என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் 2-வது நாளாக போராட்டம் நடந்தது.
    • ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சார்பில் 2-வது நாளாக போராட்டம் நடந்தது.

    ராமநாதபுரம் 

    ஊரக வளர்ச்சித் துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், இரவு நேர ஆய்வுகள், காணொளி ஆய்வுகளை நிறுத்த வேண்டும். 25 ஊராட்சிகளை கொண்டதாக ஊராட்சி ஒன்றியங்களை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று முதல் விடுப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    2-வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்தது. மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் பெரும்பாலான அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகங்கள் வெறிச்சோடின. வழக்கமான அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டது, அடுத்த கட்டமாக டிசம்பர் 14ந் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக ஊரக வளர்ச்சி துறை அலுவலக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • குண்டும், குழியுமான சாலைகளால் ராமேசுவரம் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
    • தேசிய நெடுஞ்சாலைத்துறையும் பெயரளவில் மட்டுமே செயல்படுகிறது என பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.

    ராமேசுவரம்

    இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத்தில் பிரசித்தி பெற்றது ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலாகும். இங்கு தினமும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். தென்னகத்து காசி என்று அழைக்கப்படும் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது இந்துக்களின் கடமையாக கருதப்படுகிறது.

    இதே போல் பிரசித்த பெற்ற தனுஷ்கோடி, அப்துல்கலாம் நினைவு மண்டபம் போன்றவை காண நாள்தோறும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் நகரில் வாகனப் பெருக்கமும் அதிகரித்து வருகிறது. ஆனால் அதற்கேற்ப சாலைவசதிகள் ராமேசுவரத்தில் இல்லை என்பது கவலைக்குறியது.

    ராமேசுவரத்தில் 35 ஆயித்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பெரும்பாலான பகுதிகளில் குறைந்த அளவே அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதே போல் ராமேசுவரம் நகருக்கு வரும் யாத்திரீகர்கள், சுற்றுலா பயணிகள் ரெயில், பஸ் நிலையங்களில் இருந்து அரசு பஸ் மற்றும் ஆட்டோக்கள் மூலம் கோவிலுக்கு செல்கின்றனர்.

    ஆனால் ராமேசுவரத்தில் உள்ள முக்கிய சாலைகள் போக்குவரத்திற்கு லாயகற்ற நிலையில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் ராமேசுவரம் சாலையில் பயணம் என்பது சாகச பயணமாக மாறி வருகிறது. பள்ளத்தல் ஏறி, இறங்கும் மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவதும், இதில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் படுகாயமடைவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    ராமேசுவரம் நகரில் பாதாள பணிக்காக பல்வேறு பகுதிகளில் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. திரும்பிய திசை எல்லாம் குண்டும், குழியுமாக இருப்பதால் போக்குவரத்து என்பது சிரமாக மாறி உள்ளது. ராமேசுவரம் லட்சுமண தீர்த்தம் முதல் திட்டக்குடி கார்னர் நகராட்சி அலுவலகம் வரை 2 பகுதிகளிலும் பாதாள சாக்கடைக்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த சாலைகளில் கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் என்ற நிலையில் வாகனங்கள் சென்று வருகிறது.

    ராமேசுவரத்தில் அவல நிலையை போக்க மாவட்ட நிர்வாகமும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேசிய நெடுஞ்சாலைத்துறையும் பெயரளவில் மட்டுமே செயல்படுகிறது என பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.

    இந்தியாவில் ஆன்மீக நகரங்களில் முக்கியமானதாக உள்ள ராமேசுவரத்தில் தரமான சாலை அமைத்து போக்குவரத்திற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் அமைச்சர், தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கேபிள் டி.வி. செயலிழப்பு விரைவில் சரி செய்யப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • சீரமைக்கும் வரை வாடிக்கையாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அரசு கேபிள் டி.வி. செட்டாப் பாக்ஸ்களின் கட்டுப்பாட்டு மென்பொருளை அத்துமீறி இணைய வழியில் நுழைந்து செயலிழப்பு செய்த நிறுவனத்தின் மீது குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தகவல் தொழில்நுட்ப குழுவினர் மூலம் 50 சதவீதம் செட் அப் பாக்ஸ்கள் சரி செய்யப்பட்டுள்ளன. ஆப ரேட்டர்கள் நேரடியாக செட்டாப் பாக்ஸ்களில் சில மாற்றங்களை செய்து அதை இயக்கும் தற்காலிக தீர்வு குறித்தும் விளக்கப்பட்டு அம்முறையிலும் இந்த சிக்கலுக்கு தற்காலிக தீர்வு காணப்பட்டுள்ளது.

