என் மலர்tooltip icon

    சேலம்

    • தற்கொலை செய்வதற்கு முன்பு நவீன் தனது அண்ணனுக்கு போன் செய்து தூக்குப்போட்டு சாகப் போவதாக தெரிவித்துள்ளார்.
    • போலீஸ்காரர் நவீன் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    மகுடஞ்சாவடி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா அ.புதூர் கிராமம் சுண்டமேட்டூரில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவரது மகன் நவீன் (வயது 25). போலீஸ்காரர்.

    இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் போலீஸ் ஆக பணிபுரிந்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்த நிலையில் நவீன் நேற்று இரவு 10 மணியளவில் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்பு நவீன் தனது அண்ணனுக்கு போன் செய்து தூக்குப்போட்டு சாகப் போவதாக தெரிவித்துள்ளார்.

    இதைக் கேட்டு வீட்டிற்கு ஓடி வந்து பார்த்த அவரது அண்ணன், தனது தம்பி நவீன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு நவீனை கொண்டு சென்றார். அங்கு அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    போலீஸ்காரர் நவீன் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் நவீன் உடலை கைப்பற்றி பிரேத பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து நவீன் தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தமிழகத்துக்கு இந்த மாதம் திறந்து வேண்டிய தண்ணீரும் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடவில்லை.
    • தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதியில் இருந்து கடந்த மாதம் 10-ந் தேதி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் குறைந்தது.

    இதற்கிடையே தமிழகத்துக்கு இந்த மாதம் திறந்து வேண்டிய தண்ணீரும் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடவில்லை. ஆனாலும் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    அணைக்கு வரும் நீர்வரத்தை விட குறைந்த அளவிலேயே அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 498 கனடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையின் நீர்மட்டம் 54.55 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • லாரிகள் உள்பட இலகு ரக வாகனங்களுக்கு காலாண்டு வரி உயர்த்தப்பட்டுள்ளது.
    • தமிழகம் முழுவதும் நாளை ஒரு நாளில் பல ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கும், பல ஆயிரம் டன் பொருட்கள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் 6 லட்சம் லாரிகள், 25 லட்சம் இலகு ரக வாகனங்கள் உள்ளன. இதில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் வட மாநிலங்களுக்கு இயக்கப்படுகின்றன.

    வடமாநிலங்களில் இருந்து வெங்காயம், பருப்பு, துணி வகைகள், மளிகை பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. இதே போல தமிழகத்தில் இருந்து ஜவ்வரிசி, கல்மாவு, துணி வகைகள், இரும்பு தளவாடங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

    லாரிகள் உள்பட இலகு ரக வாகனங்களுக்கு காலாண்டு வரி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் மூலம் வாகனங்களுக்கு வரி விதிக்கப்படுகிறது. டீசல் விலை, உதிரி பாகங்கள் விலை உயர்வு, காப்பீட்டு கட்டண உயர்வு, லாரிகளுக்கு சரக்குகள் கிடைக்காமை உள்பட பல்வேறு காரணங்களால் லாரி தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வரிகளால் தொழில் மேலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் லாரி உரிமையாளர்கள் மற்றும் இலகு ரக வாகன உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் நாளை (9-ந்தேதி) ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

    இதனால் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகம் முழுவதும் லாரிகள், இலகு ரக வாகனங்கள், ஆம்னி பஸ்கள் ஓடாது. இதனால் தமிழகம் முழுவதும் நாளை ஒரு நாளில் பல ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கும், பல ஆயிரம் டன் பொருட்கள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் டிரைவர்கள், கிளீனர்கள், தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ் கூறியதாவது:-

    வாகனங்களுக்கான காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைன் வழக்குப்பதிவை ரத்து செய்ய வேண்டும், அரசு மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை(9-ந் தேதி) தமிழகம் முழுவதும் லாரிகள், ஆம்னி பஸ்கள், இலகு ரக வாகனங்களை நிறுத்தி வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம்.

    இதனால் தமிழகத்தில் 6 லட்சம் லாரிகள், 25 லட்சம் இலகு ரக வாகனங்கள் இயங்காது, தமிழக அரசு இதுவரை எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. மாநில அரசுக்கு எங்களது கோரிக்கையை தெரிவிக்கும் வகையில் இந்த வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.

    சுங்க கட்டணம் அதிகரிப்பு, டீசல் விலை உயர்வால் லாரி தொழிலை நடத்த முடியாத நிலை உள்ளது. தமிழக அரசு எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் பொதுக்குழு கூடி அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்வோம்.

