என் மலர்
சேலம்
- அணையில் இருந்து வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்பட்டு வருகிறது.
- தற்போது மேட்டூர் அணையில் 23.32 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 10-ந்தேதியுடன் நிறுத்தப்பட்டது. இதையடுத்து தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வரும் நிலையில் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 445 கனஅடி வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை 8 ஆயிரத்து 424 கனஅடியாக குறைந்தது.
இதே போல் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 58.15 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது மேட்டூர் அணையில் 23.32 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (12-ந் தேதி)நாடு முழுவதும் கோலா கலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு நாளை ஒரு நாள் மட்டுமே உள்ளதால் ஜவுளி கடைகள், நகை கடைகள், பட்டாசு கடைகளில் இறுதி கட்ட விற்பனை களை கட்டியுள்ளது.
- நாளை முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்பதால் இன்று மாலையும் அதிக அளவில் பொது மக்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். இதையொட்டி நேற்று முன்தினம் முதல் சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
சேலம்:
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (12-ந் தேதி)நாடு முழுவதும் கோலா கலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு நாளை ஒரு நாள் மட்டுமே உள்ளதால் ஜவுளி கடைகள், நகை கடைகள், பட்டாசு கடைகளில் இறுதி கட்ட விற்பனை களை கட்டியுள்ளது.
குறிப்பாக சேலம் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் இருந்து அதிக அளவில் பொது மக்கள் ஜவுளிகடைகளுக்கு வந்த வண்ணம் உள்ளனர். குடும்பத்துடன் வரும் அவர்கள் தங்களுக்கு பிடித்த ஆடைகளை தேர்வு செய்து வாங்கி செல்கின்றனர். இதனால் சேலம் கடை வீதி முதல் அக்ரகாரம், புதிய பஸ் நிலையம், நான்கு ரோடு, 5 ரோடு பகுதியில் உள்ள ஜவுளி கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது . இதனால் ஜவுளி விற்பனை களை கட்டி உள்ளது.
இதே போல கடை வீதி மற்றும் புதிய பஸ் நிலைய பகுதிகளில் உள்ள நகை கடைகளிலும் குவியும் பெண்கள் தங்களுக்கு பிடித்த தங்கம், வைர நகைகளை தேர்வு செய்து வாங்கி செல்கிறார்கள். பட்டாசு கடைகளிலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிக அளவில் குவிந்துள்ளனர். அவர்கள் புதிதாக கு வித்து வைக்கப்பபட்டுள்ள புதிய ரக பட்டாசுகளை வாங்கி செல்கிறார்கள்.
இதே போல மளிைக கடைகளிலும் பெண்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர். தீபாவளிக்கு பலகாரங்கள் செய்ய தேவையான எண்ணை, மாவு வகைகள் மற்றும் மளிகை பொருட்களும் அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள். தீபாவளி பண்டிகையையொட்டி சேலத்தில் உள்ள இனிப்பு கடைகள், ஐஸ்கிரீம் கடைகள், ஜூஸ் கடைகள், ஓட்டல்கள் நிரம்பி வழிகிறது. பழ வகைகள் விற்பனையும் தற்போது அதிகரித்துள்ளது.
சேலம் மாநகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலை சீர்செய்யவும், திருட்டு சம்பவங்களை தடுக்கவும் மாநகர போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதற்காக மக்கள் கூடும் முக்கிய இடங்களில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருட்டை தடுக்க பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான அருணாச்சல ஆசாரி தெரு, முதல் அக்ரகாரம், 2-வது அக்ரஹாரம், பழைய, புதிய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள், 4 ரோடு, 5 ரோடு, சொர்ணபுரி ஏ.வி.ஆர் ரவுண்டானா, சாரதா கல்லூரி சாலை உள்பட பல பகுதிகளில் காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சேலம் மாநகரில் தீபாவளி திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில், ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 300-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சாதாரண உடையிலும் மக்கள் கூடும் இடங்களில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
சேலத்தில் ஒரு சில தனியார் பள்ளிகளுக்கு தீபாவளி பண்டிகையை யொட்டி இன்று முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று மாலை முதலே தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட புறப்பட்டு சென்றனர்.
இதே போல அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோரும் விடுமுறை எடுத்து கொண்டு தீபாவளி பண்டிகையை 4 நாட்கள் கொண்டாடும் வகையில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் சேலம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று மாலை முதல் மக்கள் கூட்டம் அலை மோதியது.