    தற்போது மென்பொருள்களை வழங்கிய முதன்மை நிறுவனத்துடன் அதை நேரடியாக பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடக்கிறது. விரைவில் தொழில்நுட்ப பிரச்சினைகள் சரி செய்வதற்கான பணிகள் நடக்கிறது. சீரமைக்கும் வரை வாடிக்கையாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • முதுகுளத்தூர் அருகே மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.
    • நலிந்தோர் உதவி திட்ட தாசில்தார் ஜெயக்குமார் வரவேற்றார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கீழத்தூவல் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் உதவி கலெக்டர் அப்தாப் ரசூல் தலைமையில், தாசில்தார் சிவகுமார் முன்னிலையில் நடந்தது. நலிந்தோர் உதவி திட்ட தாசில்தார் ஜெயக்குமார் வரவேற்றார். பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை உதவி கலெக்டர் அப்தாப் ரசூல் வழங்கினார். மொத்தம் 219 மனுக்கள் பெறப்பட்டன.

    இதில் 20 பேருக்கு முதியோர் உதவித்தொகையும், 4 பேருக்கு வீட்டுமனை பட்டாவும், 6 பேருக்கு பட்டா மாறுதல் மற்றும் விவசாயிகளுக்கு வேளாண்மை கருவிகளும் வழங்கப்பட்டன. கீழத்தூவல் கிராமத்தில் உள்ள ரேசன் கடையை உதவி கலெக்டர் ஆய்வு செய்தார். ரேசன் கடை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கண்டிப்பாக வேலை நாட்களில் திறந்து பொதுமக்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    முகாமில் முதுகுளத்தூர் ேவளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன், வழங்கல் அலுவலர் கதிரவன், மண்டல துணை தாசில்தார்கள் முருகேஷ், மீனாட்சி சுந்தரம், வருவாய் ஆய்வாளர் சேது மாணிக்கம், கிராம நிர்வாக அலுவலர் கருணாகரன், ஊராட்சி மன்ற தலைவர் காத்தாயி திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே தில்லையேந்தல் ஊராட்சியில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
    • தெருக்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் திருடர்கள் அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே தில்லை யேந்தல் ஊராட்சியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.

    ஊராட்சியில் உள்ள அனைத்து தெருக்களிலும் தண்ணீர் தொட்டி அமைத்து குழாய்கள் மூலம் தண்ணீர் வருவதற்கு பல லட்சம் செலவில் தமிழக அரசு ஏற்பாடுகள் செய்யப்பட்டும் மக்கள் பயன் பெற முடியவில்லை. இங்கு மாதத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் மட்டும் காவிரி தண்ணீர் வருகிறது. மற்ற நாட்களில் காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளது.

    இதனால் இந்தப்பகுதியில் உள்ள பெண்கள் முதல் சிறுவர், சிறுமிகள் 2 கிலோ மீட்டர் தொலைவில் இ.சி.ஆர். சாலையில் உள்ள கீழக்கரை துணை மின்நிலையம் அருகில் உள்ள குழாய்களில் இரவும், பகலுமாக தள்ளு வண்டிகளில் குடங்களை வைத்து இழுத்துச்சென்று குடிநீர் எடுத்து வரும் அவல நிலை இருந்து வருகிறது.

    லாரியில் விற்கப்படும் குடம் தண்ணீர் ரூ.10க்கு விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். உடனடியாக குடிநீர் வசதி செய்து தர வலியுறுத்தி தில்லையேந்தல் ஊராட்சி பெண்கள் ஏராளமானோர் திரண்டு வந்து கலெக்டர் நேர்முக உதவியாளர் ஷேக் மன்சூ ரிடம் மனு அளித்தனர்.

    இது தொடர்பாக ஊராட்சி தலைவர் கிருஷ்ண மூர்த்தி கூறியதாவது:-

    தில்லையேந்தல் ஊராட்சிக்கு காவிரி குடிநீர் முறையாக வருவது கிடையாது. மாதத்திற்கு 2 அல்லது 3 முறை தண்ணீர் திறந்து விடுவதால் மக்கள் குடிநீருக்காக பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    மாவட்ட கலெக்டர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து தில்லை யேந்தல் ஊராட்சியில் அனைத்து பகுதியில் உள்ள குடிதண்ணீர் குழாய்களில் தடையில்லாமல் குடிநீர் கிடைக்கவும், ஊரணிகள் தூர்வாரவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு பாலையாறு அருகே ஒரு கூட்டு குடிநீர் பைப்லைன் அமைக்க வேண்டும்.

