என் மலர்
சிவகங்கை
- காரைக்குடியில் நடந்த போதைபொருள் விழிப்புணர்வு மராத்தான் ஓட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
- காரைக்குடி வட்டாட்சியர் மாணிக்கவாசகம் நன்றி கூறினார்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் போதை ஒழியட்டும் பாதை மிளிரட்டும் என போதை பொருள் விழிப்புணர்வு மினி மாரத்தான் அழகப்பா பல்கலைக்கழக பவ நகர் மைதானத்தில் இன்று காலை நடந்தது.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன ரெட்டி தலைமை தாங்கினார்.சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, நகர்மன்ற தலைவர் முத்துதுரை முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் பெரியகருப்பன் மினி மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பவநகர் ஸ்டேடியத்தில் இருந்து ஆரியவன், செக்காலை பேக்கரி, பெரியார் சிலை வழியாக கண்ணதாசன் மணிமண்டபத்தில் முடி வடைந்தது. கலந்து கொண்ட வர்களுக்கு சான்றிதழ்களை அமைச்சர் பெரியகருப்பன், நாடாளு மன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வழங்கி னர்.
இதில் சார் ஆட்சியர் பிரபாகரன், முன்னாள் அமைச்சர் தென்னவன், சாக்கோட்டை சேர்மன் சரண்யா செந்தில்நாதன், பேரூராட்சி சேர்மன்கள் ராதிகா, சங்கீதா, கார்த்திக்சோலை, அழ கப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் பொறுப்புகுழு உறுப்பினர்கள் சுவாமி நாதன், கருப்புச்சாமி, மாவட்ட இளைஞரணி அமை ப்பாளர் செந்தில்குமார், நகர்மன்ற ஆணை யாளர் லட்சுமணன், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு ஓடினர்.காரைக்குடி வட்டாட்சியர் மாணிக்கவாசகம் நன்றி கூறினார்.
- புளியால் அரசு பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
- உதவி தலைமையாசிரியை விமலா தொகுத்து வழங்கினார். ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் நன்றி கூறினார்.
தேவகோட்டை
தேவகோட்டை அருகே உள்ள புளியால் அரசு உயர் நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 4 இடம் பெற்ற மாணவர்களுக்கு பணமுடிப்பு, பரிசளிப்பு விழாவும், டிரஸ்ட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்க தொகையும், மாவட்ட அளவிலான வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.
அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட மாவட்ட அலுவலர் பீட்டர் லெமாயு தலைமை தாங்கினார். தேவகோட்டை வட்டார கல்வி அலுவலர் லட்சுமி தேவி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக இளையாராஜா, முன்னாள் மாணவர் முருகேசன், புளியால் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசு-நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
ஆசிரியர்கள் கருணா, அருள் செல்வா, பரிது காதர் பிச்சை, பிச்சை மரக்காயார், சமூக ஆர்வலர் கிட்டு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.தலைமையாசிரியர் நாகேந்திரன் வரவேற்றார். உதவி தலைமையாசிரியை விமலா தொகுத்து வழங்கினார். ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் நன்றி கூறினார்.
- தேவகோட்டையில் அம்மன் கோவிலுக்கு பெண் பக்தர்கள் கஞ்சி கலயம் எடுத்து ஊர்வலம் சென்றர்.
- சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்
தேவகோட்டை
தேவகோட்டை நகர் போலீஸ் நிலையம் எதிர் புறம் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி திருவிழா நடைபெறும். அதேபோல் 33-ம் ஆண்டு முப்பெரும் விழா நடைபெற்றது.
நேற்று மாலை கருதா வூரணியில் இருந்து 108 பெண்கள் அக்னி சட்டி எடுத்து கோவில் சென்றனர். இன்று காலை 5004 பேர் கருதாவூரணியில் இருந்து கஞ்சி கலயம் எடுத்து சிவன் கோவில் சாலை, பேருந்து நிலையம், திருப்பத்தூர் ரோடு வழியாக கோவில் சென்றடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து 1008 பெண்கள் பால்குடம் எடுத்து யூனியன் ஆபீஸ் விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்டு சென்றனர். பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில் பொன்னழகு பெரியநாயகி, கனகசபை, கவுன்சிலர் நிரோஷ சுந்தரலிங்கம் உள்ளிட்டோர் அன்னதானம் வழங்கி னார்கள். விழாவில் தேவகோட்டை மற்றும் சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்
- தேவகோட்டை அருகே கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
- இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விஜயை கைது செய்து நீதிமன்றம் உத்தர வின்பேரில் சிறையில் அடைத்தனர்.
