என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் உள்ள சிப்காட் காவல் நிலையத்திற்கு நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி ஓடி சென்றனர்.

    காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

    காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • உறவினர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு வாலிபர் உடலை வாங்க சம்மதம் தெரிவித்தனர்.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

    ஓச்சேரி:

    ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த திருமால்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் கடந்த 16-ந்தேதி இளைஞர்கள் இடையே ஏற்பட்ட தகராறு ஏற்பட்டது.

    இதில் நெல்வாய் பகுதியை சேர்ந்த சூர்யா என்கிற தமிழரசன் (வயது23), விஜயகணபதி ஆகிய 2 பேர் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டனர். இதில் தமிழரசன் இறந்தார். இதையடுத்து தமிழரசனின் உடலை 23-ந்தேதி அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்தனர். ஆனால் உடலை வாங்க குடும்பத்தினர் மறுத்தனர்.

    தமிழரசனை எரித்து கொன்று கைதானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 3 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் நேற்று இரவு போராட்டக்காரர்கள் மற்றும் உறவினர்களை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சந்தித்து பேசினார். இதனையடுத்து உறவினர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு வாலிபர் உடலை வாங்க சம்மதம் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து 3 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. இன்று பிரேத பரிசோதனை முடிந்து உடல் வர இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

    • பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு நண்பர்களுடன் தப்பிச் சென்றார்.
    • 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    ஓச்சேரி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த நெல்வாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் சூர்யா என்கிற தமிழரசன், விஜயகணபதி. இவர்களுக்கும் திருமால்பூரை சேர்ந்த பிரேம் என்பவருக்கும் முன் விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடை பிரேம், தமிழரசன் மற்றும் விஜயகணபதி மீது பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு அங்கிருந்து தன் நண்பர்களுடன் தப்பிச் சென்றார்.

    இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 6 நாட்களாக தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தமிழரசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் பிரேம் உள்ளிட்ட நண்பர்கள் 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    நெல்வாய் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தின் காரணமாக அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் திருமால்பூர் மற்றும் நெல்வாய் பகுதிகளில் பதட்டமான சூழல் நிலவியது.

    • காயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் MBT சாலையில் பேருந்தும், ஈச்சர் வேனும் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு, போக்குவரத்து சீர் செய்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஹோங்பூ தொழில் குழுமத்தின் தலைவர் டி.ஒய்.சங்க்கிடம் கொள்கை அளவில் நிலம் ஒதுக்கீட்டு ஆணை அப்போது வழங்கப்பட்டது.
    • தொழிற்சாலை ரூ.1,500 கோடி முதலீட்டில் அமைவதையொட்டி 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.

    ராணிப்பேட்டை:

    பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் நாட்டிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் விளங்கி வருகிறது.

    தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை முன்னெடுத்து செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அயராத முயற்சியின் காரணமாக தமிழகம் மேலும் மேன்மை பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது.

    இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தைவானைச் சேர்ந்த ஹோங்பூ தொழில் குழுமம் தமிழக அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையுடன் கடந்த ஆண்டு காலணி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.

    இதைத் தொடர்ந்து ஹோங்பூ தொழில் குழுமத்தின் தலைவர் டி.ஒய்.சங்க்கிடம் கொள்கை அளவில் நிலம் ஒதுக்கீட்டு ஆணை அப்போது வழங்கப்பட்டது.

    அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்காவில் 125 ஏக்கர் நிலம் சிறப்பு பொருளாதார மண்டலத்திலும், 5 ஏக்கர் நிலம் உள் நாட்டு பயன்பாட்டுக்காகவும் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆரம்ப கட்ட பணிகள் அங்கு நடைபெற தொடங்கி உள்ளது.