    ஊராட்சி பகுதிகளை சுத்தம் செய்ய கூடுதலாக துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும். உடனுக்குடன் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்ய டிராக்டர் வசதி செய்து ஏற்படுத்தி தர வேண்டும்.

    கடந்த 5 ஆண்டுகளில் கிராமங்கள் அதிகமான பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் போதிய தெரு விளக்கு வசதிகள் செய்யவில்லை. தெருக்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் திருடர்கள் அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொருளாதார நெருக்கடியால் அங்கிருந்து அகதிகளாக மக்கள் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடிக்கு வரும் நிலை தொடர்ந்து வருகிறது.
    • படகோட்டிகளுக்கு ரூ.2 லட்சம் பணம் கொடுத்ததோடு, சில தங்க நகைகளையும் கொடுத்து அங்கிருத்து தப்பி வந்ததாக அகதிகள் தெரிவித்தனர்.

    தனுஷ்கோடி:

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு சமானிய மக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. அந்நாடு இயல்பு நிலைக்கு மீண்டு வந்து கொண்டிருக்கிறது.

    பொருளாதார நெருக்கடியால் அங்கிருந்து அகதிகளாக மக்கள் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடிக்கு வரும் நிலை தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே 199 பேர் அகதிகளாக வந்து முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 10 பேர் நேற்று முன்தினம் நள்ளிரவில் வந்தனர்.

    இலங்கையில் தலைமன்னார் பேசாலை பகுதியில் இருந்து படகு ஒன்றின் மூலமாக 3 குடும்பங்களை சேர்ந்த பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் உள்பட மொத்தம் 10 பேர் வந்தனர்.

    தனுஷ்கோடி அருகே உள்ள எம்.ஆர்.சத்திரம் கடற்கரைக்கு வந்து அவர்களை இறக்கிவிட்டு, அவர்களை அழைத்து வந்த படகோட்டிகள் இலங்கையை நோக்கி திரும்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து நேற்று அதிகாலை தகவல் கிடைத்ததும் ராமேசுவரம் கடலோர போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் 10 பேரையும் காவல்துறை வாகனத்தில் ஏற்றி மண்டபம் கடலோர காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

    படகோட்டிகளுக்கு ரூ.2 லட்சம் பணம் கொடுத்ததோடு, சில தங்க நகைகளையும் கொடுத்து அங்கிருத்து தப்பி வந்ததாக அகதிகள் தெரிவித்தனர். போலீசார் விசாரணைக்கு பின்னர் 10 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.

    • 3 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்ததாக கூறப்படுகிறது.
    • சில படகுகளில் மீனவர்கள் மீன்களுக்காக கடலில் விரித்திருந்த வலைகளையும் வெட்டி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்திலிருந்து நேற்று 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் நேற்று இரவு நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு 3 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்ததாக கூறப்படுகிறது. மேலும் ஒரு சில படகுகளில் மீனவர்கள் மீன்களுக்காக கடலில் விரித்திருந்த வலைகளையும் வெட்டி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

    இதன் காரணமாக அங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட்ட மீனவர்கள் தனுஷ்கோடி பகுதியை நோக்கி வந்து மீன் பிடித்தனர். இலங்கை கடற்படை விரட்டியடித்த இந்த சம்பவம் குறித்து இன்று காலை மீனவர்கள் கரை திரும்பிய பின்னரே முழுமையாக தெரியவரும். மேலும் இது தொடர்பாக கியூபிரிவு மற்றும் கடலோர போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அபிராமம் கண்மாய் நிரம்பாததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
    • தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து விவசாயிகளுக்கும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் வைகை பாசன பகுதிகள் அதிகமுள்ள பகுதியாகும். வைகை அணை நிரம்பியதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது.

    இதனால் ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வந்த தண்ணீர் கடலில் வீணாக கலக்கிறது. பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து வலது, இடது பிரதான கால்வாய்கள் மூலம் 100-க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது.

    வைகை ஆற்றில் பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து அபிராமம் கண்மாய்க்கு செல்லும் கால்வாய் தூர் வாரப்படாததால் சுமார் 7 கி.மீட்டர் தூரத்துக்கு மேல் கருவேல மரங்கள் வளர்ந்து மண்மேடாக காட்சி அளிக்கிறது.