தேவகோட்டை
கஞ்சா, புகையிலை விற்பனையை தடுக்க தேவகோட்டை துணை கண்காணிப்பாளர் கணேஷ்குமார் உத்தரவின் பேரில் தேவகோட்டை உட்கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆறாவயல் காவல்துறை சார்பு ஆய்வாளர்கள் மருது அமல்ராஜ், காவலர் ரமேஷ் ஆகியோர் முள்ளிக்குண்டு அருகே காரைக்குடி தேவ கோட்டை சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கானதான்காடு கிராமத்தை சேர்ந்த மூன்றாம் ஆண்டு டிப்ளமோ கல்லூரி மாணவர் விஜய் (21) மறித்து சோதனை செய்தனர். இதில் அவர் 180 கிராம் கஞ்சா கடத்தியது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விஜயை கைது செய்து நீதிமன்றம் உத்தர வின்பேரில் சிறையில் அடைத்தனர்.
- ஒரே நுழைவுத் தேர்வு என்றால் மாநில அரசு எதற்கு? என மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
- இப்படியே போனால் நாளைக்கு ஒரு நாடு ஒரே பத்திரிக்கை என்றுகூட அறிவித்துவிடுவார்கள்.
காரைக்குடி:
முன்னாள் மத்திய நிதி மந்திரியும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நானும் என்னுடைய கட்சியும் நீண்ட நாட்களாக எச்சரித்து வருகிறோம். ஒரே நாடு என்ற எண்ணமே தவறான எண்ணம். இது ஒரு நாடுதான், இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் ஒரு நாட்டிற்குள் பல மாநிலங்கள் இருகின்றன, பல மொழிகள் இருக்கின்றன, பல கலாச்சாரம் இருக்கிறது, பல வரலாறுகள் இருக்கின்றன, பல பழக்கவழக்கங்கள் இருக்கின்றன.
நீட் தேர்வை எதிர்ப்பதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நான் ஒரு காரணத்தைத்தான் ஆரம்பத்தில் இருந்து வலியுறுத்துகிறேன். ஒரு மாநிலம் தன்னுடைய நிதியில் இருந்து தன்னுடைய மாநில மக்களுக்காக தன்னுடைய பொறுப்பில் கல்லூரி நிறுவினால், அதில் எந்த மாணவர்களை சேர்ப்பது என்று அந்த மாநிலத்திற்கு முடிவு எடுப்பதற்கு அதிகாரம் கிடையாதா? இது என்ன வேடிக்கை? எந்த நாட்டில் இதுபோன்ற சமஸ்டி முறை நிலவுகிறது?
சும்மா பொம்மை அரசாக மாநில அரசுகள் இருக்கும், மத்திய அரசுதான் எல்லா முடிவும் எடுக்கும் என்றால்... என்ன சமஸ்டி அரசு முறை? பல காரணங்கள் இருந்தாலும் இந்த ஒரு காரணத்திற்காக மட்டுமே நீட்டை எதிர்க்கலாம்.
இப்போ 'நீட்' 'கியூட்' என எல்லா தேர்வுகளையும் ஒருங்கிணைத்து ஒரே தேர்வு என்றால் மாநில அரசு எதற்கு? மாநில அரசில் ஒரு உயர்கல்வி அமைச்சர் எதற்கு? உயர்கல்வி துறை எதற்கு? மத்திய அரசே மத்திய பல்கலைக்கழகங்களை நிறுவுவது போல் எல்லா கல்லூரிகளையும் மத்திய அரசுதான் நிறுவும் என்று அறிவிக்கலாமே?
மாநில அரசுக்கு வேறு வேலையே கிடையாதா, மாநில அரசுகள் எல்லாம் நகராட்சிகளாக, பேரூராட்சிகளாக குறைக்கப்படுமா? இதை எல்லாம் கடுமையாக எதிர்க்க வேண்டும். இதனுடைய விளைவுகளை புரிந்துகொள்ள வேண்டும். ஒரு நாடு ஒரே அடையாள அட்டை, ஒரு நாடு ஒரே குடும்ப அட்டை, ஒரு நாடு ஒரு தேர்வு, ஒரு நாடு ஒரு மொழி, ஒரு நாடு ஒரு கலாச்சாரம், ஒரு நாடு ஒரு பழக்கவழக்கம், ஒரு நாடு ஒரு உடை... இது எங்கே போய் நிற்கும் என்றால் ஒரு நாடு ஒரு கட்சி என்று வந்துவிடும். ஒரு நாடு ஒரு தலைவர் என்று வரும்.
