என் மலர்tooltip icon

    நீலகிரி

    குன்னூர் அருகே ரேஷன் கடையை உடைத்து கரடி அட்டகாசத்தில் ஈடுபட்டது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
    குன்னூர்:

    குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளிலும் விவசாய நிலங்களிலும் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. குறிப்பாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகளவில் உள்ளது.

    குன்னூர் அருகே உள்ள கிளன்டேல் குடியிருப்பு பகுதியில் தேயிலை தோட்டங்களும் அதன் அருகே வனப்பகுதியும் உள்ளது. இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து ஒரு கரடி வெளியே வந்தது. பின்னர் அது தேயிலை தோட்டத்தில் சுற்றியது.

    பிறகு அது நேற்று அதிகாலை 4 மணிக்கு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது. அங்கு சாப்பிட எந்த பொருட்களும் கிடைக்காததால் அங்குள்ள ஒரு கோவிலுக்குள் சென்றது. அங்கும் சாப்பிட எதுவும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் அந்த கரடி வெளியேறியது. பின் அதன் அருகே உள்ள ரேஷன் கடைக்கு சென்ற கரடி, கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றது.

    அங்கு இருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை தூக்கி வீசி நாசம் செய்துவிட்டு அங்கிருந்து வெளியே சென்றது. இதையடுத்து அந்த கடையை சீரமைக்கும் பணியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டனர். ஏற்கனவே காட்டு யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். தற்போது கரடியும் நடமாடுவதால் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.
    கோத்தகிரியில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி 3 நாட்கள் தொடர்விடுமுறை என்பதால் நேரு பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் உள்ள நேரு பூங்கா முக்கியமான சுற்றுலா மையமாக அமைந்து உள்ளது. இந்த பூங்காவில் அழகிய புல் தரைகள், ரோஜா பூந்தோட்டம், வண்ண மலர்கள், சிறுவர் விளையாட்டு பூங்கா, நூற்றாண்டு பழமை வாய்ந்த பழங்குடியினர் கோத்தர் இன மக்களின் குல தெய்வமான அய்யேனார் அம்மனோர் கோவில் ஆகியவை உள்ளது.

    இந்த பூங்கா உள்ளூர் மக்களின் பொழுதுபோக்கு இடமாக மட்டுமல்லாமல் வெளிமாவட்ட மக்களின் சிறந்த சுற்றலா மையமாகவும் இருக்கிறது. இதனால் இங்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகம்.

    கொரோனா காரணமாக கடந்த 9-ந் தேதிதான் இந்த பூங்கா திறக்கப்பட்டது. ஆனால் கோத்தகிரியில் கடும் குளிர் நிலவுவதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி 3 நாட்கள் தொடர்விடுமுறை என்பதால் தற்போது இந்த பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    அவர்கள் பூங்காவின் அழகை பார்த்து ரசித்ததுடன், சிறுவர்கள் அங்குள்ள ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்களில் விளையாடி மகிழ்ந்தனர். அதுபோன்று கோத்தகிரியில் உள்ள கோடநாடு காட்சி முனை, கேத்தரின் நீர்வீழ்ச்சி, லாங் வுட் சோலை உள்பட பல சுற்றுலா மையங்களிலும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் காணப்பட்டனர்.
    பி.எஸ்.என்.எல். செல்போன் சிக்னல் கிடைக்காததால், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாமல் மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
    பந்தலூர்:

    பந்தலூர் தாலுகாவில் சேரம்பாடி, கொளப்பள்ளி, சேரங்கோடு, நெல்லியாளம் உள்ளிட்ட பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இந்த தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள், அதனருகில் உள்ள வனப்பகுதிகளையொட்டி வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகள் பந்தலூர், கூடலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளிலும், கூடலூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியிலும் படித்து வருகின்றனர்.

    தற்போது கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால் தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். அவர்களுக்கு அரசு அறிவுரைப்படி ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பந்தலூர் பகுதியில் பி.எஸ்.என்.எல். செல்போன் சேவை மட்டுமே கிடைக்கிறது. ஆனால் அதுவும் சிக்னல் சரிவர கிடைப்பது இல்லை. இதனால் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் சிக்னலுக்காக வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பற்ற இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. தேர்வுகள் நடைபெறும் சமயத்தில் அவர்கள் கட்டாயமாக சிக்னலுக்காக அலைந்து திரிய வேண்டிய அவலம் காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் அவர்களது பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

    இதுகுறித்து தோட்ட தொழிலாளர்கள் கூறியதாவது:-

    மலைப்பிரதேசம் என்பதால் பி.எஸ்.என்.எல். செல்போன் சேவை மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. ஆனால் அதற்கும் சிக்னல் கிடைப்பது இல்லை. அவசர தேவைக்கு செல்போன் மூலம் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

    மேலும் குழந்தைகள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க அவதிப்படுகின்றனர். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால், உடனடியாக செல்போன் சிக்னலும் துண்டிக்கப்பட்டு விடுகிறது.

