என் மலர்
ராமநாதபுரம்
- ராமநாதபுரம் ஐஸ்வர்யா பேக்கரியில் உலகக் கால்பந்து கோப்பை வடிவில் ஆளுயர கேக் உருவாக்கியுள்ளனர்.
- ஏராளமானோர் கேக் முன் நின்று செல்பி எடுத்து செல்கின்றனர்.
ராமநாதபுரம்
உலக கோப்பை கால்பந்து திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் ஐஸ்வர்யா பேக்கரிஸ் சார்பில் இளைஞர்க ளிடையே விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் உலகக் கால்பந்து கோப்பை வடிவ கேக்கை ஆளுயரத்தில் உருவாக்கியுள்ளனர்.
60 கிலோ சர்க்கரை, 260 முட்டைகள் கொண்டு 5½ அடி உயரத்தில் இந்த கோப்பை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று ஐஸ்வர்யா பேக்கரிஸ் உரிமையாளர் வெங்கடசுப்பு தெரிவித்தார்.
வடிவமைக்கப்பட்ட கேக் பாரதி நகர் ஐஸ்வர்யா பேக்கரியில் வாடிக்கை யாளர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் கேக் முன் நின்று செல்பி எடுத்து செல்கின்றனர்.
- இஸ்லாமியா பள்ளி மாணவ- மாணவிகள் கராத்தே, சிலம்பம் போட்டியில் சாதனை படைத்துள்ளனர்.
- இதேபோல் கட்டா, கும்தே பிரிவில் 3-வது இடம் பெற்று மாணவி ஹர்ஷிகா சாதனா சாதனை படைத்தார்

சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள்.
கீழக்கரை
சென்னை நீலாங்கரையில் உள்ள புத்தாக்க மையத்தில் 46-வது தேசிய கராத்தே போட்டி நடந்தது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி 7-வது வகுப்பு மாணவி ஹர்ஷிகா சாதனா, 8-வது வகுப்பு மாணவி ஹேமா வர்ஷினி, ஹேமா வர்ஷினி ஆகியோர் கட்டா பிரிவில் 2-வது இடமும், கும்தே பிரிவில் 3-வது இடமும் பெற்று சாதனை படைத்தனர். இதேபோல் கட்டா, கும்தே பிரிவில் 3-வது இடம் பெற்று மாணவி ஹர்ஷிகா சாதனா சாதனை படைத்தார்
பரமக்குடியில் நடை பெற்ற தேசிய அளவிலான 14 வயதுக்குட்பட்டோர் தனி நபர் பிரிவில் இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைபள்ளி, 10-ம் வகுப்பு மாணவன் கதிர்வேல் தென்னிந்திய அளவில் 3-ம் இடமும், மாவட்ட அளவில் 3-ம் இடமும் மற்றும் 9-ம் வகுப்பு மாணவன் மோஹித் மாவட்ட அளவில் (அடிமுறை) 2-ம் இடமும் பெற்றனர்.
மேலும் தென்னிந்திய அளவில் 13 வயதுக்கு உட்பட்டோர் (ஒத்த கம்பு) பிரிவில் 6- வகுப்பு மாண வன் சக்தி வீர கணபதி தென்னிந்திய அளவில் முதல் இடமும், மாவட்ட அளவில் 2-ம் இடமும் பெற்றார்.
மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்று மாவட்டத்திற்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிம் மற்றும் முதல்வர் மேபல் ஜஸ்டஸ், ஆசிரியர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.
- ஆர்.எஸ்.மங்கலத்தில் பாண்டிய மன்னன் கட்டிய கண்மாயை தூர்வார வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
- ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நதி நீர் இணைப்பை செயல்படுத்தியது இங்குள்ள பெரிய கண்மாய் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரத்தில் இருந்து காரைக்குடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 35 கி.மீ. தூரத்தில் உள்ளது ராஜசிங்க மங்கலம். இந்த ஊர் பெயரை ஆர்.எஸ்.மங்கலம் என சுருக்கமாக அழைத்து பழகிவிட்டனர்.
இந்த ஊரில் உள்ள கைலாச நாதர் கோவில், கலிய பெருமாள் கோவில், ராஜசிங்கப் பெருங்குளம் எனும் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் ஆகியவை புகழ் பெற்றவை. நீர் மேலாண்மையில் புகழ் பெற்ற பாண்டிய மன்னர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நதி நீர் இணைப்பை செயல்படுத்தியது இங்குள்ள பெரிய கண்மாய் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது.
