என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பா.ஜ.க ஆட்சியில் எதை தொட்டாலும் ஷாக் அடிக்கிறது- ப.சிதம்பரம் கிண்டல்
    X

    பாதயாத்திரையில் முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம் தேசியக்கொடி ஏந்தி பங்கேற்றார்


    பா.ஜ.க ஆட்சியில் எதை தொட்டாலும் ஷாக் அடிக்கிறது- ப.சிதம்பரம் கிண்டல்

    • காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் வலிமை மிகுந்த நாடாக இந்தியா மாறியது.
    • பா.ஜ.க. ஆட்சியில் கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் நீடிக்கிறது.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் சார்பில் 75-வது சுதந்திர தின பவளவிழா பாதயாத்திரை சிவகங்கை அருகே உள்ள காஞ்சிரங்காலில் இருந்து தொடங்கியது. காந்திவீதி, மரக்கடை வீதி வழியாக அரண்மனைவாசல் சென்றடைந்தது.

    இதில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.ஆர்.ராமசாமி, ராஜசேகரன், மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜெயசிம்மன், மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சிவகங்கையில் பாதயாத்திரை நிறைவு பெற்றது. அப்போது ப.சிதம்பரம் பேசியதாவது:-

    இந்திய சுதந்திரத்திற்கு போராடிய ஒரே கட்சி. காங்கிரஸ் கட்சி, மகாத்மா காந்தி தலைமையில் சர்தார் வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தலைவர்களால் போராடி பெற்ற சுதந்திரம் இது. 1947-ல் இருந்து காங்கிரஸ் ஆட்சி புரிந்தது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் வலிமை மிகுந்த நாடாக இந்தியா மாறியது.

    பா.ஜ.க. ஆட்சியில் கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் நீடிக்கிறது. இதனை கண்டித்து இந்த பாதயாத்திரை நடக்கிறது. மொத்த விலைவாசி உயர்வு 15 சதவீதம், சில்லறை விலைவாசி உயர்வு 7சதவீத உயர்வு உள்ளது. இப்படி எந்த பொருளை தொட்டாலும் ஷாக் அடிக்கிறது.

    முன்பெல்லாம் மின்சாரத்தை தொட்டால் மட்டும் ஷாக் அடிக்கும். தற்போது பா.ஜ.க. ஆட்சியில் எதை தொட்டாலும் ஷாக் அடிக்கிறது.

    காய்கறி, பழங்கள் ஆகட்டும், பாலாகட்டும், தயிராகட்டும், அரிசியாகட்டும், பருப்பாகட்டும், சமையல் எரிவாயு, டீசல்-பெட்ரோல் என எந்த பொருளை எடுத்தாலும் விலைவாசி உயர்வு உயர்ந்துள்ளது. இதனை அரசு ஒத்துக் கொள்ளாது.

    ஆனால் ரிசர்வ் வங்கி ஒத்துக்கொள்ளும். மக்கள் வாங்குவது குறைந்துள்ளது. பெண்கள்-குழந்தைகள் மத்தியில் பலவீனமும் சோர்வும் எற்பட்டுள்ளது. எல்லா தொழில் வளமும் குறைந்துள்ளன. மத்திய அமைச்சர்கள் தங்கள் பெருத்த உருவங்களை-கன்னங்களை கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்தால் நாடு நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. ஏழை-எளிய மக்கள் எந்த அளவுக்கு துன்பப்படுகிறார்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதையெல்லாம் இந்த அரசு கண்டு கொள்வதில்லை.

    வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. 50 லட்சம் பெண்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர். அவர்கள் வேலை தேடுவதையே நிறுத்திவிட்டார்கள். 18-30 வயது இளைஞர்கள் மத்தியில் வேலை இல்லாமை 25 சதவீதம் ஆனது.

    5 ஆயிரம் சிறு, குறு தொழில் இருந்த நகரங்களில் 500-ஆக குறைந்துள்ளது. எத்தனை லட்சம் பேர், கோடி பேர், வேலைகளை இழந்துள்ளார்கள்? இதற்கெல்லாம் முழு முதல்காரணம் நரேந்திர மோடி-பா.ஜ.க. தான். இவர்கள் தப்பிக்கவும் முடியாது. தப்பி ஓடவும் முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×