என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • சக்திவேல் வீட்டிற்கு வந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
    • சிவகங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை கல்லூரி சாலையில் வசித்து வருபவர் சக்திவேல். கூலித்தொழிலாளி. இவரது மனைவி நம்பீஸ்வரி. கணவன்-மனைவிக்கு இடையே குடும்பப் பிரச்சினை காரணமாக தகராறு இருந்தது.

    நேற்று இரவு சக்திவேல் வீட்டிற்கு வந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சக்திவேல் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து நம்பீஸ்வரியை வெட்டினார். இதில் அவரது கை துண்டானது.

    உடனடியாக சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நம்பீஸ்வரி முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து சிவகங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.

    • பாண்டி முனியய்யா கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்.
    • அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பால் மற்றும் திருநீர் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே காட்டாம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட சவுமிய நாராயண புரம்-சிவகங்கை சாலையில் பாண்டி முனியய்யா கோவில் உள்ளது. இங்கு 18-ம் ஆண்டு கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.

    விழாவில் காட்டாம்பூர், தேவரம்பூர், சவுமிய நாராய ணபுரம், கல்லுவெட்டுமேடு, குறிஞ்சி நகர், இந்திரா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராள மானோர் ஆடி 1-ந் தேதி முதல் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்ற பால்குட விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கல்லுவெட்டுமேடு செல்வ விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து முக்கிய வீதியில் வழியாக பாண்டிமுனியய்யா கோவில் வந்து சேர்ந்தனர்.

    பின்பு ஆலமரத்திற்கும், வேலுக்கும் அபிஷேகம் செய்து தீபாரதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து பக்தர்க ளுக்கு பால் மற்றும் திருநீர் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    மாலை பூத்தட்டு விழாவும் விமரிசையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தலையில் பூத்தட்டு சுமந்து வந்து பாண்டி முனியய்யா கோவிலில் பூச்சொரிதல் நடத்தினர்.

    பின்பு கோவில் வாசலில் பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட ஆட்டு கிடா வெட்டி அன்னதானம் நடந்தது.

    விழா ஏற்பாடுகளை பாண்டி முனியய்யா கோவில் விழா குழுவினர் செய்திருந்தனர்

    • முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • இதனை சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் தொடங்கிவைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மன்னர் துரை சிங்கம் அரசு கலைக்கல்லூரியில் 1994-97-ம் ஆண்டில் வனிகவியல்துறையில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது. 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கல்லூரி வளாகத்தில் 300 மரக்கன்றுகளை நட்டனர். இதனை சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் தொடங்கிவைத்தார்.

    முன்னாள் மாணவர்கள் பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டதுடன் பேராசிரியர்களின் கல்லூரிக்கு தேவையான கோரிக்கைகளை நிறைவேற்றவும் உறுதி அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் பி.ஜி. குரூப் ஆப் சிங்கப்பூர், ஜே.பி.குரூப் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் பாலமுருகன், ஆசிரியர் பாண்டியராஜன், நடேஷ், ராமசந்திரன், ராஜசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • போதை பொருள் பயன்படுத்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு வார நிகழ்ச்சி நடந்தது.
    • விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்படும் நிறுவ–னங்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் போதை பொருள் பயன்படுத்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு வாரம் தொடர்பான முன்னோடி கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தினை போதை இல்லாத தமிழகமாக உருவாக்கிடவும், போதை பொருள் பயன்படுத்தும் பழக்கத்தில் இருந்து தமிழக இளைஞர்களை பாதுகாத்திடவும், போதை பொருள் பயன்படுத்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

    அதன் அடிப்படையில் நாளை (10-ந் தேதி) முதல் 17-ந் தேதி வரை போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்பட உள்ளது.

    முதலமைச்சர் நாளை மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகள் நேரலையாக பார்வையிடும் வகையில் விழிப்புணர்வு உரை நிகழ்த்த உள்ளார்.