20 கி.மீ தூரமுள்ள இந்த கண்மாய்க்கு ''நாரை பறக்க முடியாத-48 மடைகள் கொண்ட கண்மாய்'' என்ற சிறப்பு பெயரும் உண்டு. இந்த கண்மாயில் பாசன வசதிக்காக சுமார் 1 கி.மீ தூரத்திற்குள் குறைந்தது ஓரிரு மடை வீதம் அமைய பெற்றுள்ளது.
மற்றொரு சிறப்பு இந்த கண்மாயில் 1,205 மி.க. அடி தண்ணீரை தேக்க முடியும். சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது. இந்த கண்மாய் மடைகள் பெயரில் செட்டியமடை, பெருமாள் மடை, புல்லமடை, செங்கமடை என பல ஊர்கள் உள்ளன.
இந்த கண்மாய் பாசனத்தை நம்பி ஆர்.எஸ்.மங்கலம், செட்டியமடை, பிச்சனாக்கோட்டை, ரகுநாதமடை, நெடும்பு ளிக்கோட்டை, பொட்டக்கோட்டை, பனிக்கோட்டை, புலிவீர தேவ ன்கோட்டை, இருதயாபுரம், கீழக்கோட்டை, சிலுகவயல், இரட்டையூரணி, வில்லடி வாகை, புல்லமடை, வல்லமடை மட்டுமின்றி அருகில் உள்ள 72 சிறு கண்மாய் பகுதிகளான சோழாந்தூர், வடவயல், மங்கலம், அலிந்திக்கோட்டை உள்ளிட்ட பல கிராமங்களும் பாசன வசதி பெறுகின்றன.
தற்போது கரைகளை பலப்படுத்தியும், மடை களை, கலுங்குகளை பராமரித்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகள் யானைப்பசிக்கு சோளப்பொறி கொடுத்தது போன்றது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாற்று சிறப்பு மிக்க ஆர்.எஸ்.மங்கலம் கண்மாயை மத்திய, மாநில அரசுகள் சிறப்பு கவனம் செலுத்தி தனியாக சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து ஆண்டுதோறும் வற்றாமல் இருக்க, மழை நீர் கடலுக்குச் செல்லாமல் சேமிக்க, தமிழகத்திலேயே அதிகமான பரப்பளவு கொண்ட இந்த கண்மாயை முழுமையாக தூர்வார வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
- அபிராமத்தில் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் தொடங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
- அரசு நடுநிலைப்பள்ளியில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. பெயரளவிற்கு மட்டுமே செயல்படுகிறது.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம், அபிராமம் பேருராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் அரசுப்பள்ளியே இல்லாத அவலம் தொடருகிறது.
அபிராமம் பேருராட்சி மற்றும் சுற்றுபுற கிராமங்களில் உள்ள மாணவர்கள் அபிராமத்தில் உள்ள 2 தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர். அபிராமத்தில் 1905ம் ஆண்டு தொடங்கப்ட்ட அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. ஆனால் எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. பெயரளவிற்கு மட்டுமே செயல்படுகிறது.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயி கூறுகையில், அபிராமத்தை சுற்றிலும் கிராமங்கள் அதிகம் உள்ள பகுதி ஆகும். விவசாய கூலி வேலை செய்து பிழைத்து வரும் எங்கள் குழந்தைகளாவது படித்து முன்னேற வேண்டும் என்ற கனவோடுதான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். 8-ம் வகுப்பு வரை அரசுப்பள்ளி உள்ளது. மேல்நிலை, உயர்நிலை படிக்க 10.கி.மீட்டர் தூரம் சென்று 2 பஸ்கள் மாறி சென்று படிக்கும் நிலை உள்ளது.
அரசுப்பள்ளியில் படித்தால்தான் அரசு வழங்கும் சலுகைகள் பெறமுடியும். குறிப்பாக மருத்துவ கல்வியில் இடஒதுக்கீடு, கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் உள்பட பல திட்டங்கள் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கிடைக்கிறது.