இந்த விபரீதத்தை உணர்ந்து கொள்ளாமல் இருந்தால் மிகப் பெரிய தவறு. இந்த விபரீதத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். எதற்காக மொழி வாரியாக மாநிலங்கள் என்று நம்முடைய மூத்த தலைவர்கள் அன்று பிரித்தார்கள்? அந்தந்த மாநிலத்தில் உடைய மக்கள் அவர்கள் பல பொருள்களில் சுயாட்சி பெற்ற அமைப்பாக சுயமாக சிந்தித்து சுயமாக முடிவு எடுக்கக்கூடிய அமைப்பாக மாநில அரசுகள் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. அதை எல்லாம் கெடுப்பதற்கு அழிப்பதற்குத்தான் இந்த ஒரு நாடு ஒரே... என்ற நிலைப்பாடு. நாளைக்கு உங்களை எல்லாம் மூட்டை கட்டிவிட்டு ஒரு நாடு ஒரே பத்திரிக்கை என்று அறிவித்துவிடுவார்கள். ஒரு நாடு ஒரு தொலைக்காட்சி என்று அறிவிப்பார்கள்.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.
- ஒரே நாடு, ஒரே தேர்வு என்பது முற்றிலும் ஆபத்தானது.
- இந்தியா பல்வேறு கலாச்சாரங்களை உள்ளடக்கியது.
காரைக்குடி:
முன்னாள் மத்திய நிதி மந்திரியும், ராஜ்யசபா உறுப்பினருமான ப.சிதம்பரம் இன்று காரைக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒரே நாடு, ஒரே தேர்வு என்பது முற்றிலும் ஆபத்தானது. அதை தொடக்கத்திலேயே கடுமையாக எதிர்க்க வேண்டும். இல்லை என்றால் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்பார்கள். இந்தியா பல்வேறு கலாச்சாரங்களை உள்ளடக்கியது.
நாட்டில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. 18 முதல் 25 வயதுடையவர்கள் 25 சதவீதம் பேர் வேலை யில்லாமல் உள்ளனர். 5ஜி ஏலம் மூலம் 5 லட்சம் கோடி வரை எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 1.56 லட்சம் கோடிதான் ஏலம் போய் உள்ளது. இதில் ஊழல் நடந்துள்ளது.
பா.ஜனதா அரசால் புதிய திட்டத்தை கொண்டுவர முடியாது. அவர்களால் இருக்கின்ற திட்டத்தை அழிக்கத்தான் முடியும்.
காங்கிரஸ் தலைவர் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறும். அதில் தலைவராக என்னை தேர்ந்தெடுக்க 101 சதவீதம் வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிங்கம்புணரி பத்ரகாளி அம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை நடந்தது.
- ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று சிறப்பு பூஜை நடந்தது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் 3-வது வார்டில் உள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில் பெண்கள் சுமங்கலி பூஜை செய்து வழிபாடு செய்தனர்.
ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று நடந்த சிறப்பு பூஜையில் கலச பிரதிஷ்டை செய்து விக்னேஸ்வர பூஜை, லலிதா சகஸ்ரநாமம் மிருத்தஞ்சய பூஜை உள்ளிட்ட பூஜைகள் நிறைவு பெற்று சுமங்கலி பூஜை செய்தனர். 1008 போற்றிகள் உள்ளடங்கிய லலிதா சகஸ்ரநாமம் சொல்லப்பட்டு குங்குமத்தால் ரவிக்கைத்துணி மற்றும் தேங்காய் பாலுடன் கூடிய மஞ்சள் பிள்ளையாருக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்தனர்.
கணவர் நோய் நொடியின்றி வாழவும், மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், சுமங்கலி பூஜையில் பெண்கள் பங்கேற்று வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- சிவகங்கையில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை நகரசபை தலைவர் வழங்கினார்.
- சிவகங்கை செயின்ட்ஜோசப் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் ஏற்பாட்டில் நடந்தது.
