search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    முதுமலை அருகே காயத்துடன் சிகிச்சை பெற்ற யானை ஊருக்குள் புகுந்தது - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

    முதுமலை அருகே காயத்துடன் சிகிச்சை பெற்ற யானை ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சிங்காரா வனச்சரகத்துக்கு உட்பட்ட பொக்காபுரம் வனப்பகுதியில் முதுகில் காயத்துடன் காட்டுயானை சுற்றித்திரிந்தது. இதைபார்த்த பழங்குடியினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்படி வனத்துறையினர் முதல்கட்டமாக யானை நடமாடும் பகுதியில் பழங்களில் மருந்து வைத்து சிகிச்சையை தொடங்கினர். ஆனால் யானைக்கு தொடர்ந்து காயம் அதிகமானது. இதனையடுத்து கும்கிகள் விஜய், வசீம் ஆகியவைகள் கொண்டு வரப்பட்டு மயக்க ஊசி செலுத்தி யானையை பிடித்தனர்.

    மயங்கிய யானையை சமதளப் பகுதிக்கு கொண்டு வந்து அதன் கால்களை கயிற்றால் கட்டி காயத்துக்கு சிகிச்சை அளித்து கண்காணித்தனர்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு மாவனல்லா குடியிருப்பு பகுதியில் யானை நுழைந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் அச்சம் அடைந்து சத்தம்போட்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர் யானையை அங்கிருந்து விரட்டி விட்டனர். யானையை விரட்டும்போது வாகனங்கள் நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது சிகிச்சைக்கு பின்னர் யானை நல்ல நிலையில் உள்ளது. தொடர்ந்து யானையை கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றனர்.

    காயம் அடைந்த யானை சீற்றத்துடன் இருக்கும் என்பதால் மனிதர்களை தாக்க அதிக ஆபத்து உள்ளது. எனவே வனத்துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×