    இந்த நிலையில் பனப்பாக்கத்தில் காலணிகள் உற்பத்தி தொழிற்சாலை தொடங்குவதற்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் முருகானந்தம், தொழில்துறை செயலாளர் அருண்ராய் மற்றும் தைவான் நாட்டைச் சேர்ந்த ஹோங்பு நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த தொழிற்சாலை ரூ.1,500 கோடி முதலீட்டில் அமைவதையொட்டி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.

    • பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்தார்.
    • மயங்கி விழுந்த மாணவியை பள்ளி நிர்வாகத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்தார்.

    மயங்கி விழுந்த மாணவியை பள்ளி நிர்வாகத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மாணவி உயிரிழந்ததையடுத்து அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் திடீரென மாணவி உயிரிழந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்தியாவிலேயே விளையாட்டு துறையில் தமிழகம் சாதனைகள் படைத்து வருகிறது.
    • மகளிர் சுயமரியாதையாக வாழ வேண்டும்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் இன்று காலை விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் சந்திரகலா தலைமை தாங்கினார். அமைச்சர் ஆர்.காந்தி, ஜெகத்ரட்சகன் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் முன்னிலை வகித்தனர்.

    இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு 288 ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:

    இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக செயல்பட்டு வருகிறது. விளையாட்டு துறையில் சாதிக்கக்கூடிய வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    அரசு சார்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்தோம். விரைவில் முதலமைச்சர் கைகளால் விளையாட்டு வீரர்கள் 100 பேருக்கு வேலை வழங்கி வாக்குறுதியை உறுதி செய்வோம்.

    இந்தியாவிலேயே விளையாட்டு துறையில் தமிழகம் சாதனைகள் படைத்து வருகிறது. பலவிதமான விருதுகளை தமிழக விளையாட்டு துறை பெற்று வருகிறது. கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநில விருது தமிழகத்திற்கு கிடைத்தது பெருமைக்குரியது.

    புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. யாருக்கு என்ன தேவை என்பதை அறிந்து வழங்குவது தான் திராவிட மாடலின் தனித்துவம்.

    மகளிர் சுயமரியாதையாக வாழ வேண்டும். யாருடைய ஆதரவும் இல்லாமல் தலை நிமிர்ந்து வாழ்வதற்காக மகளிர் சுய உதவி குழுக்கள் தொடங்கப்பட்டது அவர்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. பெரியார் கண்ட கனவை கலைஞர் கருணாநிதி இதன் மூலம் சாத்தியபடுத்தினார்.

    இதுவரை மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூ.92 ஆயிரம் கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் உள்ள மகளிர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் அரணாக நின்று காத்து வருகிறார். இன்று 3000 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் அவர்களுடைய வாழ்க்கை மேம்படும்.

    நான் உங்கள் வீட்டு பிள்ளையாக துணை நிற்பேன்.

    மாற்றுத்திறனாளிகளின் சிரிப்புதான் திராவிட மாடலின் வெற்றி. மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் செயற்கை கால்கள் வழங்கப்படுகிறது. நாங்கள் உங்கள் வீடு தேடி வந்து நலத்திட்டங்களை வழங்குகிறோம்.

    கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடுகள் வீட்டுமனை பட்டா வழங்கப்படுகிறது. திராவிட மாடல் என்றால் என்ன என சிலர் கேட்கிறார்கள். எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல்.

    நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் விடியல் பயண திட்டத்தில் முதல் கையெழுத்திட்டார். இதன் மூலம் இதுவரை 580 கோடி பெண்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்துள்ளனர்.

    அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வரை மிச்சமாகிறது. இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மாதந்தோறும் ரூ. ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

    மகளிர் வளர்ந்தால் மாநிலம் வளரும். மக்களோடு மக்களாக கைகோர்த்து இந்த அரசு செயல்படும். முதலமைச்சர் உங்கள் குடும்பத்தின் ஒருவராக துணையாக இருப்பார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மின்சார ரெயில் புளியமங்கலம், மோசூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று பயணிகளை ஏற்றி செல்லும்.
    • ரெயிலுக்காக காத்திருந்த பயணிகள் ரெயில் நிற்காமல் சென்றதால் அதிர்ச்சிடைந்தனர்.

