என் மலர்
ராமநாதபுரம்
- தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கோவில் நடை நாளை அதிகாலை 4 மணி அளவில் திறக்கப்படுகிறது.
- இரவு 9 மணிக்கு பிறகு கோவில் நடை அடைக்கப்படும்.
ராமேசுவரம்:
ராமேசுவரம் கோவிலுக்கு தை, ஆடி அமாவாசை, புரட்டாசி மாத மகாளய அமாவாசை நாட்களில் ஏராளமான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடவும் சாமி தரிசனம் செய்ய வருவதும் வழக்கம்.
தை அமாவாசையை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி கோவிலில் சாமியை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதையொட்டி கூட்ட நெரிசல் இல்லாமல் பக்தர்கள் கடலில் புனித நீராடவும் தீர்த்தக் கிணறுகளில் நீராடி மற்றும் சாமி தரிசனம் செய்யவும் வசதியாக பல்வேறு இடங்களில் தடுப்பு கம்புகள் கட்டப்பட்டுள்ளன.
மேலும் அக்னி தீர்த்த கடற்கரையில் இருந்து கோவிலின் ரதவீதி சாலையிலும் போலீஸ் சார்பிலும் தடுப்பு இரும்பு கம்பிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கோவில் நடை நாளை அதிகாலை 4 மணி அளவில் திறக்கப்படுகிறது. 5 மணி முதல் 5.30 மணி வரை ஸ்படிகலிங்க தரிசனம் பூஜை நடக்கிறது. தொடர்ந்து வழக்கமான பூஜை நடைபெறுகின்றது. வழக்கமாக பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.
அமாவாசை என்பதால் பகல் முழுவதும் நடை திறந்திருக்கும். இரவு 9 மணிக்கு பிறகு கோவில் நடை அடைக்கப்படும் என்றும் கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது போல் தை அமாவாசையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் ராமேசுவரம் கோவிலில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது துணை சூப்பிரண்டு சாந்தமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் உத்திரபாண்டி, தனிப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் வடிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.
- நீதிபதி வீட்டில் அவர்கள் அனைவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
- மீனவர் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
ராமேசுவரம்:
ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 439 விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்துறை அலுவலக அனு மதி சீட்டு பெற்று கடலுக்கு சென்றனர்.
இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த ரூபில்டன், டேனியல், ராமேசுவரம் சச்சின் ஆகியோருக்கு சொந்தமான 3 விசைப்படகுகளில் கேரளாவை சேர்ந்த 2 பேர் உள்பட மொத்தம் 34 மீனவர்கள் சென்றிருந்தனர்.
அவர்கள் கச்சத்தீவு, நெடுந்தீவு இடையே வலை களை விரித்து மீன்பி டித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கூறி 3 விசைப்படகுகளில் இருந்த 34 மீனவர்களை சிறைபிடித்து, அவர்களின் 3 படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.
கைதான 34 மீனவர்களும் கிளிநொச்சியில் உள்ள மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களின் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று காலை கிளி நொச்சியில் உள்ள நீதிபதி வீட்டில் அவர்கள் அனைவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதையடுத்து 34 மீனவர்க ளையும் வருகிற பிப்ரவரி 5-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தர விட்டார். பின்னர் அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 34 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமருக்கும், வெளியுறவுத்துறை மந்திரிக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பி உள்ளார்.
கடந்த 2 வாரங்க ளில் மட்டும் ராமேசுவரம் மீனவர்கள் 45 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர் 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தநிலையில், ராமேசுவரம் துறைமுக பகுதியில் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தொடர் வேலை நிறுத்த போராட்டம், சாலை மறியல் உள்ளிட்ட போராட் டங்களை முன்னெடுப்பது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.
- ஏற்கனவே 2 முறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டது.
- நீதிபதி மீனவர்களின் சிறை காவலை 3-வது முறையாக நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.
ராமேசுவரம்:
ராமேசுவரத்தில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் 24-ந்தேதி 500-க்கும் மேற்பட்ட படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் 2 படகுகளில் சென்ற 17 மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை சிறைபிடித்தது. அவர்களது 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
இவர்கள் அனைவரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். ஏற்கனவே 2 முறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று 3-வது முறையாக மன்னார் நீதிமன்றத்தில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி முகமது ரபீக் மீனவர்களின் சிறை காவலை 3-வது முறையாக நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.
