என் மலர்
உள்ளூர் செய்திகள்

தில்லையேந்தல் ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பெண்கள், கலெக்டர் நேர்முக உதவியாளர் ஷேக் மன்சூரிடம் மனு அளித்தனர்.
குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி
- ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே தில்லையேந்தல் ஊராட்சியில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
- தெருக்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் திருடர்கள் அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே தில்லை யேந்தல் ஊராட்சியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
ஊராட்சியில் உள்ள அனைத்து தெருக்களிலும் தண்ணீர் தொட்டி அமைத்து குழாய்கள் மூலம் தண்ணீர் வருவதற்கு பல லட்சம் செலவில் தமிழக அரசு ஏற்பாடுகள் செய்யப்பட்டும் மக்கள் பயன் பெற முடியவில்லை. இங்கு மாதத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் மட்டும் காவிரி தண்ணீர் வருகிறது. மற்ற நாட்களில் காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளது.
இதனால் இந்தப்பகுதியில் உள்ள பெண்கள் முதல் சிறுவர், சிறுமிகள் 2 கிலோ மீட்டர் தொலைவில் இ.சி.ஆர். சாலையில் உள்ள கீழக்கரை துணை மின்நிலையம் அருகில் உள்ள குழாய்களில் இரவும், பகலுமாக தள்ளு வண்டிகளில் குடங்களை வைத்து இழுத்துச்சென்று குடிநீர் எடுத்து வரும் அவல நிலை இருந்து வருகிறது.
லாரியில் விற்கப்படும் குடம் தண்ணீர் ரூ.10க்கு விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். உடனடியாக குடிநீர் வசதி செய்து தர வலியுறுத்தி தில்லையேந்தல் ஊராட்சி பெண்கள் ஏராளமானோர் திரண்டு வந்து கலெக்டர் நேர்முக உதவியாளர் ஷேக் மன்சூ ரிடம் மனு அளித்தனர்.
இது தொடர்பாக ஊராட்சி தலைவர் கிருஷ்ண மூர்த்தி கூறியதாவது:-
தில்லையேந்தல் ஊராட்சிக்கு காவிரி குடிநீர் முறையாக வருவது கிடையாது. மாதத்திற்கு 2 அல்லது 3 முறை தண்ணீர் திறந்து விடுவதால் மக்கள் குடிநீருக்காக பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மாவட்ட கலெக்டர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து தில்லை யேந்தல் ஊராட்சியில் அனைத்து பகுதியில் உள்ள குடிதண்ணீர் குழாய்களில் தடையில்லாமல் குடிநீர் கிடைக்கவும், ஊரணிகள் தூர்வாரவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு பாலையாறு அருகே ஒரு கூட்டு குடிநீர் பைப்லைன் அமைக்க வேண்டும்.
ஊராட்சி பகுதிகளை சுத்தம் செய்ய கூடுதலாக துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும். உடனுக்குடன் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்ய டிராக்டர் வசதி செய்து ஏற்படுத்தி தர வேண்டும்.
கடந்த 5 ஆண்டுகளில் கிராமங்கள் அதிகமான பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் போதிய தெரு விளக்கு வசதிகள் செய்யவில்லை. தெருக்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் திருடர்கள் அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.






