என் மலர்tooltip icon

    நீலகிரி

    கோத்தகிரியில் நிலவும் மாறுபட்ட சீதோஷ்ண நிலையால், தேயிலை செடிகளில் கொப்புள நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது மழையுடன் கூடிய பனிமூட்டமான காலநிலை நிலவுவதால் தேயிலை செடிகளின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு செடிகளில் கொப்புள நோய் தாக்கி வருகிறது. இளம் தண்டு மற்றும் தேயிலை கொழுந்துகளை இந்த நோய் தாக்குவதால் சுமார் 50 சதவீதம் வரை மகசூல் குறையும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    கடந்த பல ஆண்டுகளாக கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்து வந்த நிலையில், தற்போது பசுந்தேயிலை கிலோவிற்கு ரூ.30 வரை நல்லவிலை கிடைக்கும் சமயத்தில், தேயிலைச் செடிகளில் கொப்புள நோய் பாதிப்பு ஏற்பட்டு வருவதால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். இதுகுறித்து தேயிலை வாரிய அதிகாரிகள் கூறுகையில், தேயிலைத் தோட்டங்களில் அதிக நிழல் தரும் மரங்கள் மற்றும் அதன் கிளைகளை அகற்றி, தேயிலை செடிகள் மீது சூரிய வெளிச்சம் படுமாறு செய்ய வேண்டும்.

    செடிகளில் கொப்புள நோய் பாதிப்பது தெரியவந்தால், பாதிக்கப்பட்ட இலைகள் மற்றும் கொழுந்துகளை கவாத்து மூலம் அகற்றிவிட்டு, எக்ஸோ கன்சோல் 200 மில்லி மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 210 கிராம் ஆகியவற்றின் கலவையை 7 நாட்கள் இடைவெளி விட்டு தெளிப்பான் மூலம் தேயிலை செடிகளுக்கு தெளிக்க வேண்டும்.

    இதேபோல பிராப்பிகானாசோல் 125 மில்லி மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 210 கிராம் கலவையை தெளிப்பான் மூலம் தெளிப்பதன் மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்றனர்.
    வடகிழக்கு பருவமழை காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள காய்கறி விவசாயிகள் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம் விளக்கி உள்ளார்.
    ஊட்டி:

    தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை காலத்தில் காய்கறி பயிர்கள், பல்லாண்டு பயிர்கள் மற்றும் பசுமை குடில் நிழல்வலை கூடாரம் அமைத்து உள்ள விவசாயிகள் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். பசுமைக்குடிலின் அடிப்பாகம் பலமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    உள்பகுதியில் காற்று உட்புகும் பகுதிகள் இல்லாததை உறுதி செய்ய வேண்டும். பட்டுப்போன காய்ந்துபோன மரங்கள் மற்றும் கிளைகள் பசுமைக்குடிலை பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். பசுமை குடிலின் கட்டுமானத்தில் உள்ள கிளிப்புகளை மாற்ற வேண்டும். காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க பசுமை குடிலை சுற்றி உயிர் வேலி அமைக்க வேண்டும்.

    பல்லாண்டு பயிர்களான மிளகு, கிராம்பு, ஜாதிக்காய், கொக்கோ போன்றவற்றுக்கு பூஞ்சாண நோய்களை தடுக்க சூடோமோனஸ் தெளிக்க வேண்டும்.

    காய்ந்து போன மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றுவதுடன், வாழை, காய்கறிகள், பந்தல் காய்கறிகள், பூக்கள் போன்றவற்றுக்கு நோய் தடுப்பு மருந்துகள் தெளிக்க வேண்டும். டிரைக்கோடெர்மா விரிடி பூஞ்சாண உயிரியல் கொல்லியினை நிலத்தில் தெளிக்க வேண்டும். சூடோமோனஸ் பூஞ்சாண உயிரியல் கொல்லியினை இலையில் தெளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    முதல்-அமைச்சர் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உள்பட மொத்தம் 200 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா பரவல் தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்வதற்காக வருகிறார். தொடர்ந்து விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுடன் நடைபெறும் கலந்தாய்வு கூட்டத்தில் பேசுகிறார்.

    முதல்-அமைச்சர் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, நேற்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள ஊழியர்கள் உள்பட மொத்தம் 200 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. நிகழ்ச்சிக்கு வரும் முன் கொரோனா பாதிப்பு இல்லை என்று சோதனை செய்த முடிவை காண்பித்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
    ஊட்டியில் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதி அடைந்து உள்ளனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. ஊட்டி நகரில் நள்ளிரவில் பெய்த மழையால் கடும் குளிர் நிலவியது.

