என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • சிலரை மிரட்டி பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது.
    • பெண் பக்தர்களின் பாதுகாப்பு இதன் மூலம் கேள்விக்குறியாகி உள்ளது.

    ராமநாதபுரம்:

    தென்னகத்து காசி என அழைக்கப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் இந்துக்களின் புனித ஸ்தலமாக உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

    இங்குள்ள அக்னி தீர்த்தக் கடல் மற்றும் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். அக்னி தீர்த்த கடற்கரையையொட்டி தனியார் குளியலறை மற்றும் உடை மாற்றும் அறைகள் ஏராளமாக உள்ளன.

    நேற்று கடற்கரை பகுதியில் உள்ள டீக்கடையை ஒட்டியுள்ள கட்டண உடை மாற்றும் அறைக்கு சென்ற இளம்பெண் சுவரில் டைல்சுகளுக்கு இடையே ரகசிய கேமரா பொருத்தப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ராமேசுவரம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் உடை மாற்றும் அறையை ஒட்டியுள்ள டீக்கடை நடத்திவரும் ராஜேஷ் கண்ணன் மற்றும் அங்கு பணியாற்றிய மீரான் மைதீன் ஆகிய 2 பேர் சேர்ந்து உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தி அதனை செல்போன் மூலம் இணைத்திருந்தது தெரிய வந்தது.

    உடைமாற்ற வரும் பெண்களின் வீடியோக்களை செல்போனில் எடுத்து அதனை இணைய தளங்களில் வெளியிட்டதாகவும், சிலரை மிரட்டி பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது. 2 பேரையும் கைது செய்த ராமேசுவரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் ரகசிய கேமரா, செல்போன்கள், மெமரி கார்டு போன்றவற்றை பறிமுதல் செய்த போலீசார் அதனை சைபர் கிரைம் பிரிவிற்கு ஆய்வுக்காக அனுப்பி உள்ளனர். குறிப்பாக 100-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் சிக்கியுள்ளன.

    அதில் தமிழகம் மட்டுமின்றி வடமாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் சிலரின் அந்தரங்க வீடியோவும் பதிவாகி இருந்தது. இதில் கைதான ராஜேஷ் கண்ணன் ராமேசுவரத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    உடை மாற்றும் அறையில் கேமரா கண்டறியப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களின் பாதுகாப்பு இதன் மூலம் கேள்விக்குறியாகி உள்ளது.

    நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடும் ராமேசுவரத்தில் ஏராளமான கட்டண உடை மாற்றும் அறைகள் மற்றும் லாட்ஜ்கள், செயல்பட்டு வருகின்றன.

    இங்கு வரும் வடமாநில மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்கி சாமி தரிசனம் செய்கின்றனர். இங்குள்ள உடை மாற்றும் அறைகள், குளியலறைகள், கழிவறைகளில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? என போலீசார் அங்குலம், அங்குலமாக ஆய்வு நடத்த உள்ளதாக தெரியவந்து உள்ளது.

    முதற்கட்டமாக அக்னி தீர்த்த கடற்கரையை ஒட்டியுள்ள கட்டண உடை மாற்றும் அறைகளில் போலீசார் சோதனை நடத்த உள்ளனர். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், கோவிலுக்கு வரும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தூக்குப்பாலம், ரோடு பாலம் உயரத்திற்கு திறக்கப்பட்டது.
    • பாலத்தில் செய்துள்ள வசதிகள் குறித்து ரெயில்வே கட்டுமான நிறுவன பொறியாளர்கள், மத்திய மந்திரியிடம் விளக்கி கூறினர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் 2 கிலோமீட்டர் நீளத்துக்கு புதிய ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அந்த பாலத்தின் மையப் பகுதியில் கப்பல்கள் செல்லும்போது திறந்து மூடும் வகையில் 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்வதற்காக மத்திய கனரக தொழில்துறை இணை மந்திரி பூபதி ராஜூ சீனிவாச சர்மா வந்தார். அவர் டிராலியில் சென்று, பாலத்தை பார்வையிட்டு மையப்பகுதிக்கு வந்தார். தொடர்ந்து தூக்குப்பாலத்தை திறந்து மூட கட்டப்பட்டுள்ள ஆபரேட்டர் அறை, அங்குள்ள தொழில்நுட்ப சாதனங்களை பார்வையிட்டார்.

