என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் சூரிய சக்தியால் இயங்கும் சிக்னல் அமைக்கப்பட்டு உள்ள காட்சி
    X
    கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் சூரிய சக்தியால் இயங்கும் சிக்னல் அமைக்கப்பட்டு உள்ள காட்சி

    சூரிய சக்தியால் இயங்கும் சிக்னல் - விபத்துகளை தடுக்க நடவடிக்கை

    கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் விபத்துகளை தடுக்கும் நடவடிக்கையாக சூரிய சக்தியால் இயங்கும் சிக்னல் பொருத்தப்பட்டு உள்ளது.
    கோத்தகிரி:

    மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். சமவெளி பகுதிகளில் இருந்து நீலகிரிக்கு வர மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலை முக்கியமானதாக உள்ளது. இந்த சாலையில் சீசன் காலங்களில் வாகன போக்குவரத்து அதிகளவில் இருக்கும். அப்போது போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காத வாகன ஓட்டிகளால் விபத்து ஏற்படுகிறது. மேலும் கவனக்குறைவு காரணமாகவும் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் விபத்துகளை தடுக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள ஆபத்தான குறுகிய வளைவுகளை அகலப்படுத்தும் பணி நடைபெற்றது. அதாவது 8 இடங்களில் தடுப்புச்சுவர்களுடன் கூடிய பாலங்கள் கட்டி அகலப்படுத்தப்பட்டது. மேலும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மழைநீர் கால்வாய்களை தூர்வாரும் பணி நடைபெற்றது. இதனால் மழைநீர் எளிதில் வழிந்தோடி சாலை சேதமடைவது தவிர்க்கப்படும். இது தவிர சாலையில் எச்சரிக்கை கோடுகள் வரையப்பட்டு, குறுகிய வளைவுகள் மற்றும் குண்டூசி வளைவுகளில் குவி கண்ணாடிகள், எச்சரிக்கை பலகைகள் பொருத்தும் பணி நடைபற்றது.

    இதைத்தொடர்ந்து விபத்துகளை தடுக்கும் நடவடிக்கையில் ஒரு பகுதியாக சாலையோரங்களில் சூரிய சக்தியால் இயங்கும் எச்சரிக்கை சிக்னல்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது.

    அதாவது அதிக பனிமூட்டம் காரணமாக விபத்துகள் ஏற்படுவதை தடுக்க எச்சரிக்கை சிக்னல்கள் உதவும். கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் குஞ்சப்பனை வரை மேற்கண்ட சிக்னல்கள் பொருத்தப்பட்டு உள்ளன. தொடர்ந்து பல இடங்களிலும் பொருத்தப்பட உள்ளது.

    மேலும் கோத்தகிரி வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்கள் எங்கு உள்ளன?, எத்தனை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளன? என்பதை அறிந்து கொள்ள வசதியாக பெரிய அளவிலான அறிவிப்பு பலகைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
    Next Story
    ×