என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • வருகிற 26, 27 தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடக்கிறது.
    • கடந்த 12, 13-ந் தேதிகளில் சிறப்பு திருத்த முகாம்கள் நடத்தப்பட்டன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 59 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளனர். வாக்காளர் பதிவு அலுவலர்கள் வீடு வீடாக சென்று ஆதார் விபரங்களை பெற்று "கருடா" செயலியில் பதிவு செய்து வருகின்றனர்.

    இதனிடையே தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி கடந்த 9-ந் தேதி அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அன்று முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    2023 ஜனவரி 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம்.

    இதற்கான படிவத்தை பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் தாலுகா அலுவலகங்களில் உள்ள வாக்காளர் பதிவு அதிகாரியிடம் வழங்கலாம். தேசிய வாக்காளர் சேவை போர்ட்டல் (https://www.nvsp.in) அல்லது கைபேசி செயலி மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். இதுதவிர பெயர் நீக்கம், முகவரி மாற்றம், தொகுதிக்குள் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளையும் டிசம்பர் 8-ந் தேதி வரை மேற்கொள்ளலாம்.

    வேலைக்கு செல்வோரின் வசதிக்காக சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 12, 13-ந் தேதிகளில் சிறப்பு திருத்த முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 1371 வாக்குச் சாவடிகளிலும் வருகிற 26, 27ஆகிய நாட்களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு, பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், திருத்தம் தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறலாம். எனவே சிறப்பு முகாம்களை பொதுமக்கள் அனைவரும் தவறாது பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அக்னிதீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
    • கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    தமிழகத்தில் உள்ள முக்கிய இந்து கோவில்க ளில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலும் ஒன்று. காசிக்கு செல்லும் பக்தர்கள் ராமேசுவரம் ராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும் என்று ஐதீகம் உள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள்.

    முன்னோர்களுக்கு அமாவாசை தினங்களில் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தர்ப்பணம் செய்வது வழக்கத்தில் உள்ளது. இன்று கார்த்திகை மாத அமாவாசை தினம் என்பதால் ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் இன்று புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் பலர் தங்களது முன்னோர்களுக்கு கடற்கரையில் தர்ப்பணம் செய்து சென்றனர். இதனால் ராமேசுவரத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அங்குள்ள 22 தீர்த்தங்களிலும் பக்தர்கள் நீராடி சுவாமி மற்றும் அம்மன் சன்னதிகளில் தரிசனம் செய்தனர்.

    • வேகமாக சென்ற படகை துரத்தி பிடித்து சோதனை.
    • கைப்பற்றப்பட்ட பொருட்களின் சந்தை மதிப்பு சுமார் ரூ.1.3 கோடி.

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் பகுதியை சேர்ந்த இந்திய கடலோர காவல்படையினர் போதைப் பொருள் தடுப்பு பிரிவுடன் இணைந்து கடலில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ராமேஸ்வரம் அருகே கடலில் சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற படகை அவர்கள் தடுத்தி நிறுத்த முயன்றனர். ஆனால் அதிவேகமாக சென்ற அந்த படகை துரத்தி சென்ற கடலோர காவல்படையினர் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். 


    அந்த படகில் மேற்கொண்ட சோதனையின் போது 8 கோணிப்பைகளில் 300 கிலோ எடையுள்ள கஞ்சாவும், 500 கிராம் எடையுள்ள கஞ்சா எண்ணெயும் இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த படகில் இருந்த 4 பேரிடம் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் கஞ்சா எண்ணெயின் சந்தை மதிப்பு சுமார் ரூ.1.3 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற இளம்பெண் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
    • இதனை கண்ட தீயணைப்பு வீரர்கள் அவரை தடுத்து அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் பரளை பகுதியை சேர்ந்தவர் லட்சுமி(வயது 26). இவர் நேற்று தனது கைக்குழந்தையுடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்தார். அவர் தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்வதாகவும், திருமணத்தின் போது பெற்றோர்கள் கொடுத்த 10 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை தர மறுக்கிறார் என்றும், அவரிடம் இருந்து தனது நகை மற்றும் பணத்தை மீட்டுத் தருமாறு கலெக்டரிடம் மனு அளித்துவிட்டு வெளியே வந்தார்.