    பின்னர் தூக்குப்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள லிப்ட் மூலமாக உயரே சென்று தூக்குப்பாலத்தை திறந்து மூடுவதற்காக அமைக்கப்பட்ட சாதனங்களையும் பார்வையிட்டார். அப்போது ஆய்வுக்காக தூக்குப்பாலம், ரோடு பாலம் உயரத்திற்கு திறக்கப்பட்டது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக தூக்குப்பாலத்தை ஆய்வு செய்தார்.

    பாலத்தில் செய்துள்ள வசதிகள் குறித்து ரெயில்வே கட்டுமான நிறுவன பொறியாளர்கள், மத்திய மந்திரியிடம் விளக்கி கூறினர். பின்னர் அங்கிருந்து டிராலி மூலம் புறப்பட்டு பாம்பன் வந்தார். தொடர்ந்து ராமேசுவரம் சென்றார். புதிய ரெயில் பாலத்தில் ஒரு சில குளறுபடிகள் உள்ளதாக ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் அறிக்கை அளித்திருந்த நிலையில், மத்திய கனரக தொழில்துறை இணை மந்திரி, ஆய்வு செய்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.

    • அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3:30 மணி முதல் 4:00 மணி வரை ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது.
    • கோவில் நடை சாத்தப்படும் நேரத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம் என கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் பிரசித்தி பெற்றிருக்கும் ராமநாதசுவாமி கோவில் ராமாயண வரலாற்று கதைகள் நிறைந்த புண்ணிய ஸ்தலமாகவும், தீர்த்தம் மூர்த்தி ஸ்தலம் என முப்பெருமைகளையும் கொண்ட முக்கிய பகுதியாக உள்ளது.

    இந்நிலையில் மார்கழி அஷ்டமி பூப்பிரதட்சணத்தை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் நடை இன்று அடைக்கப்படுகிறது. இதன்படி இன்று அஷ்டமி பூப்பிரதட்சணத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3:30 மணி முதல் 4:00 மணி வரை ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது.

    காலை 7 மணிக்கு சுவாமி - அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி வீதி உலா நடைபெறும் என்பதால் காலை 7 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை கோவில் நடை சாத்தப்பட்டு, மீண்டும், சுவாமி - அம்பாள் கோவிலுக்கு வந்தவுடன் 12 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்பட்டு உச்சிகால பூஜை நடைபெறும்.

    கோவில் நடை சாத்தப்படும் நேரத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம் என கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    • சரவணபாபுவை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
    • போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகர் குட்செட் தெரு அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம். பென்சன் பெற்று வந்த இவர் கடந்த 3.6.2020 அன்று இறந்து விட்டார்.

    இந்த நிலையில் இவரது மகன் சரவணபாபு (வயது41) தனது தந்தை இறந்ததை மாவட்ட கருவூல அலுவலரிடம் தெரியப்படுத்தாமல் 2020-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை 28 மாதங்கள் மொத்தம் ரூ.8 லட்சத்து 84 ஆயிரத்து 774ஐ அவரது பென்சன் தொகையை ஏ.டி.எம். மூலம் எடுத்து வந்துள்ளார்.

    இது கருவூல அலுவலருக்கு தெரிய வந்ததையடுத்து சரவணபாபுவை நேரில் அழைத்து மோசடியாக எடுத்த பணத்தை கருவூலத்தில் திருப்பி ஒப்படைக்கு மாறு எச்சரித்துள்ளார். அதனைத் தொடர்ந்து 2023-ம் ஆண்டு ரூ.30 ஆயிரம் மட்டும் திரும்ப செலுத்தி விட்டு தலைமறைவாகி விட்டார்.