    ஆந்திரா, கேரளா, கர்நாடகம், தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை அந்தந்த மாநில எல்லைகளில் நிறுத்தி வைக்க கேட்டுள்ளோம், அதே போல தமிழகத்தில் இருந்து வேறு மாநிலங்களுக்கு லாரிகள் இயக்கப்படாது.

    இந்த வேலை நிறுத்தம் காரணமாக ஒரே நாளில் ரூ.5 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் பாதிக்கும். லாரி உரிமையாளர்களுக்கு ரூ.200 கோடி இழப்பு ஏற்படும். அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, கியாஸ் சிலிண்டர் லாரிகள் இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினர்.

    • கணேசன் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் 18 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.
    • ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.30 லட்சம் வரை பணத்தை இழந்த தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மேட்டூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கோவிந்தபாடியை சேர்ந்தவர் கணேசன் (49). இவருக்கு சிவகாமி (45) என்ற மனைவியும், 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். கணேசன் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் 18 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.

    இந்த நிலையில் ஓசூரில் இருந்து பஸ் மூலம் மேட்டூர் வந்த கணேசன் சொந்த கிராமத்தில் உறவினர்களை சந்தித்து விட்டு நீர்தேக்க பகுதியான பண்ணவாடி காவிரி ஆற்றுக்கு நேற்று மாலை வந்தார். பின்னர் திடீரென காவிரி ஆற்றில் குதித்து விட்டார். இதனைக் கண்ட மீனவர்கள் உடனடியாக கொளத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீனவர்கள் உதவியுடன் கணேசனை தேடினர். நள்ளிரவு ஒரு மணி அளவில் கணேசன் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காவிரி கரையில் இருந்த கணேசனின் உடைமைகளை கைப்பற்றி போலீசார் சோதனை செய்தனர். அதில் கணேசன் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

    அந்த கடிதத்தில், ராஜேஷ் கண்ணா என்பவருக்கு ரூ.8 லட்சம் ரூபாய் கடன் கொடுக்க வேண்டும். கடனை அடைக்க ஓசூரில் உள்ள வீட்டை விற்பனை செய்து விடலாம் என மனைவியிடம் கேட்டபோது அவர் மறுத்துவிட்டார். வாங்கிய கடனை கொடுக்க முடியாததால் கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறேன். நான் இறந்தவுடன் நான் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து வரும் பணத்தை கடன் வாங்கியவர்களிடம் தரவேண்டும். எனது வேலையை என்னுடைய 2-வது மகளுக்கு வழங்க வேண்டும் என எழுதி வைத்திருந்தார்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் கணேசன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து கணேசனின் உறவினர்கள் கூறுகையில், ஆன்லைன் சூதாட்டத்தில் மோகம் கொண்ட கணேசன் வீட்டில் இருந்த தங்க நகைகளை விற்றும், உறவினர்களிடம் பணத்தை கடன் வாங்கியும் விளையாடினார். ஆன்லைன் சூதாட்டத்தில் சுமார் ரூ.30 லட்சம் வரை இழந்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டதால் வீட்டை விற்று கடனை அடைக்கலாம் என மனைவி சிவகாமியிடம் யோசனை தெரிவித்தார். இதற்கு மனைவி சம்மதம் தெரிவிக்காததால் கடனை கட்ட முடியாமல் மன உளைச்சலில் காவிரி ஆற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவித்தனர்.

    ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.30 லட்சம் வரை பணத்தை இழந்த தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மேட்டூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சேலம் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக வெள்ளித்தொழில் முக்கிய தொழிலாக உள்ளது.
    • இதனை‌ நம்பி மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக வெள்ளித்தொழில் முக்கிய தொழிலாக உள்ளது. இதனை நம்பி மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.

    குறிப்பாக சேலம் செவ்வாய்பேட்டை, குகை, சிவதாபுரம், பனங்காடு, நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், இளம்பிள்ளை உள்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெள்ளி பட்டறைகள் உள்ளன.

    சேலம் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளி கொலுசுக்கு தனி மவுசு உண்டு என்பதால் வட மாநில வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்வார்கள். இதனால் இங்கு உற்பத்தி செய்யப்படும் கொலுசு, அரைஞான் கொடி, மெட்டி உள்ளிட்ட வெள்ளி பொருட்கள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் வட மாநிலங்களுக்கும் அதிக அளவில் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.

    வாழ்வாதாரம் பாதிப்பு

    தீபாவளி பண்டிகை வருகிற 12-ந் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மக்கள் வெள்ளிப் பொருட்கள் அதிக அளவில் வாங்குவார்கள். மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடப்பதால் வட மாநிலங்களுக்கு வெள்ளி பொருட்கள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .

    இதனால் வழக்கத்தை விட வெள்ளி ஆர்டர்கள் குறைந்துள்ளதால் வெள்ளி தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதனால் அவர்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

    5 மாநிலங்களில் தேர்தல்

    இதுகுறித்து சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர் கைவினை நல சங்க தலைவர் ஆனந்தராஜன் கூறியதாவது,

    வெள்ளி பொருள்களுக்கு பண்டிகை காலங்களில் ஆர்டர்கள் அதிகமாக கிடைக்கும். அதன்படி தீபாவளியை முன்னிட்டு வியாபாரிகளிடமிருந்து ஆர்டர்களை எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால் 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடப்பதால் ஆர்டர்கள் குறைந்துள்ளது.

    தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக ஆர்டர்கள் வழங்க வியாபாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். வெள்ளிக்கான ரசீது இருந்தாலும் தேர்தல் அதிகாரிகளால் சில நேரங்களில் வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.

    தெலுங்கானா மத்திய பிரதேசத்தை கடந்துதான் பல மாநிலங்களுக்கு செல்ல வேண்டும். தீபாவளி பண்டிகைக்காக இதுவரை 50 சதவீதம் மட்டுமே ஆர்டர் கிடைத்துள்ளது. இதனால் நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம் .மேலும் கடந்த 4-ந் தேதி ஒரு கிராம் வெள்ளி 77 ரூபாய். பார்வெள்ளி ஒரு கிலோ 77 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது .

    இந்த நிலையில் நேற்று வெள்ளி கிராமிற்கு 20 காசு உயர்ந்து 77 ரூபாய் 20 காசுக்கும், பார்வெள்ளி 200 ரூபாய் உயர்ந்து 77 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையானது .

    வேலை இழப்பு

    தேர்தல் அறிவிப்பு மற்றும் நிலையற்ற வெள்ளி விலையால் வெள்ளி விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. இதனால் வெள்ளி தொழிலாளர்கள் பலர் வேலை இழந்துள்ளனர். இதனால் இனிவரும் நாட்களில் தேர்தல் கமிஷன் வெள்ளி தொழிலாளர்கள் போதுமான ஆதாரங்கள் வைத்திருந்தால் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்வதை தவிர்த்து வெள்ளி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினர்.

    • ராமசாமி (வயது 73). இவர் கடந்த மாதம் 26 -ந் தேதி சேலம் அரியானூர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஜே.கே. கே. ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 73). இவர் கடந்த மாதம் 26 -ந் தேதி சேலம் அரியானூர் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த அவரை கொண்டலாம்பட்டி போலீசார் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று இரவு ராமசாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

      சேலம்:

      சேலம் அஸ்தம்பட்டி நேதாஜி நகரை சேர்ந்தவர் சரஸ்வதி அம்மாள் (வயது 75). இவரது வீட்டின் மேற்கூரை கீற்று கொட்ட கையால் வேயப்பட்டதாகும். இவர் சமீபகாலமாக திருச்செங்கோட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.

      இந்த நிலையில் நேற்று இரவு சேலத்தில் உள்ள அவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனைப் பார்த்த அந்த பகுதியினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

      உடனே அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் அக்கம் பக்கம் பரவ விடாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர் . ஆனாலும் அதற்குள் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.

      இந்த தீ விபத்து குறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

      • சேலம் மண்டல தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் இரும்பாலை ரோடு தளவாய்பட்டி பகுதியில் இயங்கி வருகிறது.
      • இந்த அலுவலகத்தில் வருகிற 10-ந்தேதி மாதாந்திர குறைதீர்கூட்டம் நடைபெறுகிறது.

      சேலம்:

      சேலம் மண்டல தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் இரும்பாலை ரோடு தளவாய்பட்டி பகுதியில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் வருகிற 10-ந்தேதி மாதாந்திர குறைதீர்கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் வருங்கால வைப்பு நிதி ெதாடர்பான குறைகளை தெரிவிக்க விரும்பும் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் தங்களது பெயர் , நிறுவன முகவரி, வருங்கால வைப்பு நிதி எண், யு.ஏ.என். மின்னஞ்சல் முகவரி மற்றும் செல்போன் எண் ஆகிய விபரங்களை நாளை மறுநாள் (9-ந்தேதி) -க்கு முன்னதாக இந்த அலுவலகத்தின் மக்கள் ெதாடர்பு அதிகாரிக்கு தெரியப்படுத்தவும் அல்லது ro.salem@epfindia.gov.in என்ற மின்னஞ்சலில் பதிவு செய்யலாம். இந்த தகவலை சேலம் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் டாக்டர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

      • தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரிய வர்கள் வரை பட்டாசு வெடிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
      • உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது.

