என் மலர்tooltip icon

    சேலம்

    • கடந்த 11-ந் தேதி ரமேஷ் பிராந்தியில் விஷம் கலந்து குடித்து விட்டு நாப்பாளையம் பெருமாள் கோவில் அருகில் மயக்க நிலையில் கிடந்தார்.
    • இதனை அறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் இடங்கணசாலை நாப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சித்துராஜ். இவரது மகன் ரமேஷ் (29), இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்தநிலையில் கடந்த 11-ந் தேதி ரமேஷ் பிராந்தியில் விஷம் கலந்து குடித்து விட்டு நாப்பாளையம் பெருமாள் கோவில் அருகில் மயக்க நிலையில் கிடந்தார். இதனை அறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று ரமேஷ் பரிதாபமாக இறந்தாார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். சம்பவம் குறித்து அவரது சகோதரர் முத்துகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் காகாபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • ஏற்காட்டில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மாரமங்களம் கிராமம்.
    • பொது கிணற்றில் நேற்று மாலை சுமார் 3 மணியளவில் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதை ஊர் மக்கள் கண்டு ஏற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

     ஏற்காடு:

    ஏற்காட்டில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மாரமங்களம் கிராமம். இங்கு 30 அடி ஆழம் கொண்ட பொது கிணற்றில் நேற்று மாலை சுமார் 3 மணியளவில் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதை ஊர் மக்கள் கண்டு ஏற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் இறந்து கிடந்த நபரின் உடலை ஊர்மக்கள் உதவியுடன் மீட்டனர். பின்னர் விசாரித்ததில் இறந்து கிடந்தவர் அதே கிராமத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளி வரதன் என்பவரது மகன் ஆறுமுகம் என்பது உறுதியானது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து இவரை யாராவது கொலை செய்யும் நோக்கத்தில் கிணற்றில் தள்ளி விட்டனரா அல்லது கால் தவறி ஆறுமுகம் கிணற்றில் விழுந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • தமிழகத்தில் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதிக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
    • சுற்றுலா பயணிகள் பூலாம்பட்டி காவிரி கதவணை நீர்த்தேக்க பகுதியில் விசைப்படகு சவாரி செய்து பொழுதை கழித்தனர்.

    எடப்பாடி:

    தீபாவளி பண்டிகையை யொட்டி தமிழகத்தில் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதிக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    குட்டி கேரளா என்று சுற்றுலா பயணிகளால் செல்லமாக அழைக்கப்படும் இயற்கை எழில் நிறைந்த பூலாம்பட்டி காவிரி கதவணை நீர் திறப்பு பகுதியில், திரண்டிருந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள நீர் மின் உற்பத்தி நிலையம், அணைப் பாலம், நீர் உந்து நிலையம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை கண்டு ரசித்தனர்.

    சுற்றுலா பயணிகள் பூலாம்பட்டி காவிரி கதவணை நீர்த்தேக்க பகுதியில் விசைப்படகு சவாரி செய்து பொழுதை கழித்தனர். மேலும் அங்கு கிடைக்கும் ருசி மிகுந்த மீன் உணவு வகைகளை வாங்கி உண்டு மகிழ்ந்தனர். திரளான சுற்றுலா பயணிகள் கரையோர பகுதியில் குடும்பத்துடன் பொழுதை கழித்தனர்.

    மேலும் பூலாம்பட்டி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவில், பிரம்மாண்ட நந்திகேஸ்வரர் சன்னதி, காவிரி தாய் சன்னதி, காவிரிக்கரை படித்துறை விநாயகர் கோவில் உள்ளிட்ட தலங்களிலும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது.

    வழக்கத்தை விட கூடுதலான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் இப்பகுதிகள் உள்ள வியாபா ரிகள் மற்றும் வாடகை வாகன ஓட்டுனர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இப்பகுதியில் கூடுதல் எண்ணிக்கையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • பல நூறாண்டுகள் பழமையான, மன்னர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட சென்றாய பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அருகில் புஜங்கீஸ்வரர் கோவிலும் உள்ளது.
    • பெருமாள் கோவிலுக்கு சொந்தமாக சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டியில் பல நூறாண்டுகள் பழமையான, மன்னர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட சென்றாய பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அருகில் புஜங்கீஸ்வரர் கோவிலும் உள்ளது.

    பெருமாள் கோவிலுக்கு சொந்தமாக சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கோவிலில் அனைத்து விசேஷ நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அதே போல புஜங்கீஸ்வரர் கோவிலிலும் தினமும் பூஜை செய்து வழிபாடு செய்யப்படுகிறது.

    இந்த 2 கோவில்களும் சார்பாக தீபாவளி பண்டிகையின் போது திருவிழா நடத்தப்படும். அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீதேவி, துளசியம்மாள் சமேத சென்றாய பெருமாளும், சிவகாமி உடனுறை புஜங்கீஸ்வரரும் திருவீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்றது.

