என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா ஆலோசனை கூட்டம் ஆர்.டி.ஓ. தலைமையில் நடந்தது.
    • அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க தீர்மானிக்கப்பட்டது.

    கீழக்கரை

    ஏர்வாடி தர்ஹா சமூக நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா வருகிற மே 21-ந் தேதி மாலை மவுலீதுடன் தொடங்குகிறது. மே 31-ந் தேதி மாலை கொடியேற்றப்படுகிறது. இதைதொடர்ந்து, ஜூன் 12-ந் தேதி மாலை துவங்கும் சந்தனக்கூடு திருவிழா, ஜூன் 13 அதிகாலை மக்பராவில் சந்தனம் பூசப்படுகிறது.

    இந்த நிலையில், சந்தனக்கூடு திருவிழா தொடர்பான ஆலோசனை கூட்டம் ராமநாதபுரம் ஆர்.டி.ஓ. கோபு தலைமையில் நடந்தது. கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார், கீழக்கரை டி.எஸ்.பி. சுதிர்லால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு மே 31 முதல் ஜூன் 13 வரை முக்கிய இடங்களில் ஏர்வாடி ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும், ஏர்வாடி நகர் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுகாதாரம் பேண வேண்டும், பக்தர்களுக்கு எவ்வித இடையூறின்றி வாகனங்கள் வந்து செல்ல வேண்டும், கொரோனா வழிகாட்டல் நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.

    சந்தனக்கூடு ஊர்வலத்தில் சமுதாயம் சார்ந்த கொடிகள் எடுத்து வரக்கூடாது, மாவட்ட நிர்வாகத்தின் விதிமுறைகளுக்கு தர்ஹா கமிட்டி உள்பட அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

    ஹக்தார் நிர்வாக சபை தலைவர் முகமது பாக்கீர் சுல்தான், செயலாளர் செய்யது சிராஜுதீன், உதவி தலைவர் சாதிக் பாட்ஷா மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள், ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்ராஜ், கடலாடி துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகவேல், ஜோதி மாணிக்கம், சுகாதார ஆய்வாளர் செல்லத்துரை உள்பட பலர் பங்கேற்றனர்.

    • கல்வித்துறையில் மீண்டும் இயக்குநர் பணியிடத்தை ஏற்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • தினம் தினம் பல குழப்பங்கள் அரங்கேறி வருகிறது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்ட தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கல்வித்துறையில் காலம் காலமாக இருந்து வந்த பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடத்தை ரத்து செய்துவிட்டு ஐ.ஏ.எஸ். தரத்திலுள்ள ஆணையர் பணியிடம் உருவாக்கப்பட்டது. கல்வித்துறையில் பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடம் இருந்த போது பள்ளிக்கல்வி இயக்குநராக பணிபுரிபவர் கல்வித்துறையில் பல்வேறு நிலைகளில் பல ஆண்டுகள் பணிபுரிந்து இருப்பார். இதனால் பள்ளிக்கல்வி இயக்குநர்களுக்கு ஆசிரியர்களின் பணி சம்மந்தமான அனைத்தையும் அறிந்து வைத்திருப்பார். அதேபோல் மாணவர்களின் உளவியல் சம்மந்தமான அனைத்தையும் தெரிந்து வைத்திருப்பார்.

    தமிழ்நாடு கல்வித்து றையில் பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடம் இருந்தவரை பள்ளி கல்வித்துறை சிறப்பாக இருந்தது. ஆனால் கல்வித்துறையில் இயக்குநர் பணியிடம் ரத்து செய்யப்பட்டு ஆணையர் பணியிடம் உருவாக்கப்பட்டதில் இருந்து கல்வித்துறையில் பல குழப்பங்கள் தினம் தினம் அரங்கேறி வருகிறது. இதனால் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் செயல்களில் ஈடுபடுவதில் பல சிரமங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

    தற்போது பள்ளிக்கல்வி ஆணையர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு அந்த இடத்திற்கு வேறொரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமனம் செய்யப்படாமல் இருப்பது அனைத்து ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே பள்ளிக் கல்வித்துறையில் உள்ள ஆணையர் பணியிடத்தை முற்றிலுமாக ரத்து செய்துவிட்டு மீண்டும் பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடத்தை ஏற்படுத்தி அப்பணியிடத்தில் பள்ளிக்கல்வித்துறையில் அனுபவமிக்க இணை இயக்குநர்களை பள்ளிக்கல்வி இயக்குநர்களாக நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொண்டி அருகே இளம்பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்தனர்.
    • தொண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே தீர்த்தாண்டதானத்தைச் சேர்ந்தவர் தூய மணி (வயது65), மீனவர் இவரது மகள் தனலட்சுமி (28). இவர் தொண்டியில் செயல் பட்டு வரும் பத்திரம் எழுதும் அலுவலகத்தில் தட்டச்சு செய்பவராக பணி புரிந்து வந்தார்.

