
கூடலூர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. அத்துடுன் கூடலூர்- ஊட்டி சாலையில் புதிய நீர்வீழ்ச்சிகள் தோன்றின. ஆனால் வடகிழக்கு பருவமழை கூடலூரில் போதிய அளவு பெய்யாததால், ஆறுகளில் தண்ணீர் வரத்து நின்றது. அத்துடன் புதிய நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டன.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கூடலூர் பகுதியில் மாலை அல்லது இரவில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் பசுமை திரும்பி உள்ளது. அத்துடன் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
இதேபோல் சாலையோரம் பல இடங்களில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து காணப்படுகிறது. கூடலூர் - ஊட்டி சாலையில் உள்ள 27- வது மைல், தவளமலை உள்ளிட்ட சில இடங்களிலும், கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் கரையோரம் பல இடங்களிலும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
இதை சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி பொதுமக்களும் அதிக அளவு நின்று ரசித்து செல்கின்றனர். அத்துடன் அவர்கள் அதன் அருகே நின்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.
இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, கூடலூர் பகுதியில் தற்போது பரவலாக மழை பெய்வதால் சாலையோர நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் கொட்டுவது மனதை மிகவும் கவர்கிறது என்றனர்.