என் மலர்
சேலம்
- கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- நிலத்தடி நீர் பாதிக்கும் எனக்கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
காக்காப்பாளையம்:
இளம்பிள்ளை அருகே இடங்கணசாலை நகராட்சிக்கு உட்பட்ட கே.கே. நகர் சின்ன ஏரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின் மயானம் அமைத்தனர்.
இந்நிலையில் மயானத்தின் எதிர்ப்புறம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நகராட்சி நிர்வாகம் சார்பாக இன்று 4 ஜே.சி.பி. எந்திரத்தை கொண்டு நிலத்தை சமன் செய்யும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் பணிகள் முடக்கப்பட்டது.
இந்த பகுதியில் ஏற்கனவே மின் மயானம், குப்பை கிடங்கு ஆகியன உள்ளது. மேலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் நிலத்தடி நீர் பாதிக்கும் எனக்கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், அருள் ஆகிய 2 பேரும் அங்குள்ள உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது அவர்கள் ஏற்கனவே இப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிப்படைந்துள்ளது. மேலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வந்தால் மேலும் பாதிப்படையும் எனவே மாவட்ட கலெக்டர் வந்தால் மட்டுமே கீழே இறங்குவதாக கூறி கோபாலகிருஷ்ணன் மற்றும் அருள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள். இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
இதையடுத்து அப்பகுதி மக்களிடம் இடங்கணசாலை நகராட்சி கமிஷனர் ஜேம்ஸ் கிங்ஸ்டன் மற்றும் மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் தங்கவேல், சங்ககிரி டி.எஸ்.பி. ராஜா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- சிறுமியின் கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் சான்றிதழ் வழங்கினர்.
- சேலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்தோஷ் திருமுருகவேளை சஸ்பெண்ட செய்து உத்தரவிட்டார்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் தலைவாசல் ஊராட்சி மும்முடி, எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி. இவரது 10 வயது மகள் தலைவாசல் அரசு தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த டிசம்பர் மாதம் 22-ந் தேதி வகுப்பறையில் இருந்தபோது தலைமை ஆசிரியர் திருமுருகவேள் (57), பாடம் தொடர்பாக கேள்வி கேட்டு, அவர் வைத்திருந்த மூங்கில் குச்சியை மாணவியை நோக்கி வீசினார்.
அப்போது அருகில் இருந்த மற்றொரு மாணவியின் இடது கண் மீது அந்த குச்சி விழுந்தது. இதில் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் பார்வை கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் சான்றிதழும் வழங்கினர்.
இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் கடந்த 24-ந் தேதி தலைவாசல் போலீசார் திருமுருகவேள் மீது வன்கொடுமை உள்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சேலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்தோஷ் திருமுருகவேளை சஸ்பெண்ட செய்து உத்தரவிட்டார். இதுகுறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், மாணவியின் மருத்துவ அறிக்கை பெறப்பட்டு, அரசு சார்பில் சிகிச்சை அளிப்பது தொடர்பாக கலெக்டர் மூலம் தமிழக அரசுக்கு விரைவில் அறிக்கை அனுப்பப்படும், அரசின் அறிவிப்புபடி அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றனர்.
- ஒட்டப்பட்டி, அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் காவடிகளை வைத்து சிறப்பு யாக பூஜை செய்தனர்.
- தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் பழனிக்கு இயக்கப்பட்டு வருகிறது.
எடப்பாடி:
தைப்பூச திருவிழாவையொட்டி எடப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் இருந்து திரளான மக்கள் பழனி பாதயாத்திரை மேற்கொள்வது வழக்கம். நிர்வாக வசதிக்காக பல்வேறு குழுக்களாக இவர்கள் பயணம் செய்து வருகின்றனர்.
நாச்சியூர் காவடிக்குழு, ஆலச்சம்பாளையம் காவடி குழு, மேட்டுத்தெரு காவடி குழு, சித்தூர் அனைத்து சமூக காவடி குழு, புளியம்பட்டி காவடி குழு உள்ளிட்ட பல்வேறு காவடி குழுவினர் பெரும் திரளாக பழனி பாதயாத்திரை மேற்கொண்டு வரும் நிலையில், 8-வது காவடி குழுவான புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த காவடி குழுவினர் நேற்று மாலை எடப்பாடியில் இருந்து பழனி பாதயாத்திரை தொடங்கினர். முன்னதாக அவர்கள் ஒட்டப்பட்டி, அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் காவடிகளை வைத்து சிறப்பு யாக பூஜை செய்தனர்.
அதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனி பாதயாத்திரை தொடங்கினர். எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பழனி பாதயாத்திரை மேற்கொண்ட நிலையில் நகரின் பெரும்பாலான பகுதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. நகரில் பெரும்பாலான குடும்பத்தினர் பழனி பாதயாத்திரை சென்றதால் எடப்பாடி நகரின் முக்கிய சந்திப்புகளில் கூடுதல் எண்ணிக்கையிலான போலீசார் இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பழனி சென்ற பக்தர்கள் ஊர் திரும்ப வசதியாக எடப்பாடியிலிருந்து, தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் பழனிக்கு இயக்கப்பட்டு வருகிறது.
- உற்பத்தி அதிகரிக்கும் போது, விலை குறைவதும் வாடிக்கையாக உள்ளது.
- கோழிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது.
சேலம்:
நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட பல்லடம், நாமக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினமும் 30 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
பண்ணை கொள்முதல் விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு (பி.சி.சி) சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. உற்பத்தி குறைவு, நுகர்வு அதிகரிக்கும் போது, அதன் விலை உயர்வதும், உற்பத்தி அதிகரிக்கும் போது, விலை குறைவதும் வாடிக்கையாக உள்ளது.
கடந்த 1-ந் தேதி கறிக்கோழி ஒரு கிலோ 102 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து 5-ந் தேதி 92 ரூபாய், 10-ந் தேதி 82 ரூபாய், 15-ந் தேதி 98 ரூபாய், 20-ந் தேதி 82 ரூபாய், 25-ந் தேதி 88 ரூபாய் என படிப்படியாக ஏற்றம், இறக்கம் காணப்பட்டது.
கடந்த 27-ந் தேதி 98 ரூபாய், நேற்று 107 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் படிப்படியாக விலை உயர்ந்து வருகிறது.
குறிப்பாக கடந்த 20-ந் தேதி 82 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை நேற்று 107 ரூபாயாக உயர்ந்ததால் 10 நாட்களில் கொள்முதல் விலை 25 ரூபாய் அதிகரித்துள்ளது குறிப்பிடதக்கது. இதனால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த விலை உயர்வுக்கான காரணம் குறித்து முட்டைக் கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:-
பொங்கல், தைப்பூசம் முடிந்துள்ளதால் தமிழகத்தில் நுகர்வு அதிகரித்துள்ளது. ஒரு கோழி 3 கிலோ, 2.7 கிலோ, 2.5 கிலோ என்ற நிலையில் இருந்தது. தற்போது 2 கிலோ, 2.2 கிலோவாக குறைந்துள்ளது. அதன் காரணமாக, 40 நாட்களில் பிடிக்க வேண்டிய கோழிகள், 41 நாட்கள் கழித்து பிடிக்கின்றனர். பொங்கல் பண்டிகையின் போது விற்பனை இருக்காது என்பதை கருத்தில் கொண்டு 5 வாரத்துக்கு முன்பே, 4 வாரம் கோழிக்குஞ்சு விடுவதை நிறுத்திவிட்டனர்.
அதனால் வரும் பிப்ரவரி மாதம் 9-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை ஒரு வாரத்திற்கு கறிக்கோழி தட்டுப்பாடு ஏற்படும். தற்போது வாரம் 4.50 கோடி கிலோ விற்பனையாகும் நிலையில், 50 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி சரிந்துள்ளது. அதன் காரணமாக கோழிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது. இனி வரும் நாட்களிலும் விலை உயர வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பூண்டு வரத்து சீசன் தொடங்கிவிட்ட நிலையில் சேலம் மொத்த சந்தையில் பூண்டு விலை அதிகமாகவே உள்ளது.
- இனி வரும் நாட்களில் பூண்டு வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்பு உள்ளது.
சேலம்:
தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் அதிக அளவில் பூண்டு பயிரிடப்படுகிறது. ஆானலும் தேவை அதிகமாக இருப்பதால் மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
ஆண்டு தோறும் ஜனவரி மாத பிற்பகுதியில் தொடங்கி மார்ச் மாத இறுதி வரை பூண்டு அறுவடை காலமாகும். இதனால் பொங்கல் பண்டிகைக்கு பிறகு வட மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பூண்டு மூட்டைகள் கொண்டு வரப்படும். இதனால் ஜனவரி இறுதியில் பூண்டு விலை குறைந்து மார்ச் மாதம் வரை 100 ரூபாய்க்கு விற்கப்படும்.
