்கும் விலைவாசி உயர்வை திரும்ப பெற வேண்டும்.அத்தியாவசிய பொருட்களின் ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும் என்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம், முன்னாள் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் பழனியப்பன், மாவட்ட கவுன்சிலர் கோவிலூர் அழகப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ், நகர செயலாளர் குமரேசன், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி இமய மடோனா, கவுன்சிலர்கள் அமுதா, ரத்தினம், அஞ்சலி தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர தலைவர் பாண்டி நன்றி கூறினார்.
- மதுரை வீரன் கோவில் கிடா வெட்டு திருவிழா நடந்தது.
- இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் கல்வெட்டு மேடு பகுதியில் நரிக்குறவர் காலனியில் உள்ள காளியம்மன், மீனாட்சி அம்மன், மதுரை வீரன் கோவிலில் கிடாய் வெட்டு திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழா 5 ஆண்டுகள் அல்லது 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக கிடா வெட்டு திருவிழா நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் மீண்டும் 5 ஆண்டுகள் கழித்து கிடாய் வெட்டு திருவிழா நடைபெற்றது.இதில் நரிக்குறவர் சமுதாய மக்கள் திரளாக கலந்து கொண்டு கொண்டாடினர்.
முன்னதாக திருப்புத்தூர் அண்ணா சிலை விநாயகர் கோவிலில் இருந்து அழகு குத்தி, பால்குடம், கரகம், பறவை காவடி, வேல் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடி எடுத்து ஊர்வலமாக சிவகங்கை ரோடு, கல்வெட்டு மேடு, இந்திராநகர் வழியாக நரிக்குறவர் காலனிக்கு வந்தனர்.
அங்கு அமைத்துள்ள அவர்களது குலதெய்வ கோவில் மற்றும் வீடுகளில் அபிஷேகங்கள் ஆராதனைகள் செய்து, சிறப்பு வழிபாடு நடத்தி தெய்வங்களை வணங்கினர்.
அதனைத் தொடர்ந்து காளியம்மனுக்கு 7 எருமை மாடுகளும், மீனாட்சி- முனீஸ்வரன் கோவிலுக்கு ஆட்டுகிடாய்களும் பலியி ட்டு வழிபட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை:
சிவகங்கை அருகே பெருமாள்பட்டி விலக்கில் சிலிண்டர் ஏற்றி வந்த லாரியின் மீது, பள்ளி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. பேருந்தில் இருந்த 10 குழந்தைகள் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
விபத்தில் சிக்கிய பள்ளி பேருந்தின் இன்சூரன்ஸ் மற்றும் எப்.சி. காலாவதியாகி 2 வருடம் ஆகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. லைசென்ஸ் காலாவதியான பேருந்தை இயக்குவதற்கு எப்படி அனுமதி அளித்தார்கள்? என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
- ஆவாரங்காடு கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கச்சநத்தம் கிராமத்திற்குள் புகுந்து பயங்கர ஆயுதங்களுடன் வீடுகளை சூறையாடினார்கள்.
- இதை தடுக்க வந்த அந்த கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (வயது65), சண்முகநாதன் (31), சந்திரசேகர் (34) ஆகியோர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள கச்சநத்தம்-ஆவாரங்காடு கிராம பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் கோவில் திருவிழா நடந்தது. அப்போது முதல் மரியாதை அளிப்பது தொடர்பாக இரு சமுதாயத்தினருக்கும் மோதல் ஏற்பட்டது.
இது தொடர்பாக அப்போது பழையனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆவாரங்காடு கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரவு 10 மணி அளவில் கச்சநத்தம் கிராமத்திற்குள் புகுந்து பயங்கர ஆயுதங்களுடன் வீடுகளை சூறையாடினார்கள்.
இதை தடுக்க வந்த அந்த கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (வயது65), சண்முகநாதன் (31), சந்திரசேகர் (34) ஆகியோர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த கொலை தொடர்பாக ஆவாரங்காடு கிராமத்தை சேர்ந்த சுமன், அருண்குமார், சந்திரகுமார், அக்னிராஜ், ராஜேஷ் உள்ளிட்ட 33 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் 3 பேர் சிறுவர்கள் ஆவார்கள். வழக்கு விசாரணையின்போது 2 பேர் இறந்து விட்டனர். ஒருவர் தலைமறைவாகி விட்டார். இதனால் மற்ற 27 பேர் மீது சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வன்கொடுமை சிறப்பு கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது.