    அதனைத் தொடர்ந்து 11-ந் தேதி அனைத்து கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்கும் போதை பொருள் தொடர்பான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறும். 12-ந் தேதி சிவகங்கை மன்னர் துரை சிங்கம் அரசு கலைக்கல்லூரியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு நிகழ்ச்சியும், 14-ந் தேதி காரைக்குடியில் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியும் நடத்தப்பட உள்ளன.

    விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்படும் நிறுவ–னங்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இளைஞர்களை நல்வழிப்படுத்தி சீரான வழியில் கொண்டு சென்று நல்ல சமுதாயத்தை உருவாக்குவதில் அனைவரின் பங்கும் உள்ளது. எனவே, அனைவரும் ஒன்றிணைந்து போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் உதவி ஆணையாளர் (கலால்) கண்ணகி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ராம்கணேஷ், நேரு இளைஞர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் பிரவின் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • வீடுகள்தோறும் தேசிய கொடி ஏற்ற பெற்றோர்களுக்கு மாணவர்கள் கடிதம் எழுதினர்.
    • இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.

    மானாமதுரை

    வருகிற 15-ந் தேதி நாடு முழுவதும் 75-வது ஆண்டு சுதந்திர தின விழா நடைபெற உள்ளது. இதனை சிறப்பாக கொண்டாட பிரதமர் மோடி மன்கிபாத் உரையில் நாடு முழுவதும் வீடுகள் தோறும் வருகிற 13,14,15 ஆகிய 3 நாட்கள் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

    அதனை தமிழக அரசு செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது.இந்த விசயத்தை மாணவர்கள் மூலமாக பெற்றோருக்கு கொண்டு செல்ல கல்வித்துறை ஏற்பாடு செய்து வருகிறது.

    அதன்படி சிவகங்கை மாவட்டம் மானா மதுரை வட்டாரம் தெ.புதுக்கோட்டை அரசு நிதியுதவி பெறும் எம்.கே.என். நடுநிலைப்பள்ளி செயலாளர் அன்பழகன், தலைமை ஆசிரியர் சிவகுருநாதன் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து மாணவர்கள் மூலமாக பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்து கடிதம் எழுதும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர்.

    அதன்படி மாணவர்கள் அனைவருக்கும் அஞ்சல் அட்டை இலவசமாக வழங்க பட்டது. மாணவர்கள் பெற்றோர்களுக்கு பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளை தெரிவித்து வருகிற 13,14,15 ஆகிய 3 நாட்களும் நமது வீட்டில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதினர். பின்னர் அதில் பெற்றோர் முகவரி எழுதி அஞ்சல் நிலையத்தில் கொடுத்தனர்.

    மாணவர்களிடையே கடிதம் எழுதுவதை ஊக்குவிக்கும் வகையிலும், பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலும் இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.

    • ஒவ்வொரு ஆண்டும் மொகரம் அன்று அவர்கள் பாத்திமா நாச்சியாரை நினைவுகூரும் வகையில் விழா கொண்டாடுவது வழக்கம்.
    • திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று அதிகாலை மொகரம் பண்டிகை கொண்டப்பட்டது.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முதுவன் திடல் கிராமத்தில் மொகரம் பண்டிகையைக் இந்துக்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    முதுவன் திடல் கிராமத்தில் பல்லாண்டுகளுக்கு முன்பு முஸ்லிம்கள் அதிகளவில் வசித்தனர். அப்போது பாத்திமா நாச்சியார் என்ற பெண் அங்கு வாழ்ந்து வந்தாகவும், அவர் இறந்த பின் முதுவன் திடல் கிராமத்தின் மையப் பகுதியில் தர்கா, பள்ளிவாசல் அமைத்து அவரை அந்த கிராம மக்கள், முஸ்லிம்கள் தெய்வமாக வழிபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த கிராமத்தில் தற்போது இந்துக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மொகரம் அன்று அவர்கள் பாத்திமா நாச்சியாரை நினைவுகூரும் வகையில் விழா கொண்டாடுவது வழக்கம். இந்த திருவிழாவின்போது திருமணம், குழந்தை வரம் போன்றவற்றுக்காக நேர்த்திக்கடன் செலுத்துவதும், நேர்த்திக்கடன் தீர்க்க நினைப்பவை நடப்பதாகவும் கிராம மக்கள் நம்புகின்றனர்.