    நேற்று பகலில் மழை பெய்யாமல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குன்னூர், கோத்தகிரி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    குறிப்பாக ஊட்டியில் காலை முதலே கடும் பனிமூட்டம் மிகவும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். குறிப்பாக எதிரே வரும் வாகனங்கள் தெரிவது இல்லை. இதனால் வாகனங்களில் மஞ்சள் நிற விளக்குகளை ஒளிரவிட்டபடி மெதுவாக செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் சில இடங்களில் குடியிருப்பு பகுதிகள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது.

    மேலும் மலை முகடுகளில் இறங்கி வரும் பனிமூட்டத்தை பார்க்கவே அழகாக இருக்கிறது. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை பார்த்து ரசித்து செல்கிறார்கள்.

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

    ஊட்டி-3.2, நடுவட்டம்-4, கிளன்மார்கன்-13, குந்தா -9, அவலாஞ்சி-12, எமரால்டு-9, கெத்தை-22, குன்னூர்-35, பர்லியார்-78, உலிக்கல்-40, எடப்பள்ளி-60, கீழ் கோத்தகிரி -44, கோத்தகிரி-24, கூடலூர்-14 உள்பட மொத்தம் 458.7 மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 50.97 ஆகும். அதிகபட்சமாக பர்லியாரில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. வருகிற நாட்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து நீலகிரி வர விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தற்போது அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வில் நீலகிரி மாவட்டத்தில் சில பைன்பாரஸ்ட், தொட்டபெட்டா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறக்க அனுமதி இல்லை. இ-பாஸ் பெற தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தின் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வருகிறவர்கள் உரிய ஆவணங்களை ஆன்லைனில் பதிவு செய்தால் இ-பாஸ் வழங்கப்படும்.

    இ-பதிவு ஆனவுடன் உடனுக்குடன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. முதலில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு இ-பாஸ் வழங்கப்பட்டு வந்தது. இனிமேல் ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்கும். உள்ளூர் மக்கள் ஆதார் அடையாள அட்டையை காண்பித்து வெளிமாவட்டங்களில் இருந்து வரலாம்.

    இ-பாஸ் தளர்வு காரணமாக நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை வார விடுமுறை நாட்களில் அதிகரித்து உள்ளது. எனவே, உள்ளூர் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முககவசம் அணிவது என தங்களை தற்காத்துக் கொள்வது அவசியம்.

    நீலகிரியில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 4 பள்ளிகளில் செயல்பட்டு வந்த கொரோனா சிகிச்சை மையம் மூடப்பட்டு உள்ளன. தற்போது 2 பள்ளிகளில் மட்டும் சிகிச்சை மையங்கள் இயங்கி வருகிறது.

    வடகிழக்கு பருவமழை தொடங்கி குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் 3 வீடுகள் சேதமடைந்து உள்ளன. கனமழையால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

    சேதமடைந்த வீடுகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அபாயகரமான இடங்களை கண்டறிந்து அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்தி கண்காணித்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்ததை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மசினகுடி அருகே பசு மாட்டை புலி அடித்து கொன்றது. இதையடுத்து அங்கு கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.
    கூடலூர்:

    மசினகுடியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் வீட்டில் கால்நடைகள் வளர்த்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டார். அப்போது அதே பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் மாடுகள் மேய்ந்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென்று புதருக்குள் இருந்து மறைந்து இருந்த புலி ஒன்று வெளியே வந்தது.

    பின்னர் அந்த புலி அங்கு மேய்ந்து கொண்டு இருந்த பசுமாட்டை அடித்து கொன்றது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிங்கார வனச்சரகர் காந்தன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

    அத்துடன் அவர்கள் புலி வந்து சென்றதற்கான அடையாளங்கள் இருக்கிறதா என்றும் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், இங்கு புலி நடமாட்டம் அதிகமாக இருப்பதால், நாங்கள் அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றனர்.

