என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
தண்ணீருக்கு கட்டணம் செலுத்தாததால் ஊட்டி நகராட்சிக்கு ரூ.6 கோடி அபராதம் - மின்வாரியம் அதிரடி
பார்சன்ஸ்வேலி அணையில் இருந்து தண்ணீர் எடுத்ததற்கு கட்டணம் செலுத்தாததால் ஊட்டி நகராட்சிக்கு ரூ.6 கோடி அபராதம் விதித்து மின் வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது.
ஊட்டி:
ஊட்டி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஊட்டி நகரின் குடிநீர் தேவையை கோரிசோலா, தொட்டபெட்டா அப்பர், தொட்டபெட்டா லோயர், மார்லிமந்து, கோடப்பமந்து அப்பர், கோடப்பமந்து லோயர், டைகர் ஹில், பார்சன்ஸ்வேலி ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.பார்சன்ஸ்வேலி அணையில் இருந்து முதலாவது மற்றும் 2-வது கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தினமும் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதில் 4,500 லிட்டர் தண்ணீருக்கு ரூ.4.50 பைசா என்ற கணக்கின்படி கட்டணமாக நகராட்சி நிர்வாகம் மின் வாரியத்துக்கு செலுத்த வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாக ஊட்டி நகராட்சிக்கு நிதி பற்றாக்குறை அதிகமாக உள்ளது. இதனால் ஊட்டி நகராட்சி நிர்வாகம் சார்பில் பார்சன்ஸ்வேலி அணையில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக மின்வாரியத்துக்கு உரிய கட்டணம் செலுத்தவில்லை. இதனால் தற்போது வரை ரூ.10 கோடி பாக்கி வைத்து உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டணம் செலுத்தாததால் ஊட்டி நகராட்சிக்கு ரூ.6 கோடி அபராதம் விதித்து மின்வாரியம் நடவடிக்கை எடுத்து இருக்கிறது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் அரசுக்கு தெரிவித்ததை அடுத்து, முதல் கட்டமாக தமிழக அரசு ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. இருப்பினும் அபராத தொகை மற்றும் பாக்கி தொகை நிலுவையில் இருக்கிறது.
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு வாடகை கட்டணம் வசூலிக்க தனி குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் சம்பளம் வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சிலருக்கு சம்பளம் வழங்கப்பட்டது. இருப்பினும் பலருக்கு வழங்கப்படாததால் நிதி பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் நகராட்சி நிர்வாகம் திணறி வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story