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு தினமும் காலை 6.40 மணிக்கு மின்சார ரெயில் இயக்கப்படுகிறது.

    இந்த மின்சார ரெயில் புளியமங்கலம், மோசூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று பயணிகளை ஏற்றி செல்லும்.

    இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல அரக்கோணத்தில் இருந்து ரெயில் புறப்பட்டது. ஆனால் புளியமங்கலம், மோசூர் ரெயில் நிலையங்களில் மின்சார ரெயில் நிற்காமல் சென்றது. ரெயிலுக்காக காத்திருந்த பயணிகள் ரெயில் நிற்காமல் சென்றதால் அதிர்ச்சிடைந்தனர்.

    இதுகுறித்து பயணிகள் ரெயில்வே அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர் ரெயில் திருவள்ளூர் சென்றவுடன் ரெயில்வே அதிகாரிகள் டிரைவரை மாற்றி வேறு ஒரு டிரைவரை மூலம் ரெயில் இயக்கப்பட்டது. இது சம்பந்தமாக ரெயில்வே துறை அதிகாரிகள் டிரைவரிடம் தூக்க கலக்கத்தில் ரெயிலை இயக்கினாரா? அல்லது கவனக்குறைவால் நடந்ததா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மாணவர்களை புத்தகம் வாசிக்க வைத்து கற்றல் திறனை கண்டறிந்தார்.
    • கொள்கையை விட்டுக் கொடுத்து மத்திய அரசிடம் பணம் பெற அவசியம் இல்லை.

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த பெருமூச்சி கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் இன்று காலை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது மாணவர்களை புத்தகம் வாசிக்க வைத்து கற்றல் திறனை கண்டறிந்தார்.

    பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்து வருகிறோம்.

    பெருமூச்சி அரசு நடுநிலைப் பள்ளிக்கு ஆய்வு மேற்கொண்டபோது மாணவர்கள் திறமையுடன் பதில் அளித்தனர். இதனை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். மாணவர்களின் கல்வி தரம் உயர்ந்துள்ளது.

    கல்வித்துறைக்கு சட்டசபை வரலாற்றிலேயே அதிக நிதியை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார். வருகிற 2026-ம் ஆண்டுக்குள் பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் சரி செய்யப்படும்.

    ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். ஒரு பள்ளிக்கு தலைமை ஆசிரியர் மிக முக்கியம். அவர் கப்பலின் கேப்டனை போல. ஆசிரியர்கள் அவருடன் இருந்து சிறப்பாக பணியாற்றுவதால் அந்த பள்ளி சிறப்பாக செயல்படுகிறது.

    கொள்கையை விட்டுக் கொடுத்து மத்திய அரசிடம் பணம் பெற அவசியம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கு முன்னதாக அந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டம், சமையல் கூடத்தையும் பார்வையிட்டார்.

    • கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    • சிவலிங்கம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது.

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த கரியாக்குடல் கிராமத்தில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான அகிலாண்டேஸ்வரி சமேத கைலாசநாதர் திருக்கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் நேற்று கந்த சஷ்டி விழா நடந்தது. இதையொட்டி அதிகாலை கைலாசநாதர் மற்றும் வள்ளி தெய்வானை சமேத முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.

    பூஜை நடந்து கொண்டிருந்த போது சிவலிங்கத்தில் திடீரென ஒற்றைக் கண் தோன்றியது. 

    இதை பார்த்த பக்தர்கள் சிவலிங்கம் நெற்றிக்கண் திறந்து விட்டதாக பரவசம் அடைந்தனர். மேலும் ஓம் நம சிவாய என கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த தகவல், சுற்று வட்டார பகுதிகளில் வேகமாக பரவியது. இந்த நிகழ்வை பக்தர்கள் சிலர் போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த அரிய காட்சியை கண்டு பக்தர்கள் பரவசத்தில் மூழ்கினர்.

