என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா
    X
    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

    வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கை 885 ஆக அதிகரிப்பு- கலெக்டர் தகவல்

    கொரோனா வழிமுறைகளை கடைபிடிக்க வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கை 885 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
    ஊட்டி:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்துக்கு கூடுதலாக வாக்குப்பதிவு எந்திரங்கள், சரிபார்க்கும் எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 238 வாக்குச்சாவடி மையங்கள், குன்னூர் தொகுதியில் 223, கூடலூரில் 222 என மாவட்டத்தில் மொத்தம் 683 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.

    தற்போது கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளி விட்டும், வாக்குச்சாவடி மையத்தில் கூட்டம் கூடாமல் வாக்களிப்பதற்காகவும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஒரு வாக்குச்சாவடியில் ஆயிரத்துக்கு மேல் வாக்காளர்கள் இருந்தால் அதை 2 ஆக பிரிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

    அதன்படி நீலகிரியில் ஏற்கனவே உள்ள வாக்குச்சாவடிகளில் ஆயிரத்துக்கு மேல் வாக்காளர்கள் இருப்பதை சப்-கலெக்டர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள் கண்டறிந்து பிரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நீலகிரியில் வாக்குச்சாவடி மையங்கள் 202 அதிகரித்து 885 ஆக உயர்ந்து உள்ளது.

    புதிய வாக்குச்சாவடிகள் அமைந்து உள்ள இடங்கள் குறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆய்வு செய்து, அதன் அறிக்கை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

    புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தமிழக அரசு தடை விதித்து உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கேளிக்கை விடுதிகள், கிளப்கள், ஓட்டல்களுக்கு அரசாணை நகல் வழங்கப்பட்டு இருக்கிறது. அங்கு புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்த கூடாது. இதை மீறி நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×