    பெருமாளும், சிவனும் அடுத்தடுத்த தேரில் நகர்வலம் வந்தனர். ராஜவீதியில் தொடங்கிய இந்த நகர் வலத்தில் ஒவ்வொரு வீடாக 2 சாமிகளுக்கும் தேங்காய் பழம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதில் நேர்த்திக் கடனாக பெண்கள், குழந்தைகள் தேரை இழுத்து வந்தனர்.

    கடந்த காலங்களில் முறையாக நடத்தப்பட்டு வந்த திருவீதி உலா நிகழ்ச்சி கடந்த 19 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது கோவில் நிர்வாகிகள் மற்றும் கட்டளைதாரர்களால் திருவீதி உலா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனால், கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • மாமாங்கம் பகுதியில் போக்குவரத்து பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சின்னதம்பி (59) நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.
    • சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புகார் படி சூரமங்கலம் போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.

    சேலம்:

    சேலம் மாமாங்கம் பகுதியில் போக்குவரத்து பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சின்னதம்பி (59) நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக அதிவேகத்தில் வந்த லாரி ஒரு வழிப்பாதையில் திரும்பியது.

    இதனை கவனித்த அவர் அதில் இருந்த 2 டிரைவர்களையும் திரும்பி போகும்படி கூறினார். அப்போது அவர்களுக்கி டையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அந்த 2 பேரும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சின்னதம்பியை தாக்க முயன்றதுடன் கொலை மிரட்டலும் விடுத்தனர்.

    இது குறித்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புகார் படி சூரமங்கலம் போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் ஈரோடு மாவட்டம் காஞ்சி கோவில் அருகே உள்ள தண்ணீர் பந்தல் பாளையம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (40), தருமபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிபட்டி அருகே உள்ள அதிகாரிப்பட்டியை சேர்ந்த விக்னேஷ் (24) என்பது தெரிய வந்தது. 2 பேரையும் கைது செய்த போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.   

    • தீபாவளி பண்டிகையையொட்டி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டாசுகளை ெவடித்து உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
    • அதிக அளவில் பட்டாசு குப்பைகள் தேங்கி உள்ளது. இதில் சேலம் மாநகர பகுதியில் 150 டன் வரை குப்பகைள் தேங்கி உள்ளன.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பண்டிகையையொட்டி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டாசுகளை ெவடித்து உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

    இதையொட்டி மாநகரில் முக்கிய பகுதிகளான அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி, தாதகாப்பட்டி, அழகாபுரம், பெரமனூர், சூரமங்கலம், ஜங்சன், அரிசிபாளையம், டவுன், கிச்சிப்பாளையம், அன்னதானப்பட்டி, சீலநாயக்கன்பட்டி, பேர்லேண்ட்ஸ் உள்பட பல பகுதிகளில் அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது.

    இதனால் அந்த பகுதிகளில் அதிக அளவில் பட்டாசு குப்பைகள் தேங்கி உள்ளது. இதில் சேலம் மாநகர பகுதியில் 150 டன் வரை குப்பகைள் தேங்கி உள்ளன. இதனை அகற்றும் பணியில் மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் 1000-த்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். இன்று மாலைக்குள் அனைத்து குப்பைகளும் அகற்றப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஓமலூரை அடுத்த தும்பிப்பாடி ஊராட்சி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த ஒரு மாதமாக முறையான குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தும்பிப்பாடி ஊராட்சி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த ஒரு மாதமாக முறையான குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

    சாலை மறியல்

    இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் ஒன்று சேர்ந்து இன்று காலை ஓமலூரில் இருந்து மாட்டுக்காரன்புதூர் செல்லும் சாலையில் தும்பிப்பாடி ஊராட்சி ஒட்டதெரு பகுதியில் அரசு பஸ்சை சிறைபிடித்து காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    இது பற்றி தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் ஆசைத்தம்பி மற்றும் தீவட்டிப்பட்டி போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உப்பு தண்ணீரை குடிப்பதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும், எனவே சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    ேபாக்குவரத்து பாதிப்பு

    உடனடியாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரத்து 415 கனஅடியாக குறைந்தது.
    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 10-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டது. இதையடுத்து தமிழக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    கடந்த ஒரு வார காலமாக தமிழக நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில் இன்று நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரத்து 415 கனஅடியாக குறைந்தது.

    அணையின் நீர்மட்டம் 59.73 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 24.48 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • தீபாவளி சீட்டு மற்றும் தங்க நகை திட்டங்களை அறிவித்து மோசடி செய்து ஏமாற்றிய உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.
    • கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களையும் அவர்களது செல்போன் எண்களை வைத்து தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டி மற்றும் அம்மாபேட்டை சிங்கமெத்தை பகுதியில் வீராணம் அருகே உள்ள வலசையூர் பகுதியை சேர்ந்த ஒருவர் நகை கடை நடத்தி வருகிறார்.