கடந்த 4 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடந்தது. இருதரப்பினரிடமும் விசாரணை முடிந்த நிலையில் கடந்த 1-ந்தேதி நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்தார். அப்போது 3 கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 27 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். தண்டனை விவரம் நேற்று முன்தினம் (3-ந்தேதி) அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
அன்றைய நாள் குற்றவாளிகள் 27 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் நீதிபதி காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தினார். கொலை செய்யப்பட்ட 3 பேரின் உறவினர்களும் நீதிபதி தீர்ப்பு குறித்து கருத்துக்களை கேட்டார். அதனை தொடர்ந்து இன்று (5-ந்தேதி) தீர்ப்பின் முழு விவரம் அறிவிக்கப்படும் என நீதிபதி முத்துக்குமரன் அறிவித்தார்.
இதையொட்டி இன்று சிவகங்கை வன்கொடுமை தடுப்பு கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வழக்கின் தீர்ப்பின் விவரம் அறிய கச்சநத்தம் கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர். தொடர்ந்து 11.45 மணி அளவில் நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பின் விவரங்களை வாசித்தார்.
அதில், 2018-ம் ஆண்டு கச்சநத்தம் கோவில் திருவிழா முன்விரோதத்தில் ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய 3 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாக தெரிவித்தார்.
- திட்ட பணிகளுக்கு பூமிபூஜை நடந்தது.
- இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த் தலைமை தாங்கினார்.
சிவகங்கை
சிவகங்கை நகராட்சியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகங்கை நகர் 26-வது வார்டு சோனையகோயில் எதிர்ப்புறம் உள்ள சாலையில் பேவர் பிளாக் அமைக்கும் பணி, பஸ் நிலையம் எதிர்புறத்தில் நவீன கட்டண கழிப்பறை அமைக்கும் பணி, ஆஞ்சநேயர் கோவில் செட்ஊரணி கரையை சுற்றி பேவர் பிளாக் அமைக்கும் பணி ஆகியவற்றுக்கு பூமி பூஜை நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த் தலைமை தாங்கினார்.
துணை தலைவர் கார்கண்ணன், நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், பொறியாளர் பாண்டீஸ்வரி, நகரமைப்பு அலுவலர், நகர் மன்ற உறுப்பினர்கள் அயூப்கான், கார்த்திகேயன், சரவணன், ராமதாஸ், விஜயக்குமார், சண்முகராஜன், மகேஷ், விஜயக்குமார், வீரகாளை மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
- திருப்பத்தூர் அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த ரேசன் அரிசி, உளுந்து பறிமுதல் செய்யப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவகங்கை
தமிழக அரசின் சார்பில் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையான உணவு தேவைக்கு இலவசமாக அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
இதனை பிற இடங்களில் கூடுதலாக விற்பனை செய்வதற்காக அல்லது தேவைக்காக கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் பல்வேறு நிலைகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட கீழச்செவல்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் கிட்டங்கியில் அரசின் குடிமைப் பொருட்களான அரிசி 50 கிலோ சிப்பமாக 73 மூட்டைகளும், 40 கிலோ சிப்பமாக 6 மூட்டை உளுந்து என 3 ஆயிரத்து 890 கிலோ அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவர்கள் அந்த தனியார் குடோனில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, மேற்கண்ட குடிமைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. குேடானில் பணியாற்றிய சுப்பிரமணியன், சுரேஷ்குமார், கிட்டங்கி உரிமையாளார் மாரிமுத்து ஆகியோர் மீது குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கிரிக்கெட் அணிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
- அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
காரைக்குடி
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 16 வயதுக்குட்பட்டோருக்கான மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி இன்று (4-ம் தேதி) முதல் வருகிற (7ம் தேதி) வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் நடக்கிறது.
இதற்கான சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் அணியில் விளையாட அணித்தேர்வு அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் செல்லப்பன் வித்யா மந்திர் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் 10-ம் வகுப்பைச் சேர்ந்த ஏ.கனிஷ்கர், எஸ்.கே.கவுதம் பாலாஜி, 8-ம் வகுப்பை சேர்ந்த டி.நவீன் ராகவன், சி.சித்தார்த், எஸ்.கைலாஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வான மாணவர்களையும் மற்றும் பள்ளியின் கிரிக்கெட் பயிற்சியாளர் ராகவனையும், பள்ளித் தாளாளர் சத்யன், பள்ளி நிர்வாக இயக்குனர் சங்கீதா சத்யன், பள்ளியின் கல்வி இயக்குனர் ராஜேஸ்வரி, பள்ளி முதல்வர் ராணிபோஜன் மற்றும் தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.
- ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகங்கை அருகே விவசாயிகள் பாரம்பரியமிக்க நெல் விதைத்தனர்.
- நேரடி விதை நடவு என்பதால் நாற்றுச்செலவு, கூடுதல் உரச்செலவுகள் இலருக்காது என விவசாயி ஒருவர் கூறினார்.
சிவகங்கை
ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகங்கை மேலக்காடு பகுதியில் உள்ள மீனாட்சி இயற்கை வேளாண் பண்ணையில் பாரம்பரிய நெல் ரகமான கருப்பு கவுனி விதை நடவு செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் கண்டுப்பட்டி மேலக்காடு பகுதியில் உள்ள மீனாட்சி இயற்கை வேளாண் பண்ணையில் இறைவழிபாட்டுடன் கருப்பு கவுனி நெல் விதை நடவு செய்யப்பட்டது.
இதுகுறித்து இயற்கை விவசாயி பாலகார்த்திகேயன் கூறியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை மற்றும் உணவுத்தேவைகளின் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட வேளாண் அதிகாரிகளின் ஆலோசனைகளோடு பல்வேறு விதமான பயிர் வகைகளை விவசாயம் செய்து வருகின்றோம்.
ஆடிப்பெருக்கன்று நமது பாரம்பரிய நெல் ரகமான கருப்பு கவுனி விதை நடவு செய்துள்ளோம். பொதுவாக ஒரு ஏக்கருக்கு 6 கிலோ விதை நெல் தேவைப்படும். மற்ற நெல் ரகங்களுக்கு மத்தியில் கருப்பு கவுனி நெல்விதை 3 கிலோ போதுமானதாகும்.
அதிக மழைப்பொழிவை யும், குறைந்த நீர்ப்பிடி ப்பினையும் தாங்கி வளரக்கூடிய நெல்ரகம் இதுவாகும். நேரடி விதை நடவு என்பதால் நாற்றுச்செலவு, களை அகற்ற, கூடுதல் உரச்செ லவுகள் இல்லாத எளிய விவசாயத்தில் அதிக விளைச்சலை தருகின்றது. இயற்கை முறையில் விளைவிக்க கூடிய இந்த ரகம் நார்ச்சத்துக்களும், ஆன்டி ஆக்ஸிடன்ட் சத்துகளும் கூடுதலாக இருப்பதால் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் சத்தான உணவுப்பொருளாக பயன்படுகிறது.
இந்த நெல் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதிக உயரத்தில் நெற்கதிர்கள் வளரும் தன்மையுடைய ரகமாக இது இருப்பதால் நமது கால்நடைகளுக்கான தீவனச்செலவினையும் கட்டுப்படுத்த உதவுகின்றது.
நமது முன்னோர் பயன்படுத்திய பாரம்பரிய விவசாய முறைகளையும் பயிர்களையும் மறந்து விடாமல் வருகின்ற தலை முறைகளுக்கு எடுத்து செல்ல வேண்டியது எங்கள் விவசாயப்பண்ணையின் நோக்கமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிவகங்கை மாவட்டத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்தக்கோரி மனு அளிக்கப்பட்டது.
- வடமாடு நல சங்கம் சார்பில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கொடுத்தனர்.
சிவகங்கை
வாடிவாசல் மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை ஜனவரி முதல் மே மாதம் வரை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கி ஆணையிட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக கோவில் திருவிழா மற்றும் விவசாய பணிகள் காரணமாக வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகள் நடந்தன. சிவகங்கை மாவட்ட கலெக்டர் மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு போட்டிகள் மே மாதத்திற்கு பிறகு நடத்த அனுமதி இல்லை என்று அறிவித்தார். மீறி மஞ்சு விரட்டு நடைபெற்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு வடமாடு நல சங்கம் சார்பில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மதுசூதன் ரெட்டியை சந்தித்து மஞ்சுவிரட்டு போட்டிகள் நடத்த கால நீட்டிப்பு வழங்க கோரி மனு கொடுத்தனர்.
பின்னர் கவுரவ தலைவர் பனங்குடி சேவியர் கூறுகையில், வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என்றால் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.
மாநில தலைவர் அந்தோணி, துணைத்தலைவர் பரத்ராஜ் மற்றும் 200-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