தமிழகத்தில் பூண்டு மொத்த விற்பனை சந்தைகளில் சேலம் லீபாஜார், பால் மார்க்கெட் உள்பட பல இடங்கள் முக்கிய இடம் வகிக்கிறது. தற்போது பூண்டு வரத்து சீசன் தொடங்கிவிட்ட நிலையில் சேலம் மொத்த சந்தையில் பூண்டு விலை அதிகமாகவே உள்ளது.
முதல் தர பூண்டுகள் கடந்த 2 மாதங்களாக 350 ரூபாய்க்கும் மேல் விற்பனையாகிறது. இதனால் பொது மக்கள் குறைந்த அளவே வாங்கி செல்கிறார்கள். சேலம் மொத்த சந்தைகளில் இருந்து நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்பட சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு பூண்டு மூட்டைகள் அனுப்பி வைக்கப்படும்.
ஆனால் அறுவடை காலம் தொடங்கியும் வட மாநிலங்களில் விளைச்சல் குறைவு காரணமாக வழக்கத்தை விட 4-ல் ஒரு பங்கு மட்டுமே சேலம் சந்தைக்கு பூண்டு கொண்டு வரப்படுவதால் விலை இன்னும் 350 ருபாயாக நீடிக்கிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இனி வரும் நாட்களில் பூண்டு வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
- காக்கா பிரியாணி இல்லை, சிக்கன் பிரியாணி என குறிப்பிடப்பட்டிருந்தது.
- பிரியாணி கடையை மூடிய போலீசார் கடை உரிமையாளரை எச்சரித்தனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் மாரிமுத்து சாலை பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 34). இவர் அங்குள்ள பழைய பஸ் நிலையத்தில் பிரியாணி கடை திறந்தார். இதற்கான திறப்பு விழா துண்டு பிரசுரத்தில் 10 ரூபாய் நாணயம் கொண்டு வந்தால் சிக்கன் பிரியாணி வழங்கப்படும். இது காக்கா பிரியாணி இல்லை, சிக்கன் பிரியாணி என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து காலை 11 மணிக்கு கடையை திறந்தபோது பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர். இதனால் அங்கு பிரியாணி வாங்குவதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையறிந்து அங்கு வந்த ஆத்தூர் டவுன் போலீசார் கூட்டத்தை கட்டுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால் கூட்டம் அதிகமாகவே பாதுகாப்பை கருத்தில் கொண்டு பிரியாணி கடையை மூடிய போலீசார் கடை உரிமையாளரை எச்சரித்தனர்.
இதனை தொடர்ந்து உரிமையாளர், 10 ரூபாய் பிரியாணி தீர்ந்துவிட்டது என அறிவிப்பு பலகை வைத்தார். இதை பார்த்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- அரசியல் கட்சியினர் கூட்டணி மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
- சண்முகம், சங்கர் மற்றும் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் உள்பட கட்சியினர் பங்கேற்றனர்.
சேலம்:
பாராளுமன்ற தேர்தலை ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சியினர் கூட்டணி மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று விழுப்புரத்தில் ஆலோசனை நடத்திய அவர் இரவில் சேலத்திற்கு வந்தார். அப்போது அவருக்கு கட்சி நிர்வாகிகள் திரண்டு வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து சேலம் மாநகர், சேலம் கிழக்கு, சேலம் வடக்கு, சேலம் மேற்கு ஆகிய ஒருங்கிணைந்த மாவட்டங்கள் சார்பில் செயல்வீரர்கள், வீராங்கணைகள் ஆலோசனை கூட்டம் சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் பகுதியில் உள்ள ஜி.வி.என். திருமண மண்டபத்தில் இன்று காலை தொடங்கியது.
இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் பாராளுமன்ற தேர்தல் குறித்தும், அதற்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் கட்சி நிர்வாகிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தி அறிவுரைகளை வழங்கினார். அப்போது கட்சியின் நிர்வாகிகள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் எஸ்.கே. செல்வம், மாதேஸ்வரன், சண்முகம், சங்கர் மற்றும் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் உள்பட கட்சியினர் பங்கேற்றனர்.
- தி.மு.க. பொறுப்பேற்று 2 ஆண்டு 8 மாத காலத்தில் அவர்கள் செய்த நன்மைகள் என்ன என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
- தினந்தோறும் கொலை, கொள்ளை, திருட்டு நடக்காத நாளே இல்லை.
