search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    9 வயது சிறுவனை வீட்டு வேலையில் அமர்த்திய உரிமையாளருக்கு அபராதம்
    X

    9 வயது சிறுவனை வீட்டு வேலையில் அமர்த்திய உரிமையாளருக்கு அபராதம்

    • சிவகங்கை மாவட்டத்தில் 9 வயது சிறுவனை வீட்டு வேலையில் அமர்த்திய உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    • 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எந்த ஒரு பணிகளிலும், தயாரிப்பு தொடர்புடைய செய்முறைகளிலும் பணியமர்த்துவது குற்றமாகும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவின் பேரில் இளையான்குடி வட்டம், கோட்டையூர் அஞ்சல், சிறுபாலை கிராமத்தில் குழந்தை தொழிலாளர் இருப்பதாக சைல்டு லைன் அமைப்புக்கு புகார் வந்தது.

    இந்த புகாரின் அடிப்படையில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் முத்துக்கழுவன், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் ஆகியோர் தலைமையில், தொழிலாளர் உதவி ஆய்வாளர் பேச்சிமுத்து பிரியதர்ஷினி, இளையான்குடி துணை தாசில்தார் கிருஷ்ணகுமார், சார்பு ஆய்வாளர் பிரபாகரன், சிறுபாலை கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார், சைல்டு லைன் உறுப்பினர் கருப்புராஜா ஆகியோர் சிறுபாலை கிராமத்தில் ஆய்வு செய்தனர்.

    அப்போது அந்த கிராமத்தில் நாகப்பட்டினம் அருகே உள்ள காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் வீட்டு வேலை மற்றும் கால்நடைகள் பராமரிக்கும் பணியில் ஈடுபடுத்தியது கண்டறியப்பட்டது.

    உடனடியாக அந்த சிறுவன் மீட்கப்பட்டு மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைக்கப்பட்டான். தற்போது நாகப்பட்டினம் மாவட்டம், வெளிப்பாளையம் கிராமத்திலுள்ள பள்ளியில் அந்த சிறுவன் 5-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    இந்த சிறுவனை பணிக்கு அமர்த்திய வீட்டின் உரிமையாளர் மீது குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் (ஒழித்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் கீழ் சிவகங்கை குற்றவியல் நடுவர்-1 நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் அவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    அபராதத்தொகை சிவகங்கை மாவட்ட குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் மறுவாழ்வு நலச்சங்க வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அரசின் பங்குத் தொகையான ரூ.15 ஆயிரம் வரப்பெற்றவுடன், அபராத்தொகை ரூ.20 ஆயிரம் மற்றும் அரசின் பங்குத் தொகை ரூ.15ஆயிரம் சேர்த்து ரூ.35 ஆயிரம் சிறுவனின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு சிறுவனின் நலவாழ்விற்காக பயன்படுத்தப்படும்.

    குழந்தைத் தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) திருத்தச்சட்டத்தின்படி14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எந்த ஒரு பணிகளிலும், தயாரிப்பு தொடர்புடைய செய்முறைகளிலும் பணியமர்த்துவது குற்றமாகும்.

    சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் பணிபுரிவது கண்டறியப்பட்டால், Penncil Portal இணையதள முகவரியிலோ, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம், அரசினிப்பட்டி ரோடு, காஞ்சிரங்கால், சிவகங்கை என்ற அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது 04575-240521 என்ற தொலைபேசியின் வாயிலாகவோ அல்லது Child Help line 1098 (இலவச தொலைபேசி எண்) என்ற கட்டணமில்லா தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.

    மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×