நாளை முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்பதால் இன்று மாலையும் அதிக அளவில் பொது மக்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். இதையொட்டி நேற்று முன்தினம் முதல் சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக சென்னை, பெங்களூரு, திருப்பூர், மதுரை, திருச்சி, கோவை உள்பட பல ஊர்களுக்கு அதிக அளவில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. இந்த பஸ்களில் கூட்டம் அலை மோதியது.
இதே போல சேலம் வழியாக சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் கேரளாவுக்கு செல்லும் ரெயில்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது.
- சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை கடந்த 4 நாட்களாக பெய்து வருகிறது.
- தொடர் கனமழை காரணமாக சடையம்பட்டி, சித்தம்பட்டி சாலையில் மண் சரிவு ஏற்பட்டு ராட்சத பாறை சாலையில் நடுவே விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை கடந்த 4 நாட்களாக பெய்து வருகிறது. இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே முட்டல் வனப்பகுதியில் இருந்து கீழ்நாடு ஊராட்சிக்குட்பட்ட சடையம்பட்டி கல்லூர், சேம்பூர், நாகலூர், கணியான் வளைவு , அடியலூர் குன்னூர், சித்தம்பட்டி, சடையம்பட்டி உள்ளிட்ட 25 மலை கிராமங்களுக்கு செல்லும் பாதையில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது.
இந்த தொடர் கனமழை காரணமாக சடையம்பட்டி, சித்தம்பட்டி சாலையில் மண் சரிவு ஏற்பட்டு ராட்சத பாறை சாலையில் நடுவே விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் 25 கிராம மலை வாழ் மக்கள் தீபாவளி பண்டிகை முன்னிட்டு எந்தவித பொருட்களும் வாங்க நகரப் பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்று 4-வது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த மண் சரிவு ஏற்பட்டு தகவலறிந்த வனத்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மலை கிராம மக்களே ஒன்றிணைந்து சாலையில் ஏற்பட்ட மண்சரிவை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கி கனமழை பெய்து வரும்நிலையில் இதுபோன்ற மண்சரிவு அடிக்கடி மலை கிராம பகுதியில் நடைபெற்று வருவதாகவும் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இம்ரான் மகன் தஸ்தகீர் (வயது 23) என்பவர் சவுதி அரேபியாவுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி 6.95 லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
- தலைவாசல் போலீசார் கைது செய்து ஆத்தூர் 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்தவர்கள் அன்சர், ரஹீம், நசீம்.
இவர்களிடம் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இம்ரான் மகன் தஸ்தகீர் (வயது 23) என்பவர் சவுதி அரேபியாவுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி 6.95 லட்ச ரூபாய் வாங்கிக்கொண்டு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் அங்கிருந்து திரும்பி வந்த அவர்கள் தங்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி தஸ்தகீர் பணம் வாங்கி மோசடி செய்ததாக தலைவாசல் போலீசில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மேலும் அவர் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் பகுதியில் 7 பேரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்துள்ளதும், நாகப்பட்டினம் சிறையில் தஸ்தகீர் அடைக்கப்பட்டு ள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை தலைவாசல் போலீசார் கைது செய்து ஆத்தூர் 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் அருண்குமார், தஸ்தகீரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
- சென்னை அருகே உள்ள ஒரு கோவில் திருவிழாவுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு புறப்பட்டு சென்றனர். பின்னர் நேற்றிரவு சொந்த ஊருக்கு ஒரு சரக்கு வாகனத்தில் புறப்பட்டனர்
- காரிப்பட்டி போலீசார் காரை பறிமுதல் செய்து அட்வின்குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
கோவை மாவட்டம் செம்மேடு பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (45), இவரது மனைவி பத்மாவதி (40).இவர்களது மகள் மணிமேகலை (21), மகன் அருண்குமார் (19).
இவர்கள் சென்னை அருகே உள்ள ஒரு கோவில் திருவிழாவுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு புறப்பட்டு சென்றனர். பின்னர் நேற்றிரவு சொந்த ஊருக்கு ஒரு சரக்கு வாகனத்தில் புறப்பட்டனர்.