    எனவே இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளதால் ஊட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இருப்பினும் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.

    நீலகிரியானது சுற்றுலா மாவட்டம் என்பதால் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வருவதற்கு இ-பதிவு நடைமுறையில் உள்ளது. தொடர்ந்து மாவட்ட எல்லைகளில் கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த நிலையில் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று முன் தினம் கொண்டாடப்பட்டது. மேலும் சனி, ஞாயிறு விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்த தொடர் விடுமுறையால் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டி, குன்னூர் பகுதிக்கு வந்து உள்ளனர். இதனால் சுற்றுலா தலங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையை தொடர்ந்து புத்தாண்டு வரை சுற்றுலா பயணிகள் அதிகளவு ஊட்டியில் வந்து தங்குவது வழக்கம்.

    தற்போது கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் உள்ளதால் முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி சுற்றுலா தலங்களை பயணிகள் கண்டு களித்து வருகின்றனர். இதனால் தங்கும் விடுதிகள் மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்கள் மீண்டும் களை கட்டியுள்ளது. புத்தாண்டு கொண்டாடவும், டிசம்பர் மாத பனிப்பொழிவை அனுபவிக்கவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கொண்டு இருக்கின்றனர்.

    இதனால் மேட்டுப்பாளையத்தில் தொடங்கி பர்லியாறு, குன்னூர், கோத்தகிரி மற்றும் ஊட்டியில் உள்ள முக்கிய சாலைகளில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிகளவு செல்வதை காண முடிகிறது.

    இதேபோன்று கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து கூடலூர் வழியாக ஏராளமான வாகனங்கள் ஊட்டிக்கு செல்கிறது. இதனால் ஊட்டியில் உள்ள ஹில்பங்க், சேரிங்கிராஸ், தொட்டபெட்டா, காந்தல் உள்பட அனைத்து சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

    இதனால் வாகனங்கள் ஆங்காங்கே சில நிமிடங்கள் அணிவகுத்து நிற்பதை காண முடிகிறது. மேலும் பொதுமக்கள், டிரைவர்கள், சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். இருப்பினும் சுற்றுலா பயணிகள் வருகையால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் குதிரை சவாரி மற்றும் புகைப்படம் எடுக்கும் தொழிலும் களைகட்டி உள்ளது.
    கூடலூரில் காட்டுயானை அட்டகாசத்தால், 350 வாழைகள் சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
    கூடலூர்:

    கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காயத்துடன் காட்டுயானை ஒன்று சுற்றி வருகிறது. அந்த யானை கடந்த 2 ஆண்டுகளாக ஊருக்குள் முகாமிட்டு விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. எனவே அந்த யானைக்கு உரிய சிகிச்சை அளித்து அடர்ந்த வனத்துக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

    இந்த நிலையில் விசாலாட்சி பகுதி அருகே துப்புக்குட்டிபேட்டையில் விவசாயிகள் பலர் வாழைகள் பயிரிட்டு உள்ளனர். நேற்று காலை 6 மணிக்கு வழக்கம்போல தங்களது தோட்டங்களுக்கு செல்வதற்காக விவசாயிகள் வந்தனர். அப்போது காயத்துடன் சுற்றித்திரியும் காட்டுயானை தோட்டத்துக்குள் நின்றவாறு பாதுகாப்புக்காக போடப்பட்ட வலைகளை சரித்து போட்டு வாழைகளை சாப்பிட்டு கொண்டிருந்தது.

    இதைக்கண்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் கீர்த்தி, ராஜன் உள்ளிட்ட சில விவசாயிகள் பயிரிட்டுள்ள சுமார் 350-க்கும் மேற்பட்ட வாழைகளை சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் வனச்சரகர் ராமகிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர், அப்பகுதிக்கு வந்து பார்வையிட்டனர்.

    அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகள் உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் காட்டுயானை ஊருக்குள் வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறும்போது, காயத்துடன் சுற்றி வரும் காட்டுயானை நள்ளிரவில் தோட்டத்துக்குள் புகுந்து விடிய விடிய வாழைகளை தின்று நாசம் செய்து விட்டது. நஷ்டத்துக்கு ஏற்ப வனத்துறையும் இழப்பீடு தருவதில்லை என்று குற்றம் சாட்டினர்.
    ஊட்டியில் முககவசம் அணியாத 20 சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    ஊட்டி:

    ஊட்டி நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி அறிவுரையின்பேரில் சுகாதார ஆய்வாளர் மகாராஜன் மற்றும் அதிகாரிகள் நேற்று ஊட்டி தாவரவியல் பூங்கா முன்பு சுற்றுலா பயணிகள் முககவசம் அணிந்து உள்ளார்களா? என்று சோதனை நடத்தினர். அப்போது முககவசம் அணியாமல் இருந்த 20 சுற்றுலா பயணிகளுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. வாகனங்களில் வருபவர்கள், சுற்றுலா மையங்களுக்கு நடந்து செல்கிறவர்கள் கட்டாயம் முகக்கவசத்தை சரியான முறையில் அணிய வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
    கோத்தகிரி அருகே கிணற்றில் குதித்து புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் ரகுராம் (வயது 20). இவர் மேட்டுப்பாளையத்தில் தனியார் பஸ் டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நர்மதா (20) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    ரகுராமுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் வீட்டுக்கு வந்த ரகுராம் குடிபோதையில் வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக அவருடைய தாயார் கேட்டு உள்ளார்.

    இதனால் குடும்பத்தினருடன் தகராறு ஏற்பட்டது. அப்போது ரகுராம், தனது வீட்டின் அருகில் உள்ள கிணற்றின் அருகே நின்று கொண்டு என்னை திட்டினால் உள்ளே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி உள்ளார்.

    அப்போது திடீரென்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் அவர் கிணற்றுக்குள் குதித்தார். உடனே இது குறித்து அக்கம் பக்கத்தினர் கோத்தகிரி தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

    பின்னர் தீயணைப்பு படை வீரர்கள் ரகுராமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின்பேரில் கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கொரோனா வழிமுறைகளை கடைபிடிக்க வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கை 885 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
    ஊட்டி:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்துக்கு கூடுதலாக வாக்குப்பதிவு எந்திரங்கள், சரிபார்க்கும் எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 238 வாக்குச்சாவடி மையங்கள், குன்னூர் தொகுதியில் 223, கூடலூரில் 222 என மாவட்டத்தில் மொத்தம் 683 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.

    தற்போது கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளி விட்டும், வாக்குச்சாவடி மையத்தில் கூட்டம் கூடாமல் வாக்களிப்பதற்காகவும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஒரு வாக்குச்சாவடியில் ஆயிரத்துக்கு மேல் வாக்காளர்கள் இருந்தால் அதை 2 ஆக பிரிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

    அதன்படி நீலகிரியில் ஏற்கனவே உள்ள வாக்குச்சாவடிகளில் ஆயிரத்துக்கு மேல் வாக்காளர்கள் இருப்பதை சப்-கலெக்டர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள் கண்டறிந்து பிரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நீலகிரியில் வாக்குச்சாவடி மையங்கள் 202 அதிகரித்து 885 ஆக உயர்ந்து உள்ளது.

    புதிய வாக்குச்சாவடிகள் அமைந்து உள்ள இடங்கள் குறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆய்வு செய்து, அதன் அறிக்கை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

    புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தமிழக அரசு தடை விதித்து உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கேளிக்கை விடுதிகள், கிளப்கள், ஓட்டல்களுக்கு அரசாணை நகல் வழங்கப்பட்டு இருக்கிறது. அங்கு புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்த கூடாது. இதை மீறி நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    நீலகிரி மாவட்டத்தில் 13 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஜப்பான் அரசு மூலம் 128 கழிப்பறைகள் புதிதாக அமைக்கப்பட்டன.
    ஊட்டி:

    ஜப்பான் அரசின் அடிமட்ட மனித பாதுகாப்புக்கு உதவி செய்தல் திட்டங்களின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் 13 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ரூ.56 லட்சத்தில் 128 கழிப்பறைகள் புதிதாக அமைக்கப்பட்டன.

