என் மலர்
சிவகங்கை
- கூட்டுறவு துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
- சாலை பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சின்னப்பன் வாழ்த்தி பேசினார்.
சிவகங்கை
தமிழ்நாடு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாவட்ட பேரவைக் கூட்டம் சிவகங்கையில் நடந்தது. சங்க கொடியை நிர்வாகி கவிதா ஏற்றி வைத்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாண்டி கூட்டத்தை தொடங்கி வைத்தார். மாநில செயலாளர் வினோத்ராஜா தலைமையில் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. சாலை பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சின்னப்பன் வாழ்த்தி பேசினார்.
அரசு ஊழியர்கள் சங்க வட்ட கிளை தலைவர் முத்தையா நிறைவுரையாற்றினார். கூட்டத்தில் புதிய மாவட்ட தலைவராக ஜெயபிரகாஷ், துணைத்த லைவர்களாக மூகாம்பிகை, லாரன்ஸ், மாவட்ட செயலாளராக கிங்ஸ்டன் டேவிட், மாவட்ட இணைச்செ யலாளர்களாக பாண்டி, நிரஞ்சனா, மாவட்ட பொருளாளராக பொன்னையா, மாநில செயற்குழு உறுப்பினராக குறிஞ்சி செழியன், மாவட்ட தணிக்கையாளராக சேக் அப்துல்லா, மாவட்ட மகளிர் துணை குழு அமைப்பாளராக அனிதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
- காளையார்கோவில் அருகே 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.
- ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள சிரமம் கிராமத்தில் பழமையான கொங்கேஸ்வரர் (சிவன்) கோவில் உள்ளது. இங்குள்ள ஏழுமுக காளியம்மன் சன்னதியில் ஆண்டுதோறும் ஆடி மாத பவுர்ணமி அன்று உலக நன்மை வேண்டி 1008 திருவிளக்கு பூஜை நடைபெறும். இந்த ஆண்டு ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இந்த ஆண்டு நாடு தனது 75-வது சுதந்திர தின பவள விழாவை கொண்டாட உள்ள நிலையில் சாதி, மதம் கடந்து அனைத்து தரப்பு மக்களும் நல்லுறவை பேணி வாழவும் உலக நண்மை வேண்டியும் இந்த திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
- சிங்கம்புணரி அருகே சித்த மருத்துவ முகாம் நடந்தது.
- முகாமிற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் எழில்மாறன் உள்ளிட்ட குழுவினர் செய்தனர்.
சிங்கம்புணரி
சிங்கம்புணரி வட்டாரம் செல்லியம்பட்டி கிராமத்தில் இந்திய மருத்துவத்துறை மற்றும் ஓமியோபதி துறை, பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் 250 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். முகாமில் சித்த மருந்துகள் வழங்கப்பட்டதுடன் மூலிகை கண்காட்சி, வர்ம சிகிச்சை மாணவர்களுக்கான யோகா பயிற்சியும் அளிக்கப்பட்டது.
இம்முகாமை ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் சின்னையா, தலைமை ஆசிரியர் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதலமைச்சரின் விரிவான மக்களைத் தேடி மருத்துவ திட்டம் மூலமாக 200 பேருக்கு சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் இயன்முறை மருத்துவம் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் சித்தமருத்துவர் சரவணன் மற்றும் ரஹிமா பானு ஆகியோர் சிகிச்சை அளித்தனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் எழில்மாறன் உள்ளிட்ட குழுவினர் செய்தனர்.
- மானாமதுரை அருகே முளைப்பாரி திருவிழா நடந்தது.
- இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பெரிய கோட்டை அருகே உள்ள தெக்கூரில் உலகுடைய அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் ஆடி மாதம் முளைப்பாரி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஏராளமான பெண்கள் மற்றும் சிறுமிகள் முளைப்பாரிகளை வளர்க்க தொடங்கினர்.