விரைவில் விடுதலை ஆவார்கள் என்று அவர்களது குடும்பத்தினர் எதிர்பார்த்திருந்த நிலையில் மீண்டும் காவல் நீட்டிப்பு செய்துள்ளது மீனவர்களிடையே பெரும் ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது.
- எழுத்தர் ஜடா முனி பல்வேறு விஷயங்களில் தலையிடுவதாக கூறி உள்துறை செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.
- ஆயுதப்படையிலிருந்து தன்னிச்சையாக எனது கவனத்திற்கு தெரிவிக்காமல் நேரடியாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சரவணன். இவர் கடந்த 16 ஆண்டுகளாக காவல்துறையில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் சரவணன், தமது அதிகாரத்தை முழுமையாக போலீஸ் நிலையத்தில் செயல்படுத்த முடியவில்லை எனவும், திருவாடானை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக எழுத்தர் ஜடா முனி பல்வேறு விஷயங்களில் தலையிடுவதாக கூறி உள்துறை செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.
அதில் இந்த போலீஸ் நிலையத்தில் பணி செய்ய இயலவில்லை என கூறி அந்த கடிதத்தை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு இருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், திருவாடானை டி.எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து தொடர்ந்து தன்னிடம் கேட்காமல் ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு தன்னிச்சையாக அலுவல் பணிகள் ஒதுக்கப்படுகிறது.
மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு தன்னை கேட்காமலேயே போலீசாரை நியமித்து வருகிறார்கள். தற்போது காவல் நிலைய சரகத்தில் சட்டம், ஒழுங்கு மற்றும் பொது அமைதியை நிலை நாட்ட மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து வருகின்றனர். ஆயுதப்படையிலிருந்து தன்னிச்சையாக எனது கவனத்திற்கு தெரிவிக்காமல் நேரடியாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
உத்திரகோசமங்கை ஆருத்ரா தரிசன விழாவிற்கு என்னுடைய ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் நிலையத்தில் இருந்து 14 போலீசாரை என்னிடம் தெரிவிக்காமல் பணியமர்த்தி உள்ளனர் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன் வைத்து, என்னை கேட்காமல் காவல் நிலையத்திலிருந்து போலீசாரை திடீர், திடீரென சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கு அனுப்புவதால் போலீஸ் நிலையத்தில் பணிகள் முடங்கி கிடக்கிறது என்று தெரிவித்தார்.
இதுதொடர்பான விசாரணை நடத்தப்பட்ட நிலையில் உள்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பிய இன்ஸ்பெக்டர் சரவணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. அபிநவ்குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நேற்று நள்ளிரவு மதுபோதையில் மீண்டும் இருதரப்பினர் மோதிக்கொண்டனர்.
- முன்விரோதத்தில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ராமேசுவரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே உள்ள கரையூர் முத்துமாரியம்மன் கோவில் அருகே சேரான் கோட்டை மற்றும் தெற்கு கரையூர் பகுதி உள்ளது. இரு வெவ்வேறு பிரிவினரை சேர்ந்தவர்கள் இப்பகுதியில் வசித்து வருகின்றனர்.
2 பகுதிகளை சேர்ந்த சிலருக்கு முன்விரோதம் காரணமாக அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மதுபோதையில் மீண்டும் இருதரப்பினர் மோதிக்கொண்டனர்.
அப்போது ஒரு பிரிவை சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பல் நண்டு வலைக்கு பயன்படுத்தப்படும் கத்தியை எடுத்து மற்றொரு தரப்பைச் சேர்ந்த நம்பு குமார், சேது, சூரியன், ஹரி பிரபாகரன், சூரிய பிரகாஷ் ஆகியோரை சரமாரியாக குத்திவிட்டு தப்பினர்.
இதில் படுகாயம் அடைந்த நம்பு குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். கத்திக்குத்தில் காயம் அடைந்த சேது, சூரியன், சூரிய பிரகாஷ், ஹரி பிரபாகரன் ஆகியோர் ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்திஸ் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தினார். மேலும் வாலிபரை கொலை செய்து நான்கு பேரை கத்தியால் குத்திய அதே பகுதியைச் சேர்ந்த 7 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையில் கொலையுண்ட நம்புகுமார் உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் மருத்துவமனையிலும், துறையூர் பகுதியிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையே கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை மற்றும் ராமேசுவரம் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முன்விரோதத்தில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ராமேசுவரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- முற்பகல் மீண்டும் புதிய சந்தனம் பூசப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன.
