என் மலர்
நீலகிரி
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து உறைபனி தாக்கம் காணப்பட்டது. பின்னர் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டதால் கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் மப்பும், மந்தாரமுமாக இருந்தது.
மதியம் திடீரென சாரல் மழை பெய்தது. இந்த மலை தொடர்ந்து ஒரு மணி நேரம் பரவலாக பெய்தது. இதனால் சுற்றுலா தலங்களுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் மழையில் நனையாமல் இருக்க குடைகளை பிடித்தபடி நடந்து சென்றனர்.
மேலும் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மழைக்கு ஒதுங்கி நின்றனர். ஊட்டியில் நேற்று கடும் பனிமூட்டம் நிலவியது. குளிர் காரணமாக பொதுமக்கள் உல்லன் ஆடைகளை அணிந்தனர். உறை பனி காலத்தில் திடீரென பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதுபோன்று குன்னூரில் கடந்த 2 நாட்களாக மிதமான மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலை பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக குன்னூர்-கோத்தகிரி சாலையில் உள்ள குடும்பநலத்துறை ஆஸ்பத்திரி அருகே சாலையில் திடீரென்று மண் சரிவு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மண் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து மண் சரிந்து சாலை சேதமான பகுதியை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி முதல் பூங்கா மூடப்பட்டது. பின்னர் தொடர்ந்து 7 மாதங்களாக பூங்கா பூட்டி கிடந்தது. ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் பூங்கா கடந்த செப்டம்பர் மாதம் 9-ந் தேதி திறக்கப்பட்டது.
முதலில் கொரோனா அச்சம் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக காணப்பட்டது. பின்னர் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பதிவு முறையில் அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இருப்பினும் கடந்த 2019-ம் ஆண்டை ஒப்பிடும் போது 2020-ம் ஆண்டில் சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்து உள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் மார்ச் 17-ந் தேதி வரை ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு 4 லட்சத்து 54 ஆயிரத்து 197 பேர், ஊரடங்குக்கு பின்னர் செப்டம்பர் 9-ந் தேதி முதல் நேற்று வரை 1 லட்சத்து 66 ஆயிரத்து 352 பேர் என மொத்தம் 6 லட்சத்து 20 ஆயிரத்து 549 சுற்றுலா பயணிகள் வந்து உள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டு 28 லட்சத்து 11 ஆயிரத்து 255 பேர் வந்து இருக்கின்றனர். அந்த ஆண்டில் கோடை சீசனில் மட்டும் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். தற்போது சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால், வருகிற நாட்களில் இன்னும் அதிகமாக சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் குரூப்-1 எழுத்து தேர்வு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்காக நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 3 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
அதன்படி இங்குள்ள ஊட்டி பிரிக்ஸ் பள்ளியில் 260 பேர், பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 400 பேர், புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் 356 பேர் என மொத்தம் 1,016 பேர் தேர்வு எழுதுகின்றனர். அவர்கள் ஆதார் கார்டை இணைத்து ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து உள்ளனர்.
கொரோனா காரணமாக தேர்வு மையங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் தேர்வு எழுத வருபவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்று பரிசோதனை மேற்கொண்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். காய்ச்சல் அதிகமாக இருப்பது தெரிய வந்தால், அவர்களை தனியாக தேர்வு எழுத வைக்க ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் அறை ஒதுக்கப் பட்டு உள்ளது. தேர்வு எழுதுபவர்கள், தேர்வு தொடங்கும் ஒரு மணி நேரத்துக்கு முன்பாக வருகை தரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
முறைகேடுகளில் ஈடுபடக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்க 2 புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா காரணமாக ஊட்டி மலை ரெயில் சேவை கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்டது. ஊரடங்கில் தளர்வை தொடர்ந்து அண்மையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் மூலம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தனியார் மூலம் அதிக கட்டணத்துடன் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இதற்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து எதிர்ப்பு வந்தது. அதன்பிறகு சில காரணங்களால் தனியார் மூலம் இயக்கப்பட்ட சிறப்பு ரெயில் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இதையடுத்து கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் மலை ரெயில் இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து 9 மாதங்களுக்கு பின்னர் நேற்று சாதாரண கட்டணத்துடன் மேட்டுப்பாளையம்-ஊட்டி சிறப்பு மலை ரெயில் சேவை தொடங்கியது.