தினந்தோறும் இரவு தெக்கூரில் உள்ள முளைக்கொட்டு திண்ணையில், பாரம்பரிய முறைப்படி பெண்கள் மற்றும் சிறுமிகள் கும்மிபாட்டு பாடி ஆடியபடியும், சிறுவர்கள் சிலம்பாட்டம் ஆடியும், கும்மி கொட்டி அம்மனை வழிபட்டனர்.
மழை பெய்து, விவசாயம் செழிக்கவும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறவும், கிராம மக்கள் ஒற்றுமையுடன் வாழவும் இந்த திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று மாலை முளைப்பாரிகளை பெண்கள் மற்றும் சிறுமிகள் புத்தாடைகள், நகைகள் அணிந்து ஊர்வலமாக சுமந்து கொண்டு கைலாசநாதர் கோமதி அம்மன், உலகுடைய அம்மன் கோவில்களில் இறக்கி வைத்து வழிபாடு செய்த பின்னர் அருகில் உள்ள உப்பாற்றில் சென்று கரைத்தனர்.
- போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரித்த 3 பேர் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் கைது செய்து நீதிமன்றம் மூலம் சிறையில் அடைத்தனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே இடையன்வயல் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் மகன் காளிமுத்து (வயது 39). இவர் வேலாயுதபட்டினம் காவல் நிலையத்தில் தனது தந்பெதையரில் உள்ள நிலத்தை போலி ஆவணங்களை தயார் செய்து பத்திர பதிவு செய்துள்ளனர் என்று புகார் செய்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ்குமார் உத்தரவின்பேரில் தாலுகா ஆய்வாளர் சுப்பிரமணியன், சார்பு ஆய்வாளர்கள் மருது, முத்துபாலு, ராமசந்திரன், காவலர்கள் இளங்கோ, செந்தாமரைக் கண்ணன் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இதில் ஆறாவயல் பெரியசாமி மகன் ராமநாதன் (32), அச்சணி பெரியசாமி மகன் கருப்பையா (65), ஊரணிக்கோட்டை பனங்குளம் வெங்கடாசலம், இடத்தை வாங்கிய காரைக்குடி அருகே உள்ள புதுவயல் பீர் முகமது மகன் நயினா முகமது, பத்திர எழுத்தாளர் அலுவலகத்தில் பணிபுரியும் மாதவன் மனைவி புவனேசுவரி, கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் கல்லல் இந்திர நகரைச் சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோர் காளிமுத்து அப்பா வெங்கடாசலம் பெயரில் உள்ள 5 ஏக்கர், 22 செண்டு நிலத்துக்கு போலி ஆவணங்களை தயார் செய்து பத்திரப்பதிவு செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் முதல் கட்டமாக ராமநாதன், கருப்பையா, கார்த்திகேயன் ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்றம் மூலம் சிறையில் அடைத்தனர்.
- முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
- முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் சேதுராம லிங்கம் தலைமை தாங்கினார்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2021-22 கல்வி ஆண்டுக்கான 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 2 மற்றும் 3-ம் மதிப்பெண்களை பெற்ற மாணவ-மாணவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் சேதுராம லிங்கம் தலைமை தாங்கி னார். பள்ளி ஆசிரியர் செல்வத்துரை முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் குகன் வரவேற்று பேசினார்.
12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற பாலன், 2-ம் இடம் பெற்ற சிபிராஜ், மாணவர்களான லண்டன் மருத்துவர் சரவண வேல், வடிவேலன், சேவுக மூர்த்தி, பொன் சரவணன், பாலசீனிவாசன் ஆகியோர் வழங்கினர்.
முன்னாள் மாணவர்கள் சங்கம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு பல வருடங்களாக முன்னாள் மாணவர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இந்தப் பள்ளியில் படித்து தொழில் அதிபராக உள்ள கணேசன், ஆசிரியர் முத்துப்பாண்டி, தென்றல், பாலசுப்பிரமணியம், முத்து பிரகாஷ், பிரவீன், குமார், மூர்த்தி, தனசேகரன் உள்ளிட்டோரின் பெரும் முயற்சிக்கு இடையே இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
முடிவில் தனசேகரன் நன்றி கூறினார்.
