என் மலர்
ராமநாதபுரம்
- பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்தனர்.
- உதவித் தலைமையாசிரியர் எம்.புரோஸ்கான் நன்றி கூறினார்.
பரமக்குடி
கடந்த மார்ச், ஏப்ரலில் நடந்த 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 99 சதவீத தேர்ச்சியும்,பிளஸ்-1 வகுப்பில் 97 சதவீத தேர்ச்சியும் பெற்று பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி நகரில் முதலிடத்தைப் பெற்றது.
முதலிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. தாளாளர் என்.ஷாஜஹான் தலைமை தாங்கினார். கீழ முஸ்லிம் ஜமாத் சபை தலைவர் எம்.சாகுல் ஹமீது, செயலாளர் எம்.சாதிக் அலி, பொருளாளர் ஏ.லியாகத் அலிகான் மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் எம்.அஜ்மல்கான் வரவேற்றார். 10-ம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளான எம்.தீபிகா தர்ஷினி, ஹெச்.ரோஹித் கிருஷ்ணா, ஜெ.முகம்மது தஸ்பிக் ராஜா, எம்.சவுரா பிளஸ்-1 வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள் எஸ்.பிரேமா, எஸ்.சுல்தானா ஜாஸ்மின், எஸ்.அபிராமி ஆகியோருக்கு பொன்னாடையும் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. உதவித் தலைமையாசிரியர் எம்.புரோஸ்கான் நன்றி கூறினார்.
- திருப்புல்லாணி அருகே சமத்துவ எருதுகட்டு விழா நடந்தது.
- பல கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் கமிட்டியின் நிர்வாகிகளும் செய்திருந்தனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி யூனியன் தாதனேந்தல் பஞ்சாயத்துக்குட்பட்ட பொக்கனாரேந்தல் கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ மலைமேல் சாத்தார் உடையார் அய்யனார் கோவில் 57-ம் ஆண்டு சமத்துவ எருது கட்டு விழா நடந்தது. இதை ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர்பாட்சா முத்துராமலிங்கம் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஒவ்வொரு காளைகளாக காளைகளின் கழுத்தில் வடமாடு கயிறு கட்டப்பட்டு மைதானத்தை சுற்றி வந்தன. இந்த மாடுகளை வீரர்கள் ஆர்வத்துடன் அடக்க முயன்றனர். ஆனால் வீரர்களுக்கு பிடி கொடுக்காமல் மாடுகள் ஒவ்வொன்றும் திமிறியபடி மைதானத்தை சுற்றி வலம் வந்தன. ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் 30-க்கும் மேற்பட்ட காளைகள் இந்த சமத்துவ எருது கட்டு விழாவில் கலந்து கொண்டன. எருதுகட்டு விழாவில் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் ராஜேந்தர், ராமநாதபுரம் நகரசபை தலைவர் கார்மேகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். எருதுகட்டு விழாவில் வெற்றி பெற்ற காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.
எருது கட்டு விழா ஏற்பாடுகளை பொக்கனாரேந்தல், பள்ளபச்சேரி, பால்கரை, முத்து வீரப்பன் வலசை, ராஜ சூரியமடை, கோவிந்தநேந்தல், திருப்புல்லாணி இந்திரா நகர், அச்சடிபிரம்பு, ஆனைக்குடி, வீரன் வலசை, தெற்குதரவை, கொடிக்குளம், வித்தானூர், எல்.கருங்குளம், ஆர்.காவனூர், ராமநாதபுரம் இந்திரா நகர் உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் கமிட்டியின் நிர்வாகிகளும் செய்திருந்தனர்.
- ஸ்கூட்டரில் இருந்து தவறிவிழுந்து பெண் பலியானார்.
- சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலூகா மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சோலைராஜ். இவரது மனைவி ராமலெட்சுமி (40). இவர் தனது மகன் இளைய பாரதியுடன் இருசக்கர வாகனத்தில் கமுதி சென்றார். வாகனத்தை இளையபாரதி வேகமாக ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிங்கபுளியபட்டி அருகே சென்ற போது இரு சக்கர வாகனத்திலிருந்து ராமலெட்சுமி தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கமுதி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது ராமலெட்சுமி ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து ராமலெட்சுமியின் மூத்த மகன் ஆனந்த்பிரபு கமுதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அப்துல் வஹா, சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 3 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி மாணவர் சாதனை படைத்தார்.
- இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி உலக சாதனை சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
கீழக்கரை
ராமநாதபுரத்தில் நோபல் உலக சாதனை மற்றும் கனி சிலம்ப விளையாட்டு, சிலம்பக்கலை அகாடமி இணைந்து இடைவிடாமல் 3 மணி நேரம் சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்ச்சி செய்யாலூர் ஆர்.கே.சாமி கல்லூரியில் நடந்தது.
சிலம்ப விளையாட்டுப் பள்ளியின் நிறுவனர் அகமது மரைக்கா, கனி சிலம்பப்பள்ளி நிறுவனர் வரிசை கனி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் 3 மணிநேரம் உலக சாதனைக்காக 6 பள்ளி களைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் பங்கேற்று சிலம்பம் சுற்றினர்.
ராமநாதபுரம் முஹம்மது சதக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 7-ம் வகுப்பு மாணவர் முகமது அப்துல் ஹாலித், ஆர்.கே. சாமி கல்லூரியில் இருந்து நல்லாங்குடி கிராமம் வரையிலும், பின்னர் நல்லாங்குடியில் இருந்து ஆர்.கே.சாமி கல்லூரி வரையிலும் மொத்தம் 10 கிலோமீட்டர் தூரத்தை 1 மணி நேரம் ஸ்கேட்டிங் மற்றும் சிலம்பம் சுற்றியபடி சாதனை படைத்தார்.
இந்த மாணவருக்கு ராமநாதபுரம் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி உலக சாதனை சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். இதில் திருப்பூரை சேர்ந்த சோழன் சிலம்பம் மற்றும் விளை யாட்டு அகாடமி மாண வர்கள் கலந்துகொண்டு சிலம்பம் சுற்றினர்.
- எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பரமக்குடி யாதவா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்
- பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்று மாணவர்களை வாழ்த்தினர்.
பரமக்குடி
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. ராமநாதபுரம் கல்வி மாவட்ட அளவில் பரமக்குடி யாதவா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவி யுவஸ்ரீ-496 மதிப்பெண்களும், மாணவர் அபிஷேக்-494 மதிப்பெண்களும் பெற்றனர். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு கல்விக்குழு சார்பில் பரிசு வழங்கி பாராட்டினர்.
இதில் கல்வி குழுத் தலைவர் மலேசியாபாண்டியன், கல்விக்குழு செயலாளரும், தாளாளருமான அழகர்சாமி, பொருளாளர் கண்ணன், துணைத் தலைவர் பாஸ்கரன், துணைச் செயலாளர் செல்லக்காரி, கல்வி குழு உறுப்பினர்கள் போஸ், சந்திரசேகரன், ஹரிகிருஷ்ணன், முதல்வர் பூமாதேவி மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்று மாணவர்களை வாழ்த்தினர்.
- எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் உலையூர் அரசு உயர்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றனர்.
- மாணவர்களை தலைமை ஆசிரியர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா உலையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 22 மாணவ-மாணவியர்கள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் 22 பேரும் தேர்ச்சி பெற்றனர். 3 மாணவ- மாணவிகள் 488 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பெற்றனர். 15 பேர் 400-க்கு மேல் மதிப்பெண் பெற்றனர். கணிதப்பாடத்தில் ஒரு மாணவர் 100 மதிப்பெண்ணும், அறிவியல் பாடத்தில் 3 பேர் 100 மதிப்பெண்ணும் பெற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவி கார்னிஷா-488, ஜீவா-488, மனோ ஆனந்தி-488 கவி-485, சர்மிளா-476, சந்துரு-476 ஆகியோரை தலைமை ஆசிரியர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
- மாணவிகள் மனச்சோர்வு அடைய வேண்டாம் மீண்டும் சாதிப்போம்.
- இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் தாளாளர் முகைதீன் இப்ராகிம் பேட்டியளித்தார்.
கீழக்கரை
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்த, தோல்வியடைந்த மாணவிகள் மனச்சோர்வு அடைய வேண்டாம். மீண்டும் சாதிப்போம் என்று கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மதிப்பெண் குறைவாக எடுத்த, தோல்வியடைந்த மாணவிகள் எதற்கும் கவலைப்பட தேவையில்லை. மறு தேர்வு எழுதி பிளஸ்-1 படிக்கலாம்.மதிப்பெண் குறைந்ததாலும், தோல்வியடைந்ததாலும் எந்த விதத்திலும் மனம் தளர வேண்டாம். பெற்றோர்களும் கவலை கொள்ள வேண்டாம். நல்ல மதிப்பெண்கள் மறு தேர்வில் பெற்று உயர்கல்வி படிக்கலாம்.
மதிப்பெண் குறைவாக எடுத்தவர்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள்.மதிப்பெண் குறைந்த தற்கும், தோல்விய டைந்ததற்கும் காரணம் என்ன? என்பதை சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் நுங்கு விற்பனை ஜோராக நடந்து வருகிறது.
- நுங்குக்கு கொழுப்பைக் கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் தன்மை உள்ளது.
அபிராமம்
கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப் படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பனைமரங்கள் பரவலாக இருந்தாலும் முதுகுளத்தூர், கடலாடி சாயல்குடி, கமுதி, அபிராமம் பகுதியில் பலவித நன்மை தரும் நுங்கு களை அபிராமம் பகுதி மக்கள் பெரிதும் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர்.
இந்த நிலையில் ராமநாத புரம், ராமேசுவரம் பரமக்குடி, முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி கமுதி, அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நுங்கு விற்பனை அமோக மாக நடைபெறுகிறது. அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் கோடை வெயிலின் தாக் கத்தினால் ஏற்படும் தாகத்தை தணிக்க நுங்கு களை வாங்கி சாப்பிடுகின்ற னர்
நுங்க சிறப்பு பற்றி முதியவர் ஒருவர் கூறுகை யில், பனைமரங்களில் பெண்பனை மரங்களில் மட்டும்தான் நுங்குகள் காய்க்கு. ஒரு பனை மரத்துக்கு 10 குலைகள் தள்ளும். நுங்கு உடல்நலத துக்கு நல்லது.
பெரும்பா லானோர் அதன் வெள்ளைச் சோற்று பகுதியை மட்டுமே பிரித்துச் சாப்பிடுகிறார்கள். மாறாக அதன் மேல் ஒட்டுத் தோலையும் சேர்த்துச் சாப்பிடுவதே மிகமிக நல்லது.
நுங்குக்கு கொழுப்பைக் கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் தன்மை உள்ளது. நுங்கில் உள்ள நீரானது பசியைத் தூண்டும். மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு இரண்டுக்குமே இது சிறந்த மருந்து. உடல் வெப்பத்தைத் தணிக்க வல்லது. வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோயினை தடுத்து, உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி தரக்கூடியது. ரத்த சோகை நோய்க்கு நூங்கு இயற்கையான மருந்தாகும்.
நுங்கில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற சத்துகள் உள்ளன.
கோடைகாலங்களில் பலருக்கும் வியர்க்குரு மற்றும் வேணல் கட்டிகள் உருவாகும். நுங்குத் தண்ணீ ரும், மேல் ஓட்டுடன் கூடிய நுங்கையும் உடலில் வியர்க் குரு மற்றும் வேனல் கட்டி கள் இருக்கும் இடங்களில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும் என்றார்.
- கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை படைத்தது.
- முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் பாராட்டி னர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமிய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பள்ளி அளவில் மாணவி நவதர்ஷினி 500-க்கு 490 மதிப்பெண்கள் எடுத்து கணிதவியல் பாடத்தில் சதமடித்து முதலிடத்திலும், மாணவி நஷாஹா 500-க்கு 484 மதிப்பெண்கள் எடுத்து 2-ம் இடத்திலும், மாணவி கவிப்ரியா 500-க்கு 483 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்திலும் சாதனை படைத்துள்ளனர்.
ஹனூனா மரியம், சஜிலா பர்வீன், முனீஸ் கனிஷ்கா, ஏ.சுமையா பாத்திமா, முஹம்மது அல்ரிபா, எஸ்.சுமையா பாத்திமா, சோபிகா ஆகிய 7 மாணவிகள் 450க்கு மேல் மதிப்பெண்களும், 35 மாணவிகள் 400-க்கு மேல் மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்து சாதனை படைத்த மாணவிகளை தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராகிம், முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் பாராட்டி னர்.
- கோடை காலத்தில் பயறு வகைகளை விதையுங்கள் என வேளாண் அதிகாரி வலியுறுத்தினார்.
- இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்ட வேளாண் உதவி இயக்குநர் சிவராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தற்போது கோடை மழையை பயன்படுத்தி நெல் தரிசில் பயறு விதைப்பதால் மழை நீர் ஆவியாவது தடுக்கப்பட்டு பயிர் வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தப்படும். பயறுவகை பயிர்களின் வேர் முடிச்சில் காணப்படும் ரைசோபியம் என்ற பாக்டீரியா காற்றில் உள்ள தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்தும். எனவே மண்ணிற்கு தழைச்சத்து கிடைக்கிறது. பயறுச்செடிகள் கால்நடைகளுக்கு உணவாக பயன்படும். காய்ந்த இலை சருகுகள் மண்ணில் அங்ககத் தன்மையை அதிகரிக்கும். களைச் செடிகள் முளைப்பது கட்டுப்படுத்தப்படும்.
எனவே விவசாயிகள் பயறு வகைகள் விதைக்க கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். வேளாண் விரிவாக்க மையத்தில் 65 முதல் 75 நாட்களில் விளையக்கூடிய வம்பன் 8 மற்றும் வம்பன் 10 உளுந்து 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- தொண்டியில் நடந்த கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் சாதனை மாணவ-மாணவிகள் கவுரவிக்கப்பட்டனர்.
- உயர் கல்வியின் முக்கியத்துவம் பற்றி பேராசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் ஐக்கிய ஜமாஅத் மற்றும் ராமநாத புரம் எகனாமிக் சேம்பர் இணைந்து கல்வி வழி காட்டி நிகழ்ச்சியை நடத் தின. இதில் மாண வர்கள் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் அடுத்து என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்பது பற்றிய பல்வேறு துறை சார்ந்த பேராசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.
உயர் கல்வியின் முக்கி யத்துவம் பற்றி பேராசிரியர் முகம்மது அப்துல்லாஹ், ஆசிரியப்பணி மற்றும் அரசு பள்ளிகள் பற்றி பேராசிரியர் சுல்தான், மருத்துவம், துணை மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வி சம்பந்த மாக பேராசிரியர் சுல்தான் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
பள்ளி அளவில் முதல் 3 இடங்களை பிடித்த 17 மாணவ-மாணவிகளை பாராட்டி கேடயம், ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
- ராமநாதபுரத்தில் 26-ந் தேதி மீனவர் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது.
- கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மீனவர்களின் குறைகேட்பு கூட்டம் நடத்தக் கோரி மீனவ பிரதிநிதிகளால் கலெக்டரை கேட்டுக்கொண்டதை தொடர்ந்து வருகிற 26-ந்தேதிமாலை 3.30 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டரங்கில் கலெக்டர் தலைமையில் மீனவர் குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் ராமநாதபுரம் மாவட்ட அரசுத்துறை அனைத்து அலுவலர்களும் கலந்துகொள்ள உள்ளனர். எனவே ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மீனவ மக்களும் இதில் கலந்துகொண்டு குறைகளை தெரிவித்து அதற்கான தீர்வினை பெறலாம். மேலும் மீனவர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்து இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