அபிராமம், அதன் சுற்றுவட்டார பகுதி மாணவர்களின் துயர்துடைக்க தமிழக அரசும், பள்ளி கல்வி துறையும், மாவட்ட நிர்வாகமும் துரிதமாக செயல்பட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அபிராமம் பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, முதுகுளத்தூர், சாயல்குடி, மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி, அபிராமம் இந்த பேருராட்சிகளிலேயே அபிராமம் பேருராட்சி பகுதியில்தான் அரசுப்பள்ளியே இல்லாத நிலை உள்ளது.
தற்போது 117 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட அரசுப்பள்ளி 8-ம் வகுப்பு வரை இருக்கிறது. மேல்நிலை படிப்புக்கு வெளியூர் செல்லும் நிலையில் இருக்கிறோம். தமிழக அரசும், பள்ளி கல்வி துறையும் நேரிடையாக தலையிட்டு ராமநாதபும் மாவட்ட கலெக்டரின் பரிந்துரையின்பேரில் உயர்நிலை பள்ளி, மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தினால் அபிராமம் பகுதி மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறுவதுடன், அபிராமத்தை சுற்றியுள்ள மாணவர்களின் கல்வி தரம் மேம்படும். எனவே நடவடிக்கை எடுத்து உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகள் தொடங்க அரசு நடவடிக்க எடுக்க வேண்டும் என்றார்.
- கடந்த 9-ந் தேதி ஒரு செல்போனில் மேரி ஜெனிபர் போனை தொடர்பு கொண்டு நந்தினி என்ற பெண் பேசியுள்ளார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:
ராமேசுவரத்தை சேர்ந்தவர் மேரி ஜெனிபர் (வயது 35). இவர் குறிப்பிட்ட ஆன்லைன் நிறுவனத்தில் இருந்து அடிக்கடி துணிகளை ஆர்டர் செய்து வாங்கி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி ஒரு செல்போனில் மேரி ஜெனிபர் போனை தொடர்பு கொண்டு நந்தினி என்ற பெண் பேசியுள்ளார். அவர் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், 7-வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஆன்லைன் வழியாக பொருட்கள் வாங்கியவர்களுக்கு நடந்த குலுக்கலில் தங்களுக்கு ரூ.12 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள கார் பரிசு விழுந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதற்கு பரிவர்த்தனை கட்டணமாக 1 சதவீதம் ரூ.12 ஆயிரத்து 800 செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளார். மேலும் அவர் ஜெனிபர் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு பரிசு விழுந்ததற்கான கடிதத்தையும் அனுப்பியுள்ளார். அதில் 1 சதவீதம் ரூ.12 ஆயிரத்து 800 செலுத்த வேண்டும் என்று இருந்ததால், உடனே ஜெனிபர் பேசிய பெண்ணிடம் எனக்கு கார் வேண்டாம் என்றும் அதற்குரிய பணத்தை அனுப்பும் படி கூறி உள்ளார்.
உடனே அந்த பெண், ஜெனிபரின் வங்கி பாஸ்புக், ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட் புகைப்படம் ஆகியவற்றை கேட்டதால் அவர் அனுப்பியுள்ளார். பல்வேறு காரணங்களை கூறி ஜெனிபரிடம் இருந்து 4 தவணைகளில் மொத்தம் ரூ.88 ஆயிரத்து 400 பெற்றுள்ளார் .
இது குறித்து விசாரிக்க ஜெனிபர் பலமுறை முயற்சி செய்தும் தொடர்பு கிடைக்கவில்லை. அந்த செல்போன் சுவிட்ச்ஆப் ஆகி இருந்தது.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெனிபர் ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராமநாதபுரம் மாவட்ட உப்பளங்களில் விளைந்த உப்புகள் தார்ப்பாயால் மூடி பாதுகாக்கப்பட்டது.
- இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கல் உப்பு உற்பத்தி செய்யும் சீசன் தொடங்கியது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தொழிலுக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தி தொழில் அதிகமாக நடைபெற்று வருகிறது. ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலும் உப்பு உற்பத்தி நடைபெறும்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கல் உப்பு உற்பத்தி செய்யும் சீசன் தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டம் கோப்பேரிமடம், திருப்புல்லாணி, ஆணைகுடி, காஞ்சிரங்குடி, நதிப்பாலம், உப்பூர், திருப்பாலைக்குடி, சம்பை, பத்தனேந்தல் உள்ளிட்ட பல ஊர்களில் உப்பள பாத்திகளில் கல் உப்பு உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு நல்ல மழை பெய்தது. இதன் காரணமாக உப்பள பாத்திகள் முழுவதும் நீரில் மூழ்கி போனது. இதனால் கல் உப்பு உற்பத்தி செய்யும் பணி முழுமையாக பாதிக்கப்பட்டு உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டது.