    பின்னர் லட்சுமி திடீரென்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் தன் மீதும் தன் குழந்தை மதிவர்ஷிதா மீதும் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட தீயணைப்பு வீரர்கள் அவரை தடுத்து அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர். போலீசார் பேரிகாட் அமைத்து நுழைவு வாயில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போதிலும் போலீசாருக்கு 'டிமிக்கி' கொடுத்து பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மனு கொடுக்க வந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் கையில் வைத்திருந்த மண்எண்ணை கேனை தன் மீதும் குழந்தை மீதும் தனக்குத்தானே ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாக கேணிக்கரை சப்-இன்ஸ்பெக்டர் கார்மேகம் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் இளம்பெண் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    • தொண்டி, திருவாடானை பகுதிகளில் சோமவார பிரதோச வழிபாடு நடந்தது.
    • பூஜைக்கான ஏற்பாடுகளை வாசு, சுவாமிநாதன் செய்தனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள நம்புதாளை அன்னபூரனேசுவரி சமேத நம்புஈசுவரர் கோவிலில் சோமவார பிரதோச வழிபாடு நடந்தது. நந்திக்கு மஞ்சள், சந்தனம், பால், பன்னீர், இளநீர், தயிர், அரிசிமாவு, விபூதி, பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், நாகநாதர், பைரவர், விஷ்ணு துர்க்கை, விநாயகர் முருகன், கல்யாண நவக்கிரகம் ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அதேபோல் தொண்டி சிதம்பரேசுவரர், திருவாடானை ஆதிரத்தினேசுவரர், தீர்த்தாண்டதானம் சர்வதீர்த்தேசுவரர், ஓரியூர் சேயுமானவர் ஆகிய சிவாலயங்களிலும் சோமவார பிரதோச வழிபாடு நடந்தது. உற்சவமூர்த்தி வீதிஉலா நடைபெற்றது. வாசு, சுவாமிநாதன் பூஜை ஏற்பாடுகளை செய்தனர். பக்தர்களுக்கு பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    • தலைக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் கிடையாது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • 123 விபத்துகள் இருசக்கர வாகனங்களால் ஏற்பட்டு 126 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 2022 முதல் செப்டம்பர் 2022 வரையிலான காலத்தில் 262 வாகன விபத்துகள் ஏற்பட்டு அதன் மூலம் 281 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதில் 123 விபத்துகள் இருசக்கர வாகனங்களால் ஏற்பட்டு 126 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

    தற்போது தலைக்கவசம் அணியாமல் வரும் பொது மக்களிடம் ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்படு வதுடன், ஓட்டுனர் உரிமம் ரத்து செய்வது குறித்தும், குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளுதல் குறித்தும், பெட்ரோல் பங்கில் தலைக்கவசம் அணியாமல் வருபவர்க ளுக்கு பெட்ரோல் வழங்காமல் இருப்பது குறித்தும் நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்து சாலை பாதுகாப்பு கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது.

    மேலும் இருசக்கர வாகன விபத்தில் பின்னால் அமர்ந்திருக்கும் பெண்களே அதிக அளவில் இறப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இருசக்கர வாகன விபத்துகளின் மூலம் ஏற்பட்ட 126 மனித உயிரிழப்புகளில் 99 சதவீதம் மனித உயிரிழப்புகள் தலைக் கவசம் அணியாததால் ஏற்பட்டுள்ளது.

    எனவே மோட்டார் வாகன சட்டப்படி இருசக்கர வாகனத்தினை இயக்குபவரும், உடன் பயணிப்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும், 2 நபர்களுக்கு மேல் இருசக்கர வாகனத்தில் பயணிக்கக்கூடாது. நகர எல்லைக்குள் இரு சக்கர வாகனத்தினை இயக்கும் போது 40 கி.மீ., வேகத்திற்கு மிகாமல் மித வேகத்தில் பாதுகாப்பாக வாகனத்தை இயக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடலாடி ஒன்றியத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
    • கடந்தாண்டு எந்தவித தட்டுப்பாடின்றி உரங்கள் வழங்கியும் விவசாயிகளுக்கு முழு கடன் தொகையும் வழங்கி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டன.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்தில் கடலாடி சாயல்குடி நரைப்பையூர், எஸ்.தரைக்குடி, டி.எம்.கோட்டை, பிள்ளையார் குளம், மேலக்கிடாரம், சிக்கல், ஏ. புனவாசல், பூக்குளம், ஆப்பனூர், உச்சிநத்தம், உள்ளிட்ட கிராமங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

    கடலாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு இச்சங்கங்கள் பயிர் கடன் வழங்கி வருகின்றன. ஆனால் தற்போது குறிப்பிட்ட விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டதாகவும், அவர்களுக்கு தர வேண்டிய உரங்களை வழங்கவில்லை எனவும் இந்தப்பகுதி விவசாயிகள் வேதனையோடு தெரிவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடலாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் விவசாயிகள் விதைத்து பயிர்கள் நன்றாக முளைத்து வந்துள்ளன. இப்பகுதியில் உள்ள கண்மாய்களில் தண்ணீர் இல்லை என்றாலும் வயல்களில் தண்ணீர் அதிகமாக உள்ளது. தற்போது வயல்களில் உள்ள நெல் பயிருக்கு யூரியா மற்றும் அடி உரமாக டி.ஏ.பி. போட்டால் பயிர்கள் நன்றாக வளர்ந்து மகசூல் தரும்.

