search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டி மலை ரெயில்
    X
    ஊட்டி மலை ரெயில்

    9 மாதங்களுக்கு பிறகு ஊட்டி மலை ரெயில் நாளை முதல் இயக்கம் - முன்பதிவு தொடங்கியது

    9 மாதங்களுக்கு பிறகு ஊட்டி மலை ரெயில் நாளை (வியாழக்கிழமை) முதல் இயக்கப்படுகிறது. அதற்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.
    மேட்டுப்பாளையம்:

    கொரோனா பாதிப்பால் ஊட்டி மலை ரெயில் சேவை கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த 9 மாதங்களுக்கு மேலாக மலை ரெயில் இயக்கப்பட வில்லை. சமீபத்தில் தனியார் நிறுவனம் வாடகைக்கு எடுத்து மலை ரெயிலை இயக்கியது.

    அதில் கட்டணம் உயர்த்தப்பட்டதால் பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதனால் மலை ரெயில் தனியார் மயமாக்கப்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்தது. இந்த நிலையில் 9 மாதங்களுக்கு பிறகு நாளை (வியாழக்கிழமை) முதல் மலை ரெயிலை இயக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளது.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

    மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயில் நாளை முதல் தினமும் இயக்கப்படுகிறது. அதேபோல் குன்னூர்-ஊட்டி இடையே மலை ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த மலை ரெயிலில் பழைய கட்டணத்தில் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

    மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே ஒரு முறையும், குன்னூர்-ஊட்டி இடையே 3 முறையும் மலை ரெயில் இயக்கப்படுகிறது. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் அனைத்தையும் கட்டாயம் பயணிகள் பின்பற்ற வேண்டும். பயணிகள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து, முககவசம் அணிந்து ரெயில்வேக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு மலை ரெயில் புறப்பட்டு கல்லார், குன்னூர், வெலிங்டன், அருவங்காடு வழியாக ஊட்டியை 11.55 மணிக்கு வந்தடைகிறது. ஊட்டியில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு குன்னூர் வழியாக மேட்டுப்பாளையத்தை மாலை 5.30 மணிக்கு சென்றடைகிறது. குன்னூரில் இருந்து காலை 7.45 மணிக்கு மலை ரெயில் புறப்பட்டு வெலிங்டன், அருவங்காடு, கேத்தி, லவ்டேல் வழியாக ஊட்டியை 9 மணிக்கு வந்தடைகிறது. ஊட்டியில் இருந்து 9.15 மணிக்கு புறப்பட்டு 10.20 மணிக்கு குன்னூருக்கு செல்கிறது.

    ஊட்டியில் இருந்து மதியம் 12.15 மணிக்கு புறப்பட்டு குன்னூருக்கு 1.15 மணிக்கும், குன்னூரில் இருந்து மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு ஊட்டிக்கு 1.45 மணிக்கும், குன்னூரில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு ஊட்டியை 5.10 மணிக்கும், ஊட்டியில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு குன்னூரை 6.35 மணிக்கு சென்றடையும். இந்த ரெயிலில் பயணம் செய்ய முன்பதிவு தொடங்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×