என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மீட்புப்பணிகளை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் குறிப்பாக புயல் கரையை கடக்க கூடிய அதிகாலையில் 130 கி.மீ முதல் 140 கி.மீ வேகத்தில் காற்று வீசிய காரணத்தினால் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதிலும் பெருமளவு சேதத்தை திடீரென்று சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக 10,000 த்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள், 33 கி.வாட் மின்பாதை, கிராமங்கள் உள்ளிட்ட அநேக இடங்களில் சாய்ந்துள்ளது. மரங்களும் மின்கம்பத்தில் சாய்ந்த காரணத்தினால் பெரும்பாலான பகுதிகளில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மின்சாரத்துறை உள்ளிட்டத் துறைகள் மின்சாரத் துறை அமைச்சர், வருவாய்த் துறை அமைச்சர் அறிவுறுத்தலின் படி முன்னதாக அதிகாலை 4 மணிக்கு மின் இணைப்புகளை துண்டித்த காரணத்தினால் மின்சாரத்தினால் எவ்வித உயிர் இழப்பும் இல்லாத நிலையை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் காலை முதல் புயல் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் சுற்றுச்சூழல், வனத்துறை அரசு முதன்மைச் செயலாளர், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அனைவரும் நேரடியாக சென்று களஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
பொது மக்களுக்கு மின்சார வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தருவதே மாவட்ட நிர்வாகத்தின் முதல் நோக்கமாகும். எனவே அதற்குரிய பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் அறிவுரையின் படி மின்சாரத்துறை அமைச்சருடன் தொடர்பு கொண்டு பேசி ஏற்கனவே இங்குள்ள மின்சாரப் பணியாளர்களுடன் வெளி மாவட்டங்களிலிருந்து 500 பணியாளர்களும், 33 சிறப்பு அலுவலர்களும் வருகை தர உள்ளனர். இதன் மூலம் இப்பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சேத பாதிப்புகள் கணக்கிடப்பட்டு வருவதுடன் சேதமடைந்த கூரை வீடுகள், ஓட்டு வீடுகள் போன்றவை கணக்கெடுக்க வருவாய்த் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரகத்தில் அனைத்துத் துறை அரசு உயர் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், அரசு அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மங்கள் சாய்ந்து சாலையில் விழுந்துள்ளன. வெளிமாவட்டங்களை சேர்ந்த 500 பணியாளர்களை கொண்டு சீரமைப்பு மற்றும் மின்சார பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை நகர் பகுதியில் சீரமைப்பு பணிகளை முடித்து இன்றைக்குள் மின்சாரம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார். #GajaCyclone #Gaja #Vijayabaskar
புதுக்கோட்டையில் இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் பதற்றத்தோடு உள்ள ஒரே கட்சி பா.ஜ.க.தான். அவர்கள் கூறிய வாக்குறுதிகள் ஒன்று கூட இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
சுதந்திரமாக செயல்படக் கூடிய சி.பி.ஐ., வருமானவரித்துறை, தேர்தல் ஆணையம் ஆகியவற்றில் மத்திய அரசின் தலையீட்டால் பல்வேறு முரண்பாடுகள் அதில் ஏற்பட்டுள்ளது
இதன் காரணமாகத்தான் மக்கள் நலனில் அக்கறை கொண்ட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு பா.ஜ. க.வை எதிர்ப்பதற்கும், 2019 தேர்தலுக்காகவும் ஒன்று கூடி வருகிறோம். 2019 தேர்தலில் பா.ஜ.க. ஆட்சிக்கு வரப்போவது கிடையாது.
பாலியல் வன்முறைகள் தற்போது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவல்துறையே அதற்கு உடந்தையாக இருப்பது கண்டிக்கத்தக்கது.