    தனியார்கள் உரங்களை அதிகமாக விற்பனை செய்வதால் விவசாயிகள் இந்தப்பகுதியில் அதிகமா னோர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெற்று விவசாயம் செய்து வருகின்றனர். கூட்டுறவு கடன் சங்கங்களில் உரம் மற்றும் டி.ஏ.பி. வழங்கியும் மீதமுள்ள கடன் தொகை விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்படுவது வழக்கம்.

    கடந்தாண்டு எந்தவித தட்டுப்பாடின்றி உரங்கள் வழங்கியும் விவசாயிகளுக்கு முழு கடன் தொகையும் வழங்கி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டன.

    ஆனால் இந்த ஆண்டு இப்பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கள அலுவலர்களால் முறையாக மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து இப்பகுதி விவசாயிகளுக்கு முறையாக உரங்கள் வழங்காமல் கடன் தொகை முழுவதும் விவசாயிகளுக்கு வழங்கா மலும் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் விவசாயம் பாதிக்கும் நிலை உருவாகி வருகிறது.

    நல்ல மழை பெய்து கொண்டிருக்கும் போது வயல்களில் தண்ணீர் இருக்கும்போது உரிய நேரத்தில் உரங்கள் இடவில்லை என்றால் பயிர்கள் வளர்ச்சி குன்றி மகசூல் தராது. பயிர்க்கடன் மேளாவை நடத்தினால் மட்டும் போதாது. உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் முழுவதையும் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் வழங்கினால் மட்டுமே விவசாயிகள் பயன்பெறுவர். விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் வழங்கினால் அவர்கள் உரிய நேரத்தில் கடன்களை கூட்டுறவு கடன் சங்கங்களில் திருப்பி செலுத்துவதற்கு ஏதுவாக இருக்கும். விவசாயிகள் பணம் செலுத்தினால் மட்டுமே கூட்டுறவு கடன் சங்கங்கள் வளர்ச்சி அடையும்.

    எனவே மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் உரத்தட்டுப்பாட்டை போக்கி விவசாயிகளுக்கு கடன் தொகை முழுவதையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பரமக்குடி-ராமேசுவரம் நான்கு வழிச்சாலை பணியை துரிதப்படுத்த வேண்டும் என மத்திய மந்திரியிடம் பா.ஜ.க. தலைவர் கதிரவன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • உடனடியாக இதற்கான பணிகளை தொடங்கி நிறைவேற்ற வேண்டுமென கூறினர்.

    பனைக்குளம்

    ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. தலைவர் இ.எம்.டி. கதிரவன், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை இணை மந்திரி வி.கே.சிங்கை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான மதுரை முதல் பரமக்குடி வரை 4 வழி சாலை பணிகள் முடிந்தன. பிரதமர் மோடி ஆட்சியில் இந்த பணிகள் தொடங்கப்பட்டது. இந்த சாலை பணிகள் முடிவுற்று சில ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி மதுரை-பரமக்குடி 4 வழி சாலையை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    இதன் தொடர்ச்சியாக பரமக்குடி முதல் ராமேசுவரம் வரை 4 வழி சாலையாக மாற்றி தர வேண்டும். இந்தத் திட்டம் இதுவரை நிறைவே ற்றப்படாமல் உள்ளதால் உடனடியாக இதற்கான பணிகளை தொடங்கி நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அப்போது மாவட்ட தலைவருடன் ஐகோர்ட்டு வக்கீல் எஸ்.சண்முகநாதன், பா.ஜ.க. மாவட்ட துணைத் தலைவர் அழகர் உள்பட நிர்வாகிகள் இருந்தனர்.

    • சுகாதார ஆய்வாளரிடம் ரூ.80 ஆயிரம் நூதன முறையில் பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது.
    • அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே வட்டான் வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் சச்சின் டெண்டுல்கர் (வயது 24). இவர் உச்சிப்புளியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி ஒரு மொபைல் எண்ணில் இருந்து அவர் சம்பள வரவு, செலவு வைத்திருக்கும் வங்கி கணக்கில் பான் கார்டு பதிவு செய்யாமல் இருப்பதினால், வங்கி கணக்கினை நிறுத்தம் செய்ய போவதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.

    இதனை பார்த்த சச்சின் டெண்டுல்கர் அதனுடன் வந்த அப்டேட் செய்ய கொடுக்கப்பட்ட லிங்கை இணைபபு செய்து, அதில் கேட்கப்பட்ட சுய விபரம் மற்றும் ஓ.டி.பி. எண்ணினை தொடர்ந்து 3 முறை பதிவு செய்தார்.