    இந்த ஆண்டு மொஹரம் பண்டிகையையொட்டி முதுவன் திடல் கிராமத்தில் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும், 7-வது நாள் தர்காவில் சப்பர பவனியும் நடந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று அதிகாலை மொகரம் பண்டிகை கொண்டப்பட்டது.

    இதையொட்டி பூக்குழி அமைக்கப்பட்டது. கிராம மக்கள் ஊர்வலமாக வந்து அதிகாலை 4.20 மணிக்கு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனையடுத்து பூ மொழுகுதல் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் நேர்த்திக்கடன் செலுத்தும் பெண்கள் தலையை சேலையால் மூடியபடி பூக்குழி முன்பு அமர்ந்து இருப்பார்கள். தலையை ஈரத்துணியால் போர்த்தி, அதற்குமேல் 3 முறை தீ கங்குகளை எடுத்துப் போடுவார்கள்.

    திருவிழாவின் இறுதியாக அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தை பொதுமக்கள் மேளதாளத்துடன் கிராம எல்லை வரை தூக்கிச் சென்று மீண்டும் தர்காவிற்கு கொண்டு வந்து சேர்த்துவிடுவார்கள். இன்று நடந்த பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியைக் காண திரளான பொது மக்கள் கூடி இருந்தனர்.

    • கருணாநிதி படத்திற்கு தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.
    • நகர்மன்ற தலைவரும், சிவகங்கை நகர செயலாளருமான சி.எம். துரைஆனந்த் தலைமை தாங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கையில் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவுநாளையொட்டி அண்ணா சிலை முன்பு கருணாநிதியின் படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகர்மன்ற தலைவரும், சிவகங்கை நகர செயலாளருமான சி.எம். துரைஆனந்த் தலைமை தாங்கினார்.

    மாவட்ட துணை செயலாளர் மணிமுத்து, தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தனர். இதில் நகர் மன்ற துணைத்தலைவர் கார்கண்னண்,கவுன்சிலர்கள் ராமதாஸ், விஜயக்குமார், ஆறு சரவணன், கார்த்திகேயன், சி.எல். சரவணன், மதியழகன், ஜெயகாந்தன், ராமநாதன், வீரகாளை, நிர்வாகிகள் வைரமணி, வக்கீல் ராஜஅமுதன், மகேந்திரன், கண்மணி, முத்து மணி, கார்த்திக், பாஸ்கரன், மீனாட்சி தனசேகர், ஆனந்த், திருநாவுக்கரசர், தமிழரசன், ஆர்.டி.சேகர், சேது, சேகர், அதியமான், தேவஸ்தானம் முருகேசன், மதி, சுக்ரா சரவணன், மணி, ராஜேந்திரன், கதிர் காமநாதன், மனோ, முனியராஜ், தமறாக்கி ஆறுமுகம், அழகுராஜா, கிரி, மகளிரணி மஞ்சுளா, தெற்கு ஒன்றிய இளைஞரணி தங்கசெல்வம், தொழில்நுட்ப பிரிவு வேங்கை பிரபாகரன், பூமிராஜ், தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சிங்கம்புணரி தேர்வுநிலை பேரூராட்சியில் இணையதள செயலிழப்பால் பணிகள் பாதிப்படைந்தனர்.
    • இணையதள சர்வர் சரிவர இயங்காததால் பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தேர்வுநிலை பேரூராட்சியில் சில தினங்களாக வரைபடப் பிரிவு, பிறப்பு-இறப்பு சான்றிதழ் பிரிவு, வரி வசூல் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் இணையதள சர்வர் சரிவர இயங்காததால் பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது.