    இதன் திறப்பு நிகழ்ச்சி ஊட்டி ஆர்.கே.புரம் நகராட்சி நடுநிலை பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சென்னையில் உள்ள ஜப்பான் பொது தூதரக தூதர் ஒடஹவா ஹாஜிமி கழிப்பறைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். அவருக்கு பள்ளி தலைமை ஆசிரியை பிரமிளா வரவேற்பு அளித்தார். அதன் பின்னர் அவர் பள்ளி ஆசிரியைகளிடம் சுகாதாரம் குறித்து கேட்டறிந்தார்.

    தொடர்ந்து ஜப்பான் தூதர் மற்ற பள்ளிகளில் அமைக்கப்பட்ட கழிப்பறைகளை திறந்து வைத்தார். நீலகிரியில் ஜப்பான் அரசின் நிதி உதவி மூலம் கிராமிய அபிவிருத்தி இயக்கத்தினர் பள்ளிகளில் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி இருக்கின்றனர்.
    நீலகிரியில் மேலும் 23 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகி உள்ளது. 16 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 7 ஆயிரத்து 813 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று மேலும் 23 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகி உள்ளது. 16 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.

    நீலகிரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 836 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 7 ஆயிரத்து 650 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனாவால் 43 பேர் இறந்தனர். மீதமுள்ள 143 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    பந்தலூர் அருகே உள்ள எருமாட்டில் அரிசி ஆலையில் தீப்பிடித்தது. இதில் ரூ.20 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானது.
    பந்தலூர்:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள எருமாடு பகுதியை சேர்ந்தவர் சஜி. இவர் அங்குள்ள பஜாரில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அவர் வழக்கம்போல தனது ஆலையை பூட்டிவிட்டு வீட்டிற்கு வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் அரிசி ஆலையில் திடீரென்று தீப்பிடித்து மளமளவென எரிந்தது. இதனால் அங்கு புகை மூட்டம் போல காட்சியளித்தது. இது குறித்து தகவல் அறிந்த அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ வேகமாக எரிந்ததால் அணைக்க முடியவில்லை.

    இது குறித்து சுல்தான்பத்தேரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    இந்த விபத்தில் ஆலைக்குள் இருந்த எந்திரங்கள், எண்ணெய், அரிசி, மிளகாய் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. அதன் மதிப்பு ரூ.20 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இது குறித்து தகவல் அறிந்த எருமாடு போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோத்தகிரி, குன்னூரில் அம்மா மினி கிளினிக்கை கலெக்டர் திறந்து வைத்தார்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி அருகே உள்ள எஸ்.கைகாட்டி, குன்னூர் அருகே உள்ள ஜெகதளா ஆகிய பகுதிகளில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடந்தது. மாவட்ட திட்ட இயக்குனர் கெட்சி லீனா அமாலினி, சுகாதார இணை இயக்குனர் பாலுசாமி, மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் கப்பச்சி வினோத், குன்னூர் சாந்தி ராமு எம்.எல்.ஏ., நெடுகுளா ஊராட்சி தலைவர் சுகுணா சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினார். தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு சத்தான உணவு பொருட்கள் அடங்கிய அம்மா பெட்டகத்தையும் வழங்கியதுடன், அம்மா மினி கிளினிக்கில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையையும் அவர் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் கிராம பகுதிகளில் 20 அம்மா மினி கிளினிக்குகளும், நகர பகுதிகளில் 5 கிளினிக்குகளும் 3 நடமாடும் கிளினிக்குகள் என்றும் 28 அம்மா மினி கிளினிக்குள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த கிளினிக்குகளில் ஒரு டாக்டர், ஒரு நர்சு, சுகாதார பணியாளர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இருக்கும்.

    சளி, காய்ச்சல், தலைவலி போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்கப்படுவதோடு, சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு மாதாந்திர மருந்துகள் வழங்கப்படும். இந்த கிளினிக் காலை 9 மணி முதல் 11 மணி, மாலை 4 மணி முதல் 7 மணி வரை செயல்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் தப்பகம்பை கிருஷ்ணன், கே.கே.மாதன், வடிவேல், சக்கத்தா சுரேஷ், புடியங்கி சிவாஜி, நஞ்சு, கெங்கரை ஊராட்சி தலைவர் முருகன், சுகாதார ஆய்வாளர் குமாரசாமி, நெடுகுளா ஊராட்சி துணை தலைவர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து கீழ் கோத்தகிரி மற்றும் சோலூர் மட்டம் பகுதிகளில் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    ×