    இதையடுத்து அடுத்த அவரது வங்கி கணக்கில் இருந்து அடுத்தடுத்து ரூ.79 ஆயிரத்து 998 பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுபற்றி ராமநாதபுரம் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பு தடையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
    • இது சம்பந்தமாக ராமநாதபுரம் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகர் கேபிள் டி, வி. ஆபரேட்டர்கள் சங்கத்தினர் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் நகர் பகுதியில் சுமார் 30 ஆயிரம் கேபிள் டி.வி. இணைப்புகள் உள்ளன. கடந்த 30 ஆண்டுகளாக கேபிள் டி.வி. தொழில் செய்து வருகிறோம். இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி முதல் அரசு கேபிள் டி.வி. இயங்கவில்லை. இதனால் அத்தனை இணைப்புகளையும் தற்போது இழந்து வரும் சூழ்நிலை உள்ளது.

    பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தனியார் சேவைக்கு மாறி வருகின்றனர். இதனால் கடந்த 30 வருடங்களாக வளர்த்து வந்த தொழிலை இழக்கும் சூழ்நிலையை அரசு கேபிள் டி.வி. நிர்வாகம் ஏற்படுத்தி உள்ளது. இதனால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இது சம்பந்தமாக அரசு கேபிள் டி.வி. நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது உடனடியாக வரும் என்று தொடர்ந்து வாய் வார்த்தைகளாகவே கூறி வருகின்றனர், ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை. அதனால் கேபிள் டி.வி.களுக்கு நோடல் அதிகாரியான தங்களை நாடி வந்துள்ளோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பணிக்காலத்தில் இறந்த 2 பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
    • இந்த ஆணையை ராமநாதபுரம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்த மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    மேலும் பெறப்பட்ட மனுக்களில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனி நபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் குறித்த மனுக்களே அதிகமாக இருந்தன.

    கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

    ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் பெறக்கூ டிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒரு மாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்க வேண்டும். தீர்வு வழங்க முடியாத மனுக்கள் குறித்து மனுதாரர்களிடம் உரிய காரணம் குறித்து எடுத்துரைக்க வேண்டும். அப்போது தான் அது போன்ற மனுக்கள் திரும்ப திரும்ப வராது. எனவே பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறை அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலகில், பரமக்குடி வட்டம், கொடிக்குளம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து 21.5.2018 அன்று பணியிடையே இறந்த மாரிமுத்து என்பவரது மனைவி கலையரசிக்கு இளநிலை வருவாய் ஆய்வாளர் பணி யிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையையும், முதுகுளத்தூர் வட்டம், புளியங்குடி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து 6.12.2017 அன்று பணியிடையே இறந்த சதீஸ் என்பவரது மனைவி ஜெயசிந்தியாவிற்கு இளநிலை வருவாய் ஆய்வாளர் பணியிடத்துக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையி னையும் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஷேக் மன்சூர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அபிராமம் வாரச் சந்தையில் எடை மோசடி நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
    • சரியான எடை அளவுடன் விற்பனை செய்ய தொழிலாளர் நலத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்திற்கு உட்பட்ட காடனேரி, நத்தம், அச்சங்குளம், அகத்தாரிருப்பு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அபிராமத்தில் திங்கட்கிழமை வாரச்சந்தை கூடுகிறது.

    இங்கு பொருட்கள் வாங்கும் பொதுமக்களிடம் வியாபாரிகள் தராசில் இரும்பு எடை கற்களால் எடை போடுகின்றனர். இதில் எடை குறைவாக உள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றப்படுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், காய்கறிகளை அள்ளி போட்டு ஒரு பக்க தராசு தட்டு தரையை தொடும் அளவிற்கு செய்கின்றனர்.வீட்டில் எடை போட்டால் குறைகிறது.

    எங்களை வியாபாரிகள் நூதன முறையில் ஏமாற்றுகின்றனர். வசதி உள்ளவர்கள் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்குகிறார்கள். நாங்களோ நம்பி இருப்பது வாரச்சந்தையை தான். சரியான எடை அளவுடன் விற்பனை செய்ய தொழிலாளர் நலத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    எடை கற்கள் மற்றும் எலக்ட்ரானிக் தராசுகளை பயன்படுத்துபவர்கள் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்திரையிட்டு அனுமதி பெற வேண்டும்.

    இதை பெரும்பாலான விற்பனையாளர்கள் பின்பற்றுவதில்லை. இதையும் முறையாக கண்காணிக்க வேண்டும் என்றனர்.

    ×