சிவகங்கை
சிவகங்கை செயின்ட்ஜோசப் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் யோவல்மேரி ஏற்பாட்டில் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.
இதில் சிறப்பு அழைப்பாளராக சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.
இந்த நிகழ்வில் பள்ளி குழுத்தலைவர் தேவதாஸ், நகர் மன்ற துணைத் தலைவர் கார்கண்ணன், கவுன்சிலர்கள் ராமதாஸ், அயூப்கான், சரவணன், விஜயக்குமார், கார்த்திகேயன், தொழில்நுட்ப பிரிவு சதிஷ் குமார், பூமிராஜ், தமிழ்செல்வன் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
- சிறந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு விருது-பொற்கிழி சிவகங்ககை லெக்டர் வழங்கினார்.
- 5 வகை பிரிவுகளின் கீழ் சிறந்த கலைஞர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவில் 5 வகை
பிரிவுகளின் கீழ் சிறந்த கலைஞர்களாக தேர்வு செய்யப்பட்ட 15 கலைஞர்களுக்கு விருதுகள் மற்றும் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி பங்கேற்று பொன்னாடை அணிவித்து, சிறந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு விருதுகள் மற்றும் பொற்கிழிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு அரசு கலைப்பண்பாட்டுத்துறையின் சார்பில் சிலம்பம் போட்டியில் பங்கேற்ற முனீஸ், சுவினாஸ்ரீ மற்றும் விசை இசை போட்டியில் கலந்து கொண்ட லட்சுமிமித்ரன் ஆகியோருக்கு கலைஇளமணி விருதும், ரூ.4 ஆயிரம் மதிப்பிலான பொற்கிழியும் வழங்கப்பட்டுள்ளது.
சிலம்பம் போட்டியில் கலந்து கொண்ட பெருமாள், ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட மாரிக்கண்ணு, மரக்கால் ஆட்டத்தில் கலந்து கொண்ட தேவேந்திரன் ஆகியோருக்கு கலைவளர்மணி விருதும் ரூ.6 ஆயிரம் மதிப்பிலான பொற்கிழியும், வழங்கப்பட்டுள்ளன.
கிராமிய பாடகர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சண்முகராசு, சிற்ப கலையில் கலந்து கொண்ட செல்வராஜ், தப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாக்கியராஜ் ஆகியோருக்கு கலைச்சுடர்மணி விருதும் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொற்கிழியும் வழங்கப்பட்டுள்ளது.
வீதி நாடகம் போட்டியில் பங்கேற்ற தங்கவேல், கொம்பு இசையில் கலந்து கொண்ட வேலு, தவில் இசையில் கலந்து கொண்ட சந்திரசேகரன் ஆகியோருக்கு கலைநன்மணி விருதும் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பொற்கிழியும் வழங்கப்பட்டுள்ளது.
பம்பை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாண்டி, நாதஸ்வரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போஸ், நாடகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜலட்சுமி ஆகியோருக்கு கலைமுதுமணி விருதும் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பொற்கிழியும் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சார்பில் விருது மற்றும் பொற்கிழி பெற்றவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்து இந்த கலைகளை எதிர்கால சந்ததியினருக்கு கற்றுக் கொடுத்து புதிய கலைஞர்களை உருவாக வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலைபண்பா ட்டுத்துறை மைய உதவி இயக்குநர் செந்தில்குமார், தேர்வுக்குழு உறுப்பினர் நாகராஜபூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருப்பத்தூர் அருகே இளைஞரை தாக்கிய ஊராட்சி மன்ற தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- தலைமறைவாகி உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கீழக்காவனிப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் ஆனந்தன். இவர் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு அரசு சான்றிதழ் பெற வரும் நபர்களுக்கு சான்றிதழ் வாங்குவதற்கு உதவி செய்து வருகிறார்.
இவர் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி உள்ளவருக்கு மின்சாரம் கொடுக்க கூடாது என மனு செய்து இருந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக இரணி யூர் அம்மாபட்டி ஊராட்சி மன்ற தலைவர் அழகு ஆறுமுகம், ஆனந்தனிடம் தகராறு செய்து திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுறித்து ஆனந்தன் கொடுத்த புகாரின்பேரில் கீழச்சிவல்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் விசாரணை நடத்தி கீழக்காவனிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அழகு ஆறுமுகத்தின் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். தலைமறைவாகி உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் வலிமை மிகுந்த நாடாக இந்தியா மாறியது.