    கால் வாய் தூர்வாரப்படாததாலும், முட்செடிகளை அகற்றாததாலும் அபிராமம், மற்றும் அதனை சுற்றியுள்ள 15-க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு இன்று வரை தண்ணீர் நிரம்பாத நிலை உள்ளது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:-

    அபிராமம் கண்மாயை சார்ந்துள்ள விவசாயிகள் சுமார் ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களில் நெல் பயிரிட முடியாத நிலை உள்ளது.

    இந்த பகுதியில் பருவமழை குறைவாக பெய்துள்ளதால் கண்மாய்க்கு வைகை பாசனம் மூலம் நீர் கிடைத்தால் நெல், மிளகாய், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் செழித்து நல்ல பலனை தரும். இதனால் விவசாயிகள் பயனடைவார்கள்.

    அபிராமம் பகுதி விவசாயிகள் தண்ணீரு க்காக கண்ணீருடன் ஏங்கும் நிலை உள்ளது. கடந்த ஆண்டு அபிராமம் பகுதி விவசாயிகளும், தன்னார்வலர்களும் கொடுத்த பணத்தால் கால்வாயை தூர்வாரி துப்புரவு பணி செய்தோம்.

    இப்போதும் பொதுப்பணித்துறையினர் கண்டுகொள்ளவில்லை. அதேபோல் இந்த ஆண்டும் அவர்கள் அபிராமம் கண்மாய் மற்றும் வரத்துக்கால்வாய் முட்செடிகளை அகற்றவும் இல்லை. தூர்வாரவும் இல்லை.

    தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து விவசாயிகளுக்கும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் நிரந்தர தீர்வுகாண பொதுப்பணி துறையினரும் கலெக்டரும் இணைந்து நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புயல் வலுவிழந்தததால் 5 நாட்களுக்கு பிறகு ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
    • மீன் வளத்துறை அதிகாரிகள் மூலம் அனுமதி வழங்கப்பட்டது.

    ராமேசுவரம்

    வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டல சுழற்சி புயலாக மாறியது. இதனால் ஆழ்கடலில் பலத்த சூறாவளி காற்று வீசத்தொடங்கியது. அதனுடைய தாக்கம் காரணமாக தமிழக கடலோரப்பகுதியில் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

    பாம்பனில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதையொட்டி மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதிக்கவில்லை. ராமேசுவரம் மண்டபம், பாம்பன் ஆகிய கடலோரப்பகுதியில் இருந்து கடந்த 18-ந்தேதி முதல் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. விசைப்படகுகளை கடலில் பாதுகாப்பாக நிறுத்தவும் மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களுக்கு அறிவுறுத்தி இருந்தனர்.

    அதன்படி விசைப்படகுகள் தரையில் நங்கூர மிட்டு நிறுத்தப்பட்டிருந்தன. இதைத்தொடர்ந்து புயலின் தாக்கம் குறைந்ததால் 5 நாட்களுக்கு பிறகு இன்று (23-ந் தேதி) காலையில் மீனவர்கள் மீன் பிடிக்கசெல்ல மீன் வளத்துறை அதிகாரிகள் மூலம் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் மீனவர்கள் ராமேசுவரம் மண்டபம் கடலோரப் பகுதியில் இருந்து மீன்வளத்துறை அதிகாரியிடம் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டு படகுகளில் மீன்பிடி உபகரணங்களை சேகரித்துக் கொண்டு மீன்பிடிக்க புறப்பட்டுச் சென்றனர்.

    ராமேசுவரம் பகுதியில் இருந்து 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று மீன் பிடிக்க சென்றனர்.

    • பச்சை கிளிகளை வேட்டையாடி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • புறநகர் பகுதிகளில் வீடு, கடைகளில் ரகசியமாக ரூ.200 முதல் ரூ. 300 வரை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட பகுதியில் கிராமப்புறங்களில் பனை மரங்கள், தென்னை மரங்கள் நிறைந்த தோப்புகள் உள்ளன. இங்கு ஏராளமான பச்சை கிளிகள் வசித்து வருகின்றன. தற்போது அவகைளை பார்ப்பது அரிதாகி விட்டது. இதையடுத்து வனத்துறையினர் கிளிகளை அரிய வகை பறவைகள் பட்டியலில் இணைத்து விற்பனை செய்வதற்கு தடை விதித்துள்ளனர்.