- விவசாயம் செழிக்க அம்மனுக்கு முளைப்பாரி விழா நடந்தது.
- இதில் ஆயிரக்கணக்கான கிராமமக்கள் பங்கேற்றனர்.
சிவகங்கை
சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் கிராமத்தில் அழியாதநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் முளைப்பாரி திருவிழா கடந்த 2-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
இதையொட்டி கிராமமக்கள் விரதம் இருந்து முளைப்பாரி வளர்த்து வந்தனர். மேலும் தினமும் இரவு வழிபாடு நடந்தது. நேற்று இரவு பெண்கள் விநாயகர் கோவிலில் இருந்து முளைப்பாரிகளை எடுத்து ஊர்வலமாக சென்று மந்தைச்சாவடியில் வைத்தனர்.
பின்னர் காலை மீண்டும் மந்தைச்சாவடியில் இருந்து முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று அழியாத நாயகி அம்மன் கோவிலில் வைத்து வழிபட்டனர். இதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
முளைப்பாரிகளை சுற்றி பெண்கள் கும்மி கொட்டினர். அதன்பிறகு ஊராட்சி அலுவலகம் அருகேயுள்ள ஊருணியில் அலசினர். இதில் ஆயிரக்கணக்கான கிராமமக்கள் பங்கேற்றனர். திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம், கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
இந்த திருவிழா குறித்து கிராம மக்கள் கூறும்போது, விவசாயம் செழிக்க வேண்டி முளைப்பாரி வளர்த்து அம்மனுக்கு சமர்ப்பணம் செய்வதாக தெரிவித்தனர்.
- மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 18-ந் தேதி நடக்கிறது.
- தங்களது பகுதியில் நடைபெற உள்ள சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரம் வழங்கல் அமைச்சகம் மூலம் RVY திட்டம் மற்றும் CSR scheme of General Insurance corporation என்ற திட்டங்களின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் வசிக்கும் 60 வயது அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முடநீக்கு கருவிகள், செயற்கை பல்செட், ஊன்றுகோல்கள், செயற்கை அவயங்கள், பார்வையற்றவர்களுக்கான கண்ணாடிகள் மற்றும் செவித்திறன் அற்றவர்களுக்கான காதொலிக்கருவிகள் ஆகிய உபகரணங்களை Alimco என்ற நிறுவனத்தின் மூலம் இலவசமாக வழங்க மாவட்ட நிர்வாகமும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதையடுத்து நேற்று தேவகோட்டையிலும், இன்று (11-ந் தேதி) கண்ணங்குடியிலும், நாளை (12-ந் தேதி) சாக்கோட்டையிலும், 13-ந் தேதி கல்லலிலும், 16-ந் தேதி எஸ்.புதூரிலும், 17-ந் தேதி சிங்கம்புணரியிலும், 18-ந் தேதி சிவகங்கை வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
கடந்த 2-ந் தேதி திருப்பத்தூரில் நடந்த முகாமில் 251 எண்ணிக்கையிலும், 3-ந் தேதி காளையார்கோவிலிலும் நடந்த சிறப்பு முகாமில் 257 எண்ணிக்கையிலும், 4-ந் தேதி மானாமதுரையில் நடந்த முகாமில் 459 எண்ணிக்கையிலும், 5-ந் தேதி திருப்புவனத்தில் நடந்த முகாமில் 338 வகையான உதவி உபகரணங்களும், 6-ந் தேதி இளையான்குடியல் நடந்த முகாமில் 407 எண்ணிக்கையிலான உதவி உபகரணங்களும் மொத்தம் 1,712 வகையிலான உதவி உபகரணங்கள் மற்றும் பிற உதவிகள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு வழங்க தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
எனவே, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை ஆதார் அட்டை மற்றும் ரேசன் கார்டு ஆகிய சான்றுகளுடன் தங்களது பகுதியில் நடைபெற உள்ள சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மானாமதுரை வைகை ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
- இதில் சுவாமி, அம்பாள் உற்சவர் தனிபல்லக்கில் கொண்டு வரப்பட்டது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றுகரையில் பிரசித்தி பெற்ற ஆனந்த வல்லி சோமநாதஸ்வாமி கோவில் உள்ளது.
