என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராமேசுவரம் மீனவர்கள் நடுக்கடலில் விரட்டியடிப்பு- இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அட்டூழியம்
- கடந்த சில நாட்களாக புயல் எச்சரிக்கை காரணமாக 5 நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
- வழக்கம்போல் கச்சத்தீவு கடல் பகுதியில் ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
ராமேசுவரம்:
ராமேசுவரம் பகுதியில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலை செய்து வருகின்றனர். 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித்தொழில் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் வாரத்தில் 3 நாட்கள் சுழற்சி முறையில் ராமேசுவரம் துறைமுக பகுதியில் இருந்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டு பாக்ஜலசந்தி கடலோரப் பகுதியில் மீன்பிடித்து வருவார்கள்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக புயல் எச்சரிக்கை காரணமாக 5 நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. நேற்று காலையில் மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான உபகரணங்களை சேகரித்துக் கொண்டு ராமேசுவரம் துறைமுக பகுதியில் இருந்து மீன்வளத்துறை அதிகாரியிடம் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டு 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
இவர்கள் வழக்கம்போல் கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை பார்த்ததும், ''இங்கு மீன்பிடிக்க வரக்கூடாது'' மீறி வந்து மீன்பிடித்தால் உங்களை கைது செய்வோம் என்று எச்சரித்து மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்தி விரட்டி விட்டனர்.
இதனால் உயிருக்கு பயந்தாக மீனவர்கள் நேற்று நள்ளிரவே ராமேசுவரம் பகுதிக்கு படகை எடுத்துக் கொண்டு வந்து விட்டனர். இதனால் தலா ஒரு படகுக்கு ரூ.50 ஆயிரம் முதல் நஷ்டம் ஏற்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதால் இந்த பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு கிடைக்க செய்ய வேண்டும் என்று கூறினர்.