    இந்த வகை கிளிகளை வேட்டையாடுவதில் சிலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். பிடிக்கப்படும் கிளிகளை ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் வீடு, கடைகளில் ரகசியமாக ரூ.200 முதல் ரூ. 300 வரை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. கிளிகளுக்கு பேசும் திறன் இருப்பதால் வீடுகள், நிறுவனங்களில் பச்சை கிளியை விரும்பி வளர்க்கின்றனர். இவ்வாறு வீடுகளில் வளர்க்கப்படும் கிளிகளை பறிமுதல் செய்து வனத்தில் விட ணே்டும் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இது தொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, இந்திய வனச்சட்டப்படி மைனா, பச்சை கிளிகள் விற்பது, வீடு, கடைகளில் வளர்க்க தடை உள்ளது.

    குறிப்பாக பறவைகளை விற்பனை செய்ய முறைப்படி வனத்துறை அலுவலகத்தில் உரிமம் பெற வேண்டும். சோதனையின்போது பிடிப்பட்டால் ரூ.1000 முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். எனவே பச்சை கிளிகளை பொதுமக்கள் வாங்க வேண்டாம் என்று தெரிவித்தார்.

    • மழையின்றி நெற்பயிர்கள் கருகி வருகின்றன.
    • நிலுவையில் இருக்கும் பயிர் காப்பீடு தொகையை அரசு உடனே வழங்க வேண்டும்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் முக்கியமான தொழிலாக விவசாயம் அதிகளவில் நடைபெறுகிறது.

    பருவ மழை இல்லாமல் போனதால் சீமானேந்தல், குண்டுகுளம், வேப்பங்குளம், கோவிலாங்குளம், முதல்நாடு, பசும்பொன் ஆகிய கிராம பகுதிகளில் நெற்பயிர்கள் கருகி வருகிறது. இதுகுறித்து விவசாயி முருகேசன் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளாக கமுதி வட்டாரத்தில் சரியான மழையில்லாமல் போனதால் விவசாயம் சரிவர விளைச்சல் இல்லாமல் போய்விட்டது. அதுபோல 3 ஆண்டுகளாக எங்கள் பகுதிக்கு அக்ரி இன்சூரன்ஸ் நிறுவனம் இதுவரை பயிர் காப்பீடு நிதியை வழங்கவில்லை. நிலுவையில் இருக்கும் பயிர் காப்பீடு தொகையை அரசு உடனே வழங்க வேண்டும்.

    கடலில் வீணாக கலக்கும் வைகை ஆற்றின் தண்ணீரை கமுதி பகுதிக்கு கொண்டு வந்தால் விவசாயம் செழிக்கும். அதற்கு கலெக்டர், அமைச்சர், அதிகாரிகள் அனைவரும் கவனத்தில் கொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முன்வர வேண்டும் என்றார்.

    • காரைக்குடி-தூத்துக்குடி ரெயில் பாதையை செயல்படுத்த வேண்டும் என நவாஸ்கனி எம்.பி.யிடம் வலியுறுத்தினர்.
    • வேலை வாய்ப்பு பெருகும் என்பதால் பாராளுமன்றத்தில் இந்த பகுதியில் ரெயில் பாதை அமைக்க வலியுறுத்த வேண்டும்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனியிடம் பொது நலகமிட்டி தலைவர் பரமஞானம், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வேலுசாமி, வேம்பார் ஒன்றிய கவுன்சிலர் செல்வமணி, செல்லப்பாண்டி, நரிப்பை யூர் வட்டார காங்கிரஸ் தலைவர் ஞானசேகரன் ஆகியோர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் காரைக்குடியில் இருந்து ராமநாதபுரம், கீழக்கரை, சாயல்குடி, வேம்பார், தருவைகுளம் வழியாக தூத்துக்குடிக்கு புதிய ரெயில் பாதை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    தற்போது வரை அந்த பணிக்கான எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை. இந்த பகுதியில் ரெயில்வே பாதை அமையப்பெற்றால் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். வேலை வாய்ப்பு பெருகும் என்பதால் பாராளுமன்றத்தில் இந்த பகுதியில் ரெயில் பாதை அமைக்க வலியுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த கோரிக்கையை வருகிற பாராளுமன்ற கூட்டத்தொடரில் வலியுறுத்துவதாக நவாஸ்கனி எம்.பி. தெரிவித்தார்.

    ×