- ஆருத்ரா தரிசனம் செய்ய பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.
ராமநாதபுரம்:
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கை மங்கள நாதசுவாமி கோவிலில் மரகத நடராஜரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய தரிசனம் செய்தனர். இன்று காலை மீண்டும் சந்தனம் பூசப்பட்டு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு மரகத நடராஜர் காட்சி அளித்தார்.
ராமநாதபுரம் அடுத்துள்ள திருஉத்தரகோசமங்கை கிராமத்தில் முதல் சிவ ஸ்தலமாக மங்களநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் வடக்கு பகுதியில் தென்முகத்துடன் பச்சை கல்லினால் ஆன மரகத நடராஜர் சன்னதி உள்ளது. இந்த சிலை ஒளி, ஒலியால் அதிர்வு ஏற்பட்டால் சேதமடைந்து விடும் என்பதால் ஆண்டுதோறும் முழுமையாக சந்தனம் பூசப்பட்டு நடை சாத்தப்பட்டிருக்கும்.
ஆருத்ரா தரின தினத்தன்று மட்டும் சந்தனம் களையப்பட்டு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறுவது வழக்கம். இதனை தொடர்ந்து, நேற்று ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு காலை 8.30 மணிக்கு கோவில் சிவச்சாரியர்கள் கோவில் நடை திறந்து மரகத நடராஜர் தீபாராதனை செய்தனர். இதன் பின்னர் சிலையில் உள்ள சந்தனம் களையப்பட்டு பால், பழம், பன்னீர், திருநீறு, சந்தனம், இளநீர், தேன் உள்ளிட்ட 16 வகையான வாசன திரவியங்கள் மூலம் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதன் பின்னர் முற்பகல் மீண்டும் புதிய சந்தனம் பூசப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன.
இதனை தொடர்ந்து, இன்று அதிகாலை 2.30 மணிக்கு திரை விலக்கப்பட்டு அதிகாலை 4 மணி முதல் தரிசனம் நடந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பல்லாயிரக்கான பக்தர்கள் விடிய, விடிய தரிசனம் செய்தனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜி.சந்தீஷ் உத்தரவின் பேரில், கீழக்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுதிர்லால் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பும் செய்தனர்.
ஆருத்ரா தரிசனம் செய்ய பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கான பக்தர்கள் வந்திருந்தனர். இவர்கள் அனைவருக்கும் பொது தரிசனம் ரூ.10, 100, 250 என டிக்கெட் விற்பனை செய்வதில் மட்டுமே கோவில் நிர்வாகம் முழு கவனத்துடன் செயல்பட்டது. இக்கோவிலில் கட்டணமில்லா தரிசனம் அனுமதிக்கப்படவில்லை. சந்தனம் பாக்கெட் விற்பனை கடந்த ஆண்டு ரூ 100, இந்த ஆண்டு ரூ.250, ரூ.150 என உயர்த்தி விற்பனை செய்தனர். இக்கோவில் மரகத நடராஜர் தரிசனம் செய்வது ஆண்டுக்கு ஒருமுறை என்பதால் வரும் பக்தர்கள் அனைவரிடமும் கட்டணம் எவ்வளவு வசூல் செய்ய முடியும் என்ற நோக்கத்துடன் கோவில் நிர்வாகம் செயல்பட்டதாக பக்தர்கள் வேதனையடைந்தனர்.
- புத்தாண்டு பிறந்தது முதல் இயற்கை சீற்றம், கடலுக்கு செல்ல தடை உள்ளிட்ட காரணங்களால் மீன்பிடி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
- மீனவர்களை காங்கேசன் துறைமுக அலுவலகத்திற்கு கொண்டு சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண்டபம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், மண்டபம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தொடர் அச்சுறுத்தல்களால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.
குறிப்பாக எல்லை தாண்டி வந்ததாக கூறி நடுக்கடலில் வைத்து அவர்களை சிறைபிடிப்பது, படகுகளை பறிமுதல் செய்தல், தாக்கி விரட்டி அடித்தல், வலைகளை அறுத்து சேதப்படுத்துதல் உள்ளிட்டவைகளால் நஷ்டத்தையும் சந்திக்கின்றனர்.