    இந்த நிலையில் தனலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றி தனலட்சுமின் தந்தை தூயமணி எஸ்.பி. பட்டினம் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். அதில், தனது மகள் வயிற்று வலி காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.

    அதன்பேரில் எஸ்.பி. பட்டினம் போலீஸ் இன்ஸ் பெக்டர் சுந்தரபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர மூர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    தொண்டியில் நேற்று முன்தினம் பத்திரம் எழுதும் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த தொண்டீஸ்வ ரன் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மறுநாள் அதே பத்திரம் எழுதும் அலுவலகத்தில் பணிபுரிந்த இளம்பெண் தனலெட்சுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடற்கரையில் தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டனர்.
    • 22 தீர்த்தங்களிலும் பக்தர்கள் புனித நீராடினர்.

    புண்ணிய ஸ்தலமான ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதி களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது இந்துக்களின் கடமையாக கருதப்படுகிறது.

    குறிப்பாக மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்க அதிகளவில் பக்தர்கள் திரளுவார்கள். அதன்படி வைகாசி மாத அமாவாசையான இன்று (19-ந் தேதி) அதிகாலை முதலே அக்னி தீர்த்த கடலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். பின்னர் கடற்கரையில் தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டனர்.

    தொடர்ந்து கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். அமாவாசை நாளான இன்று ராமேசுவரத்தில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

    • பரமக்குடியில் பா.ஜ.க. கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • சிறப்பு பேச்சாளராக மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி கலந்து கொண்டு பேசினார்.

    பரமக்குடி

    மணிப்பூரில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து பரமக்குடியில் சில நாட்களுக்கு முன்பு எஸ்.டி.பி.ஐ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பிரதமர் மோடி மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோரை எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து பரமக்குடியில் பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ராமநாதபுரம் மாவட்டத்தலைவர் தரணி முருகேசன் தலைமை தாங்கினார். பரமக்குடி நகரத்தலைவர் ரவி வரவேற்று பேசினார். மாவட்ட பார்வையாளர் முரளிதரன் முன்னிலை வகித்தார். சிறப்பு பேச்சாளராக மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி கலந்து கொண்டு பேசினார்.

    மாவட்ட பொதுச்செயலாளர்கள் மணிமாறன், நாகேந்திரன், கணபதி கலை கலாச்சார பிரிவு மாநில செயலாளர் ரஜினி காந்த், சிறுபான்மை பிரிவு மாநில செயாலாளர் அஜ்மல்கான், தொழில் பிரிவு மாநில செயலாளர் காளிஸ்வரன், ஊடகபிரிவு மாநில செயலாளர் ஜெயகுரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பழைய மார்க்கெட் தெருவைச் சேர்ந்தவர் முத்துகாமாட்சி (வயது 50), டிராக்டர் டிரைவர். இவரது மனைவி செல்வி (47). சம்பவத்தன்று குடும்பத் தகராறு காரணமாக கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த முத்துகாமாட்சி மனைவியை அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் ராமேசுவரம் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து முத்துக்குமாரை கைது செய்தனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் அனல் காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
    • மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ராமநாதபுரம்

    தமிழகம் முழுவதும் அக்னி நட்சத்திரம் பொது மக்களை வாட்டி வதைத்து வருகிறது. நேற்று மட்டும் 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டியது. இரவு நேரத்தில் வெயிலின் தாக்கம் கார ணமாக பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் இன்னும் சில நாட்களில் கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, வறண்ட பகுதியான ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் காற்று குறைந்து அனல் காற்று வீசும்.

    எனவே பொதுமக்கள் நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்கவும், அந்நேரங்களில் பயணம் செல்ல நேரிட்டால் குடிதண்ணீர் எடுத்துச் செல்வதுடன் கண்ணாடி மற்றும் காலனி அணிந்து குடையுடன் பாதுகாப்பாக செல்லவும். அனல் காற்று வீசும் காலங்களில் தாகம் எடுக்காவிட்டாலும் கூட அவ்வப்போது போதுமான தண்ணீர் அருந்தவும். வீட்டில் தயாரித்து நீர் மோர், லஸ்ஸி, புளித்த சோற்று தண்ணீர், எலுமிச்சைசாறு போன்ற பானங்களை அருந்தவும். அனல் காற்று வீசும் காலங்களில் வெளிர் நிறமுள்ள காற்றோட்டமான பருத்தி ஆடைகள் அணிய வேண்டும். மேலும் குழந்தைகளை வெயில் காலங்களில் வாகனங்களில் தனியே விட்டுச் செல்லக்கூடாது. அடைக்கப்பட்ட வாகனங்களில் வெப்பம் அதிகமாகி குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடும்.பொதுமக்கள் குழந்தைக ளுக்கான வெப்ப தொடர்பான நோய்கள் எவ்வாறு கண்டறிய வேண்டும் என்பதை அறியவும், குழந்தைகளின் சிறுநீரை சோதித்து பார்க்கவும், மஞ்சள் நிறமுள்ள சிறுநீர் நீரிழப்பை குறிக்கலாம். உடனே அருகில் அரசு மருத்துவமனை சென்று பரிசோதனை செய்து கொள்ளவும்.