    பின்னர் சிவலிங்கம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • 2026-ம் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக்கு ஆட்சி பங்கீடு அமையும்.
    • விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் பா.ம.க. கூட்டணி போடுமா? என்று கேட்கிறார்கள்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் நடந்த பா.ம.க. நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். விழாவில் அவர் பேசியதாவது:-

    கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தற்போது நடந்திருக்கும் தாக்குதல் சம்பவத்தில் எங்களுடைய நோக்கம் பொதுமேடையில் வன்னியர் சங்க தலைவரை மிரட்டிய விதத்தில் பேசிய நபர் மீது குண்டர் சட்டம் செலுத்தப்பட்டு சிறையில் அடைக்க வேண்டும். எங்களது கட்சி நிர்வாகிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என்பது தான்.

    புதிய மாவட்டமாக ராணிப்பேட்டை அறிவிக்கப்பட்ட பிறகும், இந்த மாவட்டம் எவ்வித வளர்ச்சியும் அடையவில்லை. பாலாறு அணையில் தடுப்பணை வேண்டும், சோளிங்கரில் புறவழிச்சாலை வேண்டும் என்று மாவட்டத்தை சார்ந்த அமைச்சர் துரைமுருகனுக்கும் பலமுறை கோரிக்கை விடுத்துவிட்டோம்.

    பனப்பாக்கத்தில் நிறைய விவசாய நிலங்கள் டாடா கம்பெனிக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு வடமாநிலத்தில் இருந்து ஆட்களை பணிக்காக அமர்த்துகிறார்கள். சொந்த மண்ணில் உள்ள மனிதர்களை மதிப்பதில்லை. எனவே டாடா கம்பெனியில் 80 சதவீத வேலைவாய்ப்பானது அப்பகுதி மக்களுக்கே வழங்கப்பட வேண்டும். இல்லை என்றால் கம்பெனிக்காரர்கள் அங்கிருந்து திரும்பிச்செல்ல வேண்டும்.

    2026-ம் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக்கு ஆட்சி பங்கீடு அமையும். நல்ல கூட்டணி அமைப்போம். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் பா.ம.க. கூட்டணி போடுமா? என்று கேட்கிறார்கள். அதை சொல்வதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளது. அப்போது பாருங்கள்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற இரண்டு நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து நிராகரிக்கப்பட்டது. அதை எதற்காக கூட்டணி கட்சிகள் பெரிதுபடுத்தவில்லை? கவர்னர் தவறு செய்தால் மட்டும் கூச்சல் போடுகிறார்களே?

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மர்ம நபர்கள் 2 பேர் பேக்கரி கடையின் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த கீழ் புதுப்பேட்டை சோளிங்கர் சாலையில் ஏழுமலை (வயது 44 ) என்பவர் பேக்கரி மற்றும் சுவீட் கடை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல ஏழுமலை மற்றும் கடை ஊழியர்கள் வியாபாரம் முடிந்தவுடன் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் 2 பேர் பேக்கரி கடையின் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர். பின்னர் 2 பேரும் கடையின் உள்ளே இருந்த மிக்சர், சுவீட், கேக் ஆகியவற்றை வயிறார ருசித்து சாப்பிட்டனர். நன்றாக வயிறு நிரம்ப சாப்பிட்ட பிறகு கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 20 ஆயிரம் பணம் மற்றும் திருப்பதி உண்டியலில் இருந்த ரூ. 10 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    பின்னர் மீண்டும் மறுநாள் காலை ஏழுமலை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கடையின் கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் திருப்பதி உண்டியலில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரம் பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து ஏழுமலை வாலாஜா போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் பேக்கரி கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் திருடர்கள் 2 பேரும் சுவீட், கேக், மிக்சரை ருசித்து சாப்பிட்டுவிட்டு கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது . இது சம்பந்தமாக வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×