    இதனால் பிறப்பு-இறப்பு சான்றிதழ் கேட்டு மனு செய்தவர்கள், வீடு கட்டுவதற்காக வரைபட அனுமதி கேட்டு காத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாடு தாராளமாக பொதுமக்களிடம் புழங்கி வருவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்தனர். பொதுமக்களின் தேவைகளை அறிந்து உடனடி தீர்வு காண வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • சிங்கம்புணரி அருகே திருவிளக்கு பூஜை நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை அம்பலகாரர் பார்த்திபன் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள காளாப்பூரில் வடக்கு வாசல் செல்வி அம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது.

    சிவகங்கை சமஸ்தானத்திற்குட்பட்ட இந்த கோவிலில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பூஜை செய்தனர். விவசாயம் செழிக்க வேண்டியும், நோய் நொடி இல்லாத வாழ்க்கை நிலைக்க கோரியும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், விநாயகர் மந்திரம், லலிதா சகஸ்ரநாமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று மகா தீப ஆரத்தியுடன் நிறைவு பெற்றது. இதில் ஏராளமான பெண்கள் குத்து விளக்கிற்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை அம்பலகாரர் பார்த்திபன் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.

    • முன்னாள் ராணுவத்தினர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
    • மனுவினை நேரடியாக வழங்கி தீர்வு பெறலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர்கள், படைப்பணியாற்றுவோர் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சிமன்ற கூடத்தில் வருகிற 17-ந் தேதி (புதன்கிழமை) மாலை 3.30 மணிக்கு கலெக்டர் தலைைமயில் நடக்கிறது.

    இதில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர், படைவீரர்களை சார்ந்தோர் வருகை புரிந்து குறைகளை இரட்டைப்பிரதிகளில் மனுவினை நேரடியாக வழங்கி தீர்வு பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கார் மோதி பைக்கில் சென்றவர் பலியானார்.
    • இதில் சுப்பிரமணியனுக்கு தலையில் பலத்த காயமும் மனைவி மணிமேகலைக்கு கால் முறிவும் ஏற்ப–ட்டது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சி அருகே பரியாமருதுபட்டி என்ற இடத்தில் பொன்னமராவதி-திருப்பத்தூர் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒலுகமங்கலம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது45) அவரது மனைவி மணிமேகலை (40) ஆகியோர் பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது எதிர் திசையில் சக்திவேல் என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதியது. இதில் கணவன்-மனைவி தூக்கி வீசப்பட்டனர். இதில் சுப்பிரமணியனுக்கு தலையில் பலத்த காயமும் மனைவி மணிமேகலைக்கு கால் முறிவும் ஏற்ப–ட்டது.

    அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்சில் பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.மேலும் மனைவி மணிமேகலை மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இந்த விபத்து குறித்து நெற்குப்பை காவல்நிலைய ஆய்வாளர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • தேசிய வருவாய் வழி திறன் பயிற்சி நடந்தது.
    • சமூகஅறிவியல் ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் நன்றி கூறினார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள புளியால் அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் பயிற்சி நடந்தது.

    ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஒருங்கிணைப்பாளர் பீட்டர் லெமாயு தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் லட்சுமிதேவி, மேற்பார்வையாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் நாகேந்திரன் வரவேற்றார். முதன்மை கருத்தாளராக ராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர் மோகன் கலந்து கொண்டு திறன் பயிற்சி அளித்தார். ஒருங்கிணைப்பாளராக ஆசிரியர் ராஜ்குமார், செல்வம் செயல்பட்டனர். பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் ஜோசப், முன்னாள் மாணவர் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஊரக திரனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள், சஜன், ஹரிஹரன் ஆகியோர் பாராட்டப்பட்டனர். சமூகஅறிவியல் ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் நன்றி கூறினார்.

    ×