புத்தாண்டு பிறந்தது முதல் இயற்கை சீற்றம், கடலுக்கு செல்ல தடை உள்ளிட்ட காரணங்களால் மீன்பிடி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் அனைத்து தடைகளும் விலகிய நிலையில் நேற்று காலை மீன்துறை அலுவலக அனுமதியுடன் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.
அவர்களில் பெரும்பாலானோர் கச்சத்தீவு, நெடுந்தீவு அருகே பாரம்பரிய பகுதியில் வலைகளை விரித்து மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு மின்னல் வேகத்தில் வந்த இலங்கை கடற்படையினரை பார்த்து பல மீனவர்கள் வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். இருந்தபோதிலும் ராமேசுவரத்தை சேர்ந்த முகேஸ்குமார், மரிய ரெட்ரிசன் ஆகியோருக்கு சொந்தமான 2 விசைப்படகுளை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர்.
மீனவர்களின் படகுகளுக்குள் தாவிக்குதித்த அவர்கள் படகில் பிடித்து வைத்திருந்த மீன்கள், ஜி.பி.எஸ். கருவி மற்றும் மீன்பிடி உபகரணங்களை பறித்துக்கொண்டனர். பின்னர் எல்லை தாண்டி வந்ததாக கூறி களஞ்சியம் (வயது 47), முனீஸ்வரன் (49), கார்மேகம் (60), கண்ணன் (43), தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிஸ்மன் (25), பிரியன் (30), மரிய ஜான் ரெமோரா (48), சவேரியார் அடிமை (48) ஆகிய 8 மீனவர்களையும் சிறைபிடித்து, அவர்களின் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அவர்களை காங்கேசன் துறைமுக அலுவலகத்திற்கு கொண்டு சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று விடுமுறை நாள் என்பதால் நாளை அவர்கள் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். அதன்பின்னரே அவர்கள் விடுதலை ஆவார்களா? அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்பது தெரியவரும்.
ஏற்கனவே கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள் 17 மீனவர்கள் 2 படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்டனர். தற்போது பொங்கல் பண்டிகை கொண்டாட இருந்த நிலையில் 8 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் ராமேசுவரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தமிழக மீனவர்கள் தற்போது வரை உயிரை பணயம் வைத்து கடலுக்கு சென்று வருகின்றனர்.
- பருத்தித்துறை கடல் பகுதியில், கடற்படை தளமான பி421 களத்தில் இருந்து துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ள இருக்கிறார்கள்.
மண்டபம்:
தென் தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும்போதும் எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை வீரர்கள் அவர்களை தாக்கி சிறைபிடிப்பதும், மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்தி விரட்டியடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
சில நேரங்களில் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடும் நடத்தி வருகிறது. இதனால் தமிழக மீனவர்கள் தற்போது வரை உயிரை பணயம் வைத்து கடலுக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய கடல் எல்லையையொட்டி உள்ள இலங்கை கடற்பரப்பில் வடக்கு பிராந்திய இலங்கை கடற்படையினர் இன்று (8-ந்தேதி) பருத்தித்துறை கடல் பகுதியில், கடற்படை தளமான பி421 களத்தில் இருந்து துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ள இருக்கிறார்கள். இதில் நூற்றுக்கணக்கான இலங்கை வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த பயிற்சி இன்று மாலை வரை நீடிக்கும் என தெரிகிறது.
இதற்கிடையில் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை இந்திய கடல் எல்லையை ஒட்டியுள்ள இலங்கை பகுதிக்கு சென்று தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இலங்கை கடற்படையினர் அவரது எல்லைப் பகுதியில் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்வதை கருத்தில் கொண்டு ராமேசுவரம் மீனவர்கள் யாரும் இந்திய கடல் எல்லையை தாண்டி மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், மேலும் பாதுகாப்பாக நமது எல்லைக்குள் மீன் பிடிக்குமாறு ராமேசுவரம் மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
- பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 6 நாட்கள் தொடர் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.
- திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா 13-ந்தேதி நடக்கிறது.
ராமநாதபுரம்:
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 6 நாட்கள் தொடர் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மரகத நடராஜர் சிலை அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா 13-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.
இந்த விழாவையொட்டி 13-ந்தேதியும் உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் வருகிற 12-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 நாட்கள் தொடர் விடுமுறை வருவது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்பத்திரி வளாகத்தில் 5 மாடி கட்டிடம் பல்வேறு சிகிச்சை பிரிவுகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது.