சிறப்பு மலை ரெயிலில் பயணம் செய்ய வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திற்கு அதிகாலை முதலே வரத்தொடங்கினர். 9 மாதத்துக்கு பிறகு சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஊட்டி மலை ரெயில் முன்பு சிறப்பு பூஜைகளை செய்து பூசணிக்காய் உடைத்து பயணம் இனிதாக அமைய வழிபட்டனர். இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்த ரெயிலில் முன்பதிவு செய்தவர்கள் மட்டும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ரெயிலில் 5 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தது. மலை ரெயிலில் 228 பேர் பயணம் செய்தனர். இதில், சென்னை, திருச்சி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் பயணம் செய்து இயற்கை காட்சிகளை ரசித்தனர். மலை ரெயிலில் பயணம் செய்தவர்கள் முகக்கவசம் அணிந்து இருந்தனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரெயில் புறப்பட்டு குன்னூர் வழியாக ஊட்டிக்கு மதியம் 12 மணிக்கு வந்தது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை நீராவி என்ஜின், குன்னூரில் இருந்து ஊட்டி வரை டீசல் என்ஜின் மூலம் மலை ரெயில் இயக்கப்பட்டது. 9 மாதங்களுக்கு பின்னர் மலை ரெயில் இயக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கொரோனா காரணமாக ஓட்டல்கள், விடுதிகளில் புத்தாண்டு நிகழ்ச்சி கொண்டாட தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சுற்றுலா மையம் அதிகம் உள்ள நீலகிரி மாவட்டத்துக்கு புத்தாண்டையொட்டி சுற்றுலா பயணிகள் வரத்து அதிகம் உள்ளது.
இதனால் நேற்று இங்குள்ள அனைத்து ஓட்டல்கள், காட்டேஜ்கள் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிந்தது. இதுபோன்று ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்பட அனைத்து மையங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கிறது. கொரோனா பரவலை தடுக்க அனைவரும் முக கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சிங்காரா வனச்சரகத்துக்கு உட்பட்ட பொக்காபுரம் வனப்பகுதியில் முதுகில் காயத்துடன் காட்டுயானை சுற்றித்திரிந்தது. இதைபார்த்த பழங்குடியினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி வனத்துறையினர் முதல்கட்டமாக யானை நடமாடும் பகுதியில் பழங்களில் மருந்து வைத்து சிகிச்சையை தொடங்கினர். ஆனால் யானைக்கு தொடர்ந்து காயம் அதிகமானது. இதனையடுத்து கும்கிகள் விஜய், வசீம் ஆகியவைகள் கொண்டு வரப்பட்டு மயக்க ஊசி செலுத்தி யானையை பிடித்தனர்.
மயங்கிய யானையை சமதளப் பகுதிக்கு கொண்டு வந்து அதன் கால்களை கயிற்றால் கட்டி காயத்துக்கு சிகிச்சை அளித்து கண்காணித்தனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு மாவனல்லா குடியிருப்பு பகுதியில் யானை நுழைந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் அச்சம் அடைந்து சத்தம்போட்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர் யானையை அங்கிருந்து விரட்டி விட்டனர். யானையை விரட்டும்போது வாகனங்கள் நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது சிகிச்சைக்கு பின்னர் யானை நல்ல நிலையில் உள்ளது. தொடர்ந்து யானையை கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றனர்.
காயம் அடைந்த யானை சீற்றத்துடன் இருக்கும் என்பதால் மனிதர்களை தாக்க அதிக ஆபத்து உள்ளது. எனவே வனத்துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.. இங்கு 35 கிராம ஊராட்சிகள் உள்ளன. உள்ளாட்சி தேர்தல் நடந்து உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு ஓராண்டு முடியும் நிலையிலும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டும் 14-வது நிதிக்குழு நிதி ஊராட்சிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட வில்லை. இதுகுறித்து கிராம ஊராட்சி தலைவர்கள் ஒன்றுகூடி தீர்மானம் நிறைவேற்றி கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.
அதனை தொடர்ந்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் ஊட்டி எச்.ஏ.டி.பி. அரங்கில் கிராம ஊராட்சி தலைவர்களுடன் அவசர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் பேசும்போது, நீலகிரி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கூட்டமைப்பு உருவாக்க வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டும் அதிகாரிகளே உள்ளாட்சிகளை கவனித்து வருகின்றனர். ஊராட்சி தலைவர்களுக்கு அதிகாரங்கள் ஓராண்டாகியும் வழங்கப்பட வில்லை. இதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். பஞ்சாயத் ராஜ் சட்டத்தின்படி அனைத்து அதிகாரங்களும் வழங்க வேண்டும். வளர்ச்சி பணிகளுக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கலெக்டரிடம் முறையிட்டனர்.
பின்னர் கலெக்டர் பேசும்போது, கலெக்டர் கிராம ஊராட்சி தலைவர்களின் அனைத்து கோரிக்கைகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததுடன், 14-வது நிதிக்குழு நிதி ஊராட்சிகளுக்கு ஒதுக்க ஆவன செய்யப்படும் என்றார்.
இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம ஊராட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து நீலகிரி மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு, நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
கொரோனா பாதிப்பால் ஊட்டி மலை ரெயில் சேவை கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த 9 மாதங்களுக்கு மேலாக மலை ரெயில் இயக்கப்பட வில்லை. சமீபத்தில் தனியார் நிறுவனம் வாடகைக்கு எடுத்து மலை ரெயிலை இயக்கியது.
அதில் கட்டணம் உயர்த்தப்பட்டதால் பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதனால் மலை ரெயில் தனியார் மயமாக்கப்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்தது. இந்த நிலையில் 9 மாதங்களுக்கு பிறகு நாளை (வியாழக்கிழமை) முதல் மலை ரெயிலை இயக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளது.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயில் நாளை முதல் தினமும் இயக்கப்படுகிறது. அதேபோல் குன்னூர்-ஊட்டி இடையே மலை ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த மலை ரெயிலில் பழைய கட்டணத்தில் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே ஒரு முறையும், குன்னூர்-ஊட்டி இடையே 3 முறையும் மலை ரெயில் இயக்கப்படுகிறது. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் அனைத்தையும் கட்டாயம் பயணிகள் பின்பற்ற வேண்டும். பயணிகள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து, முககவசம் அணிந்து ரெயில்வேக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு மலை ரெயில் புறப்பட்டு கல்லார், குன்னூர், வெலிங்டன், அருவங்காடு வழியாக ஊட்டியை 11.55 மணிக்கு வந்தடைகிறது. ஊட்டியில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு குன்னூர் வழியாக மேட்டுப்பாளையத்தை மாலை 5.30 மணிக்கு சென்றடைகிறது. குன்னூரில் இருந்து காலை 7.45 மணிக்கு மலை ரெயில் புறப்பட்டு வெலிங்டன், அருவங்காடு, கேத்தி, லவ்டேல் வழியாக ஊட்டியை 9 மணிக்கு வந்தடைகிறது. ஊட்டியில் இருந்து 9.15 மணிக்கு புறப்பட்டு 10.20 மணிக்கு குன்னூருக்கு செல்கிறது.
ஊட்டியில் இருந்து மதியம் 12.15 மணிக்கு புறப்பட்டு குன்னூருக்கு 1.15 மணிக்கும், குன்னூரில் இருந்து மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு ஊட்டிக்கு 1.45 மணிக்கும், குன்னூரில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு ஊட்டியை 5.10 மணிக்கும், ஊட்டியில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு குன்னூரை 6.35 மணிக்கு சென்றடையும். இந்த ரெயிலில் பயணம் செய்ய முன்பதிவு தொடங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட (வெளி மண்டலம்) மசினகுடி உள்பட பல இடங்களில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை முதுகு பகுதியில் காயத்துடன் சுற்றியது. அவ்வப்போது ஊருக்குள் புகுந்தும் அட்டகாசத்தில் ஈடுபட்டது. அந்த யானை மசினகுடி அருகே உள்ள பொக்காபுரம் பகுதியில் நின்றது. இதையறிந்ததும் முதுமலை தெப்பக்காட்டில் இருந்து கும்கிகள் வசீம், சுஜய், முதுமலை, சீனிவாஸ், மூர்த்தி ஆகிய யானைகள் வரவழைக்கப்பட்டன.
பின்னர் அந்த கும்கிகள் உதவியுடன், காயம் அடைந்த காட்டு யானையை சுற்றி வளைத்தனர். பின்னர் அதற்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்தப்பகுதியிலேயே காட்டு யானையின் கால்கள் மரத்தில் இழுத்து கட்டப்பட்டன. அத்துடன் பாதுகாப்புக்காக யானையை சுற்றிலும் கும்கிகள் நின்றிருந்தன. தொடர்ந்து கால்நடை மருத்துவ குழுவினர் காட்டு யானையின் முதுகு பகுதியில் சீழ் வடிந்த நிலையில் இருந்த காயத்தை சுத்தம் செய்து சிகிச்சை அளித்தனர்.
பிறகு அந்த யானைக்கு மயக்கம் தெளிய ஊசி போடப்பட்டு, கால்களில் கட்டப்பட்ட கயிறுகளை அவிழ்த்துவிட்டனர். தொடர்ந்து அந்த யானைக்கு கரும்பு உள்ளிட்ட உணவுகளும் கொடுக்கப்பட்டன. அவற்றை சாப்பிட்டவாறு அந்த யானை சற்றுதூரம் சென்றது. தொடர்ந்து அந்த காட்டு யானையை வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.