கோடை காலத்தில் அதிகப்படியாக விளைந்த உப்பை பாத்திகளின் ஓரம் கொட்டி தார்ப்பாயால் பாதுகாத்து வருகின்றனர். உணவிற்கான உப்பு, ரசாயனம் மற்றும் உர தொழிற்சாலைக்காக சேமித்து வைக்கப்பட்டுள்ள உப்பு, சரக்கு லாரிகள் மூலம் தூத்துக்குடி, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.
பாத்திகள் முழுவதும் நீரில் மூழ்கி உள்ளதால் உப்பு உற்பத்தி செய்யும் தொழிலை நம்பி வாழும் ஏராளமான தொழி லாளர்கள் வேலை வாய்ப்பு இழந்து மாற்று தொழிலை தேடி வருகின்றனர்.
- திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலில் ரூ.26 லட்சம் உண்டியல் வசூலானது.
- இதில் ரூ. 26 லட்சத்தி 70 ஆயிரத்து 630-ம், 219 கிராம் 300 மில்லி கிராம் தங்கமும், 514 கிராம் வெள்ளியும் கிடைத்தது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள திருவெற்றியூரில், சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட வல்மீகநாதர் சமேத பாகம்பிரியாள் அம்மன் கோவில் உள்ளது. பல்வேறு நோய்களை குணப்படுத்தும் சக்தி வாய்ந்த தெய்வமாகக் கருதப்படும் இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு செய்கின்றனர். செவ்வாய், வியாழக்கிழமைகளில் கோவிலில் தங்கியிருந்து தெப்பக்குளத்தில் நீராடி நேர்த்திக்கடனாக தங்கம், வெள்ளி உலோகத்தில் உருவம் செய்து உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். பக்தர்கள் செலுத்திய உண்டியல்கள் திறந்து எண்ணும் நிகழ்ச்சி, இந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையர் தனசேகரன் தலைமையில் நடந்தது. தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் செந்தில்குமார், ஆய்வாளர் சண்முக சுந்தரம், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தரராஜன் முன்னிலையில் உண்டியல் காணிக்கை பணம் எண்ணப்பட்டது. இதில் ரூ. 26 லட்சத்தி 70 ஆயிரத்து 630-ம், 219 கிராம் 300 மில்லி கிராம் தங்கமும், 514 கிராம் வெள்ளியும் கிடைத்தது.
- உலக மரபு வார விழா தொல்லியல் கருத்தரங்கம் நடந்தது.
- உலக மரபு வார விழா நவம்பர் 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை உலக மரபு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம்
தொல்லியல் விழிப்புணர்வை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை உலக மரபு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையும், ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரியும் இணைந்து தொல்லியல் கருத்தரங்கத்தை நடத்தியது. கல்லூரி தாளாளர் தேவ.மனோகரன் மார்ட்டின் தலைமை தாங்கினார். முதல்வர் ஆனந்த் வரவேற்றார்.
ராமநாதபுரம் மாவட்ட தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் வே.ராஜகுரு, ராமநாதபுரம் மாவட்டத்தில் புதியதாகக் கண்டறியப்பட்ட கல்வெட்டுகள், தொல்லியல் இடங்கள், இயற்கை தாவரங்கள், நாணயங்கள் உள்ளிட்ட தடயங்கள் பற்றியும், ராமநாதபுரம் மாவட்ட தொல்லியல் அலுவலர் சுரேஷ், கீழடி, மயிலாடும்பாறை, கொற்கை, சிவகளை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட புதிய தொல்லியல் அகழாய்வுகள் பற்றியும், கல்லூரியின் முதலாமாண்டு மாணவி சிவரஞ்சனி நடுகற்கள், மலைக்குகைகள், முத்திரைகள், மோதிரங்கள், பானை ஓடுகளில் காணப்படும் சங்ககால தமிழ் எழுத்துப் பொறிப்புகள் பற்றியும் படங்களுடன் விளக்கினர். உதவிப் பேராசிரியர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
- தேனீ மகசூல் மூலம் அதிக வருவாய் ஈட்டி விவசாயி சாதனை படைத்துள்ளார்.