இலங்கையில் தொடர்ந்து ஜனநாயகப் படுகொலை நடந்து வருகிறது. தமிழர்களுக்கு அங்கு ஒருபோதும் பாதுகாப்பு கிடையாது. இந்த விஷயத்தில் மத்திய அரசு இதுவரை வாய் திறக்காமல் மவுனமாக இருப்பது கண்டிக்கத்தக்கது. உடனடியாக மத்திய அரசு மவுனத்தை கலைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Mutharasan #BJP
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கோட்டைப்பட்டினம் தாஜ்மகால் தெருவை சேர்ந்தவர் நூர்தீன் (வயது 48). மைக்செட் கடை வைத்துள்ளார்.
மாவட்டம் முழுவதும் நடைபெறும் மாநாடு, பொதுக்கூட்டம், திருமண நிகழ்ச்சி உள்ளிட்ட அனைத்திற்கும் மைக்செட் அமைத்து பெயர் பெற்றவர். இந்த நிலையில் நூர்தீன் தனது மனைவியின் தங்கை மகள் திருமணத்திற்காக 96 பவுன் நகையை வாங்கி வைத்திருந்தார்.
இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நடக்க இருந்த நிலையில் சிறிது சிறிதாக இந்த நகைகளை சேர்த்திருந்தார். நேற்று மனைவிக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவால் அவரை அழைத்துக்கொண்டு மருத்துவ பரிசோதனைக்காக புதுக்கோட்டை சென்றிருந்தார்.
இன்று அதிகாலை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியபோது அவரின் வீட்டு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த நூர்தீன் வீட்டிற்குள் சென்றார். அங்கு வீடே அலங்கோலமாக காட்சி அளித்தது. அனைத்து பொருட்களும் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன.
மேலும் தனி அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 96 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது. நகை, பணம் திருட்டு போனதால் நூர்தீன் மற்றும் அவரது மனைவி கதறி அழுதனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டு முன்பு திரண்டனர்.
பின்னர் இதுகுறித்து நூர்தீன் கோட்டைப்பட்டினம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டில் நகை இருப்பதை முன்கூட்டியே அறிந்தவர்கள்தான், இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்றும், அவர்கள் உறவினர்களா? அல்லது நூர்தீன் மைக் செட் கடையில் வேலை பார்க்கும் நபர்களா? என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் செல்லும் சாலையில் லேணா விலக்கில் செந்தூரான் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இக்கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இதேபோன்று மேலும் 3 கல்லூரிகளில் அதிக அளவில் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் நடந்த செமஸ்டர் தேர்வில் இந்த 3 கல்லூரிகளும் தங்களுடைய மாணவர்களுக்கு தேர்வு மையத்தில் கேள்விக்கான வினாக்களை புத்தகத்தை வைத்து பார்த்து எழுதவும், பிட் வைத்து எழுதவும் அனுமதித்துள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த முறைகேடுகள் உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, 3 கல்லூரிகள் மீதும் விசாரணை நடத்த குழு அமைத்து உத்தரவிட்டிருந்தார். அக்குழுவினர் இதன் மீதான விசாரணை அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய உள்ளனர். இதில் ஒரு கல்லூரி மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கல்லூரிகளின் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த 3 கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் எந்த தேர்வுக்கும் மேற்பார்வையாளராக நியமிக்கப்படவும் அண்ணா பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது.
