என் மலர்tooltip icon

    நீலகிரி

    ஊட்டி படகு இல்லத்தில் புதிய படகுகள் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அனுமதி கிடைத்த உடன் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் படகு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுலா பயணிகளுக்காக மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகு இயக்கப்படுகிறது. இயற்கை அழகை கண்டு ரசித்தபடி படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டி வருகிறார் கள். ஆண்டுதோறும் கோடை சீசனையொட்டி படகுகளை சீரமைப்பது, வர்ணம் தீட்டுவது போன்ற பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம்.

    இதற்கிடையே சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதியதாக 26 படகுகள் வரவழைக்கப்பட்டு உள்ளது. இதில் டிராகன், வாத்து, மயில் போன்ற வடிவங்களை தத்ரூபமாக கொண்டு வடிவமைக்கப்பட்ட மிதி படகுகள் வந்து உள்ளன. மேலும் கைப்பிடியுடன் கூடிய துடுப்பு படகுகள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

    கடந்த சில நாட்களாக புது படகுகளை இயக்க அனுமதி இல்லாததால் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து சென்னை சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் புதிய படகுகளின் தரத்தை ஆய்வு செய்து இயக்க சோதனை ஓட்டம் நடத்துமாறு அறிவுறுத்தினர்.

    அதன்படி ஊட்டி படகு இல்லத்தில் நேற்று சில புதிய படகுகள் சோதனை ஓட்டத்துக்காக இயக்கப்பட்டது. புதிய படகுகளில் சுற்றுலா பயணிகள் உயிர் பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து சவாரி செய்தனர். 2 இருக்கைகள், 4 இருக்கைகளை கொண்ட படகுகள் தண்ணீரில் சமநிலை யில் செல்கிறதா, மிதிக்கும் போது முன்னோக்கி மற்றும் பின்னோக்கி நகர்கிறதா என்று ஆய்வு செய்யப்பட்டது. எளிதில் திரும்புகிறதா என்றும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

    முன்னதாக புதிய படகுகளில் தண்ணீர் நிரப்பி எடை சரிபார்க்கப்பட்டது. சோதனை ஓட்டத்தின் போது கற்றுலா பயணிகளின் டிராகன், மயில் படகுகளில் சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, புதிய படகுகளை இயக்க அனுமதி கிடைத்ததும் அனைத்து படகுகளும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றனர்.
    தண்டவளாத்தில் சரிந்த மண் அகற்றப்பட்டதால் ஊட்டி மலை ரெயில் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் இயக்கப்படுகிறது என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
    குன்னூர்:

    மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே தினமும் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக மலை ரெயில் இயக்கம் நிறுத்தப்பட்டு இருந்தது. பின்னர் கடந்த 31-ந் தேதி முதல் மீண்டும் இயக்கப்பட்டது. குன்னூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த மழை காரணமாக ஹில்குரோவ் மற்றும் அடர்லி ரெயில் நிலையங்களுக்கு இடையே திடீரென்று மண் சரிவு ஏற்பட்டது. இதனால் மலை ரெயில் நேற்று ஒருநாள் மட்டும் ரத்து செய்யப்பட்டது.

    மேலும் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலை ரெயில் ரத்து செய்யப்பட்டது. பின்னர் நேற்று ஏராளமான ரெயில்வே ஊழியர்கள் சரக்கு ரெயில் மூலம் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் அங்கு விழுந்து கிடந்த மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    பொக்லைன் எந்திரமும் சம்பவ இடத்துக்கு கொண்டு வரப்பட்டு சீரமைப்பு பணி நடந்தது. தண்டவாளம் மீது மண் மற்றும் கற்கள் விழுந்ததால் அதில் உள்ள பல்சக்கரத்தில் பழுது ஏற்பட்டு இருந்தது. அதை அகற்றிவிட்டு புதிய பல் சக்கரங்கள் பொருத்தப்பட்டன.

    பிறகு அங்கு சோதனை ஓட்டம் நடந்தது. அப்போது மண் சரிவு ஏற்பட்டு இருந்த இடத்தில் ரெயில் வெற்றிகரமாக சென்றது. இதனை தொடர்ந்து நேற்று குன்னூரில் இருந்து 4 காலி பெட்டிகளுடன் மலை ரெயில் மேட்டுப்பாளையம் புறப்பட்டு சென்றது. இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, தண்டவாளத்தில் சரிந்து கிடந்த மண் அகற்றப்பட்டு, சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. எனவே ஊட்டி மலை ரெயில் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் இயக்கப்படும் என்றனர்.
    தொடர் மழை காரணமாகவும், தண்டவாளத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாகவும் இன்று ஒரு நாள் ஊட்டி- மேட்டுப்பாளையம் இடையேயான மலைரெயில் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
    குன்னூர்:

    கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினமும் காலை 7.15 மணிக்கு புறப்படும் மலைரெயில் குன்னூர் வழியாக காலை 11.55 மணிக்கு ஊட்டியை சென்றடைகிறது. மறுமார்க்கமாக ஊட்டியில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்படும் மலைரெயில் மாலை 6.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தை வந்தடைகிறது.

    குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுவதும், சாலைகளில் சிறிது மண்சரிவுகள் ஏற்படுவதும் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று மதியம் 2.15 மணிக்கு ஊட்டியில் இருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றி கொண்டு மலைரெயில் குன்னூருக்கு புறப்பட்டது. மாலை 3.30 மணியளவில் குன்னூர் ரெயில் நிலையத்தை வந்தடைந்த மலைரெயில் நீராவி என்ஜினை மாட்டி கொண்டு மேட்டுப்பாளையத்திற்கு புறப்பட தயாரானது.

    அந்த சமயம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை கொட்டியது. இந்த மழைக்கு ஹில்குரோவ்- கல்லாறு ரெயில் நிலையங்களுக்கு இடையேயான தண்டவாளத்தில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதுபற்றி அங்கிருந்த ஊழியர்கள் குன்னூர் ரெயில் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அதற்கு முன்னதாகவே ரெயில் புறப்பட்டு விட்டது. உடனடியாக மலைரெயில் கார்டுக்கு தகவல் கொடுத்து மலைரெயில் பாதிவழியில் நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து ரெயில்வே அதிகாரிகள் ஊழியர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து மண்சரிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இரவு வெகுநேரமாகி விட்டதால் தற்காலிகமாக பணியை நிறுத்தினர்.

    பின்னர் பாதி வழியில் நிறுத்தப்பட்ட ஊட்டி மலைரெயில் மீண்டும் குன்னூருக்கு திருப்பி அனுப்பப்பட்டு சுற்றுலா பயணிகள் பஸ் மூலம் மேட்டுப்பாளையத்திற்கு சென்றனர்.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையேயான தண்டவாளத்தில் சரிந்து கிடக்கும் மணல், கற்கள் போன்றவற்றை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர் மழை காரணமாகவும், தண்டவாளத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாகவும் இன்று ஒரு நாள் ஊட்டி- மேட்டுப்பாளையம் இடையேயான மலைரெயில் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இருப்பினும் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலைரெயில் வழக்கம் போல் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    இன்று காலையும் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் சீதோஷ்ண நிலை மாறி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தாலும், வராவிட்டாலும் பாரதீய ஜனதாவுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.

    ஊட்டி:

    ஊட்டியில் பாரதீய ஜனதா சார்பில் நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகரும், பாரதீய ஜனதா செயற்குழு உறுப்பினருமான ராதாரவி கலந்து கொண்டு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பாரதீய ஜனதா நல்ல கட்சி என்பதாலும், இந்த கட்சியில் பிரச்சினைகள் இல்லாததாலும் நடிகர்கள் பாரதீய ஜனதா நோக்கி வருகின்றனர்.

    சட்டசபை தேர்தலுக்கு பாரதீய ஜனதா தயாராகி வருகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் பாரதீய ஜனதா இருக்க வேண்டும் என்பது எனது ஆசை. இருக்குமா, இல்லையா? என்பது குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்யும்.

    பாரதீய ஜனதாவுக்கு சிறந்த தலைமை மோடி. பாரதீய ஜனதா தமிழகத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என மக்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையை பாரதீய ஜனதா ஏற்றுக் கொள்ளும். அவர்கள் அரசியல் அறிந்தவர்கள்.

    இரட்டை இலை சின்னத்தை யாராலும் அழிக்க முடியாது. இந்த கூட்டணிக்கு தேர்தலில் மக்களின் அமோக ஆதரவு நிச்சயம் உண்டு.

    ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தாலும், வராவிட்டாலும் பாரதீய ஜனதாவுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூடலூர் அருகே சூண்டியில் அம்மா மினி கிளினிக்கை மாவட்ட கலெக்டர் திறந்து வைத்தார்.
    கூடலூர்:

    கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட சூண்டி துணை சுகாதார நிலையத்தில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    பின்னர் சாந்தி ராமு எம்.எல்.ஏ, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கப்பச்சி வினோத், மாவட்ட வேளாண் விளைபொருள் விற்பனை குழு தலைவர் கே.ஆர்.அர்ஜுனன், மாவட்ட ஆவின் தலைவர் மில்லர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.

    தொடர்ந்து 10 கர்ப்பிணிகளுக்கு அம்மா ஊட்டச்சத்து நல பெட்டகத்தை கலெக்டர் வழங்கினார். இதையடுத்து பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் பணி தொடங்கப்பட்டது.

    பின்னர் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஓவேலி பேரூராட்சி சூண்டி துணை சுகாதார நிலையத்தில் 4- வது மினி கிளினிக் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரிய சூண்டி, காந்திநகர், மரப்பாலம், செல்வபுரம், அண்ணா நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் பயன் பெறுவார்கள்.

    சர்க்கரை பரிசோதனை ரத்தத்தில் கொழுப்பின் அளவை அம்மா மினி கிளினிக்கில் பரிசோதனை செய்துகொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதுதவிர கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகளுக்கு அனைத்து வகையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டமான அம்மா மினி கிளினிக்கை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது கூடலூர் ஆர்.டி.ஓ. ராஜகுமார், சுகாதார துணை இயக்குனர் பாலு சாமி, தாசில்தார் தினேஷ், அ.தி.மு.க. வர்த்தக அணி மாநில தலைவர் சஜீவன், ஒன்றிய செயலாளர் பத்மநாபன், நகர செயலாளர் சையத் அனுப்கான் உள்பட கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    பந்தலூர் அருகே உள்ள சிங்கோனாவில் நடந்த விழாவில் மாவட்ட துணை இயக்குனர் பாலுசாமி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி அம்மா மினிகிளினிக்கை தொடங்கி வைத்தார்.

    இதில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கதிரவன், டாக்டர் அன்பரசு ஜெரால்டு, சுகாதார ஆய்வாளர்கள் தர்மலிங்கம், ராமலிங்கம், சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ஊட்டி பஸ் நிலையத்தில் ரூ.2¼ லட்சத்தை தவறவிட்ட முதியவரிடம் பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் ஒரு பை கிடந்தது. அதை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அஜிதாகுமாரி என்ற பெண் போலீஸ் கண்டெடுத்தார். அதற்குள் பார்த்தபோது ரூ.2 லட்சத்து 27 ஆயிரம் இருந்தது. ஆனால் அதை தவறவிட்டு சென்றது யார் என்பது தெரியவில்லை.

    இது குறித்து தகவல் அறிந்த ஊட்டி நகர மேற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஊட்டி அருகே சோலூரில் தனியார் எஸ்டேட் பகுதியை சேர்ந்த நஞ்சன் (வயது 75) என்பவர் பணத்தை தவற விட்டு சென்றது தெரிய வந்தது.

    இவர் தனது பேரனின் மருத்துவ செலவுக்காக வங்கியில் இருந்து ரூ.2 லட்சத்து 27 ஆயிரத்தை தனது நண்பர் உதவியுடன் எடுத்தார். அப்போது வீட்டிற்கு செல்ல பஸ்நிலையத்துக்கு வந்தபோது பணம் வைத்திருந்த பை தவறி கீழே விழுந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் நஞ்சனை போலீஸ் நிலையம் வரவழைத்து, அவரிடம் பணத்தை திரும்ப ஒப்படைத்தனர்.
    நீலகிரியில் 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்தது. இதில் 125 பேர் கலந்து கொண்டனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் 2-ம் கட்ட கொரோனா தடுப்பூசி ஒத்திகை நேற்று நடைபெற்றது. ஊட்டி சேட் நினைவு அரசு மகப்பேறு மருத்துவமனை, ஊட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கோத்தகிரி அரசு மருத்துவமனை, கேத்தி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், ஊட்டி தனியார் மருத்துவமனை ஆகிய 5 இடங்களில் ஒத்திகை நடந்தது.

    ஒவ்வொரு மையங்களிலும் தலா 25 பேர் என மொத்தம் 125 பேர் பங்கேற்றனர். டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. முதலில் காய்ச்சல் உள்ளதா என்று தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    காத்திருப்பு அறையில் அவர்கள் அமர வைக்கப்பட்டு, அவர்களது விவரங்கள் கோவின் என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டது. பின்னர் சம்பந்தப்பட்டவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு, தடுப்பூசி செலுத்துவது போல ஒத்திகை பார்க்கப்பட்டது.

    கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி ஒத்திகை நடந்தது. 5 இடங்களில் நடந்த கொரோனா தடுப்பூசி ஒத்திகையை சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர். இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    தடுப்பூசி ஒத்திகைக்கு தேவையான மருத்துவ பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் விவரங்கள் கோவின் என்ற செயலில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. பயனாளிகள் தடுப்பூசியினை எங்கே எந்த இடத்தில் பெறவேண்டும் என்ற விவரங்கள் அவர்களது செல்போனுக்கு கோவின் செயலி மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.

    தடுப்பூசி பெற்ற பின் அதன் விவரங்கள் அடங்கிய சான்றிதழ்கள் செயலி மூலம் பெறுவர். இதனை தொடர்ந்து 4 கட்டமாக தடுப்பூசி பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
    தொடர் மழை காரணமாக ஊட்டி ரோஜா பூங்காவில் மலர்கள் உதிர்ந்து வருகின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்றும் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. ஊட்டி நகரை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில இடங்களில் பனிமூட்டம் நிலவியது.

    தொடர் மழை காரணமாக ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை சுற்றுலா பயணிகள் அனுபவித்து வருகின்றனர். ஊட்டி ரோஜா பூங்காவில் 4,202 ரகங்களை சேர்ந்த 32 ஆயிரம் ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தொடர் மழையால் செடிகளில் ரோஜா மலர்களின் இதழ்கள் உதிர்ந்து கீழே விழுந்த வண்ணம் உள்ளது. மேலும் தண்ணீரில் நனைந்து அழுக தொடங்கி உள்ளன.

    இதனால் செடிகளில் ரோஜா மலர்கள் இல்லாமல் வெறுமனே காட்சி அளிக்கிறது. அழுகிய மலர்களை பணியாளர்கள் வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். ரோஜா பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மலர்கள் இல்லாததை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

    கோடை சீசனையொட்டி பூங்காவின் ஒரு பகுதியில் ரோஜா செடிகள் கவாத்து செய்யப்பட்டு உள்ளது. சில பகுதிகளில் மட்டும் மலர்கள் இருந்த நிலையில், தொடர் மழையால் தற்போது அங்கும் மலர்கள் குறைவாக இருக்கிறது. பூங்காவை சீசனுக்கு தயார்படுத்துவதற்காக கவாத்து செய்யப்பட்ட செடிகளுக்கு இயற்கை உரமிடுவது, களை எடுப்பது போன்ற பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
    வெளியிடங்களில் இருந்து வரத்து அதிகரிப்பால் நீலகிரி மாவட்டத்தில் விளையும் காய்கறிவிலை குறைந்தது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, புரூக்கோலி, பூண்டு போன்ற மலை காய்கறிகள் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது.

    இதற்கிடையே வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு மலைக்காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இதனால் உள்ளூரில் காய்கறிகள் விலை வெகுவாக குறைந்து உள்ளது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

    ஓசூர், தாளவாடி, ஒட்டன்சத்திரம், பெங்களூரு, மைசூர், டெல்லி உள்ளிட்ட இடங்களில் இருந்து பீன்ஸ், பஜ்ஜி மிளகாய், பட்டாணி, புரூக்கோலி, பூண்டு, கேரட் ஊட்டிக்கு டன் கணக்கில் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இதனால் இங்கு சாகுபடி செய்யப்படும் காய்கறிகளின் விலை வெகுவாக குறைந்து விட்டது.

    குறிப்பாக புரூக்கோலி ஒரு கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனை யானது. ஆனால் அது தற்போது ரூ.20 முதல் ரூ.25 வரை மட்டுமே விற்கப்படுகிறது. நீலகிரியில் விளையும் காய்கறிகளுக்கு என்று தனி மவுசு உள்ளது. ஆனால் வெளியிடங்களில் இருந்து காய்கறிகள் அதிகம் வருவதால் உள்ளூரில் விளைவிக்கும் காய்கறிகளின் விலை குறைந்து விட்டது.

    தற்போது ஒரு கிலோ பீன்ஸ் ரூ.20 முதல் ரூ.25, உருளைக்கிழங்கு ரூ.37, முள்ளங்கி ரூ.10, பீட்ரூட் ரூ.38, பட்டாணி ரூ.60, கேரட் ரூ.12-க்கு விற்பனை யாகிறது. இதனால் காய்கறிகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு போதிய வருமானம் இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    மஞ்சூர் பகுதியில் காபி விளைச்சல் அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டத்தின் முக்கிய விவசாயமாக இருப்பது பச்சை தேயிலை. இருந்தபோதிலும் மஞ்சூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள கைக்காட்டி, மஞ்சக்கம்பை, பெங்கால் மட்டம், குந்தா, கீழ்குந்தா, மேல் குந்தா, கிண்ணக் கொரை, எடக்காடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தங்களது தேயிலை தோட்டங்களில் ஊடுபயிராக காபி சாகுபடி செய்து உள்ளனர்.

    இந்த காபி செடிகளில் ஆண்டிற்கு 2 முறை அறுவடை செய்யலாம். இந்த நிலையில் தற்சமயம் அறுவடை காலமாக உள்ளதால் இந்த பகுதிகளில் உள்ள காபி செடிகளில் விளைச்சல் உள்ளது. இதனால் எங்கு பார்த்தாலும் சிவப்பு நிறங்களில் காபி பழங்கள் செடிகளில் பூத்து கிடக்கின்றன. எனவே விவசாயிகள் காபி பழங்களை அறுவடை செய்வதில் தீவிரம் காட்டி வருகிறார்.

    இது குறித்து காபி சாகுபடி செய்த விவசாயிகள் கூறியதாவது:-

    மஞ்சூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட ஏக்கரில் காபி ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தற்போது பரவலாக மழை பெய்து இருப்பதால் நல்ல விளைச்சல் ஏற்பட்டு உள்ளது. இந்த காபியை மே மற்றும் டிசம்பர் என வருடத்துக்கு 2 முறை அறுவடை செய்யலாம். அறுவடை தொடங்கியதும் 20 நாட்களுக்கு ஒரு முறை செடியில் காய்த்து உள்ள பழங்களை அறுவடை செய்ய வேண்டும். அந்த வகையில் நல்ல விளைச்சல் இருந்தால் ஒரு செடியில் அதிகபட்ச மாக ஒருமுறை 8 கிலோ பழங்கள் வரை கிடைக்கும். ஒரு கிலோ காபி பழங்கள் ரூ.120 முதல் ரூ.150 வரை விற்கப்படுகிறது. இந்த பழங்களை வாங்கி செல்லும் விவசாயிகள், அதன் தோலை நீக்கி உலர வைத்து காபி கொட்டைகளை தயாரித்து வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்கிறார்கள்.

    இப்படி காபி பொடி தயாரிக்கும்போது ஒரு கிலோ காபி பொடிக்கு ரூ.400 முதல் ரூ.500 வரை கிடைக்கும். தற்போது காபி விளைச்சல் அதிகமாக உள்ளது. எனவே விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் குறித்து ஆய்வு கூட்டம் கருணாகரன் தலைமையில் நடந்தது.
    ஊட்டி:

    வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் குறித்த 2-ம் கட்ட ஆய்வு கூட்டம் நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தார். கைத்தறி மற்றும் ஜவுளித்துறை இயக்குனரும், நீலகிரி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளருமான கருணாகரன் தலைமை தாங்கி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளபடி தகுதி வாய்ந்த எந்த வாக்காளரும், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட கூடாது. அதேபோல் தகுதி இல்லாத வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற கூடாது.

    இதனை முறையாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று உள்ளதா என தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பார்வையிட்டு உறுதி செய்ய வேண்டும்.

    பெயர் நீக்கம் செய்வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தகவல் தெரிவித்து நீக்கம் செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் ஆணைய உத்தரவின்படி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கருணாகரன் தேர்தல் பிரிவு தாசில்தார் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் தொடர்பாக பெறப்பட்ட படிவங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி நிர்மலா, சப்-கலெக்டர்கள் மோனிகா, ரஞ்சித்சிங், கூடலூர் ஆர்.டி.ஓ. ராஜகுமார், தேர்தல் பிரிவு தாசில்தார் மகேந்திரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
    பந்தலூர் அருகே காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பந்தலூர்:

    பந்தலூர் அருகே கடந்த மாதம் ஒரே வாரத்தில் தந்தை-மகன் உள்பட 3 பேரை காட்டு யானை தாக்கி கொன்றது. அத்துடன் இங்குள்ள சேரம்பாடி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக சேரம்பாடி சப்பந்தோடு, அய்யன்கொல்லி, கொளப்பள்ளி, கண்ணம்பள்ளி, செம்பக்கொல்லி ஆகிய பகுதிகளில் காட்டு யானைகளின் தொந்தரவு அதிகரித்து உள்ளது. அத்துடன் அவைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களையும் நாசப்படுத்தி வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

    எனவே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் காட்டு யானைகளை நிரந்தரமாக தடுக்க வேண்டும், அகழி வெட்ட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வைத்து வருகிறார்கள். ஆனால் அந்த கோரிக்கைகளை வனத்துறையினர் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. எனவே காட்டுயானைகளின் அட்டகாசத்தை தடுக்கக்கோரி சேரம்பாடி சுங்கம் வனத்துறை அலுவலகம் முன்பு சேரங்கோடு ஊராட்சி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற பொதுமக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.

    இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற 24-ந் தேதி சேரம்பாடியில் உண்ணாவிரத போராட்டமும், ரேஷன் கார்டுகளை மாவட்ட நிர்வாகத்திடம் திரும்ப ஒப்படைக்கும் போராட்டமும் நடத்தப்படும் என்றனர்.
    ×