- தேனீ வளர்ப்பு மற்றும் பாராமரிப்புக்காக ரூ.2.40 லட்சம் செலவு செய்துள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் தெற்குத்தரவை கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் செயல் விளக்கத் திடலினை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் ஆய்வு செய்து பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்ட த்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் மூலம் தேனீக்கள் வாயிலாக மகரந்த சேர்க்கையை அதிகரிக்கும் இனத்தின் கீழ் தேனீப்பெட்டி மற்றும் தேனீ பிழிந்து எடுக்கும் கருவி வாங்கும் விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக 40 சதவீதம் வழங்கப்பட உள்ளது. அதற்காக 150 தேனீப்பெட்டிகள் வழங்க இலக்கு பெறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற குறைந்தப்பட்சம் விவசாயிக்கு 1 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும. அந்த நிலத்தில் பல்லாண்டு பயிர்கள் மா, கொய்யா போன்ற பழமரங்கள் மற்றும் முந்திரி போன்ற தரிசு நில பயிர்கள் அமைந்து இருக்க வேண்டும். ஒரு விவசாயிக்கு குறைந்தப்பட்சமாக 10 தேனீப்பெட்டிகள் அதிகப்பட்சமாக 50 தேனீப்பெட்டிகள் மற்றும் ஒரு தேன் பிழிந்து எடுக்கும் கருவி வழங்கப்படும். 10 தேனீப்பெட்டிகள் மற்றும் ஒரு தேன் பிழிந்து எடுக்கும் கருவியின் மொத்த விலை ரூ.60 ஆயிரம். அதில் 40 சதவீதம் அரசு மானியமாக ரூ.24 ஆயிரம் வழங்கப்படுகிறது.
தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் தெற்குத்தரவை கிராமத்தைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவருக்கு 10 தேனி வளர்ப்பு பெட்டிகள் வழங்கப்பட்டது. சிறப்பான பராமரிப்பால் தற்போது 400 தேனீ வளர்ப்பு பெட்டிகளை வைத்துள்ளார்.
தேனீ வளர்ப்பு மற்றும் பாராமரிப்புக்காக ரூ.2.40 லட்சம் செலவு செய்துள்ளார். தேன் மகசூல் மூலம் ரூ.2.20 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. மேலும் 100 பெட்டிகளை அவர் விற்பனை செய்ததன் மூலம் கிடைக்கப் பெற்ற வருமானம் ரூ.2.20 ஆகும். இந்த திட்டத்தின் மூலம் இதுவரை ரூ.3.40 லட்சம் வருமானம் ஈட்டி சாதனை படைத்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராமேசுவரத்தில் இருந்து மதுரை, பழனி வழியாக பாலக்காடுக்கு ெரயில் விட வேண்டும்.
- ராமேசுவரத்துக்கு வருகை தரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ராமேசுவரம்
உலகப் புகழ்பெற்ற ராமேசுவரத்தில் 12 ஜோதி லிங்கத்தில் ஒரு ஜோதிலிங்கம் ராமநாதசுவாமி கோவிலில் அமைந்திருப்பது ராமேசுவரத்துக்கு பெருமையாகும்.
இதனால் உலகம் நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்தும் சிவஸ்தலமான ராமேசுவரம் ராமநா தசுவாமி கோவிலில் வழிபாடு செய்வதற்கு தினமும் குறைந்தபட்சம் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
பெரும்பாலான தமிழகப் பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் ராமேசுவரத்தில் சுவாமி தரிசனம் செய்து விட்டு ஆன்மீகப் பயணமாக மற்ற தலங்களான பழனி, திருச்செந்தூர், பொள்ளாச்சி மாசாணி யம்மன் கோவில், பாலக்காடு பகவதி அம்மன் கோவில்களுக்கு செல்கின்றனர்.
ஆனால் ராமேசுவரம் வந்து மீண்டும் இந்த புனித தலங்களுக்கு செல்வதற்கு நேரடியாக ரெயில் போக்குவரத்து இல்லை. பஸ்களில் செல்ல வேண்டும் இதற்கு அதிக கட்டணம், அதிக பயண நேரம் ஆவதால் அதைத்தவிர்த்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பிச் செல்கின்றனர்.
எனவே ராமேசுவரத்தை மையப்படுத்தி மீட்டர் கேஜ் ரெயில் பாதையாக இருந்தபோது ராமேசுவரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு பாலக்காடு, திருச்சியை இணைக்கும் வகையில் பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் மானாமதுரையில் இருந்து திருச்சிக்கும், மதுரை, பழனி, பொள்ளாச்சி வழியாக பாலக்காடுக்கும் பிரிந்து சென்றது.
இந்த ரெயில் தினமும் இயக்கப்பட்டு வந்தது. இதனால் பக்தர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும், வர்த்தகர்களுக்கும் வசதியாக இருந்தது. இந்த ரெயில்கள் இயக்கப்பட்டபோது ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டம் ஆகிய பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் எந்தவித சிரமமின்றி பழனிக்கு சென்று வந்தனர்.
தற்போது அகல ரெயில் பாதையாக மாற்றிய பிறகு இந்த ரெயில் போக்குவரத்து நிறுத்தப்ப ட்டது. இதனால் பயணிகள் பழனி, பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவில், பாலக்காடு பகவதி அம்மன் கோவில்களுக்கு செல்வதை குறைத்துக் கொண்டனர்.
பயணிகள் மற்றும் பக்தர்களின் நலன் கருதி ரெயில்வே நிர்வாகம் மீட்டர் கேஜ் பாதையாக இருந்தபோது இயக்கப்பட்ட பாலக்காடு,திருச்சி பயணிகள் ரெயிலை முன் பதிவு வசதியுடன் இயக்கு வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமேசுவரத்துக்கு வருகை தரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- கடந்த சில நாட்களாக புயல் எச்சரிக்கை காரணமாக 5 நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
- வழக்கம்போல் கச்சத்தீவு கடல் பகுதியில் ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
ராமேசுவரம்:
ராமேசுவரம் பகுதியில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலை செய்து வருகின்றனர். 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித்தொழில் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் வாரத்தில் 3 நாட்கள் சுழற்சி முறையில் ராமேசுவரம் துறைமுக பகுதியில் இருந்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டு பாக்ஜலசந்தி கடலோரப் பகுதியில் மீன்பிடித்து வருவார்கள்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக புயல் எச்சரிக்கை காரணமாக 5 நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. நேற்று காலையில் மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான உபகரணங்களை சேகரித்துக் கொண்டு ராமேசுவரம் துறைமுக பகுதியில் இருந்து மீன்வளத்துறை அதிகாரியிடம் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டு 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
இவர்கள் வழக்கம்போல் கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை பார்த்ததும், ''இங்கு மீன்பிடிக்க வரக்கூடாது'' மீறி வந்து மீன்பிடித்தால் உங்களை கைது செய்வோம் என்று எச்சரித்து மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்தி விரட்டி விட்டனர்.
இதனால் உயிருக்கு பயந்தாக மீனவர்கள் நேற்று நள்ளிரவே ராமேசுவரம் பகுதிக்கு படகை எடுத்துக் கொண்டு வந்து விட்டனர். இதனால் தலா ஒரு படகுக்கு ரூ.50 ஆயிரம் முதல் நஷ்டம் ஏற்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதால் இந்த பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு கிடைக்க செய்ய வேண்டும் என்று கூறினர்.
- ராமநாதபுரத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
- அரசுத்துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதம் 2-வது மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த முகாமில் 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்த வேலைநாடுநர்கள், ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தகுதிக்கேற்ப தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறும் வாய்ப்பை பெறலாம்.
இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலை நாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலைநாடுநர்கள் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்துகொள்ளலாம்.
இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத்துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படும்.
மேலும் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்களுக்கு கட்டணமின்றி தமிழக அரசால் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் Tamil Nadu Private Job Portal www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள சேவை வழங்கப்படுகிறது.
இந்த இணையதளத்தில் பதிவு செய்து தனியார் துறை நிறுவனங்களும், வேலை தேடும் இளைஞர்களும் பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