- பா.ஜ.க. ஆட்சியில் கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் நீடிக்கிறது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் சார்பில் 75-வது சுதந்திர தின பவளவிழா பாதயாத்திரை சிவகங்கை அருகே உள்ள காஞ்சிரங்காலில் இருந்து தொடங்கியது. காந்திவீதி, மரக்கடை வீதி வழியாக அரண்மனைவாசல் சென்றடைந்தது.
இதில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.ஆர்.ராமசாமி, ராஜசேகரன், மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜெயசிம்மன், மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சிவகங்கையில் பாதயாத்திரை நிறைவு பெற்றது. அப்போது ப.சிதம்பரம் பேசியதாவது:-
இந்திய சுதந்திரத்திற்கு போராடிய ஒரே கட்சி. காங்கிரஸ் கட்சி, மகாத்மா காந்தி தலைமையில் சர்தார் வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தலைவர்களால் போராடி பெற்ற சுதந்திரம் இது. 1947-ல் இருந்து காங்கிரஸ் ஆட்சி புரிந்தது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் வலிமை மிகுந்த நாடாக இந்தியா மாறியது.
பா.ஜ.க. ஆட்சியில் கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் நீடிக்கிறது. இதனை கண்டித்து இந்த பாதயாத்திரை நடக்கிறது. மொத்த விலைவாசி உயர்வு 15 சதவீதம், சில்லறை விலைவாசி உயர்வு 7சதவீத உயர்வு உள்ளது. இப்படி எந்த பொருளை தொட்டாலும் ஷாக் அடிக்கிறது.
முன்பெல்லாம் மின்சாரத்தை தொட்டால் மட்டும் ஷாக் அடிக்கும். தற்போது பா.ஜ.க. ஆட்சியில் எதை தொட்டாலும் ஷாக் அடிக்கிறது.
காய்கறி, பழங்கள் ஆகட்டும், பாலாகட்டும், தயிராகட்டும், அரிசியாகட்டும், பருப்பாகட்டும், சமையல் எரிவாயு, டீசல்-பெட்ரோல் என எந்த பொருளை எடுத்தாலும் விலைவாசி உயர்வு உயர்ந்துள்ளது. இதனை அரசு ஒத்துக் கொள்ளாது.
ஆனால் ரிசர்வ் வங்கி ஒத்துக்கொள்ளும். மக்கள் வாங்குவது குறைந்துள்ளது. பெண்கள்-குழந்தைகள் மத்தியில் பலவீனமும் சோர்வும் எற்பட்டுள்ளது. எல்லா தொழில் வளமும் குறைந்துள்ளன. மத்திய அமைச்சர்கள் தங்கள் பெருத்த உருவங்களை-கன்னங்களை கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்தால் நாடு நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. ஏழை-எளிய மக்கள் எந்த அளவுக்கு துன்பப்படுகிறார்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதையெல்லாம் இந்த அரசு கண்டு கொள்வதில்லை.
வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. 50 லட்சம் பெண்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர். அவர்கள் வேலை தேடுவதையே நிறுத்திவிட்டார்கள். 18-30 வயது இளைஞர்கள் மத்தியில் வேலை இல்லாமை 25 சதவீதம் ஆனது.
5 ஆயிரம் சிறு, குறு தொழில் இருந்த நகரங்களில் 500-ஆக குறைந்துள்ளது. எத்தனை லட்சம் பேர், கோடி பேர், வேலைகளை இழந்துள்ளார்கள்? இதற்கெல்லாம் முழு முதல்காரணம் நரேந்திர மோடி-பா.ஜ.க. தான். இவர்கள் தப்பிக்கவும் முடியாது. தப்பி ஓடவும் முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
- போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது.
- ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
தேவகோட்டை
தேவகோட்டை நகர போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
இன்ஸ்பெக்டர் சரவணன் உறுதி மொழியினை வாசிக்க, தலைமையாசிரியர், ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். மேலும் இன்ஸ்பெக்டர் பேசுகையில், போதைப் பொருள்கள் விற்பனை மற்றும் பயன்படுத்துவோர் பற்றிய தகவல்களை காவல்துறைக்கு தெரிவிக்கும் பட்சத்தில் உங்களது தகவல் ரகசியம் பாதுகாக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.