மற்றொரு கரையில் வீர அழகர் கோவில் உள்ளது. 2 கோவில்களில் ஆடித்திருவிழா தொடங்கி நடைபெற்றுவருகிறது.நேற்று ஆடிவிழாவில் முக்கிய விழாவான ஆடித்தபசுகாட்சி நடந்தது. பல ஆண்டுகளுக்கு பின்பு ஆடிவிழாவில் கோவில் முன்பு உள்ள வைகைஆற்றில் தண்ணீர் சென்றதால் தீர்த்த வாரி நிகழ்ச்சி நடந்தது.
இதில் சுவாமி, அம்பாள் உற்சவர் தனிபல்லக்கில் கொண்டு வரப்பட்டது. மஞ்சள், பால், வைகை தீர்த்தமிட்டு அபிஷேகம், தீர்த்தவாரி, தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
இதேபோல் வீர அழகர்கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சியும், இரவு சுந்தரபுரம் கடை வீதி வியாபாரிகள் சார்பில் நடந்த விழாவில் சுந்தரராஜபெருமாள் பூபல்லக்கில் வலம் வரும் நிகழ்ச்சியும் நடந்தது.
- தேவகோட்டை அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
- 2 பிரிவுகளாக தேவகோட்டை- புதுவயல் சாலையில் நடைபெற்றது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே தாழையூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி முளைப்பாரி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்.
அதேபோல் இந்த ஆண்டும் நடந்த ஆடி திருவிழாவில் அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று தினமும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு முளைக்கொட்டுதல் நடந்தது. நேற்று காலை கூத்தாடி முத்துபெரியநாயகி கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து இரவு முளைப்பாரி ஊர்வலம் அம்மன் கோவிலில் வந்தடைந்தது. இரவு கலைநிகழ்ச்சி நடந்தது. ஆடி திருவிழாவையொட்டி இன்று காலை மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. 2 பிரிவுகளாக தேவகோட்டை- புதுவயல் சாலையில் நடைபெற்றது. இதில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 25 மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டுவண்டி பந்தயத்தில் முதலாவதாக தேவகோட்டை பிரசாத் மொபைல், 2-வதாக நல்லாங்குடி முத்தையா சேர்வை, 3-வதாக கல்லூரணி பாலாஜி, 4-வதாக சாத்தம்பத்தி சரவணன் மாடுகள் வெற்றி பெற்றன.சின்ன மாட்டுவண்டி பந்தயத்தில் முதலாவது காரைக்குடி கருப்பண்ண சேர்வை, 2-வதாக சாத்திக்கோட்டை கருப்பையா சேர்வை, 3-வதாக கண்டதேவி மருதுபிரதர்ஸ், 4-வதாக மயிலாடுவயல் செல்வராஜ் எஸ்.பி.பட்டணம் உமர் மாடுகள் வெற்றி பெற்றன. வெற்றி பெற்ற மாடுகளுக்கு மாலை, வேட்டி, துண்டுகள், ரொக்க பரிசுகள், வெற்றி கோப்பைகளும் வழங்கப்பட்டன. இந்த பந்தயத்தை சாலையின் இருபுறமும் திரளான பொதுமக்கள் கூடி நின்று கண்டுகளித்தனர்.
- வாராப்பூர் ஊராட்சியில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு பூக்குழி திருவிழா நடைபெற்றது.
- சமூக மத நல்லிணக்க விழாவாக நடத்தப்பட்டு வருகிறது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் கிராமத்தில் பாத்திமா அஸ்ஸனா உஸ்ஸனா தர்காவில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் பூக்குழி திருவிழா விமரிசையாக நடைபெறும்.
