என் மலர்
உள்ளூர் செய்திகள்

உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் தொடங்குமாறு அரசுக்கு கோரிக்கை
- அபிராமத்தில் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் தொடங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
- அரசு நடுநிலைப்பள்ளியில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. பெயரளவிற்கு மட்டுமே செயல்படுகிறது.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம், அபிராமம் பேருராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் அரசுப்பள்ளியே இல்லாத அவலம் தொடருகிறது.
அபிராமம் பேருராட்சி மற்றும் சுற்றுபுற கிராமங்களில் உள்ள மாணவர்கள் அபிராமத்தில் உள்ள 2 தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர். அபிராமத்தில் 1905ம் ஆண்டு தொடங்கப்ட்ட அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. ஆனால் எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. பெயரளவிற்கு மட்டுமே செயல்படுகிறது.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயி கூறுகையில், அபிராமத்தை சுற்றிலும் கிராமங்கள் அதிகம் உள்ள பகுதி ஆகும். விவசாய கூலி வேலை செய்து பிழைத்து வரும் எங்கள் குழந்தைகளாவது படித்து முன்னேற வேண்டும் என்ற கனவோடுதான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். 8-ம் வகுப்பு வரை அரசுப்பள்ளி உள்ளது. மேல்நிலை, உயர்நிலை படிக்க 10.கி.மீட்டர் தூரம் சென்று 2 பஸ்கள் மாறி சென்று படிக்கும் நிலை உள்ளது.
அரசுப்பள்ளியில் படித்தால்தான் அரசு வழங்கும் சலுகைகள் பெறமுடியும். குறிப்பாக மருத்துவ கல்வியில் இடஒதுக்கீடு, கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் உள்பட பல திட்டங்கள் அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கிடைக்கிறது.
அபிராமம், அதன் சுற்றுவட்டார பகுதி மாணவர்களின் துயர்துடைக்க தமிழக அரசும், பள்ளி கல்வி துறையும், மாவட்ட நிர்வாகமும் துரிதமாக செயல்பட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அபிராமம் பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, முதுகுளத்தூர், சாயல்குடி, மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி, அபிராமம் இந்த பேருராட்சிகளிலேயே அபிராமம் பேருராட்சி பகுதியில்தான் அரசுப்பள்ளியே இல்லாத நிலை உள்ளது.
தற்போது 117 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட அரசுப்பள்ளி 8-ம் வகுப்பு வரை இருக்கிறது. மேல்நிலை படிப்புக்கு வெளியூர் செல்லும் நிலையில் இருக்கிறோம். தமிழக அரசும், பள்ளி கல்வி துறையும் நேரிடையாக தலையிட்டு ராமநாதபும் மாவட்ட கலெக்டரின் பரிந்துரையின்பேரில் உயர்நிலை பள்ளி, மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தினால் அபிராமம் பகுதி மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறுவதுடன், அபிராமத்தை சுற்றியுள்ள மாணவர்களின் கல்வி தரம் மேம்படும். எனவே நடவடிக்கை எடுத்து உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகள் தொடங்க அரசு நடவடிக்க எடுக்க வேண்டும் என்றார்.






