கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா: ராமேசுவரத்தில் இருந்து 3 ஆயிரம் பேர் பயணம்

இந்திய, இலங்கை நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்பார்கள்.வருகிற மார்ச் மாதம் 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா: ராமேசுவரத்தில் இருந்து 3 ஆயிரம் பேர் பயணம்
Published on

ராமநாதபுரம்:

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் அமைந்துள்ளது கச்சத்தீவு. ராமேசுவரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கையில் நெடுந்தீவு கடல் பகுதியில் இருந்து 18 கடல் மைல் தொலைவிலும் அமைந்துள்ள கச்சத்தீவில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் தேவாலயம் அமைந்துள்ளது.

ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் திருவிழாவில் இந்திய, இலங்கை நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா வருகிற மார்ச் மாதம் 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இதற்கான முறையான அழைப்பிதழ் யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயரிடமிருந்து ராமேசுவரம் வேர்க்கோடு பங்குத்தந்தைக்கு வந்துள்ளது. இந்தநிலையில் கச்சத்தீவு புனித திருப்பயண ஒருங்கிணைப்பு குழு சார்பில் ராமநாதபுரத்தில் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து கச்சத்தீவு திருவிழா தொடர்பாக இலங்கையிடமிருந்து வந்துள்ள கடிதத்தை கொடுத்து அதற்கான ஏற்பாடுகளை செய்து தரும்படி கேட்டுக் கொள்வதற்காக வந்திருந்தனர்.

இதில் ராமேசுவரம் வேர்க்கோடு புனித ஜோசப் தேவாலய பங்குத்தந்தை அசோக்வினோ மற்றும் ராமேசுவரம் மீனவர் சங்க தலைவர்கள் சேசுராஜா, சகாயம் உள்ளிட்ட குழுவினர் கலெக்டரை சந்தித்தனர். பின்னர் கச்சத்தீவு திருவிழா ஒருங்கிணைப்பாளரான வேர்க்கோடு ஆலய பங்குத்தந்தை அசோக்வினோ கூறியதாவது:-

வருகிற மார்ச் 14, 15-ந்தேதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா நடை பெற இருக்கிறது. இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தில் இருந்து 75 விசைப்படகுகள் மற்றும் 16 நாட்டு படகுகளில் சுமார் 3 ஆயிரம் பக்தர்கள் செல்ல உள்ளனர்.

கச்சத்தீவு செல்லும் பக்தர்களுக்கு படகு கட்டணமாக ரூ.2 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர கூடுதல் கட்டணமாக யாரும், பணம் தரக்கூடாது.

ராமநாதபுரம் மாவட்டத்தை தவிர பிற மாவட்டங்களில் இருந்து திருவிழாவில் பங்கேற்க வருபவர்கள் அந்தந்த மாவட்ட போலீஸ் நிலையங்களில் இருந்து தடையின்மை சான்று பெற்று வர வேண்டும்.

உரிய ஆவணங்களையும் கொண்டு வர வேண்டும். வருகிற பிப்ரவரி 6-ந்தேதி முதல் இதற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படுகிறது. பிப்ரவரி 25-ந்தேதிக்குள் அந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து எங்களிடம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மீனவ சங்கத் தலைவர் ஜேசுராஜா கூறுகையில், பயணிகள் யாரும் சட்டவிரோ தமான பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது. இது ஒரு திருப்பயணம் என்பதால் கடவுளை தரிசிப்பதற்காக மட்டுமே செல்கிறோம். விழாவில் கலந்துகொள்ளும் அனைவரும் திருப்பயணியாகவே வரவேண்டும் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com