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் இதில் பங்கேற்பார்கள். 500 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வரும் இந்த விழாவானது இப்பகுதி மக்களால் சமூக மத நல்லிணக்க விழாவாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு மொகரம் பண்டிகையை முன்னிட்டு நேற்று வாராப்பூரில் பூக்குழி திருவிழா நடந்தது. விழாவில் பெண்கள் உள்பட ஏராளமானோர் புனித நீராடினர். தொடர்ந்து ஆண்கள் மட்டும் 3 முறை (நெருப்பு தணலில்) பூக்குழியில் இறங்கினர். பின்னர் சந்தனம் பூசுதல் , மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரம் வலம் வருதல் போன்ற நிகழ்ச்சிகள் அதிகாலை வரை நடந்தது.
திருழாவை முன்னிட்டு தப்பாட்டம், கரகாட்டம், கிராமிய கலை நிகழ்ச்சிகள் போன்றவையும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை வாராப்பூர் கிராம பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழிநாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் நோய் தொற்று காரணமாக எந்த ஒரு விழாக்களும் நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு இத்திருவிழாவை காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழுமியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சிவகங்கை மாவட்டத்தில் 9 வயது சிறுவனை வீட்டு வேலையில் அமர்த்திய உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எந்த ஒரு பணிகளிலும், தயாரிப்பு தொடர்புடைய செய்முறைகளிலும் பணியமர்த்துவது குற்றமாகும்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவின் பேரில் இளையான்குடி வட்டம், கோட்டையூர் அஞ்சல், சிறுபாலை கிராமத்தில் குழந்தை தொழிலாளர் இருப்பதாக சைல்டு லைன் அமைப்புக்கு புகார் வந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் முத்துக்கழுவன், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் ஆகியோர் தலைமையில், தொழிலாளர் உதவி ஆய்வாளர் பேச்சிமுத்து பிரியதர்ஷினி, இளையான்குடி துணை தாசில்தார் கிருஷ்ணகுமார், சார்பு ஆய்வாளர் பிரபாகரன், சிறுபாலை கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார், சைல்டு லைன் உறுப்பினர் கருப்புராஜா ஆகியோர் சிறுபாலை கிராமத்தில் ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த கிராமத்தில் நாகப்பட்டினம் அருகே உள்ள காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் வீட்டு வேலை மற்றும் கால்நடைகள் பராமரிக்கும் பணியில் ஈடுபடுத்தியது கண்டறியப்பட்டது.
உடனடியாக அந்த சிறுவன் மீட்கப்பட்டு மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைக்கப்பட்டான். தற்போது நாகப்பட்டினம் மாவட்டம், வெளிப்பாளையம் கிராமத்திலுள்ள பள்ளியில் அந்த சிறுவன் 5-ம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்த சிறுவனை பணிக்கு அமர்த்திய வீட்டின் உரிமையாளர் மீது குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் (ஒழித்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் கீழ் சிவகங்கை குற்றவியல் நடுவர்-1 நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் அவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதத்தொகை சிவகங்கை மாவட்ட குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் மறுவாழ்வு நலச்சங்க வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அரசின் பங்குத் தொகையான ரூ.15 ஆயிரம் வரப்பெற்றவுடன், அபராத்தொகை ரூ.20 ஆயிரம் மற்றும் அரசின் பங்குத் தொகை ரூ.15ஆயிரம் சேர்த்து ரூ.35 ஆயிரம் சிறுவனின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு சிறுவனின் நலவாழ்விற்காக பயன்படுத்தப்படும்.
குழந்தைத் தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) திருத்தச்சட்டத்தின்படி14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எந்த ஒரு பணிகளிலும், தயாரிப்பு தொடர்புடைய செய்முறைகளிலும் பணியமர்த்துவது குற்றமாகும்.
சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் பணிபுரிவது கண்டறியப்பட்டால், Penncil Portal
மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.