      சேலம்:

      சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

      தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரிய வர்கள் வரை பட்டாசு வெடிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

      அதே வேளையில் பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறு குழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாவதையும், நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெரு மளவில் மாசுபடுவதையும் கருத்தில் கொண்டு முறையான வழியில் அதனைப் பயன்படுத்த வேண்டும்.

      கால நேரம்

      உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும் கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டா சுகளை வெடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

      மேலும் பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

      சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும். பாதுகாப்பான தீபாவளி கொண்டா டுவதற்கு பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.

      தவிர்க்க வேண்டும்

      அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவ மனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

      பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

      இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

      • இடையப்பட்டி ஊராட்சி வடக்கு வீதியில் சாலை அமைக்கும் பணிகள் 2 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
      • இந்நிலையில் நேற்று மாலை இடையப்பட்டி பகுதியில் பருவமழை வெளுத்து வாங்கியதால் மழை வெள்ளம் வீடுகளில் புகுந்தது.

      வாழப்பாடி:

      சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம் இடையப்பட்டி ஊராட்சி வடக்கு வீதியில் சாலை அமைக்கும் பணிகள் 2 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை இடையப்பட்டி பகுதியில் பருவமழை வெளுத்து வாங்கியதால் மழை வெள்ளம் வீடுகளில் புகுந்தது. இதனால் இப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினர். எனவே சாலை மற்றும் சாக்கடை அமைக்கும் பணியை ஊராட்சி நிர்வாகம் நிறைவு செய்து போக்குவரத்து மற்றும் மழைநீர் வடிகால் வசதிக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

      • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.
      • அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

      சேலம்:

      சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

      கன மழை

      குறிப்பாக வாழப்பாடி அருகே உள்ள ஆனைமடுவு, எடப்பாடி பகுதிகளில் நேற்றிரவு 7 மணிக்கு தொடங்கிய மழை 3 மணி நேரம் கன மழையாக கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சி அளித்தது.

      இதே போல ஏற்காட்டில் நேற்று மதியம் கன மழை கொட்டியது. இரவிலும் சாரல் மழை நீடித்தது. மழையை தொடர்ந்து ஏற்காட்டில் பனி மூட்டமும் நிலவுவதால் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

      இதே போல சங்ககிரி, கரியகோவில், வீரகனூர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

      227.7 மி.மீ. மழை

      மாவட்டத்தில் அதிக பட்சமாக ஆனைமடுவில் 58 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. எடப்பாடி 52, சங்ககிரி 30, கரியகோவில் 28, ஏற்காடு 24.2, வீரகனூர் 20, காடையாம்பட்டி 6.4, ஆத்தூர் 4, கெங்கவல்லி 2, சேலம் 1.1., பெத்தநாயக்கன்பாளையம் 1, ஓமலூர் 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 227.70 மி.மீ. மழை பெய்துள்ளது. 

      • சிவ கணேஷ் (45). இவர் வீட்டின் அருகே குடோன் வைத்து நடத்தி வருகிறார். நேற்று வழக்கம் போல் குடோனை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
      • இந்த நிலையில் நள்ளிரவு அந்த குடோனில் இருந்து கரும்பு புகை கிளம்பியது.

      சேலம்:

      சேலம் மல்லமூப்பம்பட்டி ரோட்டில் உள்ள குடோன் பஸ் நிறுத்தம் பகுதியை சேர்ந்தவர் சிவ கணேஷ் (45). இவர் வீட்டின் அருகே குடோன் வைத்து நடத்தி வருகிறார். நேற்று வழக்கம் போல் குடோனை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

      தீ விபத்து

      இந்த நிலையில் நள்ளிரவு அந்த குடோனில் இருந்து கரும்பு புகை கிளம்பியது. இதையடுத்து சிவகணேஷ் அங்கு சென்று குடோனை திறந்து பார்த்தபோது அங்கிருந்த பார்சல்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிவகணேஷ் இதுகுறித்து உடனடியாக சூரமங்கலம் தீயணைப்பு நிலைத்திற்கு தகவல் தெரிவித்தார்.

      அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சிறிது நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் அங்கிருந்த பொருட்கள் முற்றிலும் தீயில் கருகியது. கட்டிடம் உடைந்து விழுந்தது. விபத்து குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

      மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின.

      ×