இந்த முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இனி மேல் தேர்வு நேரங்களில் மற்ற கல்லூரிகளில் இருந்து பேராசிரியர்களை பணியில் அமர்த்தி தேர்வுகளை கண்காணிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைகேடுகள் காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு முறையில் மேலும் பல அதிரடிகளை செய்துள்ளது. மறு மதிப்பீடு முறையிலும் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. கல்லூரி செமஸ்டர் தேர்வுகளில் விடைத்தாள்களை எதுவும் எழுதாமல் வீணாக்காமல் இருப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செந்தூரான் கல்லூரி அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளதால் அக்கல்லூரியில் படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இதற்கிடையே அந்த கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளை மற்ற கல்லூரிகளில் சேர்ப்பது குறித்து பல்கலைக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். #AnnaUniversity

புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்றார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கிடையாது. எந்தவிதமான நன்மையும் கிடைக்கப்போவது இல்லை. ஒருவேளை ராஜபக்சே வெற்றி பெற்றால் இலங்கை அரசின் சட்டத்தை திருத்தி அதிபர் பதவியில் இருந்து சிறிசேனாவை கழற்றி விட்டு அவர் அதிபராக வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதை அவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் தமிழர்களின் பண் பாட்டு தலங்கள் அழிக்கப்படும் அபாயமும் உள்ளது

இலங்கைப் பிரச்சினையை பொறுத்தவரை தமிழ் மாகாண சபை தலைவர் விக்னேஸ்வரன் கொண்டு வந்த தீர்மானம் மட்டுமே ஒரே தீர்வாக இருக்கும். தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்கள் நலனுக்காக செயல்பட வில்லை. அவர்கள் முழுவதுமாக சிங்களர் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தி அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள் .
இலங்கை அரசு கலைக்கப்பட்டதை கண்டித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக அங்குள்ள தமிழ் அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன. ஒரு வேளை வழக்கு தொடரப்பட்டால் இலங்கை அரசு கலைக்கப்பட்டது செல்லாது என்று அறிவிப்பு வரலாம். ஏனென்றால் இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைப்பதற்கு நான்கு ஆண்டு காலம் முடிய வேண்டும் என்று சட்ட விதி உள்ளது. ஆனால் அந்த சட்டத்தை மீறி தான் தற்போது நாடாளு மன்றம் கலைக்கப்பட்டு உள்ளது.
தமிழக மீனவர் நலன் குறித்து மத்திய அரசுக்கு அக்கறை கிடையாது. இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட படகுகள் மற்றும் மீனவர்களை விடுதலை செய்வதற்கு அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதை கண்டிப்பதற்கும் அந்த சட்டத்தை விளக்குவதற்கும் நானே நேரில் பிரதமரை சந்தித்து, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை முடித்து வைக்குமாறு கேட்டுக்கொண்டேன். ஆனால் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் இருந்து தமிழக மீனவர்கள் மீது மோடிக்கு அக்கறை இல்லை என்பதை காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #vaiko #SriLanka #rajapaksa
புதுக்கோட்டை மாவட்டம் முத்துபட்டினத்தில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று காலை நடந்தது. விழாவில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 70 சதவீத மகப்பேறு அரசு மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது. அதில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதன்மையாக விளங்குகிறது. இதேபோன்று மகப்பேறு இறப்பு சதவீதம் என்பது 5 மாதத்திற்கு முன்பு ஒரு லட்சத்திற்கு 62 ஆக இருந்தது. ஆனால் அது தற்போது 51 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிலேயே குறைந்த இறப்பு சதவீதம் ஆகும்.
தமிழக சுகாதாரத்துறை சார்பில் விபத்தினால் ஏற்படும் இழப்புகளை தடுப்பதற்கு கிழக்கு கடற்கரை சாலையில் விபத்துக்கான நிலைப்படுத்தும் மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தற்போது இறப்பு சதவீதம் குறைந்துள்ளது. இதை விரிவுபடுத்தும் விதமாக விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் அதிகம் விபத்து நடக்கும் பகுதிகளில் இத்தகைய நிலைப்படுத்தும் மையங்கள் தொடங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Vijayabaskar #TNHealthDepartment
மத்திய பா.ஜ.க. அரசு, பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து 3-ம் ஆண்டு தொடக்கத்தை கருப்பு தினம் என்று அறிவித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில் மாநில செய்தி தொடர்பாளர் பெனட் அந்தோணிராஜ், நகர தலைவர் இப்ராகிம்பாபு உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அவர்கள், பண மதிப்பிழப்பு குறித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதேபோல் அறந்தாங்கியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் தர்மதங்கவேல் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் புஷ்பராஜ், சுப்புராம் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