    இதைத்தொடர்ந்து வனத்துறையினர் 2 கேமராக்களை அங்கு பொருத்தி கண்காணித்து வருகிறார்கள். பின்னர் பாதிக்கப்பட்ட வேலுச்சாமிக்கு உரிய இழப்பீடு தொகை வழங்குவதாக வனத்துறையினர் உறுதி அளித்தனர். தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

    இதுகுறித்து வனச்சரகர் காந்தன் கூறும்போது, தனியார் நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாட்டை புலி கடித்து கொன்று விட்டதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இதனால் எந்த வகையான வன விலங்கு பசு மாட்டை கொன்று இருக்கிறது என அறிவதற்காக 2 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது என்றனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆதிவாசி பெண் ஒருவரை புலி கடித்துக் கொன்றது. பின்னர் கோரிக்கைக்கு பிறகு வனத்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். இதனால் புலி நடமாட்டம் குறித்த தகவல் இல்லை. ஆதிவாசி பெண்ணை கொன்ற இடத்திலிருந்து 300 மீட்டர் தூரத்தில் தற்போது பசுமாட்டை புலி கொன்று விட்டது. எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    முக்கூர் - குற்றிமுற்றி இடையே பாசன வாய்க்கால் புதர்மண்டி கிடக்கிறது. அது தூர்வாரப்படுமா என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
    கூடலூர்:

    கூடலூர் பகுதியில் மலை மற்றும் சமவெளி பிரதேசம் பயிர்கள் விளைவிக்கப்படுகிறது. நெல், நேந்திரன் வாழை, பீன்ஸ், அவரைக்காய், சேனைக்கிழங்கு, பாகற்காய், புடலங்காய் என காய்கறிகள் ஆண்டு முழுவதும் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவ மழை நன்கு பெய்தது.

    இதனால் வழக்கம்போல் நெல் உள்ளிட்ட விவசாய பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு பராமரித்து வருகின்றனர். ஆனால் வடகிழக்கு பருவமழை இதுவரை பெய்யவில்லை. இதனால் விவசாய பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து போகும் நிலை உள்ளது.

    கூடலூர் அருகே தேவர்சோலை பேரூராட்சி மற்றும் ஸ்ரீ மதுரை ஊராட்சி இணையும் பகுதியில் முக்கூர் என்ற இடத்தில் இருந்து 2 கி. மீ. தொலைவில் உள்ள குற்றிமுற்றி வரை பல ஆண்டுகளாக பாசன வாய்க்கால் இருந்தது. இதனால் கோடை காலத்திலும் விவசாய பயிர்களுக்கு தேவையான தண்ணீர் வசதியை விவசாயிகள் பெற்று வந்தனர். தற்போது பாசன வாய்க்கால் பராமரிப்பு இல்லாமல் புதர்மண்டி கிடக்கிறது.

    இதன்காரணமாக மழைக்காலத்தில் தண்ணீர் செல்வதற்கு வழி இல்லாமல் பொது மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகிறது. பின்னர் மழைக்காலம் முடிந்தவுடன் விவசாய நிலங்கள் தண்ணீரின்றி வறண்டு விடுகிறது. இதனால் இந்த வாய்க்காலை தூர்வாரி புதுப்பிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறைக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, பல ஆண்டுகளுக்கு முன்பு முக்கூர் பகுதியில் பாசன வாய்க்கால்கள் கட்டும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர். ஆனால் அதன்பின்னர் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும் பராமரிப்பு இல்லாமல் விடப்பட்டதால் வாய்க்காலை மண் போட்டு சிலர் மூடி விட்டனர். இது சம்பந்தமாக பொதுப்பணித்துறை (நீர்வளம்) அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. எனவே விவசாயத்திற்கு தேவையான பாசன வசதி கிடைக்க புதர்மண்டி வாய்க்காலை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    ஊட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 240 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தொற்று பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க முன் கள பணியாளர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் தமிழக அரசு அறிவுறுத்தியது.

    அதன்படி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் தற்போது வரை குப்பைகளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்களுக்கு பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    ஊட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 13 கிராம ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு மருத்துவ முகாம் ஊட்டி பிரிக்ஸ் பள்ளியில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தூய்மை பணியாளர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள், ஜிங்க் மாத்திரைகளை வழங்கினார்.

    இதுகுறித்து கலெக்டர் கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று காலத்தில் தன்னலம் கருதாமல் பணியாற்றிய தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்களுக்கு முன்னெச்சரிக்கையாக மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. முகாமில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. தூய்மை பணியாளர்கள் வெளியில் செல்லும் போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடித்து பணிபுரிய வேண்டும் என்றார்.