    வீடுகளில் தனியே வசிக்கும் முதியவர்களின் உடல்நிலையை தினமும் இருமுறை சரிபார்க்கவும். தொலைபேசி முதியவர்களின் அருகாமையில் உள்ளதா என்பதை உறுதிபடுத்தி கொள்ளவும். முதியவர்கள் வெப்ப அழுத்ததால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றினால் அவர்களின் வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளை கழுத்து மற்றும் கைகளில் வைக்கவும் குளிர்ந்த நீரில் குளிப்பதுடன் போதிய இடைவேளைகளில் நீர் அருந்தவும்.

    தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வழங்கிய மேற்கண்ட பாதுகாப்பு குறிப்புகளை கடைபிடித்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருந்திட வேண்டும்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • ஜூன் 12-ந் தேதி சந்தனம் பூசம் நிகழ்ச்சி நடைபெறும்.
    • ஜூன் 19-ந்தேதி கொடியிறக்கம் நடைபெறும்.

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உலக பிரசித்தி பெற்ற மஹான் சுல்தான் செய்யது இபுராகிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக சந்தனக்கூடு திருவிழா நடைபெறும்.

    விழாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான யாத்திரீர்கள் வந்து செல்வது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டு 849-ம் ஆண்டின் சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக மே 21-ந் தேதி தர்கா மண்டபத்தில் தர்கா ஹக்தார்கள் முன்னிலையில் மவுலீது ஷரிப் (புகழ் மாலை) தொடங்கப்பட உள்ளது.

    அதனைத் தொடர்ந்து வருகிற 31-ந் தேதி பாதுஷா நாயகத்தின் பச்சை வர்ணக்கொடி யானை மேல் வைத்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கொடியேற்றம் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியாக சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழா ஜூன் 12-ந் தேதி மாலை தொடங்கி ஜூன் 13-ந் தேதி அதிகாலை மேள தாளங்களுடன் யானைகள் அணிவிக்க, நாட்டிய குதிரைகள் நாட்டிய மாட, சந்தனக்கூடு பவனி வர அனைத்து சமுதாயத்தினரும் அணிவகுக்க, தர்கா மக்பராவில் சந்தனம் பூசம் நிகழ்ச்சி நடைபெறும்.

    இதனை தொடர்ந்து ஜூன் 19-ந்தேதி நிறைவு நிகழ்ச்சியான அஸர் தொழுகைக்குப் பின் கொடியிறக்கம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து அன்று இரவு 7 மணிக்கு தப்ரூக் எனும் நெய் சோறு நேர்சை வழங்கப்பட்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நிறைவு பெறும்.

    இந்த தகவலை ஏர்வாடி தர்கா ஹக்தார் கமிட்டினர் தெரிவித்துள்ளனர்.

    • மண்டபம் மேற்கு ஒன்றிய‌ அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் நடந்தது
    • நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் பட்டணம் காத்தான் முதல்நிலை ஊராட்சிக்குட்பட்ட பாரதிநகரில் உள்ள தனியார் மஹாலில் அ.தி.மு.க. மண்டம் மேற்கு ஒன்றியம் சார்பில் உறுப்பினர் சேர்த்தல், புதுப்பித்தல், பூத் கமிட்டி அமைத்தல் மற்றும் மகளிர் அணி இளைஞர், இளம் பெண்கள் பாசறை உள்ளிட்டவை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

    மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை தாங்கினார். மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் வக்கீல் சங்கரபாண்டியன் முன்னிலை வகித்தார்.மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.மருது பாண்டியன் வரவேற்றார்.மாற்று கட்சியில் இருந்து விலகி 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு கட்சி வேட்டிகளை மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, பூத் கமிட்டி ஆய்வு,புதிய உறுப்பி னர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டங்கள் நடந்து வருகிறது.பெண்களை அதிகளவில் உறுப்பினராக சேர்க்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் பெண்கள் அனைவரும் சுயஉதவிக்குழு உறுப்பினர்களாக சேர்க்கப் டுவார்கள்.

    தி.மு.க. பொய் வாக்கு றுதியை கொடுத்து ஆட்சிக்கு வந்துவிட்டது. 2 ஆண்டுகளில் மக்களை பற்றி கவலை இல்லாமல் ஆட்சி நடை பெறுகிறது. இப்போது தி.மு.க. ஆட்சியில் கள்ளச் சாராயம், போதை பொருள் விற்பனை அதிகரித்து வருவதால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த ஆட்சி நீடித்தால் வருங்கால சந்ததியினர் போதைக்கு அடிமையாகும் நிலை ஏற்படும்.

    தி.மு.க. ஆட்சி கலைக்கப் பட்டால் அ.தி.மு.க. 190 சட்டமன்ற தொகுதிகளையும், 40 எம்.பி. தொகுதிகளையும் கைப்பற்றும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட பேரவை செயலாளர் சேது பாலசிங்கம், முருகேசன், கார்மேகம், முகேஷ், மருது பாண்டியர் நகர் கிளைச் செயலாளர் ராஜேந்திரன், சக்தி நாகஜோதி, கோபி, ஆசிக் உள்பட மண்டபம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • போட்டி தேர்வர்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடந்தது.
    • தொலைபேசி எண் 04567-230160ல் தொடர்பு கொள்ளலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் ''நான் முதல்வன்" திட்டத்தின்கீழ் மத்திய அரசு பணிகளுக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளான பணியாளர் தேர்வாணையம் (SSC), ெரயில்வே தேர்வு வாரியம் (RRB), வங்கி பணியாளர் தேர்வு குழுமம் (IBPS) உள்ளிட்ட தேர்வுகளை எழுதி வெற்றிபெற தேவையான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

    மேற்கண்ட மத்திய அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளை தமிழகத்தைச் சேர்ந்த போட்டித்தேர்வர்கள் பெருமளவில் பங்கு கொண்டு வெற்றிபெறும் நோக்கத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த பயிற்சி வகுப்புகள் வருகிற 25-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு 100 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பட்டப்படிப்பு முடித்த 21 வயது முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் வருகிற 20-ந் தேதிக்குள் தங்களது பெயரை ஆன்லைனில் கீழ்கண்ட லிங்கின் வாயிலாக https://candidate.tnskill.tn.gov.in/CE-NM/TNSDC_REGISTRATION.ASPX தவறாது பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    இது குறித்த முழு விவரங்களை https://www.naanmudhalvan.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது அலுவலக தொலைபேசி எண் 04567-230160 வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் போதை பொருட்கள் தடுப்புக்குழு தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • கலெக்டர் தலைமையில் செயல்பட்டு வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் கீழ் போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக தேர்வு செய்யப்பட்ட 272 மாவட்டங்களில் ராமநாதபுரம் மாவட்டமும் ஒன்று. இதன் தொடர்ச்சி யாக ராமநாதபுரம் மாவட்டத்தில் "போதைப்பொருள் தடுப்பு குழு" கலெக்டர் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் அரசு அலுவலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களால் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் இந்த திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கல்வி நிறுவனங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு உட்பட்டு கூலிப், ஹான்ஸ், சிகரெட் மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை செய்வதற்கான தடையை கண்டிப்பாக அமல்படுத்துவதை உறுதி செய்யவும் போன்றபணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    10.5.2023 அன்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட 85 தன்னார்வலர்களுக்கு திறன் வளர்ப்புபயிற்சி, மத்திய அரசின் "போதைப்பொருள் தடுப்புப்குழு" தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பாரதி மற்றும் கர்நாடக மாநில ஒருங்கிணைப்பாளர் மீரா போன்றவர்களால் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விளையாட்டு விடுதியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு அரங்கங்களில் நடைபெறுகிறது.

    கீழக்கரை

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு பயிற்சி, சத்தான உணவு வழங்குதல் கீழ்கண்ட நகரங்களில் விடுதிகள் நடைபெற்று வருகிறது.

    மாணவர்களுக்கு மதுரை, திருச்சி, நெல்லை, கிருஷ்ணகிரி, நாமக்கல், சிவகங்கை ராமநாதபுரம், சென்னை, கோவை, உதகமண்டம் விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி உள்பட 17 நகரங்களிலும், மாணவிகளுக்கான விடுதி ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், சென்னை, தேனி, திண்டுக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை நாகர்கோவில் உள்பட 10 நகரங்களிலும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கான முதன்மை விளையாட்டரங்கம் சென்னை ஜவகர்லால் நேரு விளையாட்டரங்கம், திருச்சி மற்றும் நெல்லை மாணவிகளுக்கான முதன்மை விளையாட்டு மைய விடுதி சென்னை நேரு விளையாட்டு உள் அரங்கம் மற்றும் ஈரோடு விடுதிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது.

    மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் வருகிற 24-ந் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு அரங்கங்களில் நடைபெறுகிறது.

    மேற்கண்ட தகவலை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×