அந்த வாகனத்தை கரூர் மாவட்டம் வேடிச்சம்மபாளையம் ஒத்தையூர் பகுதியை சேர்ந்த மணிவேல் என்பவர் ஓட்டினார். இன்று அதிகாலை 2 மணியளவில் காரிப்பட்டி தனியார் பால் நிறுவனம் அருகே வந்த போது பின்னால் வந்த செங்கல்பட்டை சேர்ந்த அட்வின்குமார் (49) என்பவர் ஓட்டி வந்த கார் திடீரென சரக்கு வாகனம் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறிய சரக்கு வாகனம் தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வாகனத்தின் பின் பகுதியில் அமர்ந்து இருந்த பத்மாவதி, தேவராஜ், டிரைவர் மணிவேல் ஆகியோர் காயம் அடைந்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். தகவல் அறிந்த காரிப்பட்டி போலிசார் அங்கு விரைந்து வந்து அவர்களை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்தில் பத்மாவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தேவராஜ் மற்றும் மணிவேலுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து விசாரித்த காரிப்பட்டி போலீசார் காரை பறிமுதல் செய்து அட்வின்குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- அதன் ஒரு பகுதியாக சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம்:
போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மண்டல பொதுச்செயலாளர் அன்பழகன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன், ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இது குறித்து மண்டல பொதுச் செயலாளர் அன்பழகன் கூறுகையில் கடந்த 8 ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்வு கேட்டு பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வருகிறோம். இதுவரை தமிழக அரசு செவி சாய்க்கவில்லை. குறிப்பாக தீபாவளிக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து துறை செயலாளர் உறுதி அளித்தும் இதுவரை நிறைவேற்றவில்லை. மேலும் மருத்துவ காப்பீடு திட்டம் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்டமாக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் கூறினார்.
- பட்டாசு கடைகளில் அரசின் அறிவுறுத்தல் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
- சிவகாசியில் இருந்து அதிக அளவில் புதிய பட்டாசுகள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கடையிலும் 30 முதல் 40 லட்சம் வரை பட்டாசுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
சேலம்:
சேலம் புதிய பஸ் நிலையம் மற்றும் பழைய பஸ் நிலைய பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பட்டாசு கடைகளை கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார். அப்போது பட்டாசு கடைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்புகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து நிருபர்க ளிடம் அவர் கூறியதாவது:-
பட்டாசு கடைகளில் அரசின் அறிவுறுத்தல் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. சேலம் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் மற்றும் இரும்பாலை பகுதி என மொத்தம் 143 தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு கடைகளுக்கும் 3½ இடைவெளி விட்டு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
சிவகாசியில் இருந்து அதிக அளவில் புதிய பட்டாசுகள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கடையிலும் 30 முதல் 40 லட்சம் வரை பட்டாசுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
விபத்து இல்லாமல் மாசற்ற வகையில் தீபாவளியை அனைவரும் கொண்டாட வேண்டும். அரசின் அறிவுறுத்தல் படி அனைவரும் ஒத்துழைத்து பாதுகாப்பாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கொளத்தூரில் நடைபெற்ற கால்நடை வார சந்தையில் வெள்ளாடு, செம்மறிஆடு, குரும்பை ஆடு விற்பனை சூடு பிடித்தது.
- வெள்ளாடு கிடாய் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. அதேபோன்று செம்மறியாடு ரு.7 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூரில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நாளன்று கால்நடை வார சந்தைக்கு சுற்றுவட்டார கிராமப் பகுதியில் இருந்தும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகளும், விவசாயிகளும் கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம்.
இந்த நிலையில் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு இன்று கொளத்தூரில் நடைபெற்ற கால்நடை வார சந்தையில் வெள்ளாடு, செம்மறிஆடு, குரும்பை ஆடு விற்பனை சூடு பிடித்தது. வெள்ளாடு கிடாய் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. அதேபோன்று செம்மறியாடு ரு.7 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.
இதன் காரணமாக கொளத்தூர் கால்நடை வார சந்தையில் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கால்நடை விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளை விட வியாபாரிகள் அதிகளவில் கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வந்ததால் ஆடுகளின் விலை கிலோ ஒன்றுக்கு 1,200 ரூபாய் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டது.
- சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.
- ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் வருகை மிக குறைவாகவே உள்ளதால் அனைத்து சுற்றுலா தளங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.
குறிப்பாக சங்ககிரி, எடப்பாடி பகுதிகளில் கன மைழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது.
ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்கனவே பெய்த மழையால் ஆத்தூர் வசிஷ்ட நதியில் 2-வது நாளாக இன்றும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆத்தூர் முதல் தலைவாசல் வரை அதிக அளவில் தண்ணீர் செல்வதால் பொது மக்கள் அதிக அளவில் திரண்டு பார்வையிட்டு செல்கிறார்கள்.
சேலம் மாநகரில் நேற்று மாலை தொடங்கிய மழை இரவு வரை விட்டு விட்டு பெய்த படியே இருந்தது. மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, ஜங்சன், கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளிலும் இந்த மழை பெய்தது. இதனால் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் கடும் அவதிப்பட்டனர். மழையை தொடர்ந்து இரவில் கடும் குளிர் நிலவியது.
ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று பகலில் தொடங்கிய மழை இன்று அதிகாலை விடிய விடிய சாரல் மழையாக பெய்தது. மழையை தொடர்ந்து பனி மூட்டமும் நிலவுகிறது. இதனால் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருவதால் பொது மக்கள் அவதிப்பட்டு வருவதால் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
இதனால் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் வருகை மிக குறைவாகவே உள்ளதால் அனைத்து சுற்றுலா தளங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் கடைகளிலும் வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக சங்ககிரியில் 36.2 மி.மீ. மழை பெய்துள்ளது. எடப்பாடி 16.2, சேலம் 8.2, தலைவாசல் 7, வீரகனூர் 7, காடையாம்பட்டி 7,ஏற்காடு 4.4, ஓமலூர் 4, கரியகோவில் 4, ஆனைமடுவு 4, மேட்டூர் 3.4, கெங்கவல்லி 2, தம்மம்பட்டி 1, ஆத்தூர் 1, பெத்தநாயக்கன்பாளையம் 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 106.8 மி.மீ. மழை பெய்துள்ளது.
- பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதாலும், அணைக்கு நீர்வரத்து குறைந்ததாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது.
- அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சேலம்:
மேட்டூர் அணை மூலம் தமிழகத்தில் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இது தவிர பல்வேறு கூட்டு குடிநீர் திட்டப்பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 103 அடியாக இருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதாலும், அணைக்கு நீர்வரத்து குறைந்ததாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது.
இதையடுத்து கடந்த மாதம் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.
மழையின் காரணமாக நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 498 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் நேற்று காலை அது 10 ஆயிரத்து 514 கனஅடியாக அதிகரித்தது. மாலையில் அது 14 ஆயிரத்து 971 கனஅடியாக அதிகரித்தது.
இன்று காலை 8மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 57.18 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 445 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
- இந்த நிலையில் தீபாவளி பட்டாசு தற்காலிக கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் பழைய பஸ் நிலையத்தில் 25 பட்டாசு கடைகளுக்கும், புதிய பஸ் நிலையத்தில் 48 தற்காலிக கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
சேலம்:
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் பட்டாசு, இனிப்பு மற்றும் ஜவுளிகள் வாங்கி பண்டிகையை உற்சாகமுடன் கொண்டாட தயாராகி வருகிறார்கள்.
அனுமதி
இந்த நிலையில் தீபாவளி பட்டாசு தற்காலிக கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் பழைய பஸ் நிலையத்தில் 25 பட்டாசு கடைகளுக்கும், புதிய பஸ் நிலையத்தில் 48 தற்காலிக கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து கடந்த 2 நாட்களாக பட்டாசு விற்பனை கடைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்தது. தற்போது கடைகள் அமைக்கும் பணி நிறைவு பெற்று கடைகளில் பட்டாசுகள் வியாபாரத்திற்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதில் சிவகாசியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புதிய ரக பட்டாசுகள் அதிக அளவில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.
ஆர்வம்
பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு ஆர்வமாக பட்டாசுகளை வாங்கி வருகிறார்கள். சிறுவர்களும், பெரியவர்களும் பட்டாசு கடைகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். நாளையும், நாளை மறுநாளும் பட்டாசு கடைகளில் மேலும் கூட்டம் குவியும் என்பதால் புதிய ரக பட்டாசுகளை வாங்கி விற்பனைக்கு குவிப்பதில் வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
- 55-வது வார்டுக்கு உட்பட்ட தாகூர் தெரு, மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
- தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்படுவதாக அந்த பகுதி மக்கள் புகார்கள் கூறி வருகின்றனர்.
சேலம்:
சேலம் மாநகராட்சி 55-வது வார்டுக்கு உட்பட்ட தாகூர் தெரு, மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு மாநகராட்சி சார்பில் வாரத்திற்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்படுவதாக அந்த பகுதி மக்கள் புகார்கள் கூறி வருகின்றனர்.
இது குறித்து அதிகாரிகள் மற்றும் அந்த வார்டு கவுன்சிலரிடமும் பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் சுமார் 30 பேர் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்திற்கு காலி குடங்களுடன் திரண்டு வந்தனர். கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த கவுன்சிலர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு முன்பு போல 7 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரப்பரப்பு நிலவியது.