    ராமநாதபுரம் மாவட்ட கருவூல அலுவலர் சேசன் இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷிடம் புகார் அளித்தார். உடனடியாக உதவி போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் உத்தரவின் பேரில் தலைமறைவான சரவணபாபுவை பிடிக்க பி.1 போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தலைமறைவான சரவணபாபுவை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில் நேற்று அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டின் அருகே தனிப்படை போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையில் தந்தையின் பென்சன் பணத்தை கையாடல் செய்ததை சரவணபாபு ஒப்புக் கொண்டதை தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகன் தனது தந்தை இறந்ததை மறைத்து பென்சன் பணத்தை கையாடல் செய்தது ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர் வேலை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
    • மீன்பிடி தடை நீக்கப்பட்டு இன்று முதல் கடலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

    மண்டபம்:

    வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணாக தமிழகத்தை ஒட்டியுள்ள கடற்பகுதியில் மணிக்கு 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வரை சூறாவளி காற்று வீசப்படும். எனவே கடற்கரை மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்திருந்தது.

    அதன்படி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் கடற்காற்று அதிகமாக இருந்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்தது.

    இதன் காரணமாக கடந்த 17-ந்தேதி முதல் மண்டபம் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்தன. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர் வேலை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு வடதிசை நோக்கி நகர்ந்ததால் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சூறாவளி காற்றின் வேகம் தணிந்தது. நேற்று மாலை முதல் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. இதையடுத்து மீன்பிடி தடை நீக்கப்பட்டு இன்று முதல் கடலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

    இதையடுத்து இன்று அதிகாலை மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்கு புறப்பட்டு சென்றனர். முன்னதாக படகுகள், மீனவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு மீன்வளத்துறை மூலம் அனுமதி டோக்கன் வழங்கப்பட்டது. 4 நாட்களுக்கு பின் மீனவர்கள் கடலுக்கு சென்றதால் மண்டபம் துறைமுகம் பரபரப்புடன் காணப்பட்டது. 

    • கைது நடவடிக்கைக்கு பயந்து மீனவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.
    • தற்போது வரை 141 தமிழக மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    மண்டபம்:

    வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ராமேசுவரம், மண்டபம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்திருந்தனர். அவர்களுக்கான அனுமதி டோக்கன் வழங்கப்படாத நிலையில் நேற்று முதல் காற்றின் வேகம் குறைந்து இயல்பு நிலை திரும்பியது.

    இதையடுத்து நேற்று காலை ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து 377 விசைப்படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவில் அவர்கள் கச்சத்தீவு அருகே வலைகளை விரித்துரு மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியத்தனர். மீண்டும் இந்த பகுதியில் மீன்பிடித் தால் எல்லை தாண்டியதாக கைது செய்யப்படுவீர்கள் என்றும் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தனர்.

    உடனடியாக கைது நடவடிக்கைக்கு பயந்து ராமேசுவரம் மீனவர்கள் வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

    இதனால் பெரிய படகுகளுக்கு ரூ.80 ஆயிரம், சிறிய படகுகளுக்கு ரூ.30 ஆயிரம் செலவு செய்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில் இலங்கை கடற்படையின் அச்சுறுத்தல் காரணமாக பல ஆயிரம் இழப்புடன் இன்று காலையில் மீனவர்கள் கரை திரும்பினர்.

    இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே இன்று இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக வரும் நிலையில் இலங்கை கடற்படையினர் இது போன்று தாக்குதல் நடத்தி மீனவர்களை விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்திய பிரதமர் இலங்கை அதிபரை சந்திக்கும் போது தமிழக மீனவர்கள் மீன்பிடி வாழ்வாதாரத்தை பாதுக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும். இதே போன்று தண்டனை கைதிகளாக உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    தற்போது வரை இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு 141 தமிழக மீனவர்கள் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 45 பேர் விசாரணை கைதிகளாகவும், 96 பேர் தண்டனை பெற்றும் உள்ளனர். அவர்களுக்கு சொந்தமான 198 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 40 சதவீத கண்மாய்கள், குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.
    • கிராமங்களில் 15 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தது.

    சாயல்குடி:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்திலுள்ள 40 சதவீத கண்மாய்கள், குளம், குட்டைகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.

    இந்நிலையில், சாயல்குடி அருகே கொக்கரசன் கோட்டை, கொண்டு நல்லான்பட்டி, வாலம்பட்டி, உச்சிநத்தம், வி.சேதுரா ஜபுரம், முத்துராம லிங்கபுரம், வெள்ளையா புரம், பிச்சையாபுரம், டி.கரிசல்குளம், டி.எம். கோட்டை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தூத்துக்குடி மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது.

    இந்த கிராமங்களில் 15 ஆயிரம் ஏக்கரில் மிளகாய், வெங்காயம், உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு, சோளம், நெல் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தது.

    சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக, விளாத்திகுளம் ஒன்றியத்தைச் சேர்ந்த லட்சுமிபும், மாவிலோடை கண்மாய்ககளில் தண்ணீர் நிரம்பி அது காட்டாற்று வெள்ளமாக மாறி கஞ்சம்பட்டி ஓடை வழியாக வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் வி. சேதுராஜ புரத்திலிருந்து உச்சிநத்தம் செல்லும் சாலை வழியாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் இப்பகுதியில் 2000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.


    இதனிடையே, எஸ். தரைக்குடி பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜூலு, பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கவுர் உள்ளிட்ட அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்தனர்.

    இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், வெள்ளத்தால் சாலை சேதமடைந்த போக்குவரத்து துண்டிக்கப்பட்ட காரணத்தால், டிராக்டர் மூலம் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று ஆய்வு செய்தார்.

    பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய அவர், வெள்ளத்தால் சேதமடைந்து சாலை துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தோம். இதனை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உரிய நடவடிக்கை துரித வேகத்தில் எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
    • கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 822.30 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக இடைவிடாது மழை பெய்தது. 3-வது நாளாக இன்று காலையும் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் சாரல் மழை பெய்தது. நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த மழையால் ராமநாதபுரம் நகர், பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, திருவாடானை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்தது. விடுமுறை எதுவும் அறிவிக்கப்படாததால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மழையில் நனைந்தவாறு சென்றனர்.

    குறிப்பாக முதுகுளத்தூர், ஆர்.எஸ்.மங்கலம், கமுதியில் விவசாய நிலங்களில் மழை புகுந்தது. இதனால் பல ஏக்கர் விவசாய நிலங்கள், பயிர்கள் பாதிக்கப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    ராமநாதபுரம்-15.20, திருவாடானை-9, பரமக்குடி-30, கமுதி-19, கடலாடி-41.80, வாலிநோக்கம்-18.80, தொண்டி-3.40, முதுகுளத்தூர்-6.60. மாவட்டத்தின் மொத்த மழையின் அளவு 175.10 மி.மீட்டர் ஆகும்.


    விருதுநகர் மாவட்டத்திலும் இடைவிடாது அடை மழை பெய்து வருகிறது.

    விருதுநகரில் பழைய பேருந்து நிலையத்தின் வடக்கு பகுதி ரோடு பாவாலி ரோடு பாத்திமா நகர் மற்றும் எம்ஜிஆர் சிலை எதிரில் அருப்புக்கோட்டை ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

    விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 822.30 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது சராசரியாக 68.53 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சாத்தூரில் 114 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக குளங்கள் மற்றும் கண்மாய்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டது.


    விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் ம.ரெட்டியபட்டி அருகேயுள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் கண்மாய் மறுகாலில் அடைப்பு ஏற்பட்டதால் கரைபுரண்டு ஓடிய மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளமாக சூழ்ந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

    தற்போது ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த வெள்ள நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருவதாக ஊராட்சி நிர்வாகம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குடியிருப்பு பகுதிகள் சூழ்ந்த வெள்ள நீரால் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக மின்தடை ஏற்பட்டுள்ளது.

    மேலும் திருச்சுழி அருகே கொப்புசித்தம்பட்டி அருந்ததியர் தெருவில் சுமார் 130 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் பெய்த தொடர் மழையினால் பெரிய கண்மாய் நிறைந்து மறுகாலில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அதிகமாகி குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்து வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை பொதுமக்கள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் மறவர் பெருங்குடி உப்பு ஓடை, திருச்சுழி குண்டாறு உள்பட பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடிய நிலையில் மறவர் பெருங்குடி பகுதியில் உள்ள அரசுபள்ளியின் சுற்று சுவரை உடைத்துக்கொண்டு மழை வெள்ளம் உள்ளே புகுந்ததால் பள்ளி வளாகமே வெள்ள காடாக காட்சியளித்தது.

    மேலும் அப்பகுதியில் விவசாயம் செய்துள்ள நெல், கடலை, சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமானது. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சிவகங்கை மாவட்டத்தில் 3-வது நாளாக இன்றும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டார்.

    தேவகோட்டை, காரைக்குடி, மானாமதுரை, காளையார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    சிவகங்கை அருகே பெரியகோட்டை கிராமத் தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அங்குள்ள கண்மாய்கள் முழுவதுமாக நிரம்பி உள்ளது. இதனால் அங்கிருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் மழைநீர் விவசாய நிலங்களில் புகுந்து வெள்ளக்காடாக தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் 300 ஏக்கரில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கிய நிலையில் காணப்படுகிறது.

      மண்டபம்:

      தமிழகம் முழுவதும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. கடலோர மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

      இதனால் கடலுக்கு செல்ல மீனவர்கள் தடை விதிக்கப்பட்டது. இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், ஏர்வாடி, தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு துறைமுகங்களில் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. தடை காரணமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழந்தனர்.

      இந்த நிலையில் நேற்று காற்றழுத்த தாழ்வுநிலை நகர்ந்து சென்றதால் 7 நாட்களுக்கு பின் கடல் காற்று குறைந்து இயல்பு நிலைக்கு மாறியது. நேற்று சூறாவளி காற்றின் வேகம் தணிந்ததால் இன்று பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க மீன்துறை அனுமதி அளித்தது.

      அதன்படி ராமேசுவரம், பாம்பன், மண்டபம் மீனவர்கள் இன்று அதிகாலை காலை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் அனுமதி டோக்கன் பெற்றுக்கொண்டு 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்கு புறப்பட்டனர். 7 நாட்களுக்கு பின்பு இன்று (14-ந் தேதி) கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றதால் ராமேசுவரம், பாம்பன் துறைமுகம் பரபரப்புடன் காணப்பட்டது.

      • 2 நாட்களாக பெய்து வரும் மழையில் மண் சுவர் பலவீனமடைந்து திடீரென இடிந்து விழுந்தது.
      • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

      பரமக்குடி:

      வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பரமக்குடியில் நேற்று முன்தினம் சாரல் மழை பெய்தது. நேற்று இரவு பரமக்குடி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் கனமழை பெய்தது. இப்பகுதிகளில் அதிகளவில் மண்சுவரால் கட்டப்பட்ட ஓட்டுவீடுகள் உள்ளன. தொடர் மழையால் மண்சுவர்கள் ஈரப்பதத்துடன் இருந்தன. இந்த நிலையில் மண்சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி ஒருவர் பலியானார். அதன் விபரம் வருமாறு:-

      பரமக்குடி அருகே மேலாய்க்குடி யாதவர் குடியிருப்பில் வசித்து வருபவர் பால்ராஜ். இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருணமாகி மனைவி மற்றும் 6 வயதில் கீர்த்திகா என்ற மகள் உள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

      பால்ராஜ் தனது குடும்பத்தினருடன் மண்சுவரால் கட்டப்பட்ட ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். 2 நாட்களாக பெய்து வரும் மழையில் மண் சுவர் பலவீனமடைந்து இன்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பால்ராஜின் மகள் கீர்த்திகா மீது மண்சுவர் விழுந்தது. உடனே பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருந்த சிறுமியை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் கீர்த்திகா ஏற்கனவே உயிரிழந்ததாக தகவல் தெரிவித்தனர்.

      இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளின் உடலை பார்த்து அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக எமனேசுவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

      • தங்கச்சிமடம் தண்ணீர் ஊற்று கடற்பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
      • போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

      ராமநாதபுரம்:

      இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்த 310-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் மண்டபம் முகாமில் தற்காலிகமாக தமிழக அரசால் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

      இந்நிலையில் நள்ளிரவு வேளையில், தங்கச்சிமடம் தண்ணீர் ஊற்று கடற்பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கையில் பயணம் செய்வதற்கான பைகளுடன் நின்று கொண்டிருந்த 4 இலங்கை தமிழர்களை தங்கச்சிமடம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

      அப்போது அவர்கள் 4 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வந்த சசிகுமார் (வயது 28), கோகிலவாணி (44), வேலூர் அகதி முகாமைச் சேர்ந்த சேகர் என்ற ராஜ்மோகன் (39), சிதம்பரம் அகதி முகாமைச் சேர்ந்த நாகராஜ் (68) என்பதும், சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கை செல்ல முற்பட்டதும் முதற் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

      இதையடுத்து முறையான பாஸ்போர்ட் இன்றி சட்ட விரோதமாக கடல் வழியாக தப்பிச் செல்ல முயன்றதாக வழக்குப் பதிவு செய்த தங்கச்சிமடம் போலீசார் அந்த 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதேபோல் அவர்கள் படகில் தப்பிச்செல்ல உதவி செய்தவர்கள் யார், எவ்வளவு பணம் வாங்கினார்கள் என்றும் தங்கச்சிமடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

      • ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பலத்த சூறைகாற்று வீசி வருகிறது.
      • பாம்பன் கடல் பகுதியில் வழக்கத்தை விட அதிக உயரத்திற்கு அலைகள் எழுந்து கரையில் மோதின.

      மண்டபம்:

      இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களை புரட்டிப் போட்டது. குறிப்பாக கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டு சென்ற அந்த புயல் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் மீண்டு வருவதற்குள் அடுத்ததாக மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

      இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டல அறிவிப்பின்படி, இந்திய கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலில் பலத்த காற்று வீசும். அதன் வேகம் மணிக்கு 35 முதல் 45 கி.மீட்டராகவும், அதிகபட்சம் 55 கி.மீ. வரை வீசக்கூடும் என்றும், இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.

      இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கடலோர மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.

      அதைத்தொடர்ந்து ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பலத்த சூறைகாற்று வீசி வருகிறது. பாம்பன் கடல் பகுதியில் வழக்கத்தை விட அதிக உயரத்திற்கு அலைகள் எழுந்து கரையில் மோதின. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. அதன்படி இன்று கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை.

      கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதையொட்டி ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி, தங்கச்சிமடம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு கடலோர பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் படகுகள் ஒன்றோடொன்று மோதி சேதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீனவர்கள் முன்கூட்டியே எடுத்துள்ளனர்.

      மீன்பிடிக்க ஏற்பட்டுள்ள தடையால் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். ஏற்கனவே அடுத்தடுத்து மீனவர்கள் சிறைபிடிப்பு, இயற்கை சீற்றங்கள், இலங்கை கடற்படையை கண்டித்து போராட்டம் உள்ளிட்ட காரணங்களால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

      தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையால் ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மீன்பிடி தொழில் சார்ந்த வர்த்தகமும் பாதிக்கப்பட்டு உள்ளது. 

      ×