சேலம்:
சேலம் மல்லமூப்பம்பட்டியில் தி.மு.க., பா.ம.க., கொ.ம.தே.க., உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். தொடர்ந்து அவர்களை வரவேற்று எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
அ.தி.மு.க. 30 ஆண்டுகால ஆட்சியின் காரணமாக இந்தியாவில் உயர்கல்வி படிப்பதில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. கல்வி புரட்சியில் அ.தி.மு.க. 30 ஆண்டு கால ஆட்சியில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியது. தி.மு.க. பொறுப்பேற்று 2 ஆண்டு 8 மாத காலத்தில் அவர்கள் செய்த நன்மைகள் என்ன என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

கருணாநிதி அவருக்கு பின்பு மு.க.ஸ்டாலின், தற்போது உதயநிதி, நடந்து முடிந்த தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் இன்பநிதியும் கலந்து கொண்டார். மன்னராட்சி முறையை கொண்டுவர தி.மு.க. முயற்சி செய்து வருகிறது. மக்களை பற்றி கவலைப்படுவதில்லை. அதிகார மையம் தி.மு.க.வில் அதிகரித்து விட்டது. தி.மு.க.வில் 4 முதலமைச்சர்கள் உள்ளனர். சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. தினந்தோறும் கொலை, கொள்ளை, திருட்டு நடக்காத நாளே இல்லை. கஞ்சா தாராளமாக கிடைக்கிறது. இதனால் மாணவர்கள், இளைஞர்கள் சீரழிகின்றனர். இதற்கு அரசு பதில் சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- முளைப்பாரி ஊர்வலமானது ஆலாந்துறையை அடுத்துள்ள கள்ளிப்பாளையத்தில் இருந்து தொடங்கியது.
- உள்ளூர் கிராம மக்கள் பாத யாத்திரை வந்த பக்தர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
ஈஷாவில் உள்ள லிங்கபைரவி சந்நிதியில் தைப்பூச திருவிழா இன்று (ஜன 25) மிகச் சிறப்பாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பெண் பக்தர்கள் முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்து வந்து லிங்கபைரவி தேவிக்கு அர்ப்பணித்தனர்.
இந்த முளைப்பாரி ஊர்வலமானது ஆலாந்துறையை அடுத்துள்ள கள்ளிப்பாளையத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு தொடங்கியது. உள்ளூர் கிராம மக்கள், பழங்குடி மக்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த தேவி பக்தர்கள் என ஜாதி, மத பாகுபாடுகள் இன்றி இந்த பாத யாத்திரையில் கலந்து கொண்டனர்.
ஆண்கள் சக்தி கரகம் ஏந்தி முன் செல்ல அவர்களை தொடர்ந்து முளைப்பாரியில் வடிவமைக்கப்பட்ட லிங்கபைரவி திருமேனியின் ரதத்தை பக்தர்கள் ஊர்வலமாக இழுத்து வந்தனர்.
வரும் வழியில் ஆலாந்துறை, இருட்டுப்பள்ளம், செம்மேடு, மலைவாசல் உள்ளிட்ட இடங்களில் உள்ளூர் கிராம மக்கள் பாத யாத்திரை வந்த பக்தர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். மதியம் 12 மணியளவில் இந்த யாத்திரை லிங்கபைரவி சந்நிதிக்கு வந்தடைந்தது. இதை தொடர்ந்து தேவிக்கு அபிஷேகமும் நடைபெற்றது.
புனிதமான தைப்பூச திருநாளில் ஏராளமான பக்தர்கள் தேவிக்கு தானியங்கள், தேங்காய், நெய் தீபம் உள்ளிட்டவற்றை அர்ப்பணித்து தேவியின் அருளை பெற்றனர். மேலும், தைப்பூசத்தை முன்னிட்டு கடந்த 21 நாட்கள் 'பைரவி சாதனா' என்ற பெயரில் விரதம் இருந்த ஆயிரக்கணக்கானோர் தங்களின் விரதத்தை இன்று நிறைவு செய்தனர்.
- போக்குவரத்து தொழிலாளர்களை ஏமாற்றும் ஆட்சி தான் திராவிட மாடல் அரசு.
- சேலம் தி.மு.க. மாநாட்டில் இருக்கைகள் காலியாக கிடந்தன என தெரிவித்தார்.
சேலம்:
சேலத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் 15 லட்சம் பேர் திரண்டனர். ஆனால், சேலம் தி.மு.க. மாநாட்டில் இருக்கைகள் காலியாக கிடந்தன.
நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து வாங்கிய பிரதிகள் மாநாட்டு திடலில் கிடந்தன. அவை குப்பைத்தொட்டிக்கு சென்றன. இவர்களா நீட் தேர்வை ரத்து செய்வார்கள். அவர்கள் ஏமாற்றுவதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்நிகழ்வு நீட் தேர்வில், தி.மு.க. எவ்வளவு அக்கறை செலுத்துகிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது. நீட் விவகாரத்தில் மக்களை ஏமாற்றும் நாடகத்தை ஸ்டாலினும், அவரது மகனும் அரங்கேற்றுகின்றனர்.
மக்களுக்கு உதவும் வகையில் தி.மு.க. தீர்மானங்களில் எந்த தீர்மானமும் இல்லை. திட்டமிட்டு மக்களையும் ஊடகத்தையும் ஏமாற்றும் அரசாக தி.மு.க. அரசு உள்ளது. அக்கட்சி அளித்த வாக்குறுதிகள் 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக பொய் சொல்கின்றனர்.
வெவ்வேறு கருத்துகள் கொண்ட கட்சிகள் தான் இண்டியா கூட்டணியில் இணைந்துள்ளன. அது எப்படி சரியாக இருக்கும்? அந்தக் கட்சிகள் இணைந்து செயல்படுவது கடினம். இன்னும் எத்தனை கட்சிகள் வெளியே செல்லும் என்பதைப் பார்ப்போம்.
கோவில்களை கட்டி வாக்குகளைப் பெறலாம் என பா.ஜ.க. நினைக்கிறதா? ராமர் கோவில் கட்டியதால் பா.ஜ.க. எப்படி வெற்றி பெறமுடியும்?
பாராளுமன்ற தேர்தலில் சூழ்நிலைக்கேற்ப கூட்டணி அமைக்கப்படும்.
5 ஆயிரம் பஸ்கள் வாங்குவோம் என ஒவ்வொரு ஆண்டும் சொல்கின்றனர். ஆனால் ஒரு பஸ் கூட வாங்கியதாக தெரியவில்லை. போக்குவரத்து கழகம் முற்றிலும் செயலிழந்து காணப்படுகிறது. போக்குவரத்து தொழிலாளர்களை ஏமாற்றும் ஆட்சி தான் திராவிட மாடல் அரசு. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை பணி ஆரம்பமாகி உள்ளது என தெரிவித்தார்.
- தி.மு.க.வைச் சேர்ந்தவர்களுக்கு பேச அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது.
- ஒரு அநாகரிகமான செயல்பாட்டுக்கு உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார் அருள் எம்.எல்.ஏ.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பாகல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது தி.மு.க.வைச் சேர்ந்தவர்களுக்கு பேச அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் எம்.எல்.ஏ. அருள் மாணவர்கள் மத்தியில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.
அப்போது பேசிய எம்.எல்.ஏ. அருள், ஒரு அநாகரிகமான செயல்பாட்டுக்கு உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னை மன்னிச்சிடுங்க. அரசியல் பண்ண விரும்பலை. நல்ல ஒழுங்கத்த கத்தக்கொடுக்கற இடத்தில உங்களுக்கு அவமரியாதை, அசிங்கப்படுத்திட்டாங்க. கட்சிக்காக பேசலை. மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன் என்றார்.
- அனல் மின்நிலைய சாலையில் உள்ள காடையாம்பட்டி செல்லும் கூட்டு குடிநீர் திட்ட ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வீணாக வெளியேறியது.
- ஒரு மணி நேரத்திற்கு தண்ணீர் வெளியேறியதால் பல லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணானது.
மேட்டூர்:
மேட்டூர் அருகே தொட்டில்பட்டி காவிரி ஆற்றில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு காடையாம்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு நாளொன்றுக்கு 28 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் மேச்சேரி, தொப்பூர், காடையாம்பட்டி, ஓமலூர், தாரமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அனல் மின்நிலைய சாலையில் உள்ள காடையாம்பட்டி செல்லும் கூட்டு குடிநீர் திட்ட ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வீணாக வெளியேறியது. ஒரு மணி நேரத்திற்கு தண்ணீர் வெளியேறியதால் பல லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணானது. இதனால் காடையாம்பட்டி பகுதிக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மின்மோட்டாரை ஆப் செய்து தண்ணீர் வெளியேறுவதை நிறுத்தினர்.
குடிநீர் குழாய் சேதமடைந்து காணப்படுவதால் இதே பகுதியில் பல முறை தொடர்ந்து குழாயில் உடைப்பு ஏற்பட்டு தற்காலிகமாக சரி செய்யப்பட்டு வருகிறது. பழுதான ராட்சத குழாயை நீக்கி புதிய குழாய் அமைத்தால் உடைப்பு ஏற்படாது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.