- தீவிபத்தில் ஆஸ்பத்திரியில் இருந்த பல்வேறு உபகரணங்கள், மின்சாதனங்கள் சேதம் அடைந்துள்ளன.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். வெளிநோயாளிகளாக தினமும் சுமார் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்கு வந்து செல்கிறார்கள். இந்த ஆஸ்பத்திரி வளாகத்தில் 5 மாடி கட்டிடம் பல்வேறு சிகிச்சை பிரிவுகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டிடத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 2-வது மாடியில் பேட்டரி, இன்வெர்ட்டர் வைக்கப்பட்டு இருந்த அறையில் திடீரென தீப்பிடித்தது. ஒயர்களில் தீப்பற்றி மளமளவென தீ பரவிக்கொண்டே சென்றது. இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது.
உடனே 2-வது தளத்தில் இருந்த நோயாளிகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உடனடியாக அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். புகை மூட்டத்தில் சிக்கிய சில நோயாளிகள், மருத்துவ பணியாளர்கள், நர்சுகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
புகைமூட்டம் 3-வது மற்றும் 4-வது தளங்களுக்கும் பரவியது. இதனால் அங்கிருந்தவர்களும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். முண்டியடித்துக் கொண்டு ஓடியதால் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக ஆஸ்பத்திரியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆஸ்பத்திரி முழுவதும் இருள் சூழ்ந்தது. தீயணைப்பு வீரர்கள், ஆஸ்பத்திரி பணியாளர்களுடன் இணைந்து செல்போன் வெளிச்சத்தில் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வந்தனர். மறுபுறம் தீயை அணைக்கும் பணியும் தீவிரமாக நடந்தது.
சம்பவம் குறித்து அறிந்த ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத்சிங் காலோன், போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். அதிரடிப்படை போலீசாரும் வரவழைக்கப்பட்டு, துரிதமாக செயல்பட்டு ஆஸ்பத்திரியில் இருந்தவர்களை வெளியே கொண்டு வந்தனர்.
சற்று நேரத்தில் தீ மற்றும் புகை பரவாமல் தீயணைப்பு வீரர்கள் தடுத்தனர். அதன்பின்னரே அனைவருக்கும் நிம்மதி ஏற்பட்டது.
பேட்டரி வைக்கப்பட்டு இருந்த பகுதியில் புகைமூட்டம் வெளியேற நேரமானதால் அந்த பகுதிகளில் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து புகையை வெளியேற்றினர்.
இதுகுறித்து கலெக்டர் சிம்ரன்ஜீத்சிங் காலோன் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் ஆகியோர் கூறுகையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தானியங்கி தீயணைப்பான் உடனடியாக இயங்கியதால் பெரும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. மீட்பு படையினரும் தீயை வேகமாக கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்துவிட்டனர். நோயாளிகள் மாற்று இடத்திற்கு உடனடியாக கொண்டு சேர்க்கப்பட்டனர் என்றனர்.
இந்த தீவிபத்தில் ஆஸ்பத்திரியில் இருந்த பல்வேறு உபகரணங்கள், மின்சாதனங்கள் சேதம் அடைந்துள்ளன. குறிப்பாக இன்வெர்ட்டர் அறையில் இருந்த 25-க்கும் மேற்பட்ட பேட்டரிகள் கருகிவிட்டன. சேத விவரம் குறித்து விசாரணை நடத்து வருகிறது.
- ஆம்புலன்ஸ் வேன் மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வாலாந்தரவை அருகே அதிவேகமாக வந்து கொண்டிருந்தது.
- படுகாயம் அடைந்த ஹர்ஷித் மேல் சிகிச்சைக்காக மதுரை அனுப்பி வைக்கப்பட்டார்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தை அடுத்த மரைக்காயர் பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் வருசை கனி (வயது 65). உடல்நலக்குறைவால் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த இவருக்கு நேற்று உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை ஆஸ்பத்திரிக்கு சிசிக்சைக்காக அழைத்து செல்ல குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
அதன்படி தனியார் ஆம்புலன்ஸ் வேன் மூலம் வருசை கனியின் மகள் அனீஸ் பாத்திமா (40) மற்றும் அவரது மருமகன் (இரண்டாவது மகளின் கணவர்) ஜகுபர் சாதிக் (47), உறவினர்கள் ஹர்ஷத் (45), கதீஜா ராணி (40), ஆயிஷா பேகம் (35) ஆகியோர் ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அந்த ஆம்புலன்ஸ் வேன் மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வாலாந்தரவை அருகே அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் அருகே விறகு ஏற்றி வந்த லாரி ஒன்று டீசல் நிரப்பி விட்டு ராமநாதபுரம் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் திரும்பியது. இதில் எதிர்பாராதவிதமாக லாரியின் பின்புறத்தில் ஆம்புலன்ஸ் வேன் மோதியது.
இந்த கோர விபத்தில் சிக்கி ஆம்புலன்சில் சிகிச்சைக்காக வந்த நோயாளி வருசை கனி, அவரது மகள் அனீஸ் பாத்திமா, ஜகுபர் சாதிக் ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த ஹர்ஷித் மேல் சிகிச்சைக்காக மதுரை அனுப்பி வைக்கப்பட்டார். கதீஜா ராணி, ஆயிஷா பேகம் ஆகிய இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். ஆனால் மருத்துவமனை 2-வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் அவர்கள் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
ஆம்புலன்ஸ் அதிவேகமாக லாரியின் பின் பகுதியில் மோதியதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அருகே அமர்ந்திருந்த ஜகுபர் சாதிக் வாகனத்தில் சிக்கிக்கொண்டார். அவரை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி வாகனத்தில் இருந்து மீட்டனர். மேலும் மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த திடீர் விபத்து ஏற்பட்டதால் ஆம்புலன்சுக்கு பின்னால் வந்த ஆம்னி சொகுசு பஸ் மற்றும் சொகுசு கார் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கியது.
இதில் சொகுசு காரில் வந்த இருவர் லேசான காயத்துடன் தப்பினர். விபத்தில் பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருன்றனர்.
ராமநாதபுரம் அருகே சிகிச்சைக்காக ஆம்புலன்சில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் விபத்தில் பலியானது மரைக்காயர் பட்டினம் கடற்கரை கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
- ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் தெரிவித்த அனைத்தும் பாலத்தில் செய்யப்பட்டுவிட்டன.
- அடுத்த மாதம் இறுதிக்குள் பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் கடந்து செல்லும்போது திறந்து மூடும் வகையில் 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான தூக்குப்பாலமும் அமைக்கப்பட்டு உள்ளது. புதிய ரெயில் பால பணிகள் முடிவடைந்துவிட்டன. இந்நிலையில் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்தபோது, சிலவற்றை சரிசெய்ய தனது அறிக்கையில் தெரிவித்து இருந்தார். அதற்கான பணிகளும் நடைபெற்று முடிவடைந்தன.
இந்தநிலையில், நேற்று மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் சரத்ஸ்ரீ வத்சவா, பாம்பன் புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்தார். மண்டபத்தில் இருந்து டிராலி மூலம் வந்த அவர், பாம்பன் புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்தபடி மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலத்திற்கு வந்தார். தொடர்ந்து தூக்குப்பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள லிப்ட் மூலமாக மேலே சென்று தூக்கு பாலத்தின் தொழில்நுட்ப சாதனங்களை பார்வையிட்டார். பின்னர் ஆய்வுக்காக தூக்குப்பாலம் ரோடு பாலம் உயரத்திற்கு திறக்கப்பட்டது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக தூக்குப்பாலம் திறந்து வைக்கப்பட்டது. மீண்டும் தூக்குப்பாலம் இறக்கப்பட்ட பின்னர் தூக்குப்பாலம் கீழே ஒன்றுசேரும் இடத்தையும் ரெயில்வே கோட்ட மேலாளர் பார்வையிட்டார்.
ஆய்வுக்கு பிறகு கோட்ட மேலாளர் சரத்ஸ்ரீ வத்சவா கூறியதாவது:-
ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் தெரிவித்த அனைத்தும் பாலத்தில் செய்யப்பட்டுவிட்டன. தற்போது புதிய ரெயில் பாலம் போக்குவரத்துக்கு தயார் நிலையில் உள்ளது. மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், புதிய ரெயில் பாலத்தை விரைவில் ஆய்வு செய்ய உள்ளார். அதன் பிறகு ரெயில் பாலம் திறப்பு விழா தேதி குறித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அடுத்த மாதம் இறுதிக்குள் பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.