    இந்த கடையில் தீபாவளி சீட்டு நடத்தியும், மேலும்தங்க நகை சேமிப்பு திட்டம் மற்றும் தங்க நகை முதலீடு போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வாடிக்கையாளர்களிடம் லட்சகணக்கில் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கடை உரிமையாளர் திடீரென தலைமறைவானார். உரிமையாளர் கடையை திறக்க வராததால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சம்பளம் வரும் என எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில் ஏமாற்றம் அடைந்ததால் இதுகுறித்து நேற்று மாலை அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தனர்.

    இதனிடையே சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள கடை பூட்டிய நிலையில் இருப்பதால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் கடை முன்பு இன்று காலை முதலே திரண்டனர். பின்னர் தீபாவளி சீட்டு மற்றும் தங்க நகை திட்டங்களை அறிவித்து மோசடி செய்து ஏமாற்றிய உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர். சிலர் கடை மீது கல்வீசி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    இதையடுத்து அன்னதானப்பட்டி போலீசார் அங்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு வரும் வாடிக்கையாளர்களையும் அவர்கள் சமரசப்படுத்தி வருகிறார்கள்.

    கடை ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களையும் அவர்களது செல்போன் எண்களை வைத்து தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த கடையின் உரிமையாளர் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கவர்ச்சி திட்டங்கள் மூலம் பல கோடி வசூல் செய்து பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திலும் முதலீட்டாளர்கள் புகார் தெரிவித்து உள்ளதால் போலீசார் சபரிசங்கரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • வீராணம் அருகே உள்ள ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் ராஜூ என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு உள்ளது.
    • இந்த கிணற்றில் இன்று காலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.

    சேலம்:

    சேலம் வீராணம் அருகே உள்ள ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் ராஜூ என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு உள்ளது. இந்த கிணற்றில் இன்று காலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அந்த பகுதியினர் வீராணம் போலீசாருக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வரைந்து சென்ற தீயணைப்பு துறையினரும், போலீசாரும் இணைந்து கிணற்றில் பிணமாக கிடந்தவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் தொழிலாளி போல இருந்த அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது அவரை யாராவது கொலை செய்து கிணற்றில் வீசி சென்றனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அய்யனார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை. இவரது மகன் ஸ்ரீதரன். இவர் டெய்லர் கடை நடத்தி வருகிறார்.
    • கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக மனைவியைப் பிரிந்து ஸ்ரீதரன் தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தென்னங்குடி பாளையம் ஊராட்சிக்குட்பட்ட அய்யனார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை. இவரது மகன் ஸ்ரீதரன். இவர் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ரேணுகாதேவி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக மனைவியைப் பிரிந்து ஸ்ரீதரன் தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 9-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ஸ்ரீதரன் வீடு திரும்பாத நிலையில் அவரது தாய் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை நரசிங்கபுரம் பகுதியில் இருந்து தென்னங்குடி பாளையம் செல்வதற்காக வசிஷ்ட நதியின் குறுக்கே மேம்பால கட்டுமான பணி நடைபெறும் ஈச்சிலி மரம் அருகே வசிஷ்ட நதியில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக அவ்வழியாகச் சென்றவர்கள் அளித்த தகவலின் பெயரில் தீயணைப்புத் துறையினர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் வசிஷ்ட நதியில் மிதந்த உடலை மீட்டனர்.

    அப்பகுதி மக்கள் உடலை பார்த்த போது காணாமல் போன ஸ்ரீதரன் என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்ட போது வசிஷ்ட நதியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.அய்யனார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை. இவரது மகன் ஸ்ரீதரன். இவர் டெய்லர் கடை நடத்தி வருகிறார்.

    • சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூரில் மாவட்டத்திலேயே மிகப்பெரிய இரண்டாவது கால்நடை சந்தை சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.
    • இந்நிலையில் நாளை தீபாவளி பண்டிகை என்பதால் அதிகளவில் விற்பனைக்காக வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், மேச்சேரி இன ஆடுகள் என பல்வேறு வகையான ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூரில் மாவட்டத்திலேயே மிகப்பெரிய இரண்டாவது கால்நடை சந்தை சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. மேலும்

    சனிக்கிழமை நடைபெறும் கால்நடை சந்தையில் பல்வேறு பகுதிலிருந்தும் ஆடுகளை விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வருவது வழக்கம். இந்நிலையில் நாளை தீபாவளி பண்டிகை என்பதால் அதிகளவில் விற்பனைக்காக வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், மேச்சேரி இன ஆடுகள் என பல்வேறு வகையான ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர்.

    மேலும் இங்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும் ஆடுகளளை உள்ளூர், மட்டுமின்றி பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தேனி, மதுரை ஆகிய வெளி மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த வியாபாரிகள் ஆடுகளை கொள்முதல் செய்தனர். மேலும் இன்று நடைபெற்ற கால்நடை சந்தையில் சுமார் 5000 ஆடுகள் விற்பனைக்கு வந்த நிலையில் ஆடுகளின் விலை ரூ.3ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனையானது சுமார் ரூ.3 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    60 கிலோ எடையுள்ள ஆடு ஒன்று 20ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஆடுகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ×