என் மலர்tooltip icon

    நீலகிரி

    தமிழக-கேரள எல்லைகளில் பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
    கூடலூர்:

    கேரளா தொடங்கி வட மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் முன்னெச்சரிக்கையாக தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் தமிழக-கேரள எல்லைகளில் கால்நடை பராமரிப்புத் துறையினர் முகாமிட்டு கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர்.

    கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் காடை, கோழிகள், வாத்துகள் உள்ளிட்ட பறவையினங்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டது. ஆனால் நீலகிரி மாவட்டம் கூடலூர் - கேரள எல்லைகளில் போதிய கால்நடை டாக்டர்கள் இல்லாததால் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணி உடனடியாக தொடங்கவில்லை.

    இதைத்தொடர்ந்து கால்நடை டாக்டர்கள் நியமிக்கப்பட்டு நேற்று முதல் நாடுகாணி, சோலாடி, பாட்டவயல், நம்பியார்குன்னு உள்பட 8 சோதனை சாவடிகளில் கால்நடை டாக்டர்கள், ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து கேரளாவில் இருந்து வரும் சரக்கு மற்றும் தனியார் வாகனங்களை பதிவு செய்ததுடன், வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சாலைகளின் குறுக்கே கிருமி நாசினி பவுடர்களையும் தூவினர்.

    அப்போது கேரளாவில் எந்த பகுதியில் இருந்து வருகிறது என பல்வேறு விசாரணை நடத்திய பின் தமிழகத்துக்குள் அனுமதித்தனர். இதேபோல் சரக்கு வாகனங்களின் மேல் ஏறிச்சென்று தடை செய்யப்பட்ட பொருள்கள் கொண்டுவரப்படுகின்றதா என சோதனை செய்தனர்.

    இப்பணியை கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குனர் பகத்சிங் கேரள எல்லைகளில் ஆய்வுசெய்தார். இதேபோல் கூடலூர் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளிலும் கால்நடை டாக்டர் கோசலம் தலைமையிலான மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர்.
    கோத்தகிரி அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி அருகே உள்ள பெட்டட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 49), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். பெட்டட்டி அருகே உள்ள ஒரு குறுகிய வளைவில் மோட்டார் சைக்கிளை திரும்பும் போது, எதிர்பாராத விதமாக திடீரென சாலையின் குறுக்கே காட்டுப்பன்றி ஒன்று வந்ததால், நிலைதடுமாறி அவர் சாலையில் விழுந்தார்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி குமார் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கோத்தகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நீலகிரி மாவட்டத்தில் 2 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
    ஊட்டி:

    ஊரடங்கு உத்தரவுக்கு பின் நீலகிரி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 7-ந் தேதி முதல் அனைத்து சுற்றுலா மையங்களும் திறக்கப்பட்டது. தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. வெளியிடங்களில் இருந்து வருகிறவர்களால் உள்ளூர் மக்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    மேலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்றால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்காக சோதனைசாவடிகளில் தீவிர பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் அறிகுறி உள்ளவர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் அரசு வழிமுறைகளின்படி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதுவரை 7 ஆயிரத்து 820 பேர் பூரண குணம் அடைந்தனர். கொரோனா பாதிப்பு ஒரு நாளைக்கு 15-க்கும் கீழ் குறைந்து இருக்கிறது.

    இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 85 ஆயிரத்து 434 பேரிடம் இருந்து சளிமாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. தொடர்ந்து தொற்று பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
    நீலகிரியில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 601 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    ஊட்டி:

    தமிழகத்தில் முதல்-அமைச்சர் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை அறிவித்து, ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர்களுக்கு, ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு நீள கரும்பு மற்றும் ரூ.2,500 வழங்க உத்தரவிட்டார். அதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு நேற்று முதல் வினியோகம் தொடங்கியது. முன்னதாக ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டது.

    ஊட்டி கூட்டுறவு பண்டக சாலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தார்.

    இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் 402 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 794 ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 601 அரிசி பெறும் ரேஷன் கார்டுகள் ஆகும். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் வருகிற 12-ந் தேதி வரை தினமும் 200 ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும். பொங்கல் தொகுப்பு பெறாதவர்கள் 13-ந் தேதி அன்று பெற்று கொள்ளலாம் என்றார்.

    நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் வாஞ்சிநாதன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வினோத், சாந்தி ராமு எம்.எல்.ஏ., உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூடலூர் தாலுகாவில் 39 ஆயிரத்து 991 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள 4 ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பை முன்னாள் அமைச்சர் அ.மில்லர் வழங்கி தொடங்கி வைத்தார்.

    இதில் அ.தி.மு.க. நகர செயலாளர் சையத் அனூப்கான், தகவல் தொடர்பாளர் செந்தில், ஜலேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் ஆயிரக்கணக்கான ஆதிவாசி மக்கள் குக்கிராமங்களில் வசித்து வருகின்றனர். தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ. 2,500 பணத்தை பெற ஆதிவாசி மக்களிடையே மிகுந்த ஆர்வம் காணப்பட்டது. இதனால் காலை 8 மணி முதல் ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியுடன் வந்து வரிசையில் நின்றனர்.

    கூடலூர் மண் வயல், செருமுள்ளி, போஸ்பாரா, மச்சிகொல்லி, மசினகுடி, பாடந்தொரை உள்பட பல இடங்களில் ஆதிவாசி மக்கள் நீண்ட வரிசையில் நின்று பணம் மற்றும் பரிசு தொகுப்பை பெற்றுச் சென்றனர்.

    கோத்தகிரி பஸ் நிலையம் அருகே உள்ள தலைமை கூட்டுறவு பண்டகசாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் வடிவேல் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜதுரை ஆகியோர் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி தொடங்கி வைத்தனர். பொதுமக்கள் கொட்டும் மழையிலும் வரிசையாக நின்று பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கிச் சென்றனர்.

    இதேபோல ஓர சோலை பகுதியில் கோத்தகிரி அ.தி.மு.க. செயலாளர் நஞ்சு என்கிற சுப்பிரமணி தலைமையிலும், தப்பகம்பை பகுதியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் தலைமையிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. மேலும் கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட 65 ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
    ஊட்டியில் காலநிலை மாற்றத்தால் கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து உள்ளனர்.
    ஊட்டி:

    மலை மாவட்டமான நீலகிரியில் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் பனி காலம் நிலவுகிறது. இந்த மாதங்களில் உறைபனி தாக்கம் அதிகமாக காணப்படும். கடந்த சில நாட்களுக்கு முன்பு உறைபனி தாக்கம் காணப்பட்டாலும், காலநிலை மாற்றத்தால் அவ்வப்போது மழை பெய்தது.

    இந்த நிலையில் நேற்று ஊட்டி நகரில் வானம் மேகமூட்டத்துடன் இருந்ததோடு, தொடர்ந்து பனிமூட்டம் நிலவியது. அவ்வப்போது சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் கடுங்குளிர் நிலவியது. இதனால் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் குளிரை போக்க தொப்பி, உல்லன் ஆடைகள், கையுறைகளை அணிந்து இருந்தனர்.

    கொட்டும் மழையிலும் பூங்காவை அவர்கள் கண்டு ரசித்தனர். மழையில் நனைந்தபடி புகைப்படம் எடுத்து கொண்டனர். அத்துடன் கடுங்குளிர் காரணமாக சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர். பொது மக்கள் வீடுகளில் சூடான தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர்.

    மலை உச்சியில் உயரமான இடங்களில் வசிப்பவர்கள் குளிரால் எந்நேரமும் உல்லன் ஆடைகளை அணிந்து உள்ளனர். ஊட்டியில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 12.8 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவானது.

    புத்தாண்டையொட்டி தொடர் விடுமுறை காரணமாக கடந்த 1-ந் தேதி 5,967 பேர், 2-ந் தேதி 6,573 பேர், நேற்று முன்தினம் 6,604 பேர் என மொத்தம் 19 ஆயிரத்து 144 பேர் ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு வருகை தந்தனர். ஊட்டி படகு இல்லத்துக்கு 15 ஆயிரம் பேர் வந்தது குறிப்பிடத்தக்கது.

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

    ஊட்டி-1, குன்னூர்-15, குந்தா-6, அவலாஞ்சி-9, உலிக்கல்-20 உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 101.8 மி.மீ. மழை பதிவானது. இதன் சராசரி 3.51 மி.மீ. ஆகும்.

    ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. இதனால் நன்கு காய்ச்சிய தண்ணீரை குடிக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
    வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சி தனித்து போட்டியிடுகிறது என்று அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டம் கூடலூரில் நடந்தது. கூட்டத்தில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து கூடலூர் காந்தி திடல், தேவாலா, உப்பட்டி உள்பட 6 இடங்களில் கட்சி கொடியை அர்ஜுன் சம்பத் ஏற்றி வைத்தார்.

    பின்னர் அவர் கூடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இது தொடர்பாக மதுரையில் நடக்கும் மாநில செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படுகிறது. 

    கோவை தேவராயபுரத்தில் நடந்த கூட்டத்தில் தலித் பெண் ஒருவர் கேள்வி கேட்டதால் அவரை தி.மு.க.வினர் தாக்கி உள்ளனர். எனவே அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அப்போது இந்து மக்கள் கட்சி மாநில துணை செயலாளர் தங்கம், நீலகிரி மாவட்ட பொது செயலாளர் சிவா உள்பட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
    சேரம்பாடி அருகே சிறுத்தைப்புலி மாட்டை அடித்து கொன்றது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
    பந்தலூர்:

    பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே நாயக்கன்சோலை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த கிராமம் வனப்பகுதி அருகே இருப்பதால் சிறுத்தைப்புலி, காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    இந்த பகுதியை சேர்ந்த ராஜரத்தினம் ஏராளமான கால்நடைகளை வளர்த்து வருகிறார். அந்த கால்நடைகள் அருகே உள்ள புல்வெளிக்கு சென்று மேய்ந்து வருகின்றன.

    இந்த நிலையில் நேற்று மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் வனப்பகுதியை ஒட்டி உள்ள புல்வெளிக்கு மேய சென்றன. அப்போது திடீரென்று வனப்பகுதியில் இருந்து ஒரு சிறுத்தைப்புலி வெளியே வந்தது. பின்னர் அது அங்கு மேய்ந்து கொண்டு இருந்த ஒரு மாட்டை அடித்து கொன்றது.

    இதனால் அங்கு மேய்ந்து கொண்டு இருந்த மற்ற கால்நடைகள் அலறின. இதை பார்த்த பொதுமக்கள் சத்தமிட்டபடி ஓடினார்கள். உடனே சிறுத்தைப்புலி அந்த மாட்டை அங்குவிட்டுவிட்டு வனப்பகுதிக்குள் தப்பி ஓடியது.

    இது குறித்து தகவல் அறிந்த சேரம்பாடி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அத்துடன் அவர்கள் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இது குறித்து அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் சிறுத்தைப்புலி அடிக்கடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். எனவே வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, அந்த சிறுத்தைப்புலியை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்றனர்.
    கூடலூர் அருகே அத்திப்பாளியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த கிராம மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
    கூடலூர்:

    கூடலூர் நகராட்சி பகுதியில் 21 வார்டுகள் உள்ளன. நகர பகுதியில் மட்டும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கூடலூர் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஓவேலி பகுதியில் உள்ள தடுப்பணைகளில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. ஆண்டுதோறும் பருவமழைகள் தொடர்ச்சியாக பெய்வதால், மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

    ஆனால் கோடைகாலம் தொடங்கியவுடன் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து குறைந்து விடுகிறது. எனினும் மக்களுக்கு தேவையான தண்ணீர் தடுப்பணைகளில் தேக்கி வைக்கப்படுகிறது. ஆனாலும் மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கும் பணியில் பல்வேறு குளறுபடிகள் நடைபெறுவதாக தெரிகிறது.

    இந்த நிலையில் கூடலூர் அருகே அத்திப்பாளி பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மழைக்காலத்தில் வாரத்துக்கு ஒருமுறையும், கோடைகாலத்தில் 12 நாட்களுக்கு ஒருமுறையும் குடிநீர் வழங்கப்படுவதாக தெரிகிறது. இதனால் தற்போது குடிநீர் கிடைக்காமல், தட்டுப்பாட்டால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதற்கு காரணம், குடிநீர் வினியோகத்தில் உள்ள குளறுபடிகள்தான் என்று மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக குடிநீர் வழங்கல் பணியாளர்களிடம் முறையிட்டாலும், உரிய நடவடிக்கை எடுக்கப்பது இல்லை என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து அத்திப்பாளி கிராம மக்கள் கூறியதாவது:-

    மழைக்காலம் இன்னும் முழுமையாக முடியாத நிலையில் அத்திப்பாளி பகுதியில் குளறுபடிகள் காரணமாக மக்களுக்கு குடிநீர் சரிவர கிடைப்பதில்லை. இதனால் உணவு சமைப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் அவதிப்படும் சூழல் உள்ளது. இனிவரும் மாதங்கள் கோடைகாலம் என்பதால் குடிநீர் வினியோகத்தை முறையாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    சேரம்பாடி அருகே சப்பந்தோடு பகுதியில் 2 காட்டுயானைகள் புகுந்து பாக்கு உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன.
    பந்தலூர்:

    பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேரம்பாடி அருகே சப்பந்தோடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் 2 காட்டுயானைகள் புகுந்தன. தொடர்ந்து ராமசாமி என்பவரது தோட்டத்தில் பாக்கு உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வனவர் சசிகுமார் தலைமையிலான வனத்துறையினர் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
    நீலகிரியில் கடந்த ஆண்டு போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டவர்களிடம் ரூ.3 கோடியே 57 லட்சம் அபராதமான வசூலிக்கப்பட்டது என்று போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் 2019-ம் ஆண்டை விட 2020-ம் ஆண்டில் குற்ற வழக்குகள் மிக குறைவாக பதிவாகி உள்ளது. மேலும் மொத்தம் 136 சாலை விபத்துகளில் 203 பேர் காயமடைந்தனர். 16 பேர் உயிரிழந்தனர். சாலை பாதுகாப்பு விதிமுறைகளை வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டும் என்று 2,994 விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டது.

    இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 1 லட்சத்து 11 ஆயிரத்து 555 வழக்குகள், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 821 வழக்குகள், அதிவேகத்தில் சென்றதாக 5,275 வழக்குகள், வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தியதாக 10 ஆயிரத்து 129 வழக்குகள், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 58 ஆயிரத்து 276 வழக்குகள், இதர வழக்குகள் 85 ஆயிரத்து 808 உள்பட மொத்தம் 2 லட்சத்து 71 ஆயிரத்து 864 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.3 கோடியே 57 லட்சத்து 14 ஆயிரத்து 438 வசூலிக்கப்பட்டது. நீலகிரியில் 7 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. பாலியல் குற்றம் சம்பந்தமாக 63 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 63 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து பள்ளிகள், கல்லூரிகள், பெண்கள் பணிபுரியும் இடங்கள் மற்றும் கிராமங்களில் 23 விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டது. நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பொதுமக்கள் தங்களது புகார்களை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கோ அல்லது அதிகாரிகளுக்கோ தெரிவிக்கலாம்.

    2020-ம் ஆண்டில் குற்றங்களை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை கண்காணிக்கவும் 1,160 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. காவல்துறை மூலம் பழங்குடியின மக்களுக்கு நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் 351 சாதி சான்றிதழ்கள், 133 பேருக்கு முதியோர் உதவித்தொகை பெற்று தரப்பட்டது. வடகிழக்கு பருவமழையின்போது காவல்துறை சார்பில் 3 பேரிடர் மீட்பு குழு மற்றும் 12 குழுக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    மசினகுடி-ஊட்டி சாலையில் காயத்துடன் சுற்றித்திரியும் காட்டுயானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    கூடலூர்:

    மசினகுடி பகுதியில் ஒரு ஆண் காட்டுயானை காயத்துடன் சுற்றி வருகிறது. மேலும் பொதுமக்களின் குடியிருப்புகளை முற்றுகையிட்டு வருகிறது. அந்த காட்டுயானைக்கு உரிய சிகிச்சை அளித்து வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு பொக்காபுரம் பகுதியில் நின்றிருந்த அந்த காட்டுயானைக்கு மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவ குழுவினர் இணைந்து சிகிச்சை அளித்தனர்.

    அப்போது காட்டுயானையின் முதுகில் காயம் பலமாக இருந்ததை வனத்துறையினர் உறுதி செய்தனர். பின்னர் காட்டுயானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் காயம் குணமடையும் வரை காட்டுயானையை கண்காணித்து அவ்வப்போது சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் அந்த காட்டுயானை மசினகுடி, மாவனநல்லா, பொக்காபுரம், தொட்டிலிங் உள்ளிட்ட பகுதிகளில் தினமும் உலா வருகிறது.

    மேலும் மசினகுடி -ஊட்டி சாலையில் வந்து நிற்கிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. அந்த காட்டுயானையை சிங்காரா வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து விரட்டி வருகின்றனர். மேலும் அந்த காட்டுயானை தின்பதற்காக சுற்றுலா பயணிகள் சிலர் பழங்களை சாலையோரம் வீசி சென்றனர். இதை கண்ட வனத்துறையினர் அவர்களை எச்சரித்தனர்.
    குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை முன்பு தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    குன்னூர்:

    குன்னூர் அருகே அருவங்காட்டில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலை உள்ளது. இங்கு நிரந்தர தொழிலாளர்கள் தவிர ஒப்பந்த தொழிலாளர்களும் வேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த 20 நாட்களாக வேலை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 

    இதையடுத்து ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று காலை இந்த தொழிற்சாலை முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு உடனடியாக வேலை வழங்கக்கோரி கொட்டும் மழையிலும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து தகவல் அறிந்த குன்னூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    ×