    முகாமில் தூய்மை பணியாளர்களுக்கு வெளிநோயாளிகள் சீட்டு வழங்கப்பட்டது. அவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்று தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சளி, காய்ச்சல், இருமல் அறிகுறி தென்பட்டவர்களிடம் இருந்து சளி மாதிரி சேகரித்து பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் ரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் அவர்களது எடை பரிசோதிக்கப்பட்டது. தூய்மை பணியாளர்களுக்கு மருந்து, சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    ஸ்கேன் எடுக்கும் வசதியும் செய்யப்பட்டு இருந்தது. முகாமில் தூய்மை பணியாளர்கள் 240 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, வட்டார மருத்துவ அலுவலர் முருகேசன், ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதர், ஜெய்சங்கர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    மணமகனை பிடிக்காததால் வேறு ஒருவரை காதலிப்பதாக கூறினேன் என்று மஞ்சூர் அருகே திருமணத்தை நிறுத்திய இளம்பெண் ஆடியோ வெளியிட்டு உள்ளார்.
    நீலகிரி:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகில் உள்ள மட்டக்கண்டியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், ஊட்டி தூனேரியை சேர்ந்த இளம பெண் ஒருவருக்கும் கடந்த வாரம் மணமகன் இல்லத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த திருமண நிகழ்ச்சியில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

    மணமக்களின் குல வழக்கப்படி தாலி கட்டுவதற்கு முன்பு திருமணம் செய்து கொள்ள சம்மதமா? என 3 முறை மணமகளிடம் மணமகன் கேட்க வேண்டும். அப்படி 2 முறை மணமகன் கேட்டபோது மணமகள் பதில் ஏதும் கூறவில்லை. 3-வது முறை அவ்வாறு கேட்டபடி மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்ட முயன்றார்.

    அப்போது திடீரென்று அந்த மணப்பெண் மணமகனின் கையை தட்டிவிட்டு எழுந்ததுடன், திருமணம் செய்ய விருப்பம் இல்லை என்றும், நான் வேறு ஒருவரை காதலிக்கிறேன் என்றும், அவர் தனக்காக காத்து இருப்பதால் அவரைதான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறினார். இதனால் திருமணம் நின்றது.

    இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை விழாவில் கலந்து கொண்ட ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தார். அது வைரலாக பரவி வருகிறது. அத்துடன் அந்த மணப்பெண் சென்னையில் உள்ள தனது காதலரை பார்க்க சென்றதாகவும் தகவல் பரவியது.

    இந்த நிலையில் திருமணத்தை நிறுத்திய இளம்பெண் ஆடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதுவும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த ஆடியோவில், நான் யாரையும் காதலிக்கவில்லை. எனக்கு சென்னையில் காதலர் யாரும் இல்லை. நான் காதலனை தேடி சென்னைக்கு செல்லவும் இல்லை. தற்போது நான் எனது சொந்த ஊரில் பெற்றோருடன்தான் இருக்கிறேன். மணமகனை பிடிக்காததால் திருமணத்தை நிறுத்த வேறு வழியின்றி அவ்வாறு கூறினேன். என்னை பற்றி யாரும் விமர்சிக்கவோ இந்த சம்பவத்தை பெரிதுபடுத்தவோ வேண்டாம் என்று கூறப்பட்டு உள்ளது.

    ஏற்கனவே திருமணத்தை நிறுத்திய இளம்பெண், தற்போது திருமணத்தை நிறுத்தியது ஏன் என்பது குறித்து ஆடியோ வெளியிட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் விபத்துகளை தடுக்கும் நடவடிக்கையாக சூரிய சக்தியால் இயங்கும் சிக்னல் பொருத்தப்பட்டு உள்ளது.
    கோத்தகிரி:

    மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். சமவெளி பகுதிகளில் இருந்து நீலகிரிக்கு வர மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலை முக்கியமானதாக உள்ளது. இந்த சாலையில் சீசன் காலங்களில் வாகன போக்குவரத்து அதிகளவில் இருக்கும். அப்போது போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காத வாகன ஓட்டிகளால் விபத்து ஏற்படுகிறது. மேலும் கவனக்குறைவு காரணமாகவும் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் விபத்துகளை தடுக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள ஆபத்தான குறுகிய வளைவுகளை அகலப்படுத்தும் பணி நடைபெற்றது. அதாவது 8 இடங்களில் தடுப்புச்சுவர்களுடன் கூடிய பாலங்கள் கட்டி அகலப்படுத்தப்பட்டது. மேலும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மழைநீர் கால்வாய்களை தூர்வாரும் பணி நடைபெற்றது. இதனால் மழைநீர் எளிதில் வழிந்தோடி சாலை சேதமடைவது தவிர்க்கப்படும். இது தவிர சாலையில் எச்சரிக்கை கோடுகள் வரையப்பட்டு, குறுகிய வளைவுகள் மற்றும் குண்டூசி வளைவுகளில் குவி கண்ணாடிகள், எச்சரிக்கை பலகைகள் பொருத்தும் பணி நடைபற்றது.

    இதைத்தொடர்ந்து விபத்துகளை தடுக்கும் நடவடிக்கையில் ஒரு பகுதியாக சாலையோரங்களில் சூரிய சக்தியால் இயங்கும் எச்சரிக்கை சிக்னல்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது.

    அதாவது அதிக பனிமூட்டம் காரணமாக விபத்துகள் ஏற்படுவதை தடுக்க எச்சரிக்கை சிக்னல்கள் உதவும். கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் குஞ்சப்பனை வரை மேற்கண்ட சிக்னல்கள் பொருத்தப்பட்டு உள்ளன. தொடர்ந்து பல இடங்களிலும் பொருத்தப்பட உள்ளது.

    மேலும் கோத்தகிரி வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்கள் எங்கு உள்ளன?, எத்தனை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளன? என்பதை அறிந்து கொள்ள வசதியாக பெரிய அளவிலான அறிவிப்பு பலகைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
    ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு நீலகிரி தோட்டக்கலை பூங்காக்களுக்கு இதுவரை 19 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்து உள்ளனர்.
    ஊட்டி:

    ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை பூங்காக்கள் கடந்த செப்டம்பர் மாதம் 9-ந் தேதி முதல் பாதுகாப்பு வழிமுறைகளுடன் திறந்து செயல்பட்டு வருகின்றன. அதன்படி காட்டேரி பூங்கா, தொட்டபெட்டா தேயிலை பூங்கா, ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா ஆகிய பூங்காக்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

    வெளிமாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஆன்லைனில் இ-பாஸ் பெற்று வருகிறார்கள். பூங்காக்களில் சுற்றுலா பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், முககவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    பூங்காக்கள் திறக்கப்பட்டும் கொரோனா அச்சம் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருக்கிறது. மேலும் இ-பாஸ் நடைமுறை தொடர்வதால் சமவெளி பகுதிகளில் இருந்து நடுத்தர மக்கள் ஊட்டிக்கு வந்து செல்ல தயங்குகின்றனர். இதனால் வார விடுமுறை நாட்களில் மட்டும் சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக காணப்படுகிறது. நேற்று முன்தினம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு 1,358 பேர் வருகை தந்தனர். நீலகிரியில் உள்ள தோட்டக்கலை பூங்காக்களுக்கு நேற்று ஒரே நாளில் 2,661 பேர் வருகை தந்து உள்ளனர்.

    நூற்றாண்டு பழமை வாய்ந்த தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் பசுமையான புல்வெளியில் அமர்ந்து தங்களது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். கண்ணாடி மாளிகை உள்பட பூங்காவில் பூத்து குலுங்கும் மலர்களை கண்டு ரசிக்கிறார்கள். ஊரடங்கு உத்தரவுக்கு பின்னர் நீலகிரியில் பூங்காக்கள் திறக்கப்பட்ட நாள் முதல் நேற்று வரை சுற்றுலா பயணிகள் 19 ஆயிரம் பேர் வருகை தந்து இருக்கின்றனர். இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    கோத்தகிரியில் 13 வயது சிறுமியை கடத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள நுந்தளாமட்டம் பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார்(வயது 21). இவருக்கும், கோத்தகிரி பகுதியை சேர்ந்த ஒரு 13 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதற்கிடையில் நவீன்குமார், அந்த சிறுமியை மிரட்டி கடந்த மாதம் 25-ந் தேதி நுந்தளாமட்டம் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு கடத்தி சென்றார். பின்னர் காங்கேயம் அருகே சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு அழைத்து சென்றார்.


    இந்த நிலையில் சிறுமியை நவீன்குமார் கடத்தி சென்றுவிட்டதாக அவளது பெற்றோர் கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் அவர்கள் 2 பேரையும் போலீசார் தேடி வந்தனர்.

    போலீசார் தேடுவதை அறிந்த நவீன்குமார் அந்த சிறுமியுடன் நேற்று காலை கோத்தகிரிக்கு வந்தார். பின்னர் அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நவீன்குமார் அந்த சிறுமியை மிரட்டி கடத்தி சென்றது தெரியவந்தது. பின்னர் நவீன்குமாருக்கு எதிரான புகார் குன்னூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

    அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், நவீன்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை குன்னூர் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நவீன்குமார் ஏற்கனவே போக்சோ சட்டத்தில் கைதானவர் என்பதும், அவர் மீது மேலும் 3 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அவரிடம் இருந்து மீட்கப்பட்ட சிறுமியை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். 

    ×