search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரேஷன் கடை பணியாளர்கள் ஊட்டி கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த போது எடுத்த படம்.
    X
    ரேஷன் கடை பணியாளர்கள் ஊட்டி கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த போது எடுத்த படம்.

    ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறையில் மாற்றம் செய்ய வேண்டும்- முதல்-அமைச்சருக்கு கோரிக்கை

    மலைப்பிரதேசங்களில் பணியாற்றி வரும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு விடுமுறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்க நீலகிரி மாவட்ட தலைவர் ரவி, செயலாளர் அகமதுகான், பொருளாளர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    சங்கத்தின் மாநில மைய முடிவின்படி எங்களது 16 அம்ச கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் பரிசீலனை செய்து சங்க மாநில நிர்வாகிகளை அழைத்து பேசி நிறைவேற்ற வேண்டும். கூட்டுறவு துறை ரேஷன் கடை பணியாளர்களின் ஊதிய மாற்றத்திற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் ஊதிய குழு அமைத்து வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதிக்குள் ஊதிய மாற்றம் செய்ய வேண்டும்.

    பொது வினியோக திட்டத்துக்கு தனித்துறை உருவாக்குவதுடன், பணிவரன்முறை செய்யப்படாத 5 ஆயிரம் பணியாளர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும். ரேஷன் கடை பணியாளர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்குவதுடன், 500 ரேஷன் அட்டைக்கு மேல் உள்ள கடைகளுக்கு எடையாளரை நியமிக்க வேண்டும்.

    கூட்டுறவு துறையில் ஏற்படும் லாப, நஷ்டத்திற்கு விற்பனையாளர் காரணமல்ல. எனவே, அனைவருக்கும் 30 சதவீதம் போனஸ் வழங்குவதுடன், கொரோனாவால் உயிரிழந்த ரேஷன் கடை பணியாளருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு கடந்த மே மாதத்தில் இருந்து ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். பயோமெட்ரிக் முறையை அமல்படுத்தி தரமான விற்பனை முனையம் வழங்க வேண்டும்.

    மலைப்பிரதேசங்களில் 4 வெள்ளிக்கிழமைகள் விடுமுறை ஆகவும், 4 ஞாயிற்றுக்கிழமைகள் வேலை நாட்களாகவும் நடைமுறையில் உள்ளதை மாற்றி முதல் இரண்டு வெள்ளிக்கிழமையும், 3 மற்றும் 4-வது ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை என நடைமுறையில் உள்ளதை தொடர ஆவன செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இது தொடர்பான கோரிக்கை மனு தமிழக முதல்-அமைச்சருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×