என் மலர்tooltip icon

    நீலகிரி

    மலைப்பிரதேசங்களில் பணியாற்றி வரும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு விடுமுறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்க நீலகிரி மாவட்ட தலைவர் ரவி, செயலாளர் அகமதுகான், பொருளாளர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    சங்கத்தின் மாநில மைய முடிவின்படி எங்களது 16 அம்ச கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் பரிசீலனை செய்து சங்க மாநில நிர்வாகிகளை அழைத்து பேசி நிறைவேற்ற வேண்டும். கூட்டுறவு துறை ரேஷன் கடை பணியாளர்களின் ஊதிய மாற்றத்திற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் ஊதிய குழு அமைத்து வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதிக்குள் ஊதிய மாற்றம் செய்ய வேண்டும்.

    பொது வினியோக திட்டத்துக்கு தனித்துறை உருவாக்குவதுடன், பணிவரன்முறை செய்யப்படாத 5 ஆயிரம் பணியாளர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும். ரேஷன் கடை பணியாளர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்குவதுடன், 500 ரேஷன் அட்டைக்கு மேல் உள்ள கடைகளுக்கு எடையாளரை நியமிக்க வேண்டும்.

    கூட்டுறவு துறையில் ஏற்படும் லாப, நஷ்டத்திற்கு விற்பனையாளர் காரணமல்ல. எனவே, அனைவருக்கும் 30 சதவீதம் போனஸ் வழங்குவதுடன், கொரோனாவால் உயிரிழந்த ரேஷன் கடை பணியாளருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு கடந்த மே மாதத்தில் இருந்து ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். பயோமெட்ரிக் முறையை அமல்படுத்தி தரமான விற்பனை முனையம் வழங்க வேண்டும்.

    மலைப்பிரதேசங்களில் 4 வெள்ளிக்கிழமைகள் விடுமுறை ஆகவும், 4 ஞாயிற்றுக்கிழமைகள் வேலை நாட்களாகவும் நடைமுறையில் உள்ளதை மாற்றி முதல் இரண்டு வெள்ளிக்கிழமையும், 3 மற்றும் 4-வது ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை என நடைமுறையில் உள்ளதை தொடர ஆவன செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இது தொடர்பான கோரிக்கை மனு தமிழக முதல்-அமைச்சருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
    மஞ்சூர் அருகே நடந்த திருமண விழாவில் எனது காதலரை தான் கரம் பிடிப்பேன் என்று கூறி தாலி கட்டும் நேரத்தில் மணமகனின் கையை தட்டிவிட்டு எழுந்த இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
    நீலகிரி:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள மட்டக்கண்டி கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், கோத்தகிரி அருகே உள்ள தூனேரி கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு மிகவும் எளிமையாக திருமணம் நடத்த பெற்றோர் முடிவு செய்தனர்.

    அதன்படி கடந்த 29-ந் தேதி மட்டக்கண்டி கிராமத்தில் திருமண விழா நடந்தது. இதில் அலங்கரிக்கப்பட்ட மண மேடையில் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்ததுடன் கழுத்தில் மாலையுடனும், மணமகள் பட்டுச்சேலை அணிந்து கொண்டு மாலையுடன் மணமேடையில் அமர்ந்து இருந்தனர். திருமண விழாவில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

    மணமக்களின் குல வழக்கப்படி மணமகளின் கழுத்தில் தாலி கட்டுவதற்கு முன்பு, என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா? என்று மணமகன் மணப்பெண்ணிடம் 3 முறை கேட்க வேண்டும். 3 முறையும் சம்மதம் என்று சொன்ன பிறகே மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்ட வேண்டும்.

    அதன்படி மணமகளிடம் என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா என்று மணமகன் கேட்டார். அவர் 2 முறை கேட்டபோதும் மணமகளிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. அப்போது சரியாக கேட்கவில்லை என்று நினைத்த மணமகன், 3-வது முறையாக கொஞ்சம் சத்தமாக என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா என்று கேட்டபடி மணமகளின் கழுத்தில் தாலி கட்ட முயன்றார்.

