என் மலர்tooltip icon

    நீலகிரி

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் பொங்கல் சுற்றுலா விழா கொண்டாடப்பட்டது. போட்டிகளில் கலந்துகொண்டும், நடனம் ஆடியும் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் சுற்றுலா விழா ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    மண்பானைகளில் வைக்கப்பட்ட பொங்கல் பொங்கிய உடன், கலெக்டர் பூங்கா பணியாளர்கள், சுற்றுலாப் பயணிகளோடு பொங்கல் வைத்தார். அப்போது பொங்கலோ, பொங்கல் என்று சொன்னார்கள். அதனைத் தொடர்ந்து பூங்காவுக்கு வந்த வெளிமாநில, வெளி மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. பின்னர் சுற்றுலா பயணிகள் மற்றும் பூங்கா பணியாளர்களுக்கு லெமன் ஸ்பூன் போட்டி நடந்தது. இதில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆர்வமுடன் கலந்துகொண்டார்.

    தொடர்ந்து பலூனை ஊதி உடைத்தல், பண் சாப்பிடுதல் போட்டி நடந்தது. ஆண்களுக்கு இசை நாற்காலி போட்டி நடத்தப்பட்டது. மழை பெய்ததால் பெண்களுக்கு இசை நாற்காலி போட்டி நடத்தப்படவில்லை. இந்த போட்டிகளில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மேலும் மயிலாட்டம், தப்பாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை கவர்ந்தது.

    தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநில சுற்றுலா பயணிகள் சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடினர். அவர்கள் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல், மழையில் நனைந்தபடி நடனம் ஆடியது மற்றவர்களை உற்சாகப்படுத்தியது. இதனை சுற்றுலா பயணிகள் பலர் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். விழாவில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், மாவட்ட சுற்றுலா அலுவலர் அபராஜிதன், தோட்டக்கலைத் துறை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம், உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்ட எல்லையோர கிராமங்களான போர்டு காலனி, கூவமூலா, பம்பலகொம்பை, குரும்பர்பாடி, சேலரை, பாம்பரை, நாயகன்பாடி, கடச்சனகொல்லி, வட்டிக்கொல்லி, செருகுன்னு ஆகிய பழங்குடியின கிராமங்களில் போலீசார், நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் பழங்குடியின மக்களுடன் சேர்ந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

    இதில் பொங்கல், கரும்புகள் பழங்குடியினருக்கு வழங்கப்பட்டது. விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன.
    முதுமலையில் வளர்ப்பு யானைகளுடன் வனத்துறையினர் பொங்கல் விழாவை கொண்டாடினர்.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் 27 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு விநாயகர் சதுர்த்தி, சுதந்திர தினம் உள்பட முக்கிய நாட்களில் வளர்ப்பு யானைகளுடன் வனத்துறையினர் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து முதுமலையில் வளர்ப்பு யானைகளுடன் வனத்துறையினர் பொங்கல் விழாவை நேற்று மாலை 6 மணிக்கு கொண்டாடினர்.

    இதையொட்டி முகாமில் உள்ள வளர்ப்பு யானைகள் மாயார் ஆற்றில் குளிப்பாட்டப்பட்டது. பின்னர் தெப்பக்காடு முகாமுக்கு அழைத்து வரப்பட்டு சந்தனம், குங்குமிட்டு அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து வளர்ப்பு யானைகளை பாகன்கள் வரிசையாக நிறுத்தி வைத்தனர். பின்னர் முகாம் வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இதில் வனச்சரகர்கள் தயானந்தன், காந்தன், மனோஜ் குமார், சிவகுமார் உள்ளிட்ட வனத்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் வளர்ப்பு யானைகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சர்க்கரை பொங்கல், வாழைப்பழம், கரும்பு, ஆப்பிள், வெல்லம், தேங்காய், ராகி கட்டிகள் உள்ளிட்ட விசேஷ உணவுகள் வளர்ப்பு யானைகளுக்கு வழங்கப்பட்டது.

    இதை தமிழகம் கேரளா கர்நாடகா உள்பட பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். பின்னர் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் பொங்கல் வழங்கினர். இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறியதாவது:-

    கொரோனா தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டுள்ளது. பல மாதங்களுக்கு பிறகு நீலகிரிக்கு சுற்றுலா வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக முதுமலையில் வளர்ப்பு யானைகளுடன் வனத்துறையினர் கொண்டாடிய பொங்கல் விழாவில் கலந்து கொண்டது கூடுதல் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    பொங்கல் விடுமுறையையொட்டி ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். வாகனங்கள் அதிகரிப்பால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ஊட்டி:

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த விடுமுறையை கழிக்கவும், மலைப்பிரதேசமான ஊட்டியில் நிலவும் குளு, குளு காலநிலையை அனுபவிக்கவும் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது. அங்கு ஜப்பான் பூங்கா, இத்தாலியன் பூங்கா, பெரணி இல்லம், இலை பூங்கா போன்றவற்றை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். மேலும் கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்கிய பல்வேறு ரகங்களை சேர்ந்த மலர்கள், அலங்கார செடிகளை கண்டு ரசித்ததோடு, செல்போனில் புகைப்படம் எடுத்தனர்.

    பெரிய புல்வெளி மைதானத்தில் தங்களது குடும்பத்தினருடன் அமர்ந்து ஓய்வு எடுத்தனர். அவ்வப்போது சாரல் மழை பெய்தாலும், அதில் நனைந்தபடி பூங்காவை கண்டு களித்தனர். கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 636 மீட்டர் உயரத்தில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. அங்குள்ள தொலைநோக்கி இல்லத்தில் இருந்து நவீன தொலைநோக்கிகள் மூலம் ஊட்டி நகரம், குன்னூர், மேட்டுப்பாளையம், கோவை, கேத்தி பள்ளத்தாக்கு, அடர்ந்த வனப்பகுதிகள், அணைகள் போன்றவற்றை பார்க்கலாம். ஆனால், நேற்று கடும் பனிமூட்டம் நிலவியதால் இயற்கை காட்சிகளை பார்க்க முடியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இருப்பினும் அவர்கள் தொட்டபெட்டா மலை சிகரத்தை கண்டு ரசித்தனர். கடும் குளிர் காரணமாக குல்லா, உல்லன் ஆடைகளை அணிந்து இருந்தனர். தொட்டபெட்டா சாலையோரத்தில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், எதிரே வந்த வாகனங்களுக்கு வழிவிட முடியவில்லை. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊட்டி படகு இல்லத்தில் பனிமூட்டம் மற்றும் மழை காரணமாக மிதி படகு, துடுப்பு படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. சுற்றுலா பயணிகளுக்காக மோட்டார் படகுகள் தொடர்ந்து இயக்கப்பட்டது. பனிமூட்டம் இல்லாதபோது மிதி படகுகள் இயக்கப்பட்டன. அதில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் அவர்கள் தங்களது குழந்தைகளுடன் குதிரை சவாரி செய்தனர்.

    ஊட்டி ரோஜா பூங்காவில் பூத்து குலுங்கிய ரோஜா மலர்களை கண்டு ரசித்தனர். அதேபோல் ஊட்டி அருகே பைன்பாரஸ்ட், சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது. தொடர் விடுமுறையால் வெளி மாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருகையால் ஊட்டி களை கட்டி உள்ளது.

    நீலகிரி மலைரெயிலில் பயணம் செய்ய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மலைரெயிலில் பயணம் செய்வது மிகவும் குதூகலமாக இருக்கும். பொங்கல் விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் மலை ரெயிலில் முன்பதிவு செய்து ஊட்டி வருகின்றனர். மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் குன்னூர் ரெயில் நிலையத்தில் பர்னஸ் ஆயில் நீராவி என்ஜினுக்கு பதிலாக டீசல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அப்போது ரெயில் குன்னூர் ரெயில் நிலையத்தில் 15 நிமிடங்கள் நிற்கிறது.

    நேற்று மலை ரெயிலில் மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு அதிக சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் குன்னூர் நிலையத்தில் ரெயிலை விட்டு இறங்கி குழு புகைப்படம் எடுத்தல், செல்பி எடுத்தல் போன்றவற்றில் ஈடுபட்டனர். இதனால் குன்னூர் ரெயில் நிலையம் சுற்றுலா பயணிகளால் களைகட்டியது.
    மஞ்சூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் நேற்று இரவு பெய்த பலத்த மழைக்கு கிண்ணக்கொரை முனீஸ்வரர் கோவில் சாலைகளில் பெரிய, பெரிய பாறைகளும் மண் திட்டுக்களும் இடிந்து சாலையில் விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான அருவங்காடு, ஒட்டுபட்டரை, கொலக்கம்பை உள்பட அனைத்து பகுதிகளிலும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக மழை சற்று குறைந்து, குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

    நேற்று காலை முதல் மீண்டும் குன்னூர், சுற்றுப்புறப பகுதிகளில் கனமழை பெய்தது. தொடர்ந்து கொட்டி தீர்த்த மழையால் குன்னூர்- ஊட்டி சாலை, கோத்தகிரி- குன்னூர் சாலை, கொலக்கம்பை சாலை உள்பட அனைத்து சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    உழவர் சந்தை, ரேலி காம்பவுண்ட், மாடல் அவுஸ், ராஜாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் உள்ள கால்வாய்கள் தூர் வாரப்படததால் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள், நடந்து சென்றவர்கள் அனைவரும் மிகவும் பாதிப்படைந்தனர்.

    குன்னூரை சுற்றியுள்ள பகுதிகளில் மேரக்காய், பீன்ஸ், கேரட் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக காய்கறி தோட்டங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதுடன், காய்கறிகள் செடியிலேயே அழுகும் நிலையும் உருவாகி உள்ளது.

    மழையும், குளிரும் மாற்றி, மாற்றி வாட்டி வதைப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்வோர், விவசாயிகள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

    இதுதவிர நேற்று பொங்கல் பண்டிகை என்பதால் விற்பனைக்காக கரும்பு, மஞ்சள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை வியாபாரிகள் வியாபாரத்திற்கு வாங்கு குவித்திருந்தனர். ஆனால் மழை காரணமாக விற்பனை மந்தமாக இருந்தது வியாபாரிகளுக்கு கவலையை ஏற்படுத்தியது.

    மஞ்சூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் நேற்று இரவு பெய்த பலத்த மழைக்கு கிண்ணக்கொரை முனீஸ்வரர் கோவில் சாலைகளில் பெரிய, பெரிய பாறைகளும் மண் திட்டுக்களும் இடிந்து சாலையில் விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறையினர் ஜே.சி.பி. எந்திரத்துடன் விரைந்து வந்து சாலையில் விழுந்து கிடந்த கற்களையும், பாறைகளையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    ஊட்டி, உலிக்கல், கோத்தகிரி, குந்தா, அவலாஞ்சி, மேல்குன்னூர், கேத்தி, கோடநாடு, கிளன்மார்கன், கீழ்கோத்தகிரி, எடப்பள்ளி, கெத்தை, கல்லட்டி உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நேற்று காலை முதல் மழை பெய்து வருகிறது. மாலையில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் அதிகளவில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டது. தொடர் மழையால் அமராவதி அணைக்கு அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பாதுகாப்பு கருதி அணையில் இருந்து அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அமராவதி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்வதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதேபோல் தாராபுரம், மூலனூர், மடத்துக்குளம், குண்டடம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    ஓவேலியில் காட்டுயானை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மிகுந்த கவனமுடன் வெளியே வர வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    கூடலூர்:

    கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஓவேலி பேரூராட்சி மரப்பாலம், பாரம் அண்ணாநகர், பாலவாடி, சூண்டி, முல்லை நகர் ஆகிய பகுதிகளில் காட்டுயானை நடமாட்டம் உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஓவேலி வனத்துறையினர் விரைந்து சென்று, காட்டுயானையை கண்காணிக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். தொடர்ந்து காட்டுயானை பொதுமக்களின் வீடுகளை முற்றுகையிட வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மிகுந்த கவனமுடன் வெளியே வர வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



    கூடலூர், முதுமலையில் பாதுகாப்பாக ரோந்து செல்வது குறித்து வனத்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
    கூடலூர்:

    கூடலூர் வனத்துறையினருக்கு நீர் மேலாண்மை முதலுதவி சிகிச்சை மற்றும் வனப்பகுதியில் ரோந்து செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த பயிற்சி முகாம் கூடலூர் நாடுகாணியில் நடைபெற்றது.

    முகாமுக்கு கூடலூர் கோட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன் தலைமை தாங்கினார். உதவி வனப்பாதுகாவலர் விஜயன் முன்னிலை வகித்தார். கூடலூர் கோட்டத்தில் உள்ள ஓவேலி, கூடலூர், தேவாலா, பிதிர்காடு, சேரம்பாடி ஆகிய சரகங்களில் பணியாற்றும் வன பணியாளர்களுக்கு 'தீ' மேலாண்மை, முதலுதவி சிகிச்சை, வனப்பகுதியில் ரோந்து செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    தமிழ்நாடு வனத்துறையின் பயிற்சி பெற்ற வன உயரடுக்கு படை உதவி வனப்பாதுகாவலர் மகேந்திரன் கலந்து கொண்டு வன பணியாளர்களுக்குப் பயிற்சி அளித்தார். தொடர்ந்து ஆற்று படுகைகளை கயிறுகள் மூலம் எவ்வாறு கடப்பது, உயரமான மரம் மற்றும் கட்டிங்களில் பாதுகாப்பாக ஏறுவது உள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கப்பட்டது. பின்னர் இந்தியாவிலேயே முதன் முறையாக பாரம்பரிய இன நாய்களான கன்னி, கோம்பை, சிப்பிப்பாரை போன்ற வளர்ப்பு நாய்கள் உதவியுடன் வனக்குற்றங்களை கண்டறிவதில் தமிழக வனத்துறை செயல்படும் விதங்கள் குறித்து ஜீன்பூல் தாவரவியல் மைய பூங்கா வளாகத்தில் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    குரங்கனி தீ விபத்து சம்பவத்துக்கு பிறகு வன உயரடுக்கு படை உருவாக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் வனத்தில் களப்பணியாற்றும் பணியாளர்கள் நீர் மற்றும் தீயில் இருந்து தப்பிப்பது குறித்து தொடர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சியானது களப்பணியாளர்களக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதேபோல் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் வளாகத்தில் வனத் துறையினருக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வனச்சரகர் கள் உட்பட வனத்துறையினர் திரளாக கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
    கூடலூர் பகுதியில் பாக்கு தோப்புக்குள் ஊடுபயிராக வாழைகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
    கூடலூர்:

    கூடலூர் பகுதியில் தேயிலை, காபி, நேந்திரன் வாழை மற்றும் இஞ்சி, ஏலக்காய், கிராம்பு உள்பட பல்வேறு காய்கறிகளும் விளைவிக்கப்படுகிறது. இந்த நிலைமை நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை அதிகளவு பெய்ததால் விவசாய நிலங்களை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் இஞ்சி, தேயிலை உள்ளிட்ட விவசாய பயிர்கள் நீரில் மூழ்கியது. மேலும் நோய் தாக்குதலால் பாக்கு விளைச்சல் அடியோடு பாதித்தது. மழை வெள்ளம் அதிகளவு சூழ்ந்ததால் பாக்கு விளைச்சல் பாதிக்கப்பட்டதாக தோட்டக்கலைத் துறையினர் விளக்கம் அளித்திருந்தனர்.

    இந்த நிலையில் நோய்த் தாக்குதலால் போதிய வருமானம் இன்றி பாக்கு விவசாயிகள் சிரமம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து கூடலூர் தொரப்பள்ளி, கம்மாத்தி, மண்வயல், பாடந்தொரை உள்பட பல இடங்களில் பாக்கு தோப்புக்குள் ஊடுபயிராக நேந்திரன் வாழைகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இதுகுறித்து பாக்கு விவசாயிகள் கூறியதாவது:-

    நடப்பாண்டில் வெள்ள பாதிப்பால் பாக்கு மரங்களை நோய் அதிகளவு தாக்கி உள்ளது. இதனால் விளைச்சலும் குறைந்து விட்டது. தற்போது கிலோ ரூ.42 வரை விலை கிடைக்கிறது. ஆனால் விளைச்சல் இல்லாததால் வருவாய் ஈட்ட முடியவில்லை. இதனால் கூடுதல் வருவாய் ஈட்ட பாக்கு தோப்புக்குள் நேந்திரன் வாழைகளை பயிரிட்டு வருகிறோம். தொடர்ந்து வாழைகளுக்கு உரங்கள் இட்டு பராமரித்து வருவதால் பாக்கு மரங்களுக்கும் உரங்கள் சென்றடையும். இதனால் ஒரே செலவில் 2 பயிர்களை பராமரிக்கும் யுக்தியாக கருதப்படுகிறது. மேலும் வரும் மாதங்களில் பாக்கும், வாழையும் விளைச்சல் அதிகரிப்பதால் இரட்டிப்பான பலன்களைப் பெறலாம் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
    பொங்கல் பண்டிகையையொட்டி ஊட்டி அரசு அருங்காட்சியகத்தில் குறிஞ்சி திணைகளின் சிறப்பு இயல்புகள் குறித்த புகைப்பட கண்காட்சி தொடங்கியது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு அருங்காட்சியகம் உள்ளது. இங்கு வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சங்க இலக்கியங்களில் குறிஞ்சி திணைகளின் சிறப்பு இயல்புகள் குறித்த புகைப்பட கண்காட்சி நேற்று முதல் தொடங்கியது. கண்காட்சியை ஊட்டி அரசு கலைக் கல்லூரி துணை முதல்வர் எபினேசர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். கல்லூரியில் முதுகலை தமிழ் பாடப்பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.

    குறிஞ்சி திணை என்பது மலையும், மலை சார்ந்த இடமும் ஆகும். நீலகிரி மலைப்பிரதேசம் என்பதால் அதன் சிறப்புகள் குறித்த புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. குறிஞ்சி நிலப்பகுதியில் வளரும் சந்தனம், வேங்கை, தேக்கு, அகில், பலா ஆகிய மரங்கள், மூங்கிலரிசி, தினை, நெல் ஆகிய உணவுகள், குறிஞ்சி, காந்தள் மலர்கள், சிவப்பு ஆரக்கிளி, மயில் மற்றும் குறிஞ்சி நிலப் பகுதியில் வாழ்ந்து வரும் மக்களின் தொழில், அவர்கள் வழிபட்ட தெய்வம் ஆகியவற்றின் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து மாணவர்களுக்கு அருங்காட்சியக காப்பாளர் முருகவேல் விளக்கம் அளித்தார்.

    இதுகுறித்து அவர் கூறும்போது, பாடங்களில் குறிஞ்சி திணை குறித்து புகைப்படங்களுடன் குறிப்புகள் இல்லை. இங்கு கண்காட்சியில் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளதால், இதன் மூலம் மாணவர்கள் மேலும் சிறப்புகள் குறித்து தெரிந்து கொள்ளலாம். புகைப்படங்கள் அருகே விவரங்கள் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த கண்காட்சி வருகிற 29-ந் தேதி வரை நடைபெறுகிறது என்றார்.

    நிகழ்ச்சியில் அருங்காட்சியக ஊழியர்கள் கலந்துகொண்டனர். இந்த கண்காட்சியை சுற்றுலா பயணிகளும் கண்டு ரசித்து சென்றனர்.
    எடக்காடு கிராமத்தில் ‘தொட்டஹப்பா’ பண்டிகை கொண்டாட்டப்பட்டது.
    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டத்தில் பெரும்பான்மையாக படுகர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மாடுகளை வளர்த்து வருகின்றனர். ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் பனிப்பொழிவால் புல்வெளிகள் கருகி தீவன தட்டுப்பாடு ஏற்படும். இதனால் மாடுகள் கடுமையாக பாதிக்கப்படும். இதையொட்டி மாடுகளை கோவிலுக்கு அழைத்து சென்று, உப்பு நீர் வழங்கி, அவைகளின் கால்களில் காணிக்கை செலுத்தி வணங்குவார்கள். பின்னர் வீடுகளில் தயாரிக்கப்பட்ட பணியாரங்கள், கோதுமை தோசைகளை(பொத்திட்டு) தீவனமாக வழங்குவார்கள். இந்த நிகழ்விற்கு ‘தொட்டஹப்பா’ பண்டிகை என்று பெயர்.

    அதன்பின்னர் மாடுகளை தங்களது கிராமத்தில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள எம்மட்டி(மாடுகள் மேய்க்கப்படும் இடம்) என்ற இடத்துக்கு அழைத்து செல்வார்கள். அங்கு தொழுவங்களில் அடைத்து, மாடுகளை மேய்ச்சலில் ஈடுபடுத்துவார்கள். தொடர்ந்து ஜூன் மாதம் மழை பெய்து, பசுமை திரும்பிய பிறகு மாடுகளை தங்களது கிராமங்களுக்கு அழைத்து வருவார்கள். இந்த பாரம்பரிய வழக்கம் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் எடக்காடு கிராமத்தில் ‘தொட்டஹப்பா’ பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று காலை 8 மணிக்கு தொட்டமனையில் இருந்து உப்பு எடுத்து மக்கள் ஊர்வலமாக வந்து, விநாயகர் கோவிலை அடைந்தனர். தொடர்ந்து அங்கு தோண்டப்பட்டு இருந்த குழிகளில் உப்பு போட்டு, தண்ணீர் ஊற்றினர். பின்னர் மாடுகள் அழைத்து வரப்பட்டு, உப்பு நீர் வழங்கப்பட்டது. இதையடுத்து மாடுகளின் கால்களில் காணிக்கை செலுத்தி வணங்கினர்.

    பின்னர் காலை 11 மணிக்கு எடக்காடு பஜாரில் ஊர் சின்ன கணிகெ தலைவர் பெள்ளி கவுடர் தலைமையில் பாரம்பரிய கில்லி விளையாட்டு நடைபெற்றது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு வீடுகளில் தயாரிக்கப்பட்ட பணியாரங்கள், கோதுமை தோசைகள் மாடுகளுக்கு வழங்கப்பட்டது. இந்த பண்டிகை மூலம் வறட்சி நீங்கி, மழை பொழிந்து, ஆரோக்கியம் மேம்படும் என்று தெரிவிக்கின்றனர்.
    முதுமலையில் சவாரியை தொடங்குவதற்காக சுற்றுலா பயணிகளை சுமந்து செல்லும் வளர்ப்பு யானைகளுக்கு வனத்துறையினர் பயிற்சி அளித்து வருகின்றனர்.
    கூடலூர்:

    கொரோனா குறைந்து வருவதால், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதனால் சுற்றுலா மையங்கள் திறக்கப்பட்டதால், அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து வருகிறார்கள். இந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் கோரிக்கை யின் பிறகு நேற்று முன்தினம் முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்பட்டது. இதனால் அங்கு வாகன சவாரி தொடங்கப்பட்டது.

    மேலும் வளர்ப்பு யானைகள் முகாமுக்குள் சுற்றுலா பயணிகள் அனுமதித்தல், உள்ளிட்ட சுற்றுலா சார்ந்த பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டது. ஆனால் யானை சவாரி நடைபெறவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். அப்போது யானை சவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் புலிகள் காப்பக பகுதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான தங்கும் விடுதிகள் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்கப்படுகிறது. இதை தொடர்ந்து பல மாதங்களாக மூடிக்கிடந்த விடுதிகளை திறந்து சுத்தம் செய்யும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

    அதுபோல் யானை சவாரிக்கும் எந்த நேரத்திலும் அனுமதி அளிக்கப்படும் என்பதால் சுற்றுலா பயணிகளை சுமந்து செல்லும் வளர்ப்பு யானைகளுக்கு சவாரி ரோந்து செல்வது குறித்த பயிற்சியை வனத்துறையினர் அளித்து வருகின்றனர். மேலும் வளர்ப்பு யானைகள் மீது வனத்துறையினர் அமர்ந்து சவாரி செய்கின்றனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    ஊரடங்குக்கு முன்பு வரை சுற்றுலா பயணிகளின் சவாரிக்காக வளர்ப்பு யானைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. பல மாதங்களாக சவாரி தடை செய்யப்பட்டிருந்ததால் ரோந்து பணிக்கு மட்டுமே வளர்ப்பு யானைகள் ஈடுபடுத்தப்பட்டது.

    அத்துடன் சவாரியும் நடக்காததால் தற்போது யானைகளுக்கு சவாரியை பயன்படுத்தும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. உயர் அதிகாரிகளிடம் இருந்து அனுமதி கிடைத்ததும், உடனடியாக யானை சவாரி தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    மழை காரணமாக மகசூல் அதிகரித்து உள்ளதால் பச்சை தேயிலை பறிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டத்தின் முக்கிய பொருளாதாரமாக விளங்கி வருவது பச்சை தேயிலை விவசாயம். இதனை நம்பி 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகளும், ஆயிரக்கணக்கான கூலி தொழிலாளர்களும் பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.

    வருடந்தோறும் பனியின் தாக்கம் அதிகரித்து தேயிலை செடிகள் கருகி விடுவதால் மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டங்கள் அனைத்தும் பொலிவிழந்து காணப்படும். இதனால் விவசாயிகள் முன்கூட்டியே தேயிலையை பறித்து விடுவார்கள்.

    இந்த நிலையில் மஞ்சூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் தற்போது மழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் தேயிலை செடிகளில் தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளது. எனவே விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் உள்ள பச்சை தேயிலையில் கொழுந்து இலைகளை பறிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதனால் இங்குள்ள தேயிலை தோட்டங்களில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பச்சை தேயிலைகளை பறிப்பதை அதிகம் காண முடிகிறது. மழை காரணமாக பச்சை தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    கூடலூர் பகுதியில் பரவலாக பெய்த மழை காரணமாக சாலையோர நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
    கூடலூர்:

    கூடலூர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. அத்துடுன் கூடலூர்- ஊட்டி சாலையில் புதிய நீர்வீழ்ச்சிகள் தோன்றின. ஆனால் வடகிழக்கு பருவமழை கூடலூரில் போதிய அளவு பெய்யாததால், ஆறுகளில் தண்ணீர் வரத்து நின்றது. அத்துடன் புதிய நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டன.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கூடலூர் பகுதியில் மாலை அல்லது இரவில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் பசுமை திரும்பி உள்ளது. அத்துடன் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    இதேபோல் சாலையோரம் பல இடங்களில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து காணப்படுகிறது. கூடலூர் - ஊட்டி சாலையில் உள்ள 27- வது மைல், தவளமலை உள்ளிட்ட சில இடங்களிலும், கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் கரையோரம் பல இடங்களிலும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    இதை சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி பொதுமக்களும் அதிக அளவு நின்று ரசித்து செல்கின்றனர். அத்துடன் அவர்கள் அதன் அருகே நின்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

    இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, கூடலூர் பகுதியில் தற்போது பரவலாக மழை பெய்வதால் சாலையோர நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் கொட்டுவது மனதை மிகவும் கவர்கிறது என்றனர்.
    ×