    உடனே மணமகள் உங்களை திருமணம் செய்து கொள்ள எனக்கு சம்மதம் இல்லை என்று கூறினார். அத்துடன் தாலி கட்ட விடாமல் மணமகனின் கையை தட்டிவிட்டு எழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் ஏன் திருமணம் வேண்டாம் என்று கேட்டனர்.

    அப்போது பேசிய மணமகள், நான் சென்னையை சேர்ந்த ஒருவரை காதலித்து வருகிறேன். ஏற்கனவே அவர் திருமணமானவர். அவருக்கு குழந்தை உள்ளது. எனக்காக அவர் திருமண பந்தத்தை முறித்துக்கொண்டார். அவருடைய குழந்தைக்கு நான்தான் தாயாக இருந்து பராமரிப்பேன் என்று வாக்கு கொடுத்துவிட்டேன். அவர் எனக்காக காத்து இருக்கிறார். இன்னும் சிறிது நேரத்தில் இங்கே வந்துவிடுவார் என்று கூறி மணமேடையை விட்டு இறங்கினார்.

    உடனே அந்த மணப்பெண்ணின் உறவினர்கள் அவரை தாக்க முயன்றனர். அத்துடன் அந்த பெண்ணின் பெற்றோர், மணமேடையில் அமர்ந்து மணமகனை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். அதற்கு அவர், எனது காதலரை தான் நான் கரம் பிடிப்பேன் என்று கூறினார். அதற்கு அங்கிருந்த உறவினர்கள் மணமகனை பிடிக்கவில்லை என்றால் ஆரம்பத்திலேயே கூறி இருக்கலாமே என்று கேட்டனர்.

    அதற்கு அந்த பெண், எனக்கு பேசுவதற்கு யாரும் அனுமதி கொடுக்கவில்லை. ஒருவரை மனதில் வைத்துக்கொண்டு, பிடிக்காத ஒருவரை திருமணம் செய்து கொண்டு, அவருக்கு துரோகம் செய்ய எனக்கு மனமில்லை. எனவே நான் சென்னையை சேர்ந்த எனது காதலரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

    இந்த காட்சியை திருமண விழாவுக்கு வந்திருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பரவ விட்டார்.

    தற்போது அந்த காட்சி வைரலாக பரவி வருகிறது. மஞ்சூர் அருகே தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்றுக்கூறி மணமகள் மணமேடையில் இருந்து எழும்பி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கோத்தகிரி அருகே மோட்டார்சைக்கிள் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரது மகன் மணிகண்டன் (வயது 24). லாரி கிளீனர். இவர் கடந்த 11-ம் தேதி தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் மாடியில் நிறுத்தி விட்டு சென்றார். அதை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். இது குறித்த புகாரின்பேரில் கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    அதில் கட்டபெட்டு அருகே உள்ள அம்பேத்கார் நகரைச் சேர்ந்த பிரகாஷ் (23) என்பவர் மணிகண்டனின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பிரகாசை கைது செய்தனர்.

    பார்சன்ஸ்வேலி அணையில் இருந்து தண்ணீர் எடுத்ததற்கு கட்டணம் செலுத்தாததால் ஊட்டி நகராட்சிக்கு ரூ.6 கோடி அபராதம் விதித்து மின் வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது.
    ஊட்டி:

    ஊட்டி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஊட்டி நகரின் குடிநீர் தேவையை கோரிசோலா, தொட்டபெட்டா அப்பர், தொட்டபெட்டா லோயர், மார்லிமந்து, கோடப்பமந்து அப்பர், கோடப்பமந்து லோயர், டைகர் ஹில், பார்சன்ஸ்வேலி ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.பார்சன்ஸ்வேலி அணையில் இருந்து முதலாவது மற்றும் 2-வது கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தினமும் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதில் 4,500 லிட்டர் தண்ணீருக்கு ரூ.4.50 பைசா என்ற கணக்கின்படி கட்டணமாக நகராட்சி நிர்வாகம் மின் வாரியத்துக்கு செலுத்த வேண்டும்.

    கடந்த சில ஆண்டுகளாக ஊட்டி நகராட்சிக்கு நிதி பற்றாக்குறை அதிகமாக உள்ளது. இதனால் ஊட்டி நகராட்சி நிர்வாகம் சார்பில் பார்சன்ஸ்வேலி அணையில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக மின்வாரியத்துக்கு உரிய கட்டணம் செலுத்தவில்லை. இதனால் தற்போது வரை ரூ.10 கோடி பாக்கி வைத்து உள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டணம் செலுத்தாததால் ஊட்டி நகராட்சிக்கு ரூ.6 கோடி அபராதம் விதித்து மின்வாரியம் நடவடிக்கை எடுத்து இருக்கிறது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் அரசுக்கு தெரிவித்ததை அடுத்து, முதல் கட்டமாக தமிழக அரசு ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. இருப்பினும் அபராத தொகை மற்றும் பாக்கி தொகை நிலுவையில் இருக்கிறது.

    ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு வாடகை கட்டணம் வசூலிக்க தனி குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் சம்பளம் வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சிலருக்கு சம்பளம் வழங்கப்பட்டது. இருப்பினும் பலருக்கு வழங்கப்படாததால் நிதி பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் நகராட்சி நிர்வாகம் திணறி வருவது குறிப்பிடத்தக்கது.
    சேரம்பாடி அருகே செந்நாய்கள் கடித்து 8 ஆடுகள் பரிதாபமாக பலியானது.
    பந்தலூர்:

    பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே நாயக்கன் சோலை பகுதியை சேர்ந்தவர் கோபாலசாமி (வயது 54). இவர் தனது வீட்டில் ஆடுகள் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள புல்வெளியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டார். ஆனால் அந்த ஆடுகள் வீடு திரும்பவில்லை.

    இதனால் கோபாலசாமி மற்றும் குடும்பத்தினர் பல இடங்களில் ஆடுகளை தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. நேற்று 2- வது நாளாக ஆடுகளை தேடும் பணி நடைபெற்றது. அப்போது சேரம்பாடி அரசு தேயிலை தோட்டத்தில் செந்நாய்கள் கடித்து 8 ஆடுகள் இறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோபாலசாமி இது குறித்து சேரம்பாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில் வனச்சரக அதிகாரி சின்னதம்பி, வனவர் சசிகுமார், கார்டு ஜெயகுமார் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்த ஆடுகளின் உடல்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    அப்போது பாதிக்கப்பட்ட கோபாலசாமி இறந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டுமென வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தார். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் உறுதியளித்தனர்.

    இதேபோல் சேரங்கோடு அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண்.2 திருவள்ளுவர் நகர் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் விவேகானந்த ராஜா என்பவரின் பசு மாடு புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது சிறுத்தைப்புலி ஒன்று திடீரென பசு மாட்டை தாக்கியது.

    அதை பார்த்த தோட்ட தொழிலாளர்கள் கூச்சலிட்டபடி சம்பவ இடத்தை நோக்கி ஓடினர். இதையடுத்து சிறுத்தைப்புலி அங்கிருந்து தப்பி ஓடியது. படுகாயங்களுடன் உயிர் தப்பிய பசுமாட்டுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேயிலை தோட்டத்துக்குள் புகுந்த அந்த சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவில் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் கருகின.
    கோத்தகிரி:

    இயற்கை எழில் கொஞ்சும் மலை மாவட்டமான நீலகிரியில் பார்த்து ரசிக்க பல இடங்கள் உள்ளன. தற்போது கொரோனா பரவுவதை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால், இங்குள்ள சுற்றுலா மையங்களுக்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.

    கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் நேரு பூங்கா உள்ளது. இங்கு அழகிய புல் தரைகள், ரோஜா பூந்தோட்டம், வண்ண மலர்கள், சிறுவர் விளையாட்டு பூங்கா, நூற்றாண்டு பழமை வாய்ந்த பழங்குடியினர் கோத்தர் இன மக்களின் குல தெய்வமான அய்யனார் அம்மனூர் கோவில் ஆகியவை உள்ளன.

    கோடைவிழாவையொட்டி காய்கறி கண்காட்சி நடத்த கோத்தகிரி பேரூராட்சி சார்பில் பூங்காவை தயார் செய்யும் பணி நடந்தது. தொடர்ந்து பிப்ரவரி மாதத்தில் 30 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன. ஆனால் கொரோனா காரணமாக மார்ச் மாதம் முதல் இந்த பூங்கா மூடப்பட்டது. இதுவரை திறக்கப்படவில்லை.

    அங்குள்ள ஊழியர்கள் பூங்காவில் இருக்கும் செடிகளை பராமரித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த மாதம் பூங்காவில் இருந்த செடிகளில் பலவித வண்ணமான பூக்கள் பூத்து குலுங்கின. அதை பார்க்கவே அழகாக இருந்தது.

    இதற்கிடையே, கடந்த ஒரு வார காலமாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது. இதனால் பூங்காவில் பூத்து குலுங்கிய பூக்கள் கருகி வருகின்றன.

    இதைத்தொடர்ந்து கருகிய பூக்களை செடிகளுடன் அகற்றி மீண்டும் அங்கு புதிய மலர் நாற்றுக்களை நடும் பணி நடந்து வருகிறது. அதுபோன்று புல் தரைகளில் அதிகமாக வளர்ந்துள்ள புற்களை எந்திரம் மூலம் வெட்டி அகற்றும் பணியிலும் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் முடிந்த வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொட்டபெட்டா ஊராட்சியில் மாநில நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.36.27 லட்சத்தில் அமைக்கப்பட்ட சாலை, எப்பநாடு ஊராட்சிக்கு உட்பட்ட கக்குச்சி முதல் இடுஹட்டி வரை மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.26.40 லட்சத்தில் சாலை மேம்படுத்துதல் பணி, எப்பநாடு பகுதியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.25 ஆயிரத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா, ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயசங்கர், ஸ்ரீதரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    இதையடுத்து ஊட்டி எச்.பி.எப். பகுதியில் கட்டப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகள் கலெக்டர் ஆய்வு செய்தார்.
    குஞ்சப்பனை சோதனைச்சாவடியில் தினமும் 400 பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது.
    கோத்தகிரி:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்துக்கு வர இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு இ-பாஸ் பெற்று வருபவர்கள் மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் உள்ள குஞ்சப்பனை சோதனைச்சாவடி வழியாக நீலகிரி மாவட்டத்துக்குள் வருகின்றனர். அங்கு அவர்களுக்கு உடல் வெப்ப சோதனை நடத்தப்படுகிறது. பின்னர் இ-பாஸ் பெற்று வருகின்றனரா? என்று சோதனை செய்யப்படுகிறது. மேலும் சோதனைச்சாவடிக்கு வந்து செல்பவர்களின் விவரங்கள் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்ற பணிகளில் காவல், சுகாதாரம், வருவாய் உள்பட அனைத்து துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    எனினும் நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் குஞ்சப்பனை சோதனைச்சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் அந்த வழியாக அரசு பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்களில் வருபவர்களிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது. பின்னர் அந்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதுபோன்று தினமும் சுமார் 400 பேரிடம் சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது. மேலும் அவர்களது விவரங்களும் பெறப்பட்டு, முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அவர்களது செல்போன் எண்ணுக்கே அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் நீலகிரியில் கொரோனா பாதிப்பு குறையும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
    ஊட்டியில் 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஊராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஊட்டி:

    தமிழகத்தில் தூய்மை காவலருக்கான ரூ.1,000 ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும், கடந்த 1981-ம் ஆண்டு பணி நிரந்தர சட்டப்படி 480 நாட்கள் பணி முடித்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கொரோனா காலத்தில் இறந்த பணியாளர்களுக்கு நிவாரணமாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு உள்ளாட்சி துறை பணியாளர் சம்மேளனம்(ஏ.ஐ.டி.யு.சி) சார்பில் ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் ரகுநாதன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் தொரை, பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி தூய்மை பணியாளர்கள், குடிநீர் பம்பு ஆபரேட்டர்களுக்கு ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும். 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு பணி பதிவேடு பதியப்பட வேண்டும். பணியின் போது மரணம் அடைந்த ஊராட்சி பணியாளர்களின் வாரிசுக்கு குடும்ப நல நிதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊராட்சி தூய்மை பணியாளர், குடிநீர் பம்பு ஆபரேட்டர்களுக்கு பணிக்கொடையாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    இதில் ஏ.டி.சி. ஊட்டி நகர செயலாளர் ஜெயக்குமார் மற்றும் நீலகிரி மாவட்ட ஊராட்சி குடிநீர் குழாய் இயக்குனர் உதவியாளர் மற்றும் துப்புரவு பணியாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் கோரிக்கைகள் குறித்து ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

    பந்தலூர் அருகே காணாமல் போன வாலிபர் மரத்தில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பந்தலூர்:

    பந்தலூர் அருகே காணாமல் போன வாலிபர் மரத்தில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட மேங்கோரேஞ்சு பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 28). இவர் கடந்த 23-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. உடனே உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து தேவாலா போலீசில், ஹரிகிருஷ்ணனின் உறவினர்கள் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் அத்திமாநகர் வனப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் அழுகிய நிலையில் ஆண் பிணம் தொங்குவதாக தேவாலா போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு இன்ஸ்பெக்டர் திருஞான சம்பந்தம் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, பார்வையிட்டனர். அப்போது தூக்கில் பிணமாக தொங்குவது ஹரிகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.

    அதன்பின்னர் அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆனால் என்ன காரணத்துக்காக அவர் தற்கொலை செய்து கொண்டார் அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் உடலை யாரேனும் தொங்க விட்டு சென்றனரா? என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கூடலூர் அருகே 3 வீடுகளை சேதப்படுத்தி காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.
    கூடலூர்:

    கூடலூர் பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அங்குள்ள கெவிப்பாரா, காமராஜ் நகர், கோக்கால் மலையடிவாரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில வாரங்களாக காட்டுயானைகள் கூட்டமாக முகாமிட்டு உள்ளன. மேலும் கூடலூர்- ஓவேலி சாலையை அடிக்கடி கடந்து செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கூடலூர் அருகே உள்ள புளியாம்பாரா, கோழிக்கொல்லி ஆதிவாசி கிராமங்களில் மற்றொரு காட்டுயானைகள் கூட்டம் முகாமிட்டு உள்ளது. தொடர்ந்து இரவு நேரத்தில் பொதுமக்களின் வீடுகளை முற்றுகையிட்டு வருகின்றன. மேலும் அப்பகுதியில் பயிரிட்டுள்ள வாழை, பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை சேதப்படுத்துகின்றன. காட்டுயானைகள் தினமும் வருவதால் கோழிக்கொல்லி ஆதிவாசி மக்கள் பலர் இரவில் குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளில் தங்கி வருகின்றனர்.

    அதன்படி அதே பகுதியை சேர்ந்த பிஞ்சன், சங்கரன் ஆகியோர் கடந்த 25-ம் தேதி இரவில் உறவினர் வீட்டில் தங்கினர். அப்போது காட்டுயானைகள் கூட்டம் வழக்கம்போல பொதுமக்களின் வீடுகளை முற்றுகையிட்டது. நள்ளிரவில் பிஞ்சன், சங்கரன் ஆகியோரது வீடுகளை காட்டுயானைகள் இடித்து சேதப்படுத்தின. மேலும் அங்கு வைத்திருந்த அரிசி, பருப்பு, பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை நாசம் செய்தன. தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த கோத்தன் என்பவரது வீட்டை சேதப்படுத்தின. அப்போது வீட்டில் இருந்த கோத்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் அச்சத்தில் கூச்சலிட்டனர். உடனே கிராம மக்கள் திரண்டு வந்து காட்டுயானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து வனப்பகுதிக்குள் காட்டுயானைகள் விரட்டியடிக்கப்பட்டன.

    பின்னர் மறுநாள் காலையில் தங்களது வீடுகளுக்கு வந்த பிஞ்சன், சங்கரன் காட்டுயானைகள் சேதப்படுத்தி இருந்த வீடுகளை கண்டு கவலை அடைந்தனர். இதுகுறித்து ஆதிவாசி மக்கள் கூறும்போது, காட்டு யானைகள் வீடுகளை அடிக்கடி சேதப்படுத்தி விடுகின்றன. கூலி வேலைக்கு சென்று கிடைக்கும் வருவாயில் வீடுகளை சீரமைக்க முடியவில்லை. வனத்துறையினரிடம் முறையிட்டாலும் சேதத்துக்கு ஏற்ப நிவாரணத்தொகை கிடைப்பதில்லை. எனவே இனிவரும் நாட்களில் வீடுகள் சேதம் அடையாமல் இருக்க காட்டுயானைகள் வருகையை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    தொடர் விடுமுறையிலும் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.
    ஊட்டி:

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான சுற்றுலா தலங்கள் மூடியே காணப்படுகிறது. ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா மற்றும் கர்நாடக மாநில பூங்கா மட்டுமே திறக்கப்பட்டு உள்ளது. சமவெளி பகுதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று நீலகிரிக்குள் வர வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்து காணப்படுகிறது இதன் காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது. வழக்கமாக தொடர் விடுமுறை காலங்களில் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகமாக இருக்கும். இதன் மூலம் தங்கும் விடுதிகள், உணவகங்கள், காட்டேஜ்கள் மற்றும் அனைத்து வணிக நிறுவனங்களிலும் வியாபாரம் களை கட்டும்.

    தற்போது நீலகிரி மாவட்டத்துக்கு வருவதற்கு இ- பாஸ் விண்ணப்பித்த உடன் கிடைக்கிறது. இருப்பினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீலகிரிக்கு வர சுற்றுலா பயணிகள் போதிய ஆர்வம் காட்டுவது இல்லை. இந்த நிலையில் ஆயுத பூஜை, விஜயதசமி உள்ளிட்ட தொடர் விடுமுறை காலங்களில் நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரிக்கும் என வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்தனர். ஆனால் சுற்றுலா பயணிகள் வரத்து எதிர்பார்த்த அளவு இல்லை. இதனால் ஊட்டி தாவரவியல் பூங்கா, கர்நாடக மாநில பூங்காவில் சொற்ப அளவிலான சுற்றுலா பயணிகளே வந்து சென்றனர். இதனால் வியாபாரிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

    இதுகுறித்து தாவரவியல் பூங்கா அலுவலர்கள் கூறியதாவது:-

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொலை தூரங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவதில்லை. கோவை, திருப்பூர் உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களில் இருந்து மட்டுமே முறையான அனுமதி பெற்ற சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடந்த 2 நாட்களில் 1,600 பேர் மட்டுமே வந்து உள்ளனர்.

    கடந்த காலங்களில் தொடர் விடுமுறையின்போது ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து சென்று உள்ளனர். கொரோனா பாதிப்பு குறைந்து சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்தால் மட்டுமே இயல்